சாரல் » Featured

புடுங்கியிருக்கின்றது
இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் புசத்தினான். அவன் ஒவ்வொரு தடவையும் காலைப்போட இவனுக்கு அரையில கிடக்கிற சாரம் கழண்டு போடுமோ என்று சீவன் போனது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுது என்றது இதைத்தானோ என்று இவன் நினைத்துக்கொண்டான். எப்பவாவது கண்ணயர்ந்து போக தீபன்ரை கால்பட்டு சாரங்கழண்டு விட்டால் உள்ளை அறைக்குள்ளை படுத்திருக்கின்ற எலனோ அவளின்ர அக்கா தமிழினியோ இல்லாட்டி இவோனோ ஆத்திரமவசரத்திற்கு வெளிய போகேக்கை கோலத்தைக் கண்டால் என்னாகிறது என்ற கலக்கமே நித்திரை போனாலும் பரவாயில்லை. கற்பு முக்கியம் என்று இவனை யோசிக்க வைத்தது. அதிலும் அவளவை ஒராளுக்கு வந்தாலும் துணைக்கு ஒன்பது பேரைக் கூட்டிக்கொண்டு போறவளவை. பிறகு பப்ளிக் சோ ஆகிடும். இவனுக்குச் சாரங்கட்டிப் பழக்கமில்லை. அதுக்குப் பதினெட்டு வயசாகோணும் என்ற விதியை இவனுக்கு யார் சொன்னார்களோ தெரியா. காற்சட்டைதான் போடுவான். இல்லாட்டி ரன்னிங் சோர்ட்ஸ். விதிப்படி பார்த்தால் இவன் கொடிகாமத்துக்கு ரன்னிங் சோர்ட்ஸ்ஸோடுதான் ஓடி வந்திருக்க வேணும். சுழிபுரத்திலயோ பொன்னாலையிலோ எங்கேயோ  ஒரு பள்ளிக்கூடத்தில ஒன்னியமாக்ஸ் கெட் ரெடி என்பதற்குப் பதிலாக கொப்பர் கொதியில வாறார் ஓடு என்றுதான் சொல்கிறார்கள் என்று செத்துப்போன ஆனந்தன் அண்ணை இவனுக்குச் சொல்லியிருக்கிறார். அன்றைக்கும் அப்பிடித்தான் சொன்னார்கள். ஆமிக்காரன் கொதியில வாறான் ஓடு.. கந்தசஸ்டிக்கு பெரியம்மாட்டைப்போயிருந்தவன் அங்கிருந்தே ஓடத்தொடங்கினான் அந்த ஒரு காற்சட்டையோடு. அரியாலைக்குள்ளை மழையில தோய்ஞ்சு நாவற்குழி உப்புத்தண்ணியில நனைஞ்சு அதே உப்புத்தண்ணிக்குள்ளை ஆபத்துக்குப் பாவமில்லையென்று இன்னொரு உப்புத்தண்ணியிலும் நனைஞ்சு சாவகச்சேரி வெயிலில் காய்ந்தும் போயிருந்தது காற்சட்டை. அன்றிரவு ரவியண்ணை சாரம் தந்தார்.

000

காரைதீவிலிருந்து சனங்கள் பொன்னாலைப்பாலத்திலும் பாலத்திற்கு கீழை இறங்கித் தப்புத்தண்ணிக்குள்ளாலும் ஓடிவந்து கொண்டிருந்தபோது பத்மாக்கா சும்மா கிடந்த தன் வளவுக்குள் அவசர அவசரமாக ஆட்களைப்பிடித்து மிளகாய்த்தோட்டம் செய்து கொண்டிருந்தா.

“அம்மா இந்த மண் செடிக்குச் சரிவராது” என்று நிலம்கொத்தின ராசு சொல்லவும் “நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று பத்மாக்கா சொன்னாவாம்.

சனங்கள் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவசரத்துக்குத் தங்கினர். பூதராசி கோயில் பரிபாலன சபை ஆளொராள் “அகதி நாய்ச்சாதியள்.. இந்தப்பக்கமும் வரக்கூடாது” என்று துரத்திக்கலைத்ததாக அவர்களின் சின்னப்பெடியனொருவன் இவனுக்குச் சொன்னான். அவன் இவனிடம் விளையாட வந்தான். அவனுடைய பள்ளிக்குட நண்பர்கள் இவன் வீட்டிலிருந்தனர்.

“அகதிச் சாதியெண்டொன்று இருக்கோ” என்று அவன் கேட்டான். இவனுக்குத்தெரிய அப்படியொரு சாதி இல்லை. ஆனால் நாய்ச்சாதியெண்ட ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருக்கிறான்.

சும்மா கிடக்கிற வளவுகளில் இடம்பெயர்ந்த சனங்களை இயக்கம் இருத்துகிறதாம் என்ற கதைபரவியபோது பத்மாக்காடை புது மிளகாய்க்கண்டுகள் காய்ஞ்சு வாடிக் கருகிப்போயிருந்தன. இந்த முறை அவ வலு ட்ரிக்ஸா புது ஐடியாவொன்றைக் கண்டு பிடிச்சா. வளவு முழுதும் பனங்கிழக்குப் பாத்தியளை போட்டுவிட்டா. பிரேதங்களைப் புதைத்த மண்கும்பிகளாக பனங்கிழங்குப்பாத்திகள் வேலிக்குள்ளால் தெரிந்தன. பனங்கொட்டைகள் கிழங்குகளாக எத்தினை நாளாகும் என்று இவன் அப்பம்மாவிடம் கேட்ட அடுத்தநாள் பத்மாக்கா சன்னதம் கொண்டு ஆடினா.

“எளிய அகதி நாயள்தான் வேலியைப்பிடுங்கிக்கொண்டு போயிருக்குதுகள். கள்ளச்சாதி. அடுப்பெரிக்க என்ரை வேலிக் கருக்குமட்டைதான் கிடைச்சதோ உதுகளுக்கு.. பூதராசி அம்மாளே உந்தக் கேடுகெட்டதுகள் புழுத்துப்போகோணும்..” என்று மண்ணள்ளித்திட்டினா அவ.

“ஆரோ ஏலாக்கொடுவினையில ரண்டு கருக்குமட்டையை எடுத்துக்கொண்டு போனதுக்கு உவள் பத்மா ஆடுற ஆட்டத்தைப்பார்” என்ற இவனின் அப்பம்மா பத்மாக்காவோடு பேச்சுப் பறைச்சலை விட்டு கனநாளாகியிருந்தது. பத்மாக்கா கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணி இப்ப படலையடிக்கு வந்திருந்தா.

“இஞ்சையும் கொஞ்சக் காசைக்கண்டதுகள் தலைகால் தெரியாமல் ஆடுதுகள். இதுகள் அதுகளுக்கு அண்ட இடங்கொடுக்கிறதாலதான் அதுகள் தலைக்கு மேலை ஏறி ஆடுதுகள். இனி ஆரும் வேலியில கை வைக்கட்டும் அடிச்சு முறிப்பன்.”

இரவு இவனின் சித்தப்பா பத்மாக்கா வீட்டுக்குப்படலையடியில் நின்று “பத்மாக்கா வெளியில வாங்கோ கதைக்கோணும் ” என்றார். பத்மாக்கா வரவில்லை. படலையில் சடார் புடார் என்று சித்தப்பா தட்டினார். “பத்மாக்கா வெளிய வரப்போறியளோ இல்லையோ” பத்மாக்கா வரவில்லை. “பத்மா.. “என்றவரை அம்மாவும் அப்பம்மாவும் கொற கொற என்று இழுத்துக் கொண்டுவந்தார்கள்.

“இவனுக்கார் காலமைச்சண்டையைச் சொன்னது”  என்று அவர்களிருவரும் புடுங்குப்பட்டார்கள். இந்தமுறையும் பத்மாக்கா சித்தப்பாட்டை முறையா வாங்கினா என்ற செய்திக்காக இவன் காத்துக்கொண்டிருந்தான். அடுத்தநாள் காலை ரண்டு இயக்கப்பெடியள் வந்து பத்மாக்காவை விசாரித்தார்களாம். “ச்சீச்சீ.. அப்பிடியொண்டுமில்லைத் தம்பியவை. நான் பொதுவாத்தான் சொன்னனான்.” என்று அவ சொன்னாவாம்.

“சரியம்மா இனிமேல் முறைப்பாடுகள் கிடைக்காத மாதிரி நடந்துகொள்ளுங்கோ” என்று வெளிக்கிட்டவர்களை “தம்பியவை பனங்கிழங்கு போட்டிருக்கிறன். கிழங்கு புடுங்கேக்கை வாங்கோ. உங்களுக்குத்தான்” என்று பத்மாக்கா சொன்னாவாம். அவ பனங்கிழங்குகளைப் பிடுங்கி கொஞ்சக்காலம் வளவு சும்மா கிடந்தது. திடீரென்று ஒருநாள் பத்மாக்கா ஆட்களை வைத்து மூன்றடிக்கு ஒன்றென வாழைக்குட்டிகளை வளவுமுழுவதும் நட்டா. மாதகலில் இருந்து சனங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.

0 0 0

ரவியண்ணை வீட்டையும் பனங்கிழங்குப் பாத்தியோ அல்லது வாழைத்தோட்டமோ இருக்கலாம் என்று இவன் அவரது கேற்றடியில் நின்று யோசித்தான். அதுக்கு முதல் இனி எங்கை போறதென்று கைதடிப்பிள்ளையார் கோயிலில் வைத்து தீபனின் அம்மா ஐயாத்துரை மாஸ்ரரைப் பார்த்தா. ஐயாத்துரை மாஸ்ரர் இவனைப்பார்த்தார். இவன் அம்மாவைப் பார்த்தான். அம்மா அப்பதான் தற்செயலா எட்வேட் அங்கிளைப்பார்த்தா. அவர் ஒரு வேதக்காரர். முப்பது நாப்பது வருசத்துக்கு முதல்லை அவையளும் சைவம்தானாம் என்று அப்பம்மா சொல்லியிருக்கிறா.

“ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். ஆட்களையாள் மாறுப்பட்டாலும் எல்லாரும் கொடிகாமம் சந்தி பஸ் ஸ்ரான்டுகளில நில்லுங்கோ.. எல்லாம் சமாளிக்கலாம்.” என்றார் எட்வேட் அங்கிள்.

“இல்லையண்ணன் எங்களோடை வேறையும் ரண்டு குடும்பமும் நிக்குது.. ” என்றா அம்மா. அவர் சொல்லப்போகிற பதிலுக்காக ஐயாத்துரை மாஸ்டர் ஏக்கத்தோடு நிற்பதாக இவனுக்குப்பட்டு அது கஸ்ரமாயிருந்தது.

“ஓம். முதல்லை இண்டைக்கிரவு எல்லாரும் காலாற வேணும். அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். நீ கூட்டியா எல்லாரையும். பிறகு பாப்பம்.”

சாவகச்சேரியடியில் அப்பம்மா சாந்தாக்காவைக் கண்டா. அவ பிள்ளைத்தாச்சியா இருந்தா. ஒரு கட்டட தாழ்வாரத்தில் அவ காலைநீட்டி முதுகைச்சரித்து இருந்ததைக் கண்டுட்டு துடிச்சுப்பதைச்சு அப்பம்மா அவவுக்குப்பக்கமா ஓடிப்போனா. “கடவுளே.. வயித்தைப்பாத்தா இண்டைக்கோ நாளைக்கோ எண்டமாதிரிக் கிடக்கு. ஏனடி பிள்ளை தனிய வெளிக்கிட்டனியள்?” என்று சும்மா கேட்கவேண்டிய கடமைக்காக அவ கேட்டா. ஏனென்றால் சாந்தாக்காவும் புருசனும் ஊரில் தனியத்தான் இருந்தார்கள். சொந்த இடம் தெரியா. ஆனால் மூன்றோ நாலு வருசத்துக்குமுதல் சாதி மாறி ஓடிப்போய் கல்யாணம் செய்ததால ரண்டு வீட்டுப்பகுதியும் அண்டுவதில்லையென்றும் சாந்தாக்காவின் அண்ணன் “அவளை வெட்டிப்போட்டுத்தான் தாடி எடுப்பன்” என்று தாடிவளர்த்துத் திரிகிறார் என்றும் இவன் கேள்விப்பட்டான்.

“நீ எழும்பி வா.. எங்களுக்குக்கிடைக்கிற திண்ணையில ஒரு துண்டு உனக்குத்தந்தால் ஒண்டும் குறையமாட்டம்.” என்றா அப்பம்மா. சாந்தாக்கா அங்கையிங்கையெனக் கையூன்றி கஸ்ரப்பட்டு எழும்பி சைக்கிள் கரியரைப் பிடிச்சுக்கொண்டு நடந்தா. அவவுக்குப் பின்னாலேயே ஒரு செக்கியூரிட்டி போல அப்பம்மா நடந்தா. வாறவழியில் நாவற்குழிக்கு கிட்டவாக றோட்டிலயே யாருக்கோ குழந்தை பிறந்ததாம். அதே றோட்டிலயே யாரோ கிழவி செத்தும்போனதாம். அங்கேயே கிடங்கு கிண்டிப் புதைத்தார்களாம்.  கொடிகாமம் சந்திக்கு வந்தபோது எடியே மேனகா உன்ரை கொய்யாவைக் காணேல்லையடியென்று ஐயாத்துரை மாஸ்ரரின் மனிசி ,ஐயாமாமி ஒப்பாரி வைச்சுக் கத்தத்தொடங்கினா.

இருட்டிவிட்டதாலும் றோட்டுமுழுக்க சனங்களால் நிரம்பியிருந்ததாலும் “தீபன்.. தீபன்” என்றும் “ஓம் ஓம்” என்றும் “பூரணமாச்சி பூரணமாச்சி”  என்றும் “ஓம் பிள்ளை ஓம் பிள்ளை” என்று வோக்கிடோக்கியில கதைக்கிற மாதிரிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் அவர்கள் லைன் கட்டிப்போனார்கள். ஒருதடவை இன்னொரு தீபனும் ரண்டு தடவை வேற பூரணமாச்சிகளும் இந்த லைனுக்கை குரொஸ் ஆகப்பார்த்தார்கள். “ஐயா மாஸ்ரர்.. ஐயா மாஸ்ரர்..” என்று இவன் கத்தினான். “இஞ்சருங்கோ.. இஞ்சருங்கோ..” ஐயாமாமி கிட்டத்தட்ட அழுகிற நிலைக்கு வந்திருந்தா. “ஐயோ.. கடவுளே நான் என்ன செய்வன்.. அந்த மனிசனிட்டைத்தானே  காசு நகை பாக்கும் வீட்டுக் காணி உறுதியும் கிடக்கு. படிச்சுப்படிச்சு சொன்னனான். பின்னாலேயே வாங்கோ எண்டு. அசுமந்தம் அசுமந்தம்.” ஐயாமாமி காணி உறுதிக்கும் நகைக்குமாகக் கத்துறாவா இல்லாட்டி புருசனுக்காக கவலைப்படுறாவா என்றொரு முடிவெடுக்கிறது இவனுக்கு கஸ்ரமாக இருந்தது.

கொடிகாமம் சந்தியில இயக்கம் காணாமற்போனவர்களைப்பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருந்தது. ஓய்வுபெற்ற அதிபர் ஐயாத்துரை அவர்கள் எங்கிருந்தாலும் இன்ன இடத்திற்கு வரவும் என்று அவர்கள் இரண்டுதரம் சொன்னார்கள். பிறகு அந்த தகவலை வோக்கிடோக்கி மூலம் சாவகச்சேரிக்கு அனுப்பினார்கள். ஓய்வு பெற்ற அதிபர் ஐயாத்துரையின் குடும்பத்தினர் கொடிகாமம் சந்தியில் அவருக்காக காத்திருக்கின்றனர் என்ற அறிவிப்பு சாவகச்சேரியில் கேட்டபோது ஒரு பஸ் ஸ்ரான்டில் நகையும் காசும் உள்ளை பையைச்சுற்றி கோவணத்திற்குள்ளும் வீட்டு உறுதியை தலைமாட்டிலுமாக வைத்து ஐயாத்துரை மாஸ்ரர் க்ர்… புர்.. என்று குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

ரவியண்ணை எல்லோரையும் வரவேற்றார். அவருடை வீடு பத்மாக்காவின் வீடு போல பெரிசில்லை. நாற்சார் வீடுமில்லை. இவன்ரை கணக்குக்கு அங்கையொரு ஐம்பது பேர் இருந்தார்கள். “முதல்லை படுங்கோ எல்லாரும். மிச்சத்தைக் காலமை கதைக்கலாம்” என்றார் ரவியண்ணை. அவர் சாந்தா அக்காவுக்கு ஸ்பெசலா ஒரு கட்டில் ஏற்பாடு செய்து கொடுத்தார். இவனுக்கும் தீபனுக்கும் சாரம் தந்தார். இருபத்தியாறு மணிநேரம் தொடர்ந்து நடந்த களைப்பில் எல்லாரும் அடித்துப்போட்டமாதிரி நித்திரை கொண்டார்கள். அன்றைக்கு நித்திரை வராமல் இருந்ததென்றால் ஐயாமாமியும் இவனும்தான். அவவுக்கு நகையைப்பற்றியோ அல்லது புருசனைப்பற்றியோ கவலை. இவனுக்கு தீபன் காலைப்போட்டுப் படுத்தின ஆக்கினை. இடுப்பில தளர்ந்து தளர்ந்து கழருகிற சாரத்தைச் செருகியும் உருட்டியுமாக இரவு நகர்ந்தது. விடியப்புறம் ரவியண்ணன்ர மனிசி எல்லாருக்கும் சுடச்சுட கோப்பி கொடுத்தா.

0 0 0

பத்மாக்காவுக்கும் சித்தப்பாக்கும் ஒரு கோப்பியால்த்தான் சண்டை மூண்டது. பத்மாக்காவின் புளியமரம் சோனாவாரி மழையொன்றிற்கும் புசல் காற்றுக்கும் பாறிண்டு கிடந்த ஒருநாள்க்காலை அவ சித்தப்பாவைக் கூப்பிட்டா. “நேசேன்.. நேசேன்.. ஒருக்கா வாறியே..? ” பத்மாக்கா ஏற்கனவே வேறு ஆட்களையும் கூப்பிட்டிருந்தா. எல்லாருமாகத்தறித்து மரங்களைத் துண்டாக்கினார்கள். ஒரு மத்தியானநேரம் எல்லோரையும் கூட்டிக்கொண்டுபோய் பத்மாக்கா கோப்பி குடுத்தாவாம் சிரட்டையில. சித்தப்பா திடும்திடும் என்று வீட்டுக்கு வந்து விட்டார். பின்னாலேயே பத்மாக்காவும் வந்தா. “எளிய வடுவா, கோப்பி குடுத்தால் அதை என்ரை மூஞ்சையில ஊத்திட்டுப் போறீரோ..? உங்களுக்கெல்லாம் எப்ப வந்த கெப்பம்..? என்ரை புரியனுக்கு முன்னால வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு நடந்ததுகள் எல்லாம் இண்டைக்குத் தலையெடுத்துத் திரியுதுகள். ஐயோ என்ரை ராசா.. நீர் போன பிறகு ஒரு நாய்ச்சாதியும் என்னை மதிக்குதில்லை.. ” அந்த இடத்தில தன்ரை புருசனுக்காக ஒப்பாரியும் வைத்தழுகிற பத்மாக்காவின் மெதேட் இவனுக்கு வித்தியாசமாய்த்தான் இருந்தது. பதிலுக்கு யாரும் கதைக்கவில்லை. கொஞ்ச நேரம் கத்திய பிறகு “பூதராசி அம்பாளே.. உதுகள் புழுத்துப்போக” என்று விட்டு பத்மாக்கா போய்விட்டா. “என்ன இருந்தாலும் பத்மா அப்பிடிச் செய்திருக்கக் கூடாது. மூக்குப்பேணியிலயெண்டாலும் குடுத்திருக்கலாம்” என்ற அப்பம்மாவை சித்தப்பா திட்டினார். “உப்பிடியே கூழைக்கும்பிடு போட்டுச் செத்துப்போங்கோ” என்றவர் பிறகு இவனுக்குச் சொன்னார். “நான் அவவின்ர முகத்தில ஊத்தேல்லை. சிரட்டையோட நிலத்தில தான் ஊத்தினனான். ஆனா இப்ப யோசிக்கிறன். சுடச்சுட முகத்தில ஊத்தியிருக்க வேணும்.” அன்றிலிருந்து பத்மாக்கா இவர்களோடு பேச்சுப் பறைச்சலை விட்டா. கண்ட இடங்களில் காறித்துப்பினா. கன வருசத்துக்குப் பிறகு சித்தப்பா இயக்கத்துக்குப் போனபிறகு அவ காறித்துப்புவதை நிப்பாட்டினா. அதுக்கும் நாலைஞ்சு வருசத்துக்குப்பிறகு சித்தப்பா பஜிரோவில் வந்தபோது பத்மாக்கா வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாவாம். “நேசன் தம்பி நீரொருக்கா வீட்டுக்குச் சாப்பிட வரவேணும்” என்றும் சொன்னாவாம்.

“போராட்டம் எல்லாத்தையும் மாத்தும்” என்றார் சித்தப்பா. ஒருவேளை அப்பிடியும் இருக்குமோ என்று இவன் யோசிக்க வெளிக்கிட்டான்.

0 0 0

ரவியண்ணை வீட்டில் மேனகா சாமத்தியப்பட்டுவிட்டாள். ஐயாத்துரை மாஸ்ரர் ஓ வென்று அழுதது இவனுக்கு விசராக்கியது. “சனியனே சனியனே உனக்கு நேரம்காலம் தெரியாதோ.. இப்ப இது தேவையோ.. ? ஐயோ நான் என்ன செய்வன்” என்று மேனகாவின் முதுகில் ரண்டடி கொடுத்தவர் தன் தலையிலும் ரண்டடி கொடுத்து பலன்ஸ் ஆக்கினார். சாந்தா அக்காக்கு சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் பொம்பிளைப்பிள்ளை பிறந்தது. ரவியண்ணை வீட்டுக் கிணத்தடிக்கு மறைப்புத் தட்டியில்லையென்று யாழினி குளிக்கமாட்டேன் என்று சொன்னாள். ரொய்லெட்டுக்கு காலை நான்கு மணிக்கே பொம்பிளையாட்கள் கியூவில் நின்றார்கள். ஆம்பிளைகள் அங்காலை பத்தைகளைத் தேடினார்கள். கடைசி ரண்டு விசயத்திற்கும் இவனுக்கும் சம்பந்தமேயிருக்கவில்லை. முகத்தை அலம்புவதோடு இவனது காலை கடனே என்று முடிவுக்கு வந்தது. சும்மா வீடு மாறினாலே வரப்பஞ்சிப்படுகிற இன்னொரு கடன் இடத்தையே மாற்றியதால் வரமாட்டன் போடா என்றது. திண்மம் திரவமாகி திரவம் வாயு ஆகுவது விஞ்ஞானம்தானென்று ஒரு இரவு இவன் யோசித்தான். ஐயா மாஸ்ரரின் க்ர் புர் குறட்டைச் சத்தத்திற்கு பதிலடியாகத் தன்னிடமும் ஒரு புர்.. புர்.. இருக்குதென்று இவன் சிரித்துக்கொண்ட விடியக்காலமை ” என்ரை ராசாவெல்லோ.. என்னாலை தாங்க முடியேல்லை. மூக்கடைக்குது.. நான் கூட்டிக்கொண்டு போறன். அங்காலை பத்தேக்கை.. ஒருத்தரும் வரமாட்டினம். வேணுமெண்டால் நான்.. ஒருத்தரையும் அண்டவிடாமல் பாத்துக் கொள்ளுறன்.” என்ற ஐயாமாஸ்ரர் மண்வெட்டியும் ஒரு வாளித்தண்ணீரும் கொண்டு முன்நடந்தார். இவன் பின்னால் போனான். இப்படியாக அந்தப் பயங்கரம் முடிவுக்கு வந்தது.

சித்தப்பா நிசான் பஜிரோவில் வந்திருந்தார். NISSAN என்றதை நேசன் என எழுத்துக்கூட்டி இவனுக்குக் காட்டிய அதே பஜிரோதான். அதிலேறி ஒருநாளைக்கு ரியூசனுக்குப் போகவேண்டும் என்ற இவனின் விருப்பத்தை அவர் ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. அவர் தலையைக்குனிந்திருந்தார். “வன்னிக்குப் போறது நல்லம்” என்றார். “சனம் தங்களைப்பேசுறது உண்மைதான்” என்றவர் நியாயமும் தானென்றார்.

“ஒரு ரண்டு நாளுக்கு முன்னாலயாவது எங்களுக்கு நீ சொல்லியிருந்தா கொஞ்சம் ஆயத்தங்களோட வந்திருப்பமெல்லே” என்ற அப்பம்மாக்கு அவர் இப்பிடிப் பதில் சொன்னார். “எனக்கும் அண்டைக்கு இரவுதான் தெரியும். வெளிக்கிடப்போறம் என்று”

சித்தப்பா போக வெளிக்கிடும்போது “ரவியண்ணை மாதிரியான ஆட்களை எங்கடை போராட்டம்தான் உருவாக்கினது. சனங்களுக்கு வீடுகள் கொடுத்து வளவுகள் கொடுத்து எந்த வேற்றுமையும் பாராமல் நாங்கள் இனமென்ற ரீதியில ஒன்றுபட இந்த போராட்டம்தான் உதவினது.” என்றார். இவனுக்கு அது உண்மையாயிருந்தது. ரவியண்ணை வீட்டில மட்டுமில்லை இவன் வேறை எங்கையும் பனம்பாத்திகளைக் காணவில்லை. கைதடி கோயில் ஐயர் யாரையும் திரத்தவில்லை. எல்லாம் சரிதான். ஆனால் “இந்த இன ஒற்றுமையை உணர்த்த எத்தனை தடவை வேண்டுமானாலும் இடம்பெயரலாம்” என்று சித்தப்பா சொன்னதுதான் சொறிக்கதை என்று இவன் நினைத்தான்.

நான்காம் நாளும் விடிந்தது. காலம்பிறையே பாணுக்கு கியூவில நிற்கப்போய் கிபிர் சுத்த ஓடிவந்தபிறகு இவன் போகவில்லை. ஐயாமாஸ்ரர் இந்த மூன்று நாளில தன் வாத்தியார் புத்தியைப் பயன்படுத்தி தனக்குக் கீழை ஒரு குரூப்பை  செற் பண்ணியிருந்தார். “எல்லாரும் வாருங்கோ பிள்ளையள்.. விறகு பொறுக்கியருவம்.. கிளம்புங்கோடி பாணுக்குப்போவம்” என்று அவர் ஒரு கொமாண்டரைப்போல இருந்தார். எரிச்சலாயிருந்தாலும் குரூப்பில இருந்த பெட்டைகளிற்காக இவன் தன்னையும் இணைத்துக் கொண்டான். “தம்பி டோய்.. இந்தா இந்த மூண்டு பெடியளையும் கூட்டிக்கொண்டு நீ உப்பிடியே மேற்கால போய் விறகு பெறுக்கு” என்று ஒருநாள் இவனை அவர் பிரித்தனுப்பினார். “ரண்டு பெட்டையளையும் போட்டுத்தந்தா குறைஞ்சோ போயிடுவியள்” என்று மனசுக்கை கறுவிய இவன் அடுத்தநாள் காலை குரூப்பில இருந்து ரிசைன் பண்ணுவதென்று  முடிவு செய்தான். சொல்லிவைத்தாற்போல கிபிர் வந்து அதைச் செய்தது. ஆனால் அந்த மேற்குப்பக்கமாக அவ்வப்போது போக வேண்டுமென்று இவன் நினைத்துக்கொண்டான். அங்குதான் பெடியளின் காம்ப் இருந்தது.

அவர்களில் பலர் ஊன்றுகோல்களுடன் திரிந்தனர். சிலர் இரண்டு கைகளையும் இழந்திருந்தனர். ஒருவருக்கு கண் இருக்க வேண்டிய இடம் வெறுமனே சிவப்புத் துண்டமாக இருந்தது. அவர் “தம்பி எந்த இடம்” என்று இவனிடம் விசாரித்தார். அவரை நிமிர்ந்து பார்ப்பது இவனுக்கு அந்தரமாயிருந்தது. கறுத்தக்கண்ணாடியொன்றை போட்ட அவர் “இப்ப சொல்லும்” என்றார். இவன் சொன்னான்.

“முன்னேறிப்பாய்ச்சல் சண்டையில அந்த இடங்களில நிண்டனான். ரீ குடிக்கிறீரோ..” இவன் ஓம் என்றுவிட்டு உள்ளே போனான். சித்தப்பா சொன்ன இனவிடுதலைக்கு மட்டுமில்லாமல் சமூக விடுதலைக்காகவும் இவை தங்கடை காலைக் கையை கண்ணைக் கொடுத்திருக்கினம் என்று இரவு முழுதும் யோசித்துக்கொண்டு கிடந்தான். இப்பிடி இடம்பெயர்ந்து அவலமா ஓடித்திரியேக்கை ஐயாமாஸ்ரர் குறட்டைவிடுறார் தீபன் காலைப்போடுறான் என்று சினக்கிறது சுயநலம் என்றெல்லாம் யோசித்தான்.

0 0 0

தீபன்தான் அந்தக்கிணற்றை அடையாளம் காட்டினான். காம்பையும் தாண்டி கொஞ்சம் போனால் ஒரு சின்னக்கோயிலை அண்டிக் கிடந்தது அது. கப்பி வாளியெல்லாம் போட்டு தண்ணியும் தெளிவாக இருந்தது. ரவியண்ணை வீட்டுத்தண்ணி எப்பவும் தரைதட்டிக்கொண்டே இருந்தது. தண்ணிக்கு மணம் நிறம் சுவை குணம் எல்லாம் இருக்கு என்று நிரூபித்துக்கொண்டிருந்தது அது. தன் உடம்பில ஒரு புதுமாதிரியான நாற்றம் கிளம்புவதாக இவனுக்கும் தோன்றியது. வியர்வையும் புழுதியும் சமவிகிதத்தில கலந்து அந்த வாசம் இருந்தது. “பின்னேரம் குளிப்பம்” என்றான் தீபன். பின்னேரம் அங்கை இவங்களுக்கு முதல் குளித்துக்கொண்டிருந்தவரை இவன் எங்கோ கண்டிருப்பதாய் யோசித்தான். நேற்றுக்காலமை பாணுக்கு நின்ற கியூவில இவனுக்கு முன்னால் நின்றிருந்தார் அவர். கிபிர் சுத்தத்தொடங்கி சனங்கள் விழுந்தடித்து ஓடத்தொடங்கியபோது ஒரு பெரிய கல்லொன்றை எடுத்து தான் நின்ற இடத்தில் வைத்துவிட்டு “தம்பி.. பாரும். இது என்ரை இடம்..ஆ.. உமக்கு முன்னாலை” என்றுவிட்டு ஓடியிருந்தார் அவர்.

அவர் சோப்புப்போடத் தொடங்கிய, இவன் முதல் வாளித்தண்ணீரை எடுத்து கைகளில் ஏந்திய, தீபன் தள்ளிப்போய் ஒண்டுக்கிருந்த நேரம் அவரும் அந்தக்குரலும் திடுப்பென வந்தன.

“ஆரைக்கேட்டுக் குளிக்கிறியள் இங்கை..ஆ.. ”

தீபன் ஒண்டுக்கிருந்ததைப்பாதியில் நிறுத்துவிட்டு ஓடிவந்தான். சோப்புப் போட்டவர் முகத்துச் சோப்புநுரையை வழித்துப்பார்த்தார். இவன் தண்ணியைத் தலையில் ஊற்றவா விடுவதா என்னுமாப்போல ஒரு போஸில் நின்றான்.

“இடம்பெயர்ந்து வந்திருக்கிறம். குளிச்சு நாலைஞ்சு நாளாகுது. அதுதான்.. ஏனய்யா ஏதும் பிரச்சனையோ.. ” என்று இழுத்தார் சோப்பிட்டிருந்தவர்.

“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கையென்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியால கழட்டின நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது. சோப்புப் போட்டவரைப்பார்த்து “வாங்கோண்ணை. எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார். தீபன் “அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்றபோது அவர் கழற்றிய கயிறையும் கீழே வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று கொண்டே கோயிற்காரர் பின்வாங்கினார். அவர் போகும் மட்டும் ஏதோ புசத்திக்கொண்டே போனார். இவன் கயிற்றைக் கப்பியில் கொழுவினான். சோப்புப்போட்டவர் காய்ந்து போயிருந்தார்.

“என்னண்ணை.. நாங்கள் சின்னப்பெடியள்.. துணிஞ்சு கதைக்கிறம். நீங்களும் சேர்ந்து ஒரு வெருட்டு வெருட்டியிருக்கலாமெல்லே.. பாத்துக்கொண்டு நிக்கிறியள்” என்றான் இவன். இயக்கத்திட்டைப் போய்ச் சொல்லியிருக்க வேணுமென்றான் தீபன். அவர் காய்ஞ்ச சோப்பை தண்ணியால் கழுவிக்கொண்டே சொன்னார்.

“விடுங்கோடா விடுங்கோடா.. அவருக்கு நானொரு வெள்ளாளன் என்று தெரியாது போலயிருக்கு.”

குளித்துமுடித்து வரும்போது இவன் அந்தக்காம்பில் பெடியங்களைக் கண்டான். கைகள் அற்று.. கால்கள் அற்று.. கண்கள் அற்று…

“எங்கடை போராட்டம் இனவிடுதலையோடை சமூக விடுதலைக்கான கருத்தையும் எல்லாற்றை மனங்களிலும் ஊட்டியிருக்கிறது” என்று அடுத்தமுறை சித்தப்பா சொல்லட்டும்.

“புடுங்கியிருக்கிறது” என்று பதிலுக்கு சொல்லவேண்டும்.

உயிர்கள் எரிகிற நெருப்பு
“உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். ” என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் “எப்பிடித்தெரியும்?” என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் தெரியும் இப்ப பூலோகத்தாரிடமிருந்து ஒரு வெடிச்சிரிப்பும் நூற்றுப்பன்னிரண்டாவது தடவையாக அந்தப்பதிலும் வருமென்று. “எடேய்.. இந்தப் பூலோகத்தான் கண்ணால பார்த்தே கதையைச் சொல்லுவானடா. ” பூலோகத்தாருக்கு அப்பிடியொரு குவாலிபிக்கேசன் உண்மையிலேயே இருக்குதோ என்று எனக்கும் டவுட் இருக்கிறது. அதுக்கொரு காரணமும் இருக்கிறது. மூன்று வருசத்துக்கு முதல் பின்னேரப்பொழுதொன்றில் ட்ரெயினால இறங்கி நடந்தபோது படிக்கட்டுகளில் கம்பளிக்கோட்டும் காதுகளை மூடிய மப்ளரோடும் கையில் பியர் கானோடும் ஒராளைப்பார்த்தேன். அவரும் என்னைப்பார்த்தார். அடுத்தநாளும் அவர் என்னைப்பார்த்தார். மூன்றாம் நாள் அவர் என்னைக் கூப்பிட்டார். “டோய் தம்பி .. டோய் உன்னைத்தான்”. கையில சுருட்டி வைத்திருந்த சுவான்சிக் மினிட்டன் பேப்பரை விரிச்சுப்படிக்கிறமாதிரி நான் விலகி நடந்தேன். ஒரு வெள்ளைக்கார மனிசி தோளைத்தட்டி “அவர் உன்னை கூப்படுகிறார்” என்றாள். நான் பக்கத்தில் போய்நின்று என்ன என்பது போல் பார்த்தேன்.

“நீ இன்னாற்றை பெடியன் தானே”

“ஓம்”

“நீ இன்னாற்றை புரிசன்தானே..”

“ஓம்..”

“நீ இந்தவேலைதானே செய்யிறாய்…”

“நீ இப்ப இங்கைதானே போட்டுவாறாய்..”

நான் அவரைச்சுற்றி ஒருக்கா நோட்டம் விட்டேன். இவரொரு சாத்திரியாக இருக்கலாம். இப்பவெல்லாம் இந்தியாவில் இருந்து சாத்திரக்காரர்கள் இப்படி வருகிறார்கள். ஒரு சின்னக் காட்போட் மட்டையில் குருஜி சோதிட மைய்யம் என்றோ ஆதிபகவான் அற்புத சோதிடமென்றோ எழுதி ஏதாவது தமிழ்கடையின் ஓரத்தில் குந்திக் கொள்கிறார்கள். கத்தரிக்காய் வாங்கப்போனால் அப்படியே சாத்திரத்தையும் பாருங்கோவன் என்று கடைக்காரர் புரொமோட் பண்ணுகிறார். அல்லது ஆக்கினைப் படுத்துகிறார். அங்கிருந்து கொஞ்சம் முன்னேறி இவர் வீதிக்கு வந்திருக்கலாம். இனி இவர் என்னிடம் பிராங்குகள் கேட்கக்கூடும். அப்படியொரு ஆள் இங்கே சுற்றித்திரிகிறார். அவர் ஒரு சீக்கியர். கொஞ்சம் வயசானவர். ஜீன்ஸ் ரீ சேட்டில் எடுப்பாகத் திரிவார். ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஒருநாள் ட்ரெயினுக்குள் வைத்து உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றார் அவர். நான் புளுகம் தாங்காமல் தாங்ஸ் என்றேன். உனக்கு வர்த்தக ஆற்றல் இருக்கிறது என்றார். அதற்கும் தாங்ஸ் என்றேன். இன்னும் இரண்டு மூன்று தாங்ஸ் என்னிடமிருந்து வாங்கின பிறகு அவர் இப்பொழுது எனக்கு ஐம்பது பிராங்குகள் கொடு என்றார்.

“என்ன.. ?” நான் முகத்தைச்சுருக்கி அவரைப்பார்த்தேன்.

“ஆம்.. நான் எனது தொழிலைச் செய்தேன். நீ பணம் தரவேண்டும்” என்று எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்தினார். சீக்கியர்களுக்குப் பயந்த காலம் ஒன்றிருக்கிறது. அப்போது அவர்களிடம் துவக்குகளும் கிரேனைட்டுகளும் கத்திகளும் இருந்தன. ட்ரெயினுக்குள் சனங்கள் எங்களைப் பார்த்தார்கள். சீக்கியர் குரலை உயர்த்திக்கொண்டே போனார். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி “நீயும் இறங்கு பேசலாம்” என்றேன். சீக்கியர் இறங்காமலே போய்விட்டார்.

இப்போதைய சாத்திரியை எப்படிச்சமாளிப்பது என்று ஒரு தீர்மானத்திற்கு என்னால் வரமுடியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டு நின்றேன். “என்னடா முழுசுறாய்.. இதெல்லாம் எப்பிடித்தெரியுமெண்டோ..” என்றவர் முதலாவது தடவையாக வெடிச்சிரிப்பையும் அந்த ஸ்ரேற்மென்ரையும் சொன்னார். “எடேய் இந்தப் பூலோகத்தான் கண்ணாலை பார்த்தே கதையைச் சொல்லுவானடா..”

தொடக்கத்தில் ஒரு பேச்சுக்கு நூற்றுப்பன்னிரண்டாவது தடவை பூலோகத்தார் ஸ்ரேற்மென்ட் விடுறார் என்று சொல்லியிருந்தாலும் ஒழுங்கா எண்ணியிருந்தால் அதுக்குக் கிட்டவான கணக்கு வரும்தான். “பாலன்ரை பெட்டையும் மூர்த்தியின்ரை பெடியனும் தனியப்போய் இருக்கினம். இரண்டு வீட்டிலயும் பெரும் சண்டை. பெட்டைக்கு இந்த வைகாசி வந்தால் பத்தொன்பது வயசு. ” என்றதையெல்லாம் கண்ணாலே பார்த்துச் சொல்லமுடியுமா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. “அண்ணை உண்மையைச் சொல்லுங்கோ, நீங்கள் அவனை வெருட்டிக் கேட்டுத்தானே இந்தியாக்காரன் என்று கண்டுபிடிச்சனியள்.. ” என்றபோது பூலோகத்தார் அவசர அவசரமாக மறுத்தார். “அதொண்டுமில்லை.” என்று மட்டும் சொன்னார். அந்தப்பெடியன் வளைவொன்றில் திரும்பி மறைந்தான். பூலோகத்தார் டக்கென்று சொன்னார். “எங்கடை சனங்களின்ரை பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்”. நான் பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை. “ஏன் நாங்கள் குளிர்காயலாமோ” என்று நான் இப்போது கேட்கலாம். அதற்கு ” ஓம்.. நாங்கள் குளிர்காயலாம். ஆனால் கொழுத்தினவன் குளிர்காயலாமோ” என்றொரு பதிலை அவர் வைத்திருப்பார்.

இந்தியாவிலிருந்து இங்கு வருவதும் இலங்கைத் தமிழ் அகதி என தஞ்சம் கேட்பதுவும் பரம ரகசியமல்ல. அப்படி அவர்களில் ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். ஜெர்மன் மொழிக் கடிதமொன்றை வாசித்துச் சொல்வார் என யாரோ என்னைக் காட்டி விட்டிருக்கிறார்கள். அவர் தன்னை சதீஸ் என அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் தஞ்சாவூர். வந்து ஏழு மாதங்கள் முடிகிறதென்றார். அவர் தனது வழக்கு நிராகரிக்கப்பட்ட கடிதத்தைக் கொண்டுவந்திருந்தார். கடிதத்தில் அவர் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு பிறந்திருக்கிறார். மகாஜனாவில் படித்திருக்கிறார். தெல்லிப்பளையை இராணுவம் கைப்பற்றியதும் பிறகது உயர்பாதுகாப்பு வலயமானதும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. சதீஸ்குமார் இயக்கத்தில் ஐந்து வருசம் இருந்திருக்கிறார். இயக்கம் அவரை மலேசியாவிற்குப் படிக்க அனுப்பியிருக்கிறது. அங்கு இயக்கத்தோடு மனக்கசப்புக்கள் ஏற்பட அவரைத் திரும்பவும் வன்னிக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். அச்சம் காரணமாக அவர் அதை மறுத்தார். இயக்கத்தில் இருந்ததனால் அவரால் கொழும்புக்கும் திரும்ப முடியவில்லை. அதனால் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதாக கடிதத்தின் முதல் பன்னிரண்டு பக்கங்களில் இருந்தது. தஞ்சக்கோரிக்கை கேட்ட இடத்தில் வைத்து இலங்கை அடையாள அட்டையையும் இலங்கை பிறப்புச் சான்றிதழையும் சதீஸ்குமார் கையளித்திருக்கிறார். தெல்லிப்பளை கிராமசேவகர் இவரை இன்னார்தான் என உறுதிப்படுத்திய கடிதமொன்றையும் கொடுத்திருக்கிறார். கடிதத்தின் மிகுதிப் பக்கங்களில் வழக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என்றிருந்தது. சதீஸ்குமார் எல்.ரி.ரி. ஈ யில் இருந்தார் என விசாரணைகளில் சொல்லியிருந்தாலும் அதனை நிரூபிக்கும் ஆவணங்களைத் தராதபடியினாலும் மேலும் மலேசியாவில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான படிப்பு படித்ததற்கான ஆதாரங்களையும் அவர் தரவில்லையென்பதினாலும்… இப்படியாக அது இல்லை இது இல்லையென்றும் கொழும்பில் இருக்கலாம் கண்டியில் இருக்கலாம் என்றும் போய் கடைசியாக நாட்டை விட்டு வெளியேற அல்லது மேன்முறையீடு செய்ய முப்பது நாட்கள் அவகாசம் உள்ளதென கடிதம் முடிந்தது. ஆனால் சதீஸ்குமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் சந்தேகமிருக்கிறது என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இருக்கவில்லை.

“என்னத்துக்கு பிளேன் ஓட்டப் படிச்சனான் என்று கொடுத்தனியள்.. புரூப் இல்லாமல்” என்றேன் நான். யாரோ தமிழீழ இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்தனான் என்று சொல்ல மிருதங்கத்தைக் கொடுத்து வாசித்துக் காட்டச் சொன்னதாக உலவுகிற கதையொன்றை நினைத்துக்கொண்டேன். சதிஸ்குமார் எனக்குப் பதில் சொல்லாமல் திரும்பவும் “நான் தஞ்சாவூர்ண்ணே” என்றார். அவருக்கென்ன தெரியும். எழுதிக்கொடுத்த விண்ணன் திரைக்கதையில் பிளேன் கெலிகொப்டர் எல்லாம் வந்தால் த்ரில்லா இருக்குமென்று யோசிச்சிருக்கிறான். அவன் இப்படியும் யோசித்திருக்கலாம். பிளேன் குண்டுபோட வந்தது என்றால் அது எல்லாருக்கும் பொது என்று நிராகரிக்கிறார்கள். சதிஸ்குமாரே பிளேனில் குண்டுபோடப் போனார் என்றால்..

சதிஸ்குமாருக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ரீயைக் குடியுங்கோ” என்றேன். “நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா” என்றவர் அடுத்ததாத் தூக்கிப்போட்ட கேள்வியில் எனக்கு குடிச்சுக் கொண்டிருந்த ரீ புரக்கேறியது. “அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா..”

நான் சதீஸ் குமாருக்கு அப்பீல் செய்யச் சொன்னேன்.

“கிடைச்சிடுமா..”

“நிச்சயமாச் சொல்லத் தெரியேல்லை. ஆனால் இன்னும் ஒன்றிரண்டு வருசம் இழுக்கலாம்.. இடைப்பட்ட காலத்தில என்ன வேலையென்றாலும் செய்து காசு சேர்க்கப்பாருங்கோ” நான் காசுக்கதை கதைச்சதாலோ என்னவோ சதீஸ்குமார் தான் பத்து லட்சம் இந்தியரூபாய்க்களை செலவழித்து இங்கு வந்ததாகச் சொன்னார். இந்தியாவில் பத்தென்றால், இலங்கையில் இருபத்தைந்துகளுக்குக் கிட்டவருகிறது. சரியாகக் கணக்குப் பண்ணியிருக்கிறார்கள். சதீஸ்குமார் மேலும் சொன்னார். “நாங்க குடும்பத்தில மூணு பையன்கள்.. ஒரு பொண்ணு, எனக்கு மூத்தவங்க அவங்க.. தஞ்சாவூருதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம் நாங்க, எல்லாருமே விவசாயம்தான் பாத்திட்டிருந்தோம். கேள்விப்பட்டிருப்பீங்க.. தண்ணிர் பிரச்சனை அப்புறம் நிறைய பிரச்சனைகள். முன்னைய மாதிரி இல்லை. விவசாயம் சரியாகல்லை. அப்பா தவறிட்டாங்க , முதல்ல எங்காவது மிடில்ஈஸ்ற்தான் போவோம்ணு நினைச்சேன். அப்புறம் நம்ம கூட்டாளியொருவன் பாரீசுக்கு போனான். அதான் விவசாய நிலத்த வித்திட்டு வந்திட்டேன். அக்கா கல்யாண வயசில இருக்கிறாங்க.. தம்பிங்களைப் பாக்கணும்..” சதீஸ்குமாருக்குச் சென்னையை அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. நான் சென்னை பற்றிப் பேசிய போதெல்லாம் “அது வேற உலகம், நமக்கு அவங்களைத்தெரியாது. அவங்களுக்கு நம்மைத்தெரியாது. நாங்கெல்லாம் தனித்தீவு” என்றார்.

சதீஸ்குமாரு ஒரு கமரொ உதவியாளராக வந்திருக்கிறார். வருசத்தொடக்கத்தில் இங்கத்தைய தியேட்டர்களில் இரவு பன்னிரண்டு மணிக்கும் கவுஸ் புல்லாக ஓடிய படத்தின் பாட்டொன்றை இங்குதான் எடுத்திருந்தார்கள். கொட்டும் ஸ்னோவில் நடிகையால் குளிரைச் சிம்பிளாகத் தாங்கமுடிந்தது. நடிகர்தான் முடியாமல் கைக்கு க்ளவுஸ் ஜக்கெட் சால்வ் என அந்தரப்பட்டார். சதீஸ்குமார் அவர்களோடு வந்தார். வருவதற்குமுதல் சதிஸ்குமார் இருபது தரத்திற்கு மேல் தெனாலி படத்தைப்பார்த்தாராம். அவருக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெனாலி கன்னத்தில் முத்தமிட்டால் நளதமயந்தி என்று எக்கச்சக்கப் படங்களைப்பார்த்து இலங்கைத்தமிழ் படிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியா அவர் சொன்னார். “உங்களை மாதிரித்தாண்ணே.. நாட்டில வாழ முடியல்ல..”

சதீஸ்குமார் நிராகரிக்கப்பட்ட வழக்கை மேன்முறையீடு செய்தார். வன்னியோடு தொடர்பில்லாமல்ப் போனதால் எந்த ஆதாரங்களையும் பெறமுடியவில்லையென்று கரித்தாஸ் அவருக்காக வாதாடியது. சரியாக எட்டாவது மாதத்தில் பதிவுத்தபால் ஒன்றில் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட கடிதமும் சுவிஸில் வாழும் பிரஜைக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய புத்தகமும் சதிஸ்குமாருக்கு வந்து சேர்ந்தது. சதீஸ்குமார் ரெஸ்ரோரன்ற் ஒன்றில் வேலை தேடிக்கொண்டார். அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியாக்கு போக இருப்பதாகச் சொன்னார். பிறகொருநாள் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பிறந்த தமிழர்களுக்கு இந்திய எம்பசியில் விசா கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் தனக்கும் விசாத் தரவில்லையென்றும் சதீஸ்குமார் சொன்னார்.

சதீஸ்குமாரின் கதையை நான் பூலோகத்தாருக்குச் சொல்லியிருக்கிறேன். அவர் பதிலுக்கு ஒரு விழல் கதை சொல்லியிருப்பார். என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் இன்னொரு பனிக்கதை நினைவிருக்கிறது. உண்மையாகவே அப்ப பனி பெய்து கொண்டிருந்தது. ஒருநாள் பூலோகத்தார் போன் பண்ணி “வாவன் மாவீரர் தினக் கொண்டாட்டத்துக்குப் போட்டு வருவம் என்றார்.” ரேடியோவாகட்டும் ரிவியாகட்டும் சிலர் மாவீரர் தினக் கொண்டாட்டம் என்றுதான் சொல்கிறார்கள். நாட்டில்த்தான் நினைவு கூருகிறார்கள், இங்கே கொண்டாடுகிறார்கள் என்று யாரோ எழுதியுமிருக்கிறார். விசுவமடுவோ, முள்ளியவளையோ தங்கள் சாவு வெளிச்சப்புள்ளியாக இருக்கும் என்று நம்பியவர்கள், நிற்கும் நிலத்திற்கு கீழே இருக்கிறார்கள் என்ற நினைப்புத் தருகிற உள்ளொடுக்கம் வேறை எங்கையும் கிடைக்காதென்று நான் நம்பினேன். அதனாலேயே பூலோகத்தாரை “நீங்கள் போட்டு வாங்கோ” என்றேன். அவர் டக்கென்று நீயெல்லாம் ஒரு தமிழனோ என்று கேட்டார். மேலும் வலு சிம்பிளாக இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழன் அடிமையாக இருப்பதற்கு நான்தான் காரணமென்றார். நான் பூலோகத்தாருடன் போனேன். பிறகு வந்தேன். வரும்போது பூலோகத்தாருக்கு இப்படிச் சொன்னேன். “இதுகள் பிழையென்றதாக நான் சொல்லவில்லை. ஆனால் இப்பிடியாப்பட்ட ஒருநாளில் அங்கை வைச்சு ஒரு பெடியன் தன்ரை போன் நம்பரை எழுதி ஒருத்தியிடம் கொடுத்ததும் அவளுடையதைக் கேட்டதும் பதிலுக்கு அவளும் எழுதிக்கொடுத்ததும் என்னாலை சீரணிக்க முடியாமல் கிடக்கு.. ” இப்பொழுது பூலோகத்தாரின் முகம் சீரியஸானது. அவர் மேலேயெங்கையோ பார்த்தார். அவர் எச்சில் விழுங்குவது தொண்டைக்குழிகளில் தெரிந்தது. பெருமூச்சுக்குப் பிறகு சொன்னார். “இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காகவும் தான் எங்கடை பிள்ளைகள் உயிர்களை விட்டார்கள்”

இப்படியாக எங்கு முடிவதெனத்தெரியாது அங்குமிங்குமாக இந்தக் கதை அலைந்த போதுதான் அது நடந்தது. கதையின் தொடக்கத்தில் எங்களைத் திரும்பிப்பார்த்து நடந்தவனும் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தாரால் முறைக்கப்பட்டவனுமான பெடியன் என்னைச் சந்தித்தான். அவன் மிக மெலிதாகக் கதைத்தான். “உங்களோட அவரைப் பார்த்திருக்கேன். அவர்கிட்ட சொல்லுவீங்களா” என்றே தொடங்கினான். என் தலையிலிருந்து மூன்று நான்கு வட்டங்கள் பெரிதாகிப் பெரிதாகி கடைசிப் பெரும் வட்டத்திற்குள் பூலோகத்தாரின் வெடிச் சிரிப்புடன் கூடிய முகம் முளைத்தது. அவன் தொடர்ந்தான். “அவர் என்னை கண்ட இடங்களில் இந்தியாக்காரன் எனத்திட்டுகிறார். நான் எவ்வளவோ சொன்னேன். அவர் நம்புகிறார் இல்லை” என்று அழுவானைப்போல அவன் சொன்னான். “சே.. அவர் அப்பிடித்தான். அதை பெரிசா எடுக்காதேங்கோ, நான் அவரிட்டைச் சொல்கிறேன்” என்று நான் ஆறுதல் சொன்னேன். “இல்லையே.. என்று தொடங்கியவன் சொல்லச் சொல்ல எனக்கு பூலோகத்தார் மீது பத்திக்கொண்டு வந்தது. எப்போதும் பூலோகத்தாரைக் காய்வெட்டி விட்டு விலகிச் செல்ல விரும்புகிறவன் அன்றைக்குப் பூலோகத்தாரைத் தேடி படிக்கட்டுகளுக்குப் போனேன். அவரைக் காணவில்லை. இரண்டு மூன்று இடங்களில் தேடியபிறகு ஏரிக்கரையில் வைத்து அவர் அகப்பட்டார்.

“அவன் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமோ” என்றபோது பூலோகத்தார் எவன் என்பது போலப் பார்த்தார். கொஞ்சத்துக்கு முதல் அவன் சொன்ன கதையை நான் அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.

அவன் சொன்ன கதை

இரண்டு வருசத்துக்கு முந்திய நாளொன்றில் இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நான் பிரான்சிலும் கொஞ்சக்காலம் அகதியாய் இருந்தேன். இங்கும் கேஸ் முடியாதபடியால் சரியான விசா இல்லை. விசா இல்லாதபடியால் வேலையும் தருகிறார்கள் இல்லை. கிழமைக்கு எழுபது பிராங்குகள் முகாமில் தருகிறார்கள். நாளுக்குப் பத்து பிராங்குகளை வைத்து என்ன செய்துவிட முடியும் என்று உங்களுக்கு நன்றாகத்தெரியும். இருந்தும் அதிலும் நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டியிருக்கிறது. அப்பாவையும் அக்காவையும் வெளியே எடுத்துவிட வேண்டும். அவர்கள் செட்டிக்குளம் முகாமில் இருக்கிறார்கள். பாருங்கள்.. நானும் முகாமில்.. அவர்களும் முகாமில்.. உங்களுக்குத் தெரியுமா..? யாருக்கோ பணம் கொடுத்தால் முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்கலாமாம். விசாரிக்க வேண்டும். ஆனாலும் எப்பிடியும் எடுத்துவிட வேண்டும். அவர்கள் வெளியே வந்த பிறகு எங்கே செல்வார்கள்… என்பதுதான் புரியவில்லை. அப்பா புசல்லாவவிற்கு போவாரா தெரியவில்லை. புசல்லாவ எங்கிருக்கிறது என்று தெரியுமா? அது நுவரெலியாவிற்கு கிட்டவாக இருக்கிறதாம். அல்லது கண்டிக்கு கிட்டவோ தெரியாது. பாருங்கள் அப்பா அம்மாவின் சொந்தஇடம் எங்கிருக்கிறதென எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அப்பா தன் சொந்த இடமென ஒருபோதும் புசல்லாவவைச் சொன்னதில்லை. அவர் செட்டிக்குளம் முகாமிலும் தன் சொந்த இடமென கிளிநொச்சி என்றே கொடுத்திருப்பார். நான் புசல்லாவவிற்குப் போனதில்லை. அண்ணனும். ஆனால் அவன் அங்கேதான் பிறந்தான். ஏதோ கலவரத்தில் வன்னிக்கு ஓடிவந்தபோது அவனுக்கு ஒன்றோ இரண்டு வயது நடந்துகொண்டிருந்தது. அவன் கிளிநொச்சியிலேயே வளர்ந்தான். கிளிநொச்சியிலேயே படித்தான். கிளிநொச்சியிலேயே இயக்கத்துக்குப் போனான். கிளிநொச்சிச் சண்டையிலேயே செத்தும்போனான். அந்தச் சண்டையில் கிளிநொச்சியிலிருந்து ஆமி ஓடிப்போனது. நாங்கள் திரும்பவும் கிளிநொச்சிக்குப் போனோம். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு கண்ணைத்துடைச்சுக் கொண்டு அப்பா சொன்னார். அண்ணன் தனது மண்ணைக் காப்பாற்ற உயிரைக்கொடுத்ததாய்.. கிளிநொச்சியில் எங்களுக்குப் பெரிய காணி இருந்தது. அது முன்னர் பற்றைக் காடாக இருந்ததாம். அப்பா தன்னந்தனியனாக அதை வெட்டிச் சீரமைத்தாராம். நான் உங்களுக்கு அம்மாவைப் பற்றியும் அக்காவைப்பற்றியும் சொல்லவில்லை. அம்மா என் சின்ன வயதுகளிலேயே செத்துப்போனா. ஏதோ ஒரு இங்கிலிஸ் வருத்தம். அக்காவிற்கும் எனக்கும் நாலைந்து வயது வித்தியாசம். ஆனால் அவள்தான் என் அம்மாவாய் இருந்தாள். அப்பா அவளுக்கொரு கல்யாணம் முடித்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். யாருக்குத்தெரியும்..? இப்படியெல்லாம் .. இம்முறையும் கிளிநொச்சியிலிருந்து அவராக வெளிக்கிட்டிருக்க மாட்டார். போனமுறை நானும் அக்காவும் அவரை இழுத்துக்கொண்டு வந்தோம். “நீங்க போங்க நான் வரலை” என்றார் அவர். அப்பா பேசுவது போலவே எனதும் அக்காவினதும் அண்ணாவினதும் பேச்சு இருக்கும். யாழ்ப்பாணத்தில் பேசுகிற தமிழை நான் தொன்னூற்றைந்துகளுக்குப் பிறகுதான் கேட்கத்தொடங்கினேன். அப்போதெல்லாம் திருவிழா போல கிளிநொச்சி சனங்களால் நிறைந்திருந்தது. எங்கள் காணியிலும் கொட்டில்கள் போட்டு சிலர் தங்கியிருந்தார்கள். கொஞ்சக்காலத்தில் யாழ்ப்பாணம் போய்விட்டார்கள். நாங்களும் புசல்லாவவிற்குப் போயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் அப்பா ஒருபோதும் மாட்டார். பாவம் நோய்களோடு முகாமில் என்ன செய்வாரோ.. அவரையும் அக்காளையும் வெளியே எடுக்கவேண்டும். காசு சேர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் ஏதாவது வேலை இருக்கிறதா..

0 0 0

கதையைக்கேட்டு பூலோகத்தாரின் முகம் கலவரமடையும் என நான் எதிர்பார்த்தேன். அவர் சலனமற்று இருந்தார். அவர் என்னிடம் சிலசமயம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கையில் அதை எப்படி எதிர்கொள்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்தது. “சரியண்ணை முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ” என்று சொல்லவேண்டும். கொஞ்ச அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. “ஹா.. ஹா.. ஹா.. அப்பிடிப்பாத்தாலும் அவன் இந்தியாக்காரன் தானே” என்ற பூலோகத்தார் என்னைத் தனிய விட்டுவிட்டு எழும்பி நடந்தார்.

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார்.  இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும்  சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவரது அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் அவர் நூற்றுக்கணக்கான பெடியன்களையும் ஐம்பது அறுபது பெட்டைகளையும் கண்டுவிட்டதால் இந்தப் பெடியனை மட்டும் தனியத்தெரிந்திருக்க ஒரு நியாயப்பாடும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கும் ஏதாவது ஸ்பெசல் கதைகள் இருந்து அது தனக்கு நினைவிருந்தால் ஆளை அடையாளம் காணுவதொன்றும் கஸ்ரமான காரியமில்லை என்று அவர் நினைத்தார்.

குமாரசூரியருக்குத் தெரியவருகிற ஸ்பெசல் கதைகளில் சில அவரை அடுத்த வார்த்தை பேச முடியாமல் குரலடைக்கச் செய்திருக்கின்றன. சில பல்லைக்காட்டாமல் உள்ளுக்குள் சிரிக்கவும் வைத்திருக்கின்றன. திருகோணமலையில் ஐந்து பள்ளிக்கூடப் பெடியங்களை ஆமி சுட்டதில் செத்தவனுடைய தம்பிக்காரனின் தஞ்ச வழக்கு விசாரணைக்கு குமாரசூரியர்தான் மொழிபெயர்த்தார். அன்றைக்குத் தம்பிக்காரன் அழுது முடித்து கண்ணைத் துடைத்தபிறகும் குமாரசூரியர் தழுதழுத்துக்கொண்டிருந்தார்.  விசாரிக்கிறவன் எப்பவும்போல விறைச்ச தலையனாக முகத்தை வைச்சுக் கொண்டிருந்தாலும் குமாரசூரியர் சொல்லச் சொல்ல ரைப் அடிக்கிற வெள்ளைக்கார மனிசி பேயறைஞ்சவள் போலத்தான் இருந்தாள்.  பக்கத்தில இருந்த கரித்தாஸ் பெட்டையும் அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

இரண்டு மூன்று  வருசத்துக்கு முதல் ஒரு பெடியனின் முதலாவது விசாரணையில் அவன் தன்னை சிங்கள ஆமி இரும்புச் சங்கிலியால் கட்டி அடித்தது என்றான். சொன்ன  எல்லாத்தையும் ரைப் அடிச்சு கையெழுத்து வாங்கி அனுப்பியவனை ஒன்றரை வருசத்துக்குப் பிறகு இரண்டாவது விசாரணைக்கு கூப்பிட்டபோதும் குமாரசூரியர்தான் மொழிபெயர்க்க அழைக்கப்பட்டார். இதுவொரு தெய்வச்செயல் என்றே குமாரசூரியர் மனிசிக்குச் சொன்னார். ஏனென்றால் இம்முறை விசாரணையில் அந்தப்பெடியனை சிங்கள ஆமி கயிற்றால் கட்டி அடித்திருந்தது. இதை அப்படியே மொழிபெயர்த்துச் சொன்னால் என்ன நடக்குமென்று குமாரசூரியருக்கு நல்லாவே தெரியும். வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தைத் தாள்களில் ஏதாவது ஒரு பக்கத்தில் இலக்கமிட்டு முதலாவது விசாரணையில் தன்னை இரும்புச் சங்கிலியால் கட்டியதாக கூறிய தஞ்சக் கோரிக்கையாளர் இரண்டாவது விசாரணையில் கயிற்றால் கட்டியதாக கூறியிருப்பதனால் அது உண்மைத்தன்மை இல்லாததாகிறது. ஆகவே இவரது அகதித் தஞ்ச வழக்குக் கோரிக்கையை ஏற்க முடியாது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். நல்லவேளையாக பெடியன் தன்னைக் கட்டி அடித்தது சங்கிலியாலா கயிற்றாலா என குழம்பிப்போயிருந்தாலும் குமாரசூரியர் தெளிவாக இருந்தார். அவர் கயிற்றை சங்கிலி ஆக்கினார். அவனது கேஸ் அக்செப்ற் ஆனதா றிஜெக்ட் ஆனதா என குமாரசூரியருக்குத் தெரியாது.  றிஜெக்ட் ஆகியிருந்தால் ஒரு காரணம் மட்டும் குறைந்திருக்கும் எனத் தெரியும்.

இன்னொரு அகதித்தஞ்சக் கேஸ் ஒரு கொலைக்கேஸ் ஆகாமல் தடுத்த கதையை அவரால் மறக்கவே முடியாது.  அவனுக்கொரு முப்பது முப்பத்தொரு வயதிருக்கும். விசாரணை முழுதும் ஒருமாதிரியான மன அழுத்தத்தோடுதான் இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடுதான் பதில் சொன்னான். அவற்றை மிகத்தன்மையான முறையில் குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக  அவனது கதையும் குறுக்கு விசாரணையும் போய்க்கொண்டிருந்தது. அவன் ஒரு இடத்தில் தான் இஞ்சை வந்து மூண்டு மாசம்தான் ஆகுதென்றும் ஊரில மனிசி மூன்று மாசம் பிள்ளைத்தாச்சியா இருக்கிறதா தகவல் வந்திருக்கென்றும் தன்ரை முதல்  பிள்ளை பிறக்கும்போது தான் மனிசிக்கு பக்கத்தில இல்லை என்றதை நினைக்க அந்தராமாயும் விரக்தியாயும் வேதனையாயும் இருக்கென்று சொன்னான். அடுத்ததா விசாரணை அதிகாரி கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப்போனார்.  முன்னால் க்ளாசில் இருந்த தண்ணியைக் குடிச்சிட்டு குரலைச் செருமி அவர் அதை மொழிபெயர்த்தார்.

” நல்லது. நீர் வந்து மூன்று மாசம் என்றும் அவா இப்ப மூன்று மாச கர்ப்பம் என்றும் சொல்லியிருக்கிறீர். அது உம்மடை பிள்ளையா இருக்க சான்ஸ் இருக்கிற அதேநேரம் அது உம்மடை பிள்ளை இல்லாமல் இருக்கவும் சான்ஸ் இருக்கல்லவா. எப்பிடி நீர் அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்.. அது இன்னொராளின்ர…” குமாரசூரியர் மெதுவாக முடிக்கவில்லை. அதுக்குடனை அவன் சடார் என்று எழும்பி கதிரையைத்தூக்கி தலைக்குமேல் ஓங்கி ஒரு வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தன்ரை தலைதான் சிதறப்போகுது என்று தலையைப்பொத்திய குமாரசூரியர் லூர்த்ஸ் மாதாவே காப்பாற்றும் என்று கத்தினார். கரித்தாஸ் பெட்டையும் கீச்சிட்ட குரலில் கத்துவது கேட்டது. பெடியன் தூக்கின கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைக்கவும்தான் குமாரசூரியன் டக்கென்று எழும்பி அவனைப் பின்வளத்தால் கட்டிப்பிடிச்சு ” தம்பி சொன்னாக் கேளும். பிறகு எல்லாம் பிழைச்சுப்போடும். டக்கெண்டு கதிரையைப்போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.” என்றார். அவனும் என்ன நினைச்சானோ  கீழை விழுந்து காலிரண்டையும் நீட்டி மேலை பார்த்து  அழத்தொடங்கினான்.  “எங்கடை கலாசாரத்தில இதுமாதிரியான கேள்விகளை ஒருவனை அவமானப்படுத்திக் கோபப்படுத்தத்தான் கேட்கிறது. ” என்று குமாரசூரியர் விசாரணைக்காரனுக்கு விளங்கப்படுத்தினார். அவன் தோளைக்குலுக்கி உதட்டைக்குவித்து ஊப்ஸ் என்றான். அத்தோடு அந்த கேஸ் இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டது.

குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. ஒரு கேஸ் எழுதுபவரும் அல்ல. அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையில் எதையும் பெரிதாக மாற்றி விட முடியாது. ஆனால் நிறையப்பேர் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம்.  எப்பிடியாவது சரியா வர ஏதாவது செய்யுங்கோ” என்று கேட்பார்கள். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் கயிற்றைச் சங்கிலியாக்கிற வேலைகளும் பின்வளத்தால் கட்டிப்பிடிப்பதும்தான். இதைவிட கொஞ்சம் கூடச் செய்ய முடிவதொன்றிருக்கிறது. யாராவது தங்களது வாக்குமூலத்தில் தொன்னூற்றுமூன்றாம் ஆண்டு யாழ்ப்பாணத்தில இருந்து ஐந்து லட்சம் சனங்களும் வெளியேறின போது என்று சொன்னால் தொன்னூற்று மூன்றை சொல்லாமற் கொள்ளாமல் தொன்னூற்று ஐந்து ஆக்கி விடுவார். விசாரணைக் கேள்விகளை டொச்சில் இருந்து தமிழில் சொல்லும்போது சாட்டோடு சாட்டா முகத்தைச் சரியான கவலையா வைத்திரும் என்றோ நாட்டுக்கு அனுப்பினா நான் கண்டிப்பாகக் கொலைசெய்யப்படுவேன் என்று சொல்லும் என்றோ சொல்லுவார். குமாரசூரியருக்குத் தெரியும். இவை ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாத வேலைகள். ஆனால் இருபத்தைஞ்சு முப்பது வருசத்துக்கு முதல் அவரும் அகதித் தஞ்சம் கேட்டு வந்தவர் என்றதால் அவர் இப்படி இரக்கமாயிருந்தார். அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நிறையக் கேள்விளும் நிறையப்பதில்களும் நிறையப் பொயின்ற்சுகளும்  தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு பொயின்ற் தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு பாய்ஞ்சு வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அதனால ஊரில இருக்கிற கட்டையர்களையெல்லாம் பிடிச்சுக் கொண்டு போய் கொல்லுகிறார்கள் என்றும் தான் ஒரு கட்டையனாக இருப்பதால் தன்னையும் கொல்லுவார்கள் என்றும் குமாரசூரியர் சொன்னார். விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ கேஸ் அக்செப்ட் ஆனது. அந்த வருடம்  நூற்றி எண்பது கட்டையர்களுக்கு கேஸ் அக்செப்ட் ஆனது.

0	0	0

“பெயர் சொல்லுங்கோ”

“பிரதீபன்”

“வேறு பெயர்கள் உண்டா?”

பிரதீபன் கொஞ்ச நேரம் முழித்தான். பள்ளிக்கூடத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதைச்சொல்லலாமா விடலாமா என்று அவன் யோசித்தான்.

“அதாவது ஏதாவது இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ இருந்தால் அல்லது வேற ஏதாவது பெயரில நீங்கள் செயற்பட்டிருந்தால் அந்தப் பெயர்களைச் சொல்லவும்” என மொழிபெயர்க்கப்பட்டபோது பிரதீபன் தலையைப் பலமாக ஆட்டி இல்லை என்றான்.

“நீங்கள் வாயாலை சொன்னால்த்தான் அது ஒரு ஆவணமாகும்”

“இல்லை. வீட்டில தீபன் என்று கூப்பிடுவினம். அதை விட வேற பெயர் ஒன்றும் இல்லை”

வந்து சேர்ந்த இடம், வந்த வழி, யார் கூட்டிவந்தது, எவ்வளவு காலம் எடுத்தது, பாஸ்போட் எங்கே, அதற்கு என்ன நடந்தது, வேறேதாவது நாடுகளில் இதற்கு முதல் அகதிதஞ்சம் கோரியிருக்கிறீர்களா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் நேரே சூரிச், ஆபிரிக்காவில இருந்து இத்தாலி இத்தாலியிலிருந்து சூரிச், கூட்டிவந்தது யாரென்று எனக்குத் தெரியாது, ஆபிரிக்காவில் ஒன்றரை வருசமும் இத்தாலியில இரண்டு நாளும் இத்தாலியிலிருந்து சூரிச் வர நாலு மணித்தியாலமும், பாஸ்போட் என்னட்டை இல்லை, அதைக் கூட்டிவந்தவர் வாங்கிட்டார், வேறு எந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரவில்லை, கோராதபடியால் நிராகரிக்கவும் இல்லையென்று பிரதீபன் வரிசையாகச் சொல்லி முடித்தான்.

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தார். பிரதீபன் சொண்டுகளையொருக்கா ஈரப்படுத்திக் கொண்டான். அவை டக் டக்கென்று உலர்வதுபோலப்பட்டது. அதிகாரி பேசத்தொடங்கினான். “சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது அவன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கேட்பதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தேன். ஏ/ எல் முடித்துவிட்டு கம்பசுக்கு ரிசல்ட் காணாதபடியால் இன்னொரு தரம் சோதனை எடுக்கலாம் என்றிருந்தேன். அப்போது இலங்கையில் சமாதானம் வந்தது. புலிகளும் யாழ்ப்பாணம் வந்தார்கள். ஆமியும் புலிகளும் றோட்டுகளில் கை குலுக்கிக் கதைத்தபடியால் நாங்களும் புலிகளோடு கதைத்தோம். எங்கள் ஊர் ஆமிக்காம்புக்கு முன்னால ஒருநாள் விடிய பிரபாகரனின் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தும் ஆமிக்காரர் சிரிச்சுக் கொண்டு போனதால புலிகளோடு தொடர்பு வைக்கிறது பிரச்சனை இல்லையென்று நான் நம்பினேன். ஏனென்றால் புலிகள் தங்களது நிர்வாக மற்றும் வங்கிப் பிரிவுகளுக்கு உயர்தரம் படித்து முடித்த ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னிக்குள்ளை கடைசி நேரங்களில நடந்த சண்டையால அங்கை ஏ/எல் செய்த ஆட்கள் குறைவாயிருந்தார்கள். எனக்கு கிளிநொச்சியில அவையின்ர வங்கிப் பிரிவில வேலை கிடைத்தது. நான் கிழமைக்கொருக்காவோ ரண்டு கிழமைக்கொருக்காவோ யாழ்ப்பாணம் போவேன். முகமாலை ஆமிக்கும் நான் கிளிநொச்சியில வேலை செய்யிறது தெரியும். இப்பிடியாயிருக்கேக்கை திடீரென்று புலிகளின்ரை அரசியல்த்துறைக்காரர் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போயிட்டினம். அதுக்குப்பிறகும் கொஞ்சக்காலம் நான் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐஞ்சாம் ஆண்டு டிசம்பர் மாசக்கடைசியில நான் வேலையை விட்டுட்டு யாழ்ப்பாணம் வந்தேன். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஒக்டோபர் மாசம் என்னை ஆமிக்காரர் வீட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். புலிகளோடு தொடர்பு, புலிகளின் பணத்தை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தினது, ஊரில் பிரபாகரனுக்கு கட்அவுட் வைச்சது என்று சொல்லி ஒரு கிழமையாக என்னை சித்திரவதை செய்தார்கள். சித்திரைவதையின்போது  ஒருவன் சமாதான காலத்தில் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தாலும் கண்கள் திறந்துதான் இருந்தன என்றான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று நான் யூகித்துக் கொண்டேன். இதற்கிடையில் தெய்வாதீனமாக ஆமிக்குப் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்து என்னை என்ர மாமா விடுவித்தார். காசை வாங்கிக்கொண்டு விட்டதால் என்ரை கைதை உறுதிப்படுத்துகிற ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் எனக்கு உயிராபத்து இருக்கிறது என்பதால் நான் கொழும்புக்கு போக வெளிக்கிட்டேன். கொழும்பில் சென்று சீமா படிப்பதுவும் எனது நோக்கமாயிருந்தது. கொழும்புக்கு வந்த கொஞ்ச நாளில் ஒருநாள் வெள்ளவத்தையில் வைத்து என்னைப் பிடித்துப் போனார்கள். அவர்கள் தங்களை ஈபிடிபி என்று சொன்னார்கள். நான் கிளிநொச்சியில் வேலை செய்தது என்னை ஆமி பிடித்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த போதே என்னைக் கன்னத்தில் அடித்தார்கள். அவர்கள் ஆளாளுக்கு விளையாட்டுத்தனமாக அடித்தார்கள். அடிக்கும்போது சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்பிடி அடிக்கிற நேரம் அவர்களில் ஒருவன் “நீ சிங்களவனுக்கு மட்டும்தான் காசு குடுப்பியா.. எங்களுக்குத் தரமாட்டியோ” என்று கேட்டான். அவன் கேட்டதொகை ஆமிக்குக் குடுத்த அதே தொகையாயிருந்தது.  ஆமிதான் செற்றப் செய்து அவைக்குச் சொல்லிக்குடுக்குது என்று நான் நினைக்கிறன். இந்த முறையும் மாமாதான் காசு தந்தவர். பன்ரண்டாவது நாள் அவையளே என்னைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டை விட்டவை. விடும்போது ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனை அறுக்கக் கூடாது” என்று. அதுக்குப் பக்கத்திலிருந்தவன் பிலத்துச் சிரித்தான். அறுக்கிறது என்பது கொலை செய்யிறதுதான். உங்களுக்கு பொன் முட்டை இடும் வாத்துக் கதை தெரியாவிட்டால் அதையும் நான் சொல்கிறேன். ஒரு ஊரில ஒரு குடியானவனிடம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து இருந்தது……………………………

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணத்தில் எனக்கு ஆமியால கொலை அச்சுறுத்தல் கொழும்பில எனக்கு ஈபிடிபியால கொலை அச்சுறுத்தல் இவை காரணமாக நான் இலங்கையில் இருக்கமுடியாமல் போனது. இலங்கைக்கு வெளியே எங்காவது போனால்த்தான் எனது உயிரை நான் காப்பாற்றிக் கொள்ளமுடியுமென்பதால் மாமா அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுவரையும் நான் எங்காவது பாதுகாப்பாகத் தங்கவேண்டியிருந்தது. மட்டக்களப்பில் கருணா குழு.. மலையகத்தில் தங்க வசதியில்லை என்ற காரணங்களால நான் வவுனியாக்கு போனேன். அங்கும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். மாமா ஏற்பாடுகளைச் செய்யும்வரை ஓரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக நான் வவுனியாவிற்கே போனேன். அங்கு இரண்டுமாதங்கள் வரை பிரச்சனையேதும் எனக்கு இருக்கவில்லை. மாமா பாஸ்போட் எடுக்க கொழும்புக்கு உடனடியாக வரும்படி சொன்னார். அதற்கடுத்த நாள் கூமாங்குளத்தில் வைச்சு என்னை ஒரு ஆட்டோவில் வைச்சுத் தூக்கி நாலுபேர் அடியடி எண்டு அடித்தார்கள். அவர்கள் பொல்லுகள் வைத்திருந்தார்கள். முகத்தை மூடிக்கட்டியிருந்தார்கள். அவர்கள் ஏன் அடிக்கிறோம் என்ற காரணத்தையும் சொல்லவில்லை. அவர்கள் யாரென்பதையும் சொல்லவில்லை. அவர்கள் புளட்டாக இருக்கலாம். ஆமி இன்ரலிஜென்ற் ஆக இருக்கலாம். எனக்கு சரியாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொலை வெறியோடு அடித்தார்கள். கடவுள் கிருபையில் அந்த காட்டு வழியால் சனங்கள் அப்போது வந்தார்கள். அவர்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

எனக்கு வடிவாகத்தெரியும். நான் இலங்கையில் இருந்தால் கொல்லப்படுவேன். அவர்கள் என்னை குறிவைத்து கொலைசெய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டால் இலங்கைக்குள் நுழைகையிலேயே நான் உயிரிழக்க நேரிடலாம். மனிதாபிமானம் மிக்க இந்த நாடு எனது உயிரைக்காக்க எனது கோரிக்கைக்கு சாதகமான பதிலைத்தரவேண்டும்.

0	0	0

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு டொச்சில் எழுதப்பட்டிருந்தது.  “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணை அதிகாரி. பிரதீபன் இல்லையெனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத்தாள்களை ஒன்றாக்கினான். “ஆகவே உமக்கு இலங்கையில் ஆயுததாரிகளான இலங்கை ராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட்டோ புலனாய்வுத்துறையோ என்றறிய முடியாத ஒரு குழு இவர்களால உயிராபத்து என்கிறீர். உமது வாக்கு மூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து இல்லை. நல்லது. இப்போது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் நீர் கையெழுத்து இடவேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்து.. ஸ்ஸ் என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டு “எனக்கு இப்ப நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னனான் எல்லோ.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதை என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுமாப்போல கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கிக்கொண்டு “எப்பிடித் தெரியும்” என்றார்.

“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா தெரியாட்டியும் அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவர்களில் ஒருவருக்கு வோக்கி மெசேச் வந்தது. அவர் அதில கதைச்சு முடிய ஓவர் ஓவர் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றவர். இது எனக்கு கிளியராக் கேட்டது. நான் சுவர் பண்ணிச் சொல்லுவன் அவையள் புலிகள்தான். ”

அவன் கடைசியாச் சொன்னதெல்லாத்தையும் குமாரசூரியர் டொச்சில மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

0	0	0

ரிவியில இப்ப அந்தப்பெடியன் இன்னும் இன்னும் உச்ச ஸ்தாயியில கத்தினான். “ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ். ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..” ஒவ்வொருக்காவும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமராக்காரர் அவனை நிறையத்தரம் போகஸ் பண்ணியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவன் குறையாத வேகத்தோடை இருந்தான். ஆனால் எவ்வளவுதான் தலையைத் தேய்ச்சு யோசிச்சும் குமாரசூரியரால அவனை அடையாளம் காணமுடிய வில்லை.

அப்பவே சொன்னமாதிரி ஸ்பெசலான கதைகளின்றி வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் குமாரசூரியரால் நினைவு வைச்சுக் கொள்ள முடிகிறதில்லை.

மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிருந்து இரண்டு மூன்று காணிகள் கடந்து வீதியிலேறும் முடக்கில் இருந்தது. அவன் பாதைகள் சென்று சேராத ஒரு காணியின் அடித்தொங்கலில் இருந்தான். நிறையப்பேர் அப்படித்தான் இருந்தார்கள். காடுகளுக்குள்ளும் வீதிகளுக்கும் இடைப்பட்ட துண்டு நிலங்களில் புதிய முகவரிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்த தபாற்காரர்களுக்கு கடைகளும் டிஸ்பென்சரிகளும் முகங்களாயிருந்தன. “சயந்தன் இப்ப என்ன செய்யிறார்” என்று கேட்டேன். அவன் மீசையற்ற ஒருவர் கடக்கும்வரை அமைதியாயிருந்துவிட்டுச் சொன்னான். “அவர் ஏ எல் எடுத்துட்டு இருக்கிறார். நிலாந்திதான் ரீச்சிங்குக்கு ட்ரை பண்ணுறா..”  “சரி நான் கடிதம் போடுறன்.” அன்றிரவு சயந்தனுக்கு நிறைய வாழ்த்துக்களையும் அவசரப்பட்டுக் கல்யாணம் கட்டியதற்காகக் கொஞ்சம் அட்வைஸ்களையும் நிரப்பி நீண்டதொரு கடிதம் எழுதினேன். நீண்ட காலத்திற்கு அது எனது டயறிக்குள் தூங்கியது. பின்பொருநாள் கிழித்தெறிந்த அந்தக் கடிதத்தில் அவனை விட அதிகமாக நாமகளையே விசாரித்தெழுதியிருந்தேன்.

0    0    0

“உம்மடை பேர் என்ன” என்று ஏகாம்பரம் சேர் கேட்டார். “சயந்தன்” எனது முதுகுப்பின்னாலிருந்து பதில் வந்தபோதே அவனைப்பார்த்தேன். நடு நெற்றியில் ஒரு வீபூதிக்குறியோடு அவன் நின்றான். அது விபூதியல்ல. முகப்பவுடர் என்பதே அவனைப்பற்றிய என் முதல் நினைப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு வந்து சேர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் புதியவர்கள் வருகிறார்கள். மரங்களுக்கு கீழே  மேசைகள் போடப்படுகின்றன. மரங்களால் நிரம்பியிருந்த அந்த வளவில் நான்கோ ஐந்து வகுப்புக்கள் இருந்தன. வன்னியின் மரங்கள் பெயரறியாத புதியவை, பரந்து நிழல் பரப்பின. வேலிக்குள்ளால் பள்ளிக்கூடம் வீதியைக் கடந்து தெரிந்தது. அங்கே வகுப்பறைகளில் குழந்தைகள் ஏணைகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஏணைகளுக்கு அருகிலேயே அடுப்புக்களும் எரிந்தன. பெரிய மனிதர்கள் சுவர்மூலைகளுக்குள் சுருண்டிருந்தார்கள். சிறுவர்களே விளையாடித்திரிந்தனர். கடந்தநாட்களின் தங்களது அழுகைகளையும் வீரிடல்களையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். நானும் மறந்திருந்தேன்.

ஆண்டு பதினொன்று, பி பிரிவில் எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் பெரியபள்ளிக்கூடம், சிறியபள்ளிக்கூடம், இங்கிலிஸ் கதைக்கும் பள்ளிக்கூடம், கதைக்கமுடியாத பள்ளிக்கூடமென்று எல்லோருமிருந்தார்கள் மரத்தின் கீழே. கறுத்தச்சப்பாத்துப் போடவில்லையென்பதற்காக யாரும் இங்கே அடிக்கவில்லை. வெள்ளைச் சேர்ட்டை இன் பண்ணாவிட்டால் யாரும் காதினைத் திருகுவதில்லை. எத்தனை பேரை அடிக்க..? எத்தனை காதுகளைத் திருக..? எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. பக்கத்திலிருந்த பெட்டைகள் உட்பட. பள்ளிக்கூட பெட்டைகளின் அருகாமையை நான் ரசிக்கத்தொடங்கியிருந்தேன். “எடியே இஞ்சை பாரடி” என்ற வார்த்தைகளும் “என்னப்பா நீர்” என்ற அவர்களுக்குள்ளான சிணுங்கல்களும் எனக்கு விசித்திரமாக இருந்தன. முன்னைய பள்ளியில் தயாபரன் சேர் இப்படி நடித்துக்காட்டுவார். பாடங்களுக்கிடையில் அவர் இப்படிக்கதை சொல்லத்தொடங்கினால் பிறகு ஓ.. என்ற கூச்சல்தான் நிறையும். கடைசி வாங்கில் இருக்கிற யாராவது “சேர் சரியாக்கேட்கேல்லை” என்றுகொண்டே முன்னால்  வருவார்கள். கதை முடியும் போது எல்லோருமே மேசையைச்சுற்றி நிற்பார்கள் கிளைக்கதையெதையாவது அவர் தொடர மாட்டாரா என. அடுத்த ஆண்டில் விஞ்ஞானப் புத்தகத்தில் நூற்று நாற்பதாம் பக்கத்தில் இனவிருத்தித் தொகுதியென்றொரு பாடம் இருந்தது. தயாபரன் சேர் அதனைப்படிப்பிக்கப்போகும் நாட்களுக்காக, படபடப்புக்களையும் கிளுகிளுப்புக்களையும் சேமித்தபடி தயாராயிருந்தோம். ஒரு ஒக்டோபரின் இறுதி  நாளில் எல்லாம் கரைந்து போயின. பள்ளிக்கூடம் இல்லையென்றானது. பாடப்புத்தகங்களும் இல்லையென்றாயின. பாடசாலைக்கீதம் முடிந்த ஒரு பொழுதில் “நாளைக்கு யார் கூட்டுமுறை? நேரத்தோடை வரவேணும்” என்று போனவர்கள் இரவோடிரவாகத் தொலைந்து போனார்கள். அடுத்த காலையில் யாரும் பள்ளிக்கு போயிருக்க மாட்டார்கள். பிரேயர் கோலில் குசுகுசுவெனப்பேசும் சத்தங்கள் கேட்டிருக்காது. செவ்வாய்க்கிழமையின் இரண்டாம் பாடத்தில் பி.டி மைதானம் ஆளரவம் இன்றி தனிமையில் விரிந்திருக்கும். மதிலோரம் சைக்கிளைச் சாத்தி நிற்கும் ஐஸ்பழகாரரும் நின்றிருக்க மாட்டார்.

இங்கே தயாபரன் சேர்போல யாரும் கதை சொல்வதில்லை. பெடியங்களும் சொல்வதில்லை. பெட்டைகளை நேருக்குநேர் கண்டாலே  படபடப்பாக இருக்கிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கெனத் தொடங்கும் மதியம் இரண்டுமணிப்பள்ளியை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தேன். சும்மா தோட்டங்களையும் துரவுகளையும் அளைவதே எனக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொருநாளும் ஆக்கினைப்படுத்தியே அம்மா என்னை அனுப்பி வைத்தாள். பாழாய்ப்போன கிபிர் காலைநேரங்களில் மட்டும் வந்து போகிறது. கள்ளமொழிக்கக் கிபிரைக்கூப்பிடுவதும் அது வந்தபிறகு பிச்சைவேண்டாம் நாயைப்பிடியென்பதும் இன்னமும் தொடர்ந்தது. சாமியறைக்குள் பிள்ளையாருக்கு பூப்போட்டு “பிள்ளையாரே நாளைக்கு காலமை மாதகலில இருந்து ஆமி மூவ் பண்ணினால் நாளையிண்டைக்கு மஞ்சள்பூ நிறைய வைப்பன்” என்றெல்லாம் இப்போது கேட்பதில்லை. அப்போதெல்லாம் பிள்ளையார் மஞ்சள்பூவுக்கு சில சமயங்களில் ஆசைப்பட்டிருந்தார். “பிள்ளையாரே உமக்கு பகிடியும் தெரியா வெற்றியும் தெரியா, முதல்ல ஆமிக்காரனை நிப்பாட்டும். வெள்ளைப்பூ வைக்கிறன்” என கை நடுங்க நடுங்க கும்பிட்டதையும் அவர் ஏற்றிருந்தார். ஒக்டோபர் இரவொன்றில் அவருக்கு வெள்ளைப் பூக்கள் திடீரென பிடிக்காமல் போனது. டிசம்பரில், பெப்ரவரியில், ஏப்ரலிலென அவருக்கு ஒரேயடியாகப் பூக்கள் பிடிக்காமல் போனது.

இரண்டு மூன்று வாரங்களாகக் கிபிரெதுவும் வரவில்லை. ஆனால் சனங்கள் வந்துகொண்டிருந்தார்கள். லான்ட் மாஸ்ரர்களும் மினி பஸ்சுகளும் வெறித்த முகங்களோடு அவர்களை ஏற்றிவந்தன. கிளாலியில் புறப்பட்ட இறுதிப்படகு வன்னிக்கு வந்து சேரவில்லையென்றார்கள். அந்தக்கடற்கரையில் குவிந்து நின்ற சனத்தை ஆமிக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே போய்விடும்படி இயக்கம் சொன்னதாம். அம்மா அங்கே, பிள்ளை இங்கே, புருசன் இங்கே, பெண்சாதி அங்கேயென்ற கதைகளே எங்கும் நிறைந்திருந்தன. வீதிநெடுகவும் மனிதர்களாயிருந்தார்கள். அவர்களில் சயந்தனும் ஒருவனாயிருந்திருக்கவேண்டும். அவன் தன் சொந்த இடமெனச் சொன்னது உயர் பாதுகாப்பு வலயமாகி ஐந்தாறு ஆண்டுகளாகியிருந்தன. இன்னும் இரண்டு மூன்று பேர் தங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் பின்னால் திரும்பி “என்ரை பேரும் சயந்தன்தான்” என்றபோது அவன் சிரித்தான். அடுத்தநாள் பள்ளிக்கூடம் வரும்போதே அவனுக்கருகில் ஒரு இடத்தை எனக்காக கிளியர் பண்ணவேண்டும் என நினைத்துக் கொண்டேன். அவன் வந்த ராசியெனச் சொல்வேன். அன்றிலிருந்து இரண்டுநேர பள்ளிக்கூடமும் இனி ஒன்றாக இயங்கும் என கடைசிப்பாடநேரம் அறிவித்தார்கள்.

0    0    0

எல்லாம் பிடித்திருந்தது இங்கிலிஸ் பாட நேரத்தைத் தவிர. அதிலும் சேரோடு இங்கிலிசில் கதைக்கும் சென் ஜோன்ஸ் பெடியனைப் பிடிக்கவேயில்லை. நான் கணக்குகளை டக் டக்கென முடித்துக்காட்டும்போது ஆச்சரியப்பட்டுப் பார்க்கிற அதே பெட்டைகள், அவன் இங்கிலிசில் கதைக்கும் போதும், ஆவென்று பார்ப்பது எரிச்சலாயிருந்தது. அதிலும் நாமகள் பார்ப்பது. இங்கிலிஸ் பாடநேரம், என்ன கதைக்கிறதாக இருந்தாலும் இங்கிலிஸ் மட்டும்தான் பாவிக்கவேணும் எனச் சொன்ன பிறகு வகுப்பு ஒரேயடியாக ஸைலன்ற் ஆனது. அந்தப் பெடியன் மட்டும் தஸ் புஸ் என அலட்டிக்கொண்டிருந்தான். I am suffering from fever என்பதை கொப்பியடிக்கும் போது மாற்றியெழுதுகிறேன் பேர்வழியென ஐயாம் சயந்தன் ப்றம் வட்டுக்கோட்டை என்றெழுதவல்ல விண்ணனாயிந்தேன் நான். இருபத்தெட்டு மார்க்ஸே எடுத்தாலும் “தமிழீழத்தில எதுக்கு இங்கிலிஸ்” எனக் குண்டியில் தட்டிவிட்டுப்போகிற எனக்கு இது பெருஞ்சிக்கலாக இருந்தது. பின்னேரப்பொழுதுகளில் பாஸ்ற் ரென்ஸ், பாஸ்ற் பார்ட்டிசிப்பிள் என அரட்டுவதை அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒரு நல்ல நாளில் அது நடந்தது. பெடியன் திரும்பவும் யாழ்ப்பாணம் போய்விட்டான். அங்கொன்றும், இங்கொன்றுமாக சனங்கள் யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கிடந்த யாழ்ப்பாணத்திற்கு, வவுனியாவுக்குப் போய் அங்கிருந்து திருகோணமலை, பிறகு கப்பலிலென அவர்கள் போனார்கள். அவர்களை நான் துரோகிகளென்று சயந்தனுக்குச் சொன்னேன். அவன் எப்போதும் போல சிரித்துவிட்டு நிலாந்தியையே பார்த்துக்கொண்டிருந்தான். நாமகள் கூட பிறகு என்னை மட்டுமே பார்ப்பதாய் உணர்ந்தேன். ஒழிந்தான் துரோகி!

நாமகளும் நிலாந்தியும் அருகருகில் இருந்தார்கள் என்னையும் சயந்தனையும் போல. நிலாந்தியும் சயந்தனும் இடைவேளைகளின் போது பட்டும்படாமலும் கதைக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படியோ அதற்கான வாய்ப்புக்கள் வந்துவிடுகின்றன. கொப்பிகளை, பெடியங்களிடமும் பெட்டைகளிடமும் மாற்றித்திருத்துவது பொஸ்கோ சேருடைய பழக்கம். அப்படிவந்த கொமர்ஸ் கொப்பியின் ஈழநாதம் உறையில் நிலாந்தி, ச-ய-ந்-த-ன் என்ற எழுத்துக்களைத் தேடித்தேடி வட்டமிருந்தாள். அதனைச் சயந்தனிடம் காட்டினேன். அவன் ஒரு பேச்சுக்குக்கூட அது நீயாயிருக்குமோ எனக்கேட்கவில்லை. “கொண்டா, நான் திருத்துறன்” என்று வாங்கிக்கொண்டான். எப்போதாவது நாமகளின் கொப்பி என்னிடம் வருமென நான் நம்பியிருந்தேன். பொஸ்கோ சேருக்கு ஒலுமடுப்பக்கமாக வந்த இடம்மாற்றம் நம்பிக்கையையும் கொண்டுபோனது.

நாமகள் கணக்கையும் இங்கிலிஸியும் தவிர மற்றப்பாடங்களில் நல்ல மார்க்ஸ் எடுத்தாள். நான் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருந்தேன். இங்கிலிஸில்….. வேண்டாம், தமிழீழத்தில் இங்கிலிஸ் எதற்கு? “என்னடா, வன்னிப்பெட்டை முதலாவதா வாறாள். நீ யாழ்ப்பாணத்தில இருந்து வந்துட்டு ரண்டும் மூண்டும் நாலுமெண்டு வாறாய்” என திட்டு விழுந்தது எனக்கு. ஆனால் எட்டொன்பது வருடங்களாக இரண்டாவதாய், மூன்றாவதாய் வந்து கொண்டிருந்த நிறையப்பேர் பத்து பதினொன்றென போய்விட்டிருந்தனர். அவர்கள் துயரத்தை அமைதியாய் வைத்திருந்தனர். நிலாந்தி புத்தகப் பையில் முகம் புதைத்து அழுதாள். “இது சரியில்லையடா, இவ்வளவுநாளும் முதலாவதா, ரண்டாவதா வந்தவங்களை, திடீரெண்டு நாங்கள் வந்து பின்னாலை ஒதுக்கிறது சரியில்லை. மார்க்ஸ் போடாமல் ஏ, பி, சியெண்டு மட்டும் போடச்சொல்லி யார் முதல் யார் ரண்டு எண்டெல்லாம் அறிவிக்க வேண்டாம் எண்டு சேரிட்டைச் சொல்லுவமா” என்றான் சயந்தன். “உதெல்லாம் நிலாந்திக்காகத்தான்” என்று நினைத்து நான் அக்கறையற்று இருந்தேன்.

மாவீரர் படிப்பகத்தில் இரவு பெற்றோமக்ஸ் வெளிச்சம் தந்து படிப்பதற்கான வசதியை இயக்கப்பொறுப்பாளர் செய்துதந்தார். நாமகள், நிலாந்தி சயந்தனென்று குரூப் ஸ்ரடிக்கு எல்லோரும் போனார்கள். நான் போகவில்லை. இரவுப்பயணம் எனக்கு பயத்தைத் தந்தது. நடுஇரவு பன்னிரண்டு மணிக்கும் உலவுகிற சுதந்திரத்தை யானைக்கூட்டங்கள் விளங்கிக்கொள்ளாமல் இருந்தன. வள்ளிபுனத்திலிருந்து தேவிபுரத்திற்குப் பிரியும் வீதியில் யானைகள் சிலசமயம் காடு கடக்கும் என்றார்கள். புதுக்குடியிருப்புக்குப் போகும் வழியில் கைவேலியில் அப்படியொரு மம்மல் பொழுதொன்றில் கண்டிருக்கிறேன். இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சிக்னலில் நிற்பதுபோல வாகனங்கள் நிற்க நடுவே யானைக்கூட்டம் வீதியைக் கடந்து காட்டுக்குள் நுழைந்ததை.

நிலாந்தியும் சயந்தனும் இப்போது ஒபிஸலாகக் காதலிக்கத்தொடங்கியிருந்தார்கள். வீடுகளில் ரியூசனுக்கெனப் புறப்படுபவர்களை உடையார்கட்டுக்குளக்கட்டும், புதுக்குடியிருப்பு கோயிலும் அவ்வப்போது அழைத்தன. மாவீரர் படிப்பகத்திற்கும் சிலசமயங்களில்  அவர்கள் வருவதில்லையென்று சுகிர்தன் குசுகுசுத்தான். நான் “இதெல்லாம் சரியில்லை” என்று சொல்ல ஆசைப்பட்டேன். ஒரு இயக்கக்காரனைப்போல இடுப்பில் கைவைத்துக்கொண்டு சொல்லவேண்டும் “இதெல்லாம் எங்கடை கலாச்சாரத்துக்கு ஒத்துவராது” என்று. ஆனால் அவனைப் பகைத்துக்கொள்ள முடியாது. நிலாந்தி மூலம் நாமகளைக் கேட்டுச்சொல்லும்படி அவனிடம் கேட்டிருந்தேன். ஒரு சரஸ்வதி பூசை நாளில் நிலாந்தி எனக்குச் சொன்னாள். “ஏன் அவர் வந்து நேரா என்னட்டைக் கேட்கமாட்டாரோ எண்டு அவ கேட்கிறா” தூரத்தே நாமகள் நின்றாள் எங்களைப் பார்த்தபடி. நான் நிலாந்திக்கு “தாங்க்ஸ்” சொன்னேன். அதுக்குப்பிறகு விஞ்ஞானபாடத்தில் Sn என்ற அணுமூலக்கூறை கரும்பலைகையில் எழுதியபோதெல்லாம் அங்கே நான்கு சோடிக்கண்கள் குறுகுறுத்துச் சிரித்தன.

இயக்கக்காரர் மீற்றிங் வைக்க வருகிற பொழுதெல்லாம் நான் அதில் ஆர்வமற்றிருக்கிறேன் என நாமகளுக்கு உணர்த்த அசட்டையாக இருந்தேன். இரண்டு மூன்று தடவைகள் சிட்டு வந்திருந்தார். சிட்டுவை எனக்குப் பிடிக்கும். மீற்றிங்கின் முடிவில் “உங்களுக்கேதும் அரசியல் கேள்விகள் இருந்தால், அதை எழுதித்தாங்கோ, பதில் சொல்லுறம்” என்பார். ஆளாளுக்கு எழுதிக்கொடுப்பார்கள். “யாழ்ப்பாணத்தை எப்ப பிடிப்பியள்” “ஏன் யாழ்ப்பாணத்தை விட்டனியள்” “உங்களிட்டைப் பிளேன் இருக்கோ” என்ற கேள்விகளுக்கிடையில் “அன்புள்ள சிட்டு. உங்களின் பாட்டுக்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். எனக்காக ஒருதரம் உயிர்ப்பூ படத்தில் இருந்து சின்னச்சின்னக் கண்கள் பாட்டைப் பாடிக்காட்ட முடியுமா, இங்ஙனம் அன்பு ரசிகன்” என்ற கடிதத்தை வாசித்த மாணவியிடமிருந்து பறித்துக் கசக்கியெறிந்தார் சிட்டு. நான் குறுகுறுப்பாக நாமகளைப்பார்த்துச் சிரித்தேன். “சொல்லிக்குடுக்கட்டா?” என்று சாடைகாட்டினான் சயந்தன். பதிலுக்குக் கண்டாவளைச்சந்திக் கதையை அவனுக்கு ஞாபகமூட்டினேன். கண்டாவளைச் சந்தியில் நானும் சயந்தனும் சிட்டுவிடம் தனியே சிக்கியிருந்தோம். அப்போது கிளிநொச்சிக்கு ஆமி வரவில்லை. “சொந்த இடம் எது” என்று கேட்டார் அவர். இருவரில் யாரைக்கேட்டார் எனத்தெரியவில்லை. “மயிலிட்டி” என்றான் சயந்தன்.

“இடம்பெயர்ந்து எங்கையிருந்தனீங்கள்”

“யாழ்ப்பாணம், ரவுணுக்குள்ளை..”

“பிறகெங்கை இடம்பெயர்ந்தனியள்”

“பிறகு.. சாவகச்சேரி..” என்றவனுக்கு தொடர்ந்தும் சிட்டு கேட்கத்தான் போகிறார் என்பது தெரிந்திருந்தது. ” சாவகச்சேரியில இருந்து கொடிகாமம், எழுதுமட்டுவாள் எல்லாம் போய் இப்ப கிளிநொச்சியில வந்து இருக்கிறம்” என்று சொன்னான்.

“ம்.. இப்பிடியே ஓடிக்கொண்டிருக்கப் போறியளோ? ஆனையிறவில இருந்து ஆமி வெளிக்கிட்டு கிளிநொச்சிக்கும் வரப்போறான். என்ன செய்யப்போறியள்” இனி வருவதற்கு தம்மை விட்டால் வேறு இடமில்லையென்ற தொனியில் சிட்டு கேட்டார். சயந்தன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. “முல்லைத்தீவில தண்ணீரூற்றில பெரியப்பா இருக்கிறார். பெரும்பாலும் அங்கைதான் போவம் எண்டு நினைக்கிறன்” என்றான். சிட்டுவுக்கு கொஞ்சம் கோபம் வந்ததுதான்.

“உங்களோட மனிசர் கதைப்பினமே” என்றுவிட்டுப் போய்விட்டார். நான் “ஏன்ரா சும்மா கொழுவிறாய் அவையோட?” என்று கேட்டேன். “எங்கடை அண்ணைமாரோட கொழுவாமல் வேற யாரோட கொழுவுறது?” என்று விளக்கம் சொன்னான்.

இயக்கம் அப்போது யாரையும் பிடித்துக்கொண்டு போவதில்லை. மீற்றிங் முடிய “வந்து சேருங்கோ” என்றுவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு அதிபர், “யாரும் போறதாயிருந்தால், வீட்டைபோய் பள்ளிக்கூட யூனிபோமை கழட்டிவைச்சிட்டுப் போங்கோ” என்பார். திரும்பவும் வகுப்புக்கள் தொடங்கும். சிலவேளைகளில் அடுத்த நாளிலிருந்து யாரேனும் பள்ளிக்கூடம் வராமல் போய்விடுவார்கள். அவர்களில் சிலர் நாலைந்து மாதம் கழித்து திரும்பி வந்து சேருவார்கள். பகிடி பண்ணுவோம் என்றோ என்னவோ “நானாப் போகேல்லை, பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள்” என்று சொல்வார்கள். அவர்களை நாங்கள் மோட்டச்சைக்கிள் என்று கூப்பிடுவோம். நல்லவேளையாக அவர்களில் ஒருவன் கூட “நானாவது நாலுமாசம் இருந்தன். நீ..” என்று கேட்கவில்லை. இங்கிலிஸ் சேர் சொல்லுவார். “போகமாட்டாங்கள் எண்டு நினைச்சவங்கள் போட்டாங்கள், போவாங்கள் எண்டு நினைச்சவங்கள் ஒருத்தனும் போகேல்லை” என்று. போவான் என அவர் என்னை நினைத்திருக்கலாம். “சேர், ஓயாத அலைகளுக்கு இங்கிலிஸில எப்பிடிச் சொல்லுறது.” என்று சர்வதேச மீடியாக்களுக்கு தகவல் கொடுக்குமாற்போன்ற அவசரத்துடன்  நான் கேட்டது அவரது நினைவிலிருந்திருக்கலாம்.

நான் பள்ளிக்கூடங்களைத் தவறவிடாதவனாயிருந்தேன். “சோதினை நெருங்குதுதானே, வீட்டில இருந்து படியன்” என்றாள் அம்மா. இயக்க மீற்றிங்குகள் அவளைப் பயப்படுத்தியிருக்கலாம். நாமகளைப்பற்றி எதுவும் அம்மாவிற்குத் தெரிந்திருக்காது. அவளைப்பற்றிய எந்த அடையாளங்களையும் நான் வீட்டீற்குள் கொண்டுவருவதில்லை.  ஆனால், நிலாந்தி வீட்டில் அவளது காதல் பெரிய பூகம்பங்களை ஏற்படுத்தியது. அவள் பெரியதொரு கல்வீட்டில் இருந்தாள். சுற்றிலும் குடிசைகளும், கொட்டில்களுமாக இருக்க, ஒரு மாளிகையைப் போல் அவளது வீடு நிமிர்ந்திருந்தது. அப்பா நிறைய வயல்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவர் நிலாந்தியை இனி ரியூசனுக்கு விடப்போவதில்லை என்று நாமகள் எனக்குச் சொன்னாள். நிலாந்திக்கு அடி விழுந்ததை சயந்தனுக்குச் சொல்லவேண்டாம் என்றாள். தங்களுக்கும் மயிலிட்டியில் பெரியதொரு வீடிருந்ததென்றான் சயந்தன்.

சோதினைகள் முடிந்தபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறையப்பேர் யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். துரோகிகள் எனச்சொல்ல முடியாத அத்தை, அப்பம்மா, பெரியம்மா எல்லோரும் போய்விட்டார்கள். அவர்கள் கட்டியிருந்த கொட்டில்கள் வெறுமையுற்றுக் கிடந்தன. தோட்டங்களில் யாருமற்று இப்படி வீடுகள் இருக்கக்கூடாதென்று அவைகள் இடிக்கப்பட்டன. நிலாந்தியைப் பார்க்கவே முடியாமல் சயந்தன் அந்தரித்துத் திரிந்தான். நாமகளே அவனுக்குமான செய்திகளைச் சுமந்து திரிந்தாள். நாமகளிற்கு யாழ்ப்பாணம் போய் வேம்படியில் பயோ படிக்கும் ஐடியா ஒன்றிருந்தது….. ….. …… இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் கதைகள் இல்லாமற் போயின, நாமகளின் ஒரு மாலைநேரத்து விசும்பலையும், அவள் அனுமதித்த தழுவலையும் தவிர!

0    0    0

சயந்தனை பன்னிரண்டு வருடங்களாக நான் தீவிரமாகத் தேடவில்லை. ஆனால் அவனோடு பேசுவதற்கு நான் ஆவற்பட்டிருந்தேன். அவன் யாழ்ப்பாணத்தில் எங்கேயோ நிலாந்தியோடும் பிள்ளைகளோடும் இருக்கலாம் என நம்பினேன். பிள்ளைகளுக்கு பத்து வயதாயிருக்கும். நிலாந்திக்கும் நாமகளிற்கும் பின்னால் நாங்கள் துரத்தித்திரிந்த வயதிற்கு ஆறோ ஏழு வயது குறைச்சல். என்ன கோதாரிக்கு இந்தக் காலச்சனியன் இப்பிடி வேகமாக ஓடித்தொலைகிறது. நாமகளின் கதைகள் சயந்தனிடம் இருக்கலாம். நாமகள் யாழ்ப்பாணம் வேம்படியில் பயோ படித்திருக்கலாம். கம்பஸ் கிடைத்திருந்தால் டொக்டராயிருக்கலாம். அவள் ஆகுவாள்.

நாமகளின் ஊரை யுத்தம் தின்றுமுடித்துச் சனங்களைக் கடலுக்குள் தள்ளியிருந்த ஒரு நாளில் எனக்குச் சயந்தனின் மொபைல் போன் நம்பர் கிடைத்தது. சயந்தன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். “உன்ரை குரல் நல்லா மாறிட்டுதடா” என்றான். “கல்யாணம் கட்டிட்டியோ” என்று விசாரித்தான். அவனைப்பற்றிய விசாரிப்புகளை முடித்து நாமகளைப்பற்றிக் கேட்க நான் அவசரமுற்றேன். அதற்குமுதல் “ஏன்ரா சின்னவயசில கல்யாணம் கட்டினனி” என்று கேட்கவேண்டும்

“பிள்ளையள் பள்ளிக்குடம் போகினமோ, எந்தப்பள்ளிக்குடம்?”

“பிள்ளையளும் நிலாந்தியும் காம்பில இருக்கினம். ஒருத்தனுக்கு வயித்தாலயடி. நிலாந்தி ஆஸ்பத்திரியில வைச்சிருக்கிறா. நான் வவுனியாலதான் நிற்கிறன்.” சயந்தன் சொன்னான். நான் எந்த வார்த்தைகளையிட்டு என் பதில்களை நிரப்புவதென அறியாதிருந்தேன்.

“நிலாந்திக்கு ரீச்சிங் போஸ் கிடைக்கும் வரைக்கும் சரியாக் கஸ்டப்பட்டம். எனக்கும் ஒழுங்கான வேலையள் இல்லை. ஏதோ அப்பிடியிப்பிடி கடத்திட்டம். அவளுக்குப் புதுக்குடியிருப்பு பள்ளிக்குடத்தில் இடம் கிடைச்சது. நானும் என் ஜி ஓ ஒண்டில தொத்திக் கொண்டன். வன்னியிலேயே இருக்கத்தொடங்கின பிறகு யாழ்ப்பாணம் போறதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. சமாதானம், பேச்சுவார்த்தையெண்டாங்கள். சரியெண்டு அங்கேயே இருந்திட்டம். எல்லாம் போச்சு” என்று இடைநிறுத்தினான் அவன். பதிலுக்கு நான் எதனைப்பேசுவது?

“வீடொண்டைக் கட்டத்தொடங்கினம். அதுவும் அத்திவாரத்தோடயே நிக்குது. உதெல்லாம் சரிவராதெண்டிட்டு அண்ணை வெளிநாட்டுக்கு எடுத்து விடுறன் எண்டான். வெளிக்கிட்டு, இந்தா ஒருவருசமா வவுனியால நிக்கிறன். அதுவும் நல்லதாப்போச்சு. இல்லாட்டிப் பிள்ளையள் தவிச்சிருக்குங்கள். வேளாவேளைக்கு எனக்குச் சாப்பாடு கிடைச்சுக்கொண்டிருக்க, அங்கையென்ரை பிள்ளையள் ஒருநேரக் கஞ்சிக்கு தட்டேந்திக்கொண்டு நிண்டிருக்குதுகள். ஏன்ரா, மற்றாட்கள் மாதிரி நாங்களும் இருக்க முடியாதோ..? பிள்ளையளைப்பாத்தா துடிச்சுப்போயிடுவாய். எங்கையோ சோமாலியாவில பிறந்ததுகள்மாதிரி வத்தலாப்போய் வந்திருக்குதுகள். நிலாந்தி கெட்டிக்காரி, என்னென்டோ வந்து சேந்திட்டாள்” சயந்தனிடம் அச்சம் தரும் வார்த்தைகளே நிறைந்திருந்தன. நாமகள் எங்கேயோ எனக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்.

“ம்.. சொல்லோணுமெண்டு நினைச்சனான். நாமகளும் இங்கைதான் அதே காம்பில இருக்கிறாள் பிள்ளையோடை, புருசனைப் பிடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள். அவன் கொம்பனி ஆள் இல்லை. நிர்வாகப்பிரிவில சம்பளத்துக்கு வேலைதான் செய்தவன். பாவம் அவள், மாற்றுத்துணிகூட இல்லாமல் கஸ்டப்படுறாள்… அவளின்ர அப்பா.. ”

வெளிநாட்டுத்தொலைபேசிகள் பாதியில் நின்றால் கார்ட் முடிந்துவிட்டதென அங்கே நம்புவார்கள். அவனும் நம்பியிருப்பான்.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!
எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது.  அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன்.  ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு..  நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.  புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..

புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள்.  நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல்  (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக ..  அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…?  மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர
கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.

ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுக் கொள்ள மாபெரும் மனிதப்பேரவலம் அங்கு நிகழ்ந்தேறியது. அன்றைய சில மணிநேரங்களில் செத்தவர்கள் தொகை ஆயிரத்தைத் தாண்டியது.

இந்தக் கொடும்நிகழ்வுக்கிடையில் இன்னொரு பக்கமிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ராணுவ பிரதேசத்திற்குள் புகுந்து கொண்டார்கள். இராணுவமே எதிர்பார்த்திராத இந்த நிகழ்வை அவர்கள் பெருமெடுப்பில் உலகின் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கை என பிரச்சாரப் படுத்தத் தொடங்கினார்கள்.

000

நடைபெறுகின்ற நிகழ்வுகள் மக்கள் பாதுகாப்புவலயத்தை விட்டு வெளியேற எத்தனிப்பதை புலப்படுத்தி நிற்கின்றன. புலிகளின் ஆளுகையிலிருந்து வெளியேறி ராணுவ ஆளுகைக்குள் வர விரும்புவதற்கான எத்தணிப்பு இது என்றல்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியான இடம்பெயர்வையும் கடந்த நான்கைந்து மாதங்களாக இருபத்து நான்கு மணிநேர எறிகணைத்தாக்குதல்களையும் நாளுக்கு நான்கைந்து தடவைக்கு மேற்பட்ட விமான குண்டு வீச்சுத்தாக்குதல்களையும் எதிர்கொண்டு உறவுகளை தின்னக் கொடுத்து பொஸ்பரஸ் எரிகுண்டுகள் க்ளஸ்ரர் குண்டுகள் நச்சுப்புகை என ஒருவித எரிந்த வாழ்வு நிலையிலிருந்து விடுபட்டு அந்தமாதிரியான குண்டுவீச்சுகளும் புகைக்குண்டுகளும் கிடையாது என நம்புகின்ற இடமொன்றிற்கு தம்மை தம் பிறந்த குழந்தைகளை பிறக்கப் போகும் குழந்தைகளை கருகுவதிலிருந்து காத்துக் கொள்ள முடியலாம் என்ற நம்பிக்கையில் வெளியேறுகிறார்கள்.

மரணித்தாலும் மானத்தோடும் மரியாதையோடும் சாவதற்கு வன்னியின் அப்பாவி மக்கள் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. கனடா லண்டன் அவுஸ்ரேலியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தம் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக இடம் பெயர்ந்த மற்றய தமிழர்களைப் போலவே உயிர்வாழ்வதற்கான ஆசையும் அதற்கான உரிமையும் கொண்டவர்கள். அதனை ஒதுக்கித் தள்ள முடியாது.

000

புலிகளின் ராணுவ வெற்றிக் கனவுகள் மிதப்புகள் மற்றும் குத்தகைக்கார மன நிலையிலிருந்து தற்போதைக்கு புலம் பெயர்ந்த மக்கள் முழுமையாக விடுபட்டிருக்கிறார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியும். புலம் பெயர் நாடுகளில் ஈழ போராட்டச் செயற்பாடென்பது மாதாமாதம் பணங்கொடுத்தல் மற்றும் நிகழ்வுகளில் கொத்துரொட்டி விற்றல் என்றிருந்த நிலைமாறி மக்கள் வீதிகள் எங்ஙனும் தமது கோரிக்கைகளோடு நிறைகிறார்கள். (ஐநா வளாகத்தில் வருடா வருடம் நடைபெறும் பொங்கு தமிழ் என்ற பெரும் பானை வைத்துப் பொங்கும் ஒரு நிகழ்வு குறித்து கருத்துக் கேட்ட வெள்ளையின நண்பர் உங்களது கலாசார விழா அழகாயிருக்கிறது என்றார். ) உணர்ச்சித் தளத்தில் நின்று மக்களின் கொலைக்கெதிராக கூடுகிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டம் இத்தனை முனைப்பும் கவனிப்பும் பெற்றமைக்கு அப்போராட்டம் தமிழ் இரண்டாம் தலைமுறையின் கைகளுக்கு சென்றமையே காரணமென சொல்லப் படுகிறது. அது உண்மையும் கூட. 94 காலப்பகுதிகளில் ஒரு தடவை ஐநா அலுவலர்களுக்கு விடுமுறை என்பது கூட தெரியாமல் போய் நின்று கத்திவிட்டு வந்தோம் என முந்திய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். அவ்வாறல்லாமல் இப்போது மக்களின் நோக்கம் எவரைச் சென்றடைய வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறதோ அது நடைபெறுகிறது.

தற்போதைய போர் நிறுத்தக் கோரிக்கைகளுக்கு சார்பான ஆக்கபூர்வமான எந்த சமிக்கையும் எவரிடத்திலிருந்தும் இது வரை வரவில்லை. வரும் என்பதும் நிச்சயமற்றது. இங்கே ஒரு விடயம் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

தற்போதைய எல்லா போராட்டங்களுமே உடனடிப் போர்நிறுத்தத்தை மேற்கொண்டு பாதுகாப்பு வலய மக்களைப் பாதுகாக்கும்படியான கோரிக்கையை கொண்டுள்ளன. வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டால் அல்லது வெளியேறினால் போர்நிறுத்தக் கோரிக்கை வலுவற்றதாகி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி விட்டார்கள் என்பதற்காக தமிழரின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் நீர்த்துப் போய் விடாது. அது அப்படியே தான் இருக்கும்.

இங்கே இரண்டிலொன்று நடைபெறும். சிங்கள படைகள் முழுமையாக நில ஆக்கிரமிப்பினைச் செய்து மக்களை முகாம்களில் அடைத்த பின்னர் – விரக்தியுற்று இனியென்ன நடந்தது நடந்து போய்விட்டது. விதியெனச் சொல்லி வீடுகளுக்குத் திரும்புதல் அதில் ஒன்று.

மற்றையது தொடர்ந்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துப் போராடுவதன் ஊடாக இடம்பெயர்ந்த முகாம்களில் வாழும் மக்களுக்கான உடனடி மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என்பவற்றோடு தமிழருக்கான தீர்வொன்றிற்கு அரசினை நெருக்குதலுக்குள்ளாக்கும் தொடர்ச்சியான போராட்டம் மற்றையது. (இவ்வாறான ஒரு போராட்டத்தினை புலிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்டிருந்த காலப் பகுதியில் சிங்கள அரசு பேச்சுகளில் ஒப்புக் கொண்ட விடயங்களை நடைமுறையில் செயல்ப் படுத்த தவறிய தருணங்களில் நடாத்தியிருக்கலாம் என எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை)

இவற்றை விட கொஞ்சம் கலக்கம் தரக்கூடிய ஒரு எதிர்வு கூறலும் உண்டு. பொதுவாக அதிகாரங்களை விசுவாசிப்பதன் ஊடாக தன் தனி மனித மேம்பாட்டைக் கவனித்துக் கொள்ளும் இனமென்ற ஒரு பார்வை இருப்பதனால்.. சரி.. மகிந்த மாத்தையா எனப் போய்விடவும் கூடும் என்பதுவே அது.

000

எரிக்சொல்கெய்ம் தனது நெருங்கிய ஊடக நண்பர்களுக்கு இந்தியாவை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது என சொன்னதாகப் படித்தேன். சமாதான காலத்தில் கிளிநொச்சி வரும் எரிக் புட்டும் தோசையும் சாப்பிட்டுவிட்டு போகும் வழியில் புதுடில்லிக்கும் போய் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை செய்து விட்டு போவார். உண்மையில் ஒழுங்கு மரியாதையாக வந்து என்ன பேசினாய் என சொல்லிவிட்டு போ என்ற டில்லியின் அழைப்பே அது.

தற்போதும் கூட மக்கள் அவலத்தை முன்வைத்து பிரிட்டன் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடத்தான் விரும்புகின்றன. ஆனால் தடுப்புச் சுவர் இந்தியாவைத் தாண்ட முடியவில்லை. அதே நேரம் இலங்கையென்ற ஒருநாட்டில் வடகிழக்கு கடலோரம் சிக்கியிருக்கிற மூன்று லட்சம் மக்களுக்காக மேற்குறித்த நாடுகள் இந்தியாவோடு முரண்படவும் விரும்பவில்லை. அவ்வாறு முரண்பட முடியாதவாறு அவர்களது பொருளாதார பிராந்திய டீல்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. சீனா குறித்தான அச்ச உணர்வு எப்போதும் இந்தியாவோடு நெருங்கியும் உறவாடியும் இருப்பதற்கான தெரிவையே இந்நாடுகளுக்கு வழங்குகிறது.

இந்தியா புலிகளை அழித்த பிறகு என்ன ? என்ற நினைப்பிலிருக்கிறது எனப் புரியவில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பிறகு தமிழருக்கான தீர்வொன்று குறித்துச் சிந்திக்கலாம் எனவும் அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் படுமெனவும் சில கூட்டமைப்புக்காரர்களுக்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரேயே சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். எந்தளவுக்கு சரி என தெரியவில்லை.

ஆனால் தமிழருக்கு தீர்வொன்றினை ஏதோ இதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்ற மாதிரி சிங்கள அரசுகள் தந்துவிடும் அல்லது எடுத்துவிடலாம் என இந்தியா நம்பினால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

அவ்வாறு அவர்கள் முயல்வாராயின் இன்று ராணுவ உதவிகளுக்கு நன்றி சொல்கின்ற சரத் பொன்சேகாவிலிருந்து பிக்குகள் ஜேவிபியினர் என பலரும் குண்டியில் படிந்த புழுதியைப் போல இந்தியாவை தட்டிவிட்டு இது என் உள் நாட்டு பிரச்சனை. நீ தலையிட முடியாது என சொல்லத்தான் போகிறார்கள்.

முடிந்தவரை சிறுகச் சிறுக உருவெடுத்து தன் முதன்மை எதிரியான சிங்களப்படைகளை எதிர்கொள்ளத் தக்கவகையில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ ஆளணி ஆயுத வளங்களோடிருந்த ஒரு விடுதலை போராட்டத்திற்கு எதிராக வல்லரசு நாட்டின் ஆயுத வள உதவியை அளித்து போராளிகளின் தியாகத்திலும் வீரத்திலும் இதுவரை காலமும் பேணப்பட்ட ராணுவ சமநிலையைக் குழப்பியடித்து ஒரு இனத்தின் விடுதலைக் கனவை கருவறுத்த இந்தியாவிற்கு நாம் என்ன செய்ய முடியும்..

இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு என எம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதைத் தவிர…

போய் வருக என் தாய்நிலமே!
UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996

நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே  மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக் கொண்டிருப்பவருக்கான பொதுவிதி.

ஆனாலும் என்னவோ பள்ளிக் காலம் என்றவுடன் UK என்கிற உடையார் கட்டு பாடசாலைதான் நினைவுக்கு வருகிறது.  ஏன் என்பதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். அது முதன் முறையாக பெண்களோடு அருகருகே பயிலும் வாய்ப்பு.  வாராது வந்த மாமழையான வாய்ப்பு. பதற்றமும் தயக்கமும் மகிழ்ச்சியுமான அப்போது வயது 16.

ஒரு ஏப்ரல் நாள். கடந்த நான்கு மாதங்களில் வன்னி மெதுமெதுவாக இயைபடைந்து விட்டிருந்தது. கொஞ்சக் காலம் கொட்டில் கட்டுவதில் போனபோது சும்மாயிருக்கிறோமே எனத் தோன்றவில்லை. மென் இருண்மைக் காடுகளில் சூரை முட்கள் கிழித்தெடுக்க தடிகள் வெட்டினோம். சூரை முள் சும்மா இல்லை. மற்றைய முட்களினின்றும் மாறுபட்டது. தூண்டிலைப் போல எதிர் வளமாய் இருக்கும். ஆரம்பங்களில் கிழி கிழியென கிழித்திருக்கிறது.

மொத்தம் மூன்று கொட்டில்கள். சிறிதும் பெரிதுமாக. சுவர்களுக்கு மண்ணுக்காக குழிகள் தோண்ட வேண்டியிருந்தது. ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் யானைக்கு பொறிக் கிடங்கு ஆகியிருக்கும். ஆனால் நீளமாக ஓடி பிறகு வலது பக்கம் திரும்பி கிட்டத்தட்ட ட வடிவில் மண்ணை அகழ்ந்தெடுத்தோம். பொதுக் கிணறு பொதுக் கக்கூசு (காட்டின் எல்லையோரம் ஆளுயரப் புற்களின் மறைப்பிலான பொது நிலம்தான் அது) போலவே பொதுப் பதுங்கு குழி அது. குண்டு தள்ளி விழுந்தால் பதுங்கு குழி. உள்ளே விழுந்தால் மரணக் குழி.

வன்னி அவ்வாறான ஒரு சனத்திரளை கண்டிருக்காது. திடீரென வீங்கி முட்டியதைப் போல கொஞ்சமென்ன அதிகம் திணறித் தான் போனது. நிலம் பெரிதுதான். யாழ்ப்பாண குடாவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்தான். ஆனால் அத்தனை மக்கட் கூட்டத்தின் கொள்ளளவைத் தாங்கிக் கொள்வதற்கு அது தயாராய் இருக்கவில்லை.  தன்னளவில் நிறைவான உற்பத்தியோடு தன்னளவில் அளவான விலை விகிதங்களோடு எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒற்றை ஜீவனைப் போல வன்னி தன் பாட்டுக்கு சிவனே என்று இருந்தது.

ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம்தான். 94 வரையும் வன்னி தொடர்பான யாழ்ப்பாணத்துப் புரிதல் எப்படி இருந்தது. வன்னியோ அது காய்ந்து போன கருவாட்டு நிலமெல்லோ.. அங்கை மனிசர் இருப்பினமோ.. நுளம்பும் மலேரியாவும்.. ச்சீச்சீ தூத்தூ..

ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும் அடித்து துவைத்துக் காயப் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கொசுக்கள் பழகின. காடு பழகியது. யானைகள் பழகின. குரங்குகள் பழகின.

இனிப் பள்ளிக் கூடம் பழக வேண்டும்.

கையில் பள்ளிச் சான்றிதழ்களோ ஏதும் அடையாளங்களோ இல்லை. கட்டடத்தின் வெளியே ஒரு மேசையைப் போட்டு பெயர் முன்னைய பாடசாலை கடைசியாய் படித்த வகுப்பு எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம் சேர். பின்னாட்களில் எனது கணக்கு வாத்தியார்.  ஆசிரிய பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணம் பல தடவைகள் முன்பு வந்திருக்கிறார். பாடநேரங்களில் சில முன் வலிகள் அவரையுமறியாமல் வந்து விழும். ம்.. அப்ப எல்லாம் ட்ரெயினிங் வந்த போது வன்னியென்டால் ஒரு நக்கல் உங்களுக்கு. இப்ப….? என்பதோடு நிறுத்துவார். அந்த மனதை அப்போதை  விட இப்போது ஆழமாக உணர முடிகிறது.

வெள்ளைச் சேட்டு நீலக் காற்சட்டை கறுத்தச் சப்பாத்து கட்டாயம் என்ற முன்னைய பாடசாலையின் கொழுப்பெடுத்த விதிகளை யுத்தம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. வெள்ளையைக் கிட்டவும் நெருங்க முடியாத ஒரு மண்ணிற அரைக் கை சேர்ட்டும் சாம்பல் நிற காற்சட்டையும் கான்சர் வருமென பயமுறுத்தினாலும் கனகாலமாக என் காலோடு தேய்ந்த நீல நிற முள்ளுச் செருப்புமென ஏகாம்பரம் சேருக்கு எனது முன்னைய பள்ளியின் பெயரையும் படித்த வகுப்பையும் சொன்னேன். ”ஓ.. அப்ப இந்த வருசம் ஓ எல் சோதினை.. என்று நான் மறந்தே போயிருந்த விசயத்தை அவர் நினைவு படுத்தினார். இன்னும் எட்டே மாதங்கள் இருக்கிறது. கடந்த ஆறு மாதமாய் பள்ளிப் புத்தகங்களை பார்த்தது கூட இல்லை.

பாடசாலைக் கட்டடங்களில் மக்கள் இருந்தார்கள். வெளியே மரநிழல்களில் வாங்கு மேசைகளை போட்டோம். ஆரம்பத்தில் நிரந்தர மாணவர்களுக்கு காலையும் இடம் பெயர்ந்தவர்களுக்கு மாலை வகுப்பும் என நடாத்தினார்கள். மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும். வீட்டில் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஓடி வந்தால் அருமையான நித்திரை வரும். மரநிழல் சுகமான காற்று தாலாட்டும். ஆசிரியர்கள் திட்டுவதற்கு எழுப்பினால் கூட வீடு வாசல் கிராமம் நகரம் என அனைத்தையும் இழந்து வந்த சோகத்தை முகத்தில் அப்பி விட்டு நிற்போம். இரங்கி இறங்கி விடுவார்கள். (முன்னைய யாழ்பாணத்து பள்ளியில் புண்ணியலிங்கம் சேர் தண்டிப்பதற்கு அழைத்தால் முதல்வேலையாக நெற்றியில் திருநீறை அப்பி முன் சென்று நிற்போம். சிவனடியார்களை துன்புறுத்தலாகாது என்பது அவரது கொள்கை.)

மதிய நேரத்துப் பள்ளி வேலைக்காகாது என்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டார்கள். ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் கூடிய வாழ்வில் மறக்கவே முடியாத பள்ளி வாழ்க்கை அதன் பின்னர் எனக்கு ஆரம்பித்தது.

காரணமவள்.

0	0	0

20090224_pg17வள்ளிபுனம் சந்தியிலிருந்து தேவிபுரத்திற்கு பிரியும் வீதியில் கொஞ்சத் தூரத்தில் இருக்கிறது ஆச்சி தோட்டம். பென்னம் பெரிய தென்னந் தோட்டம். ஏக்கர் கணக்கில் சரியான அளவு தெரியாது.  மண்ணால் சுவரெழுப்பப்பட்ட ஒரு சுமாரான வீடு அதன் நடுவில் இருந்தது. சீமெந்துக் கட்டுடன் கூடிய கிணறு, சற்றுத் தொலைவில் தேங்காய்களை கொப்பறா ஆக்கி எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலை.

ஆச்சி தோட்டம் எப்போதுமே மனிதர்கள் நிறைந்து காணப்படும். தேங்காய்களை பொறுக்குபவர்கள், தேங்காய்களை, உரிப்பவர்கள், காய வைப்பவர்கள், குரங்கு திரத்துபவர்கள் என எனக்கு முற்றிலுமான புதிய அலாதியான உலகம் அது. நல்ல மனிதர்கள். பெரும்பாலானவர்களின் பூர்வீகம் தமிழகத்தின் தென்மாவட்டங்கள்தான். கலவரங்களின் போது மலையகங்களில் இருந்து வன்னியில் குடியேறியவர்கள். வன்னியைத் திருத்தியவர்கள். காடுகளை விவசாய நிலங்களாக்கியவர்கள்.

ஆச்சி தோட்டத்தின் வீட்டுச் சுவரில் இடியன்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கட்டுத் துப்பாக்கிகள். பகல்களில் குரங்குகளை விரட்ட அவ்வப்போது வெடிக்கும். இரவுகளில் வெடித்தால் மான் அல்லது மரை அல்லது காட்டுப் பன்றி.  சூடு வாங்கி அவை தப்பித்து ஓடிவிடும். விடிகாலையில் இரத்தத்தைத் தொடர்ந்து சென்று எடுத்துவர வேண்டும் உடலமாய்.

ஆச்சிதோட்டத்தை சுற்றியும் வேறும் பல பெயர்களையுடைய தென்னங்காணிகள் இருந்தன. பத்து ஏக்கர் காணி , மஞ்சள் கேட் காணி, சிவத்தக் கேற் காணி என அடையாளப் பெயர்கள். பத்து ஏக்கர் காணியில் நாங்கள் குடியிருந்தோம். காணியின் ஒரு முடிவில் காடு தொடங்கியது. இரண்டு அல்லது மூன்று வருடங்களேயான இளைய தென்னைகள் அப்போது நின்றன. ஒரு குடி நீர்க் கிணறு இருந்தது. அந்த சுற்று வட்டாரத்திற்கான குடி தண்ணீர்க் கிணறு அது ஒன்றுதான். கிணற்றடி எப்போதும் களை கட்டியிருக்கும்.

நாங்கள் மூன்று கொட்டில்களை அங்கு அமைத்தோம். காட்டின் ஓரமேயிருப்பதாலும் இளைய தென்னைகள் என்றதாலும் இரண்டு தடவைகள் யானை வந்திருக்கிறது. அப்போது நடைபெறும் களேபரங்களில் யானையே மிரண்டு போயிருக்கும். என்ன அடுத்த நாள் பார்க்கையில் சமையல் சட்டிகளும் பாத்திரங்களும் வளைந்தும் நெளிந்தும் போயிருக்கும்.

சைக்கிளில்த்தான் பள்ளி செல்வேன். முக்கால்மணி நேரம் எடுக்கும். கிட்டத்தட்ட புதுக் குடியிருப்புக்கும் அதேயளவு தூரம்தான். இரண்டும் எதிரெதிர்த் திசைகளில் இருந்தன. வள்ளிபுனம் சந்தியில் ஏறினால் பரந்தன் வீதியில் உடையார்கட்டு நேர் வீதி. ஆனால் அப்படியெல்லாம் செல்வதில்லை. இடையில் சுதந்திரபுரச் சந்தியில் திருப்பி உட்சென்று ஒழுங்கைகளில் ஏறி மிதந்து சுற்றியடித்து மீளவும் பரந்தன் வீதியில் ஏறுவேன். பள்ளி முடியும் போதும் அப்படித்தான்.

காரணமவள்!

0	0	0

கண்ணன் அண்ணை பத்து ஏக்கர் காணியிலேயே தங்கி விட்டார். வன்னிக்கு இடம் பெயர்ந்த போது மகன் சுஜீவனுக்கு 3 வயது இருந்திருக்கும். கிளாலிப் படகில் அவன் என் கை அரவணைப்பில் இருந்தான். மகள் சுபா கலையக்காவின் வயிற்றிலிருந்தாள். பின்னர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அவள் பிறந்த போது வெளியே இரணைப்பாலையில் கிபிர் குண்டுத்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு பெயர் வைக்க ஆலோசனைகளை கேட்ட போது கிபிரி என்ற பெயரைப் பரிந்துரைத்தேன். கண்ணன் அண்ணை ணங் என தலையில் குட்டினார்.

நாமெல்லாம் வெளியேறிய பிறகு அவருக்கு இன்னொரு மகள் பிறந்தாள்.  அவருக்கு ஆச்சி தோட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்புக் கிடைத்திருந்தது.

கடந்தவாரம் ஆச்சிதோட்டத்தில் செல் விழுந்து எட்டுபேர்  பலியாகியதாக தமிழ்நெட் சொல்லியது. வேறெந்த தகவலும் இல்லை. பிறிதொரு நாள் என் UK central college முகப்பில் சிங்கள ராணுவச் சிப்பாய் நிற்கக் கண்டேன். பள்ளி முகப்பில் வெள்ளைக் கொடி பறந்து கொண்டிருந்தது.

காரணமவளானவளெங்கே…

பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்
2002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்!
தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அங்கு வைத்து புலிகளிடம் கையளிக்கப்பட, புலிகள் தம் வசமிருந்த இலங்கை அரச படையினரை பதிலுக்கு விடுதலை செய்தார்கள்.

துளிர் விட்டிருந்த சமாதான நம்பிக்கைகளின் பொருட்டு நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பும் இவ்வாறான ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தார்கள்.

கமெரா அவ்விடத்தை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது. இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், புலிகளின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவினர், விடுவிக்கப் படுகின்ற இருதரப்புக் கைதிகள், அவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோர் நிறைந்திருந்தனர்.

விடுவிக்கப்பட இருப்போரில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசமிருந்தவர்கள். இன்னும் சிலர் இறந்துவிட்டதாகவே கணிக்கப்பட்டவர்கள். தொலைக்காட்சி அவ்வப்போது அவர்களை மிக அருகில் உள்வாங்கிக் கொள்கிறது. ´´அவர்தான் கெனடி´´ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். 93இன் இறுதிகளில் பலாலித் தளத்தினில் புலிகள் நடாத்திய கரும்புலித் தாக்குதல் ஒன்றில் பங்கு பற்றியவர் அவர். அப்போதைய தொடர்பாடல் காரணங்களால் தாக்குதலில் வீரச்சாவடைந்த புலிகளின் வரிசையில் அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆயினும் பல காலங்களிற்கு பின்னரே அவர் கொழும்புச் சிறையொன்றில் இருப்பது தெரியவந்தது.

கமெரா அவரைக் கடந்தும் செல்கிறது. எல்லோருடைய முகங்களிலும் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சி படிந்திருந்தது.

இப்போது விடுவிக்கப் பட்டவர்கள் தமது உறவினர்களோடு அளவளாவினர். மகனை உச்சி மோர்ந்து கொஞ்சும் தாய், அண்ணனை அரவணைக்கும் தம்பி, ஆனந்த கண்ணீர் உகும் தந்தையென உணர்ச்சிகளின் கலவைகளால் நிறைந்திருந்தது அவ்விடம்.

அதோ அந்த சிங்களத் தாயின் மகிழ்வும், அவர்களுக்கு அருகிலேயே நின்று தன் அண்ணனின் தோள்களில் தொங்கிய தமிழ்த் தம்பியின் சந்தோசமும் எனக்குள்ளும் உருவானதாய் உணர்ந்தேன் -

இந்த மகிழ்வுகளின் பின்னால் இவர்கள் எத்தனை வேதனைகளை, துயரங்களை கடந்து வந்திருப்பார்கள் ? எத்தனை வருடங்கள் இவர்களைத் தனிமையில் விழுங்கியிருக்கும்..?

பட்டாம் பூச்சி – கென்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன் – 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூலினை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்த போது மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே – அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ஆசிரியர்) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அடுத்த 13 ஆண்டு காலத்திற்கு அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பித்துக்கொள்கிறார். தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

கதையில் விவரிக்கப் படுகின்ற வகையிலான கொடும் சிறைகளில் 13 ஆண்டுகள் என்பது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. சாதாரணமாக செய்திகளில் 20 வருடம் தண்டனை, 30 வருடம் தண்டனை எனும் போது ஏற்படாத உணர்வலைகள் அத்தனை வருடங்களையும் வரிக்கு வரி விவரிக்கும் போது  அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பிரெஞ்சுக் கயானாவின் தனித்தீவுச் சிறைகளின் கொடூரத்திற்குச் சற்றும் குறைந்தனவல்ல நமது சிறைகள்!

இரவு நேர ஜெர்மன் மொழி வகுப்புக்கள் – சற்றே அவசரமான தேவையென்பதால் தினமும் நான்கு மணிநேரம் – முதல்நாள் வகுப்பிற்குள் நுழைந்த போதே அவரைக் கண்டு கொண்டேன்.

இடைவேளையின் போது வழமையான குசல விசாரிப்புக்கள் – அண்ணை தமிழோ என்பதிலிருந்து ஆரம்பித்தது. ´´எப்ப வந்தனியள்..?´´

´´ஒரு வருசமாகுது´´

தொடர்ந்த உரையாடலில் என்னுடைய ஏதோ ஒரு கேள்விக்கு அமைதியாய் அவர் சொன்னார். ´´ 19 வயசில இருந்து 31 வரை கிட்டத்தட்ட 12 வருசம் வெலிக்கட நாலாம்மாடியெண்டு கன இடங்களில சிறையில இருந்தன்.´´

பட்டாம்பூச்சி படிக்கும் போதிருந்த படபடப்பு எனக்குள்.

அவர் தொடர்ந்தார். ´´பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் போது இழுபறிப் பட்டு என்ரை பெயரையும் சேத்தாங்கள்´´

பிறிதொரு நாள் அவர் காட்டிய 96ம் ஆண்டுத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் அவர் இறந்து போனதாய்ச் செய்தியொன்று வந்திருந்தது.

அண்மைக்காலங்களில் இணையத்திலும் சரி எங்கினும் சரி ஈழத்தின் செய்திகளைக் காணும் போதெல்லாம் ஒரு வித வெறுமையும் இறுக்கமும் தொற்றிக்கொள்கிறது.

இதை நான் எழுதும் கணத்தில் நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்.

இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.

நண்பரின் 12 வருட கால சிறை அனுபவங்களை அருகிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன். அவருக்கு இதில் ஈடுபாடு எதுவும் இல்லையென்றாலும் ஒரு பதிவுக்காக அவை இங்கே தொடரும்..

சிறை அனுபவம் என்பது அவர் ஏன் சிறைக்குச் சென்றார் என்பது அல்ல !

முன்னுரை முற்றிற்று

கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்
அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது. இன்னொரு வழியில் வெளிநாடுகளுக்கு படித்தவர்கள் மட்டுமே செல்லலாம், ஆகவே படித்த நாங்கள் மட்டுமே செல்லலாம் என்ற அவர்களின் மன ஓட்டத்தின் வெளிப்பாடாகவும் இவை அமையலாம்.

அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் படித்த எங்களால் கொள்ள முடியாத தனி மனித பொருளாதார வளர்ச்சியை, கோப்பை கழுவுகிறவர்களும், தூசி தட்டுபவர்களும் எளிதில் கொண்டு விடுகிறார்களே என்ற ஒரு வித தாழ்வுச் சிக்கலும் இவ்வாறான கருத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம்.

உண்மையில் இவ்வாறு தொழில் முறையில் இழிவு படுத்துகின்ற, சாதியம் சார்ந்த பழக்கவழக்கம் உள்ள ஒரு (எனது அனுபவத்திற்கு உட்பட்ட வகையில் யாழ்ப்பாண) சமூகம், ஒட்டுமொத்தமாக பிறிதொரு இடத்திலிருந்து இவ்வாறான பார்வைகளைப் பெறுதலென்பது ஒரு வகை முரண் நகைதான். ஆங்காங்கே படித்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஈழத் தமிழர்களிடமிருந்து கூட இவ்வாறான கருத்துக்கள் வெளியாவதுண்டு.

யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும்  ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது. சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புலம் பெயர் தேசங்களில் இதோ அடுத்த தலைமுறை உருவாகி விட்டது. தனியே டொக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன் என்பவையே உயர் படிப்புக்கள் என்றிருந்த யாழ்ப்பாண சமூக நிலையிலிருந்து விடுபட்டு ஆடை வடிவமைப்பாளர்களாக, உணவுத் தயாரிப்பாளர்களாக, விமானமோட்டிகளாக என பல்வேறு துறைகளில் பரிணமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இங்கே சுவிற்சர்லாந்தில் எனது மாநிலத்தின் பாராளுமன்றில் இருபத்தைந்து வயது நிரம்பிய ஈழ தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதே போல இன்னுமொரு மாநிலத்து பாராளுமன்றிலும் இளைஞர் ஒருவர் உள்நுழைந்திருக்கிறார்.  எனது அறிதலுக்குட்பட்ட வகையில் சுவிசின் லுகானோ மாநிலம் தன் சார்பில் அனுப்பும் செயற்கைக் கோளுக்கான செயற்திட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இணைந்திருக்கிறார். சுவிஸ் இராணுவத்தில் கப்டன் தரத்தில் உள்ள தமிழர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்.

இவ்வாறான நிறைய உதாரணங்கள் பிற நாடுகளிலும் உண்டு. இதிலே ஒரு விடயம் கவனத்திற்குரியது. புலம்பெயர் தேசங்களில் வாழ்வினைத் தொடங்கும் தமிழ்த் தலைமுறையிடம் பெரிய அளவில் தம் மக்கள் மீதான கரிசனை இருக்கப் போவதில்லை என்று  (அது இயல்பானதே என்ற ரீதியில்) எதிர்பார்க்கப் பட்ட ஒரு எண்ணத் தோற்றம் நடைமுறையில் முறியடிக்கப் படுவதே அது. மனிதர் மீதான கரிசனை என்ற அளவிலாவது அவர்கள் தம் தேசத்தில் துயருறும் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள்.

சமாதானத்திற்கான காலங்களில் பெருமளவில் தமது தாயகப் பிரதேசங்களுக்கு வந்து அங்கே நிர்வாக கட்டமைப்புக்களுக்கும் தொழிற்துறை முயற்சிகளுக்கும் இராணுவ கட்டமைப்புத் தேவைகளுக்காகவும் தமது அறிவு அனுபவ பகிர்தலை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இளையவர்கள் தானே ஆங்காங்கே குழுத் தாக்குதல்களிலும் தெருச்சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள் எனில் ஆம். அதுவும் உண்மைதான். ஏனெனில் இது ஒரு ஒட்டுமொத்தமான இனத்தின் இடப்பெயர்வு. ஆகவே சகல கூறுகளையும் கொண்டிருக்கும். அதுவே இயல்பானதும் கூட.

–அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?
–அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது..
–என்ன மோனை..

யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது
வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி  அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.

ஆனால் இதன் அடிப்படையில் என்ன உளவியல் காரணமுண்டு என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இடை நடுவில் பிரித்தெறியப்பட்டு எங்கெங்கோ தேசங்களில் இன்று சிதறுண்டு போய்க் கிடக்கும் இள வயதுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் இணையும் போது அங்கே கூத்தும் கும்மாளமுமே முதன்மையாய்த் தோன்றுவதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா..?

இவை குறித்து மேலும் பேசுவதற்கு முன்னர் ஈழத்தில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுமுக நிலை குறித்து பார்த்து விடலாம். அப்போதே அரசியல் ரீதியான முரண்கள் இருந்த போதும் இயல்பு நிலையென்பது பேணப்பட்டது.

இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.

நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..?
நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள்.

மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?

ஆயினும் இளமைக் காலத்தை இவ்வாறு இழந்த வருத்தமெதுவும் எனக்கு இருக்கவில்லை, கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சமாதானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வரை.

2004 இன் நடுக்காலப் பகுதி

நான், சோமிதரன், நண்பர்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றோம். அது என்றும் நான் பார்த்திராத யாழ்ப்பாணம். முற்றான சமாதானமென்றில்லாவிட்டாலும் சமாதானம் மீதான நம்பிக்கைகளே அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

நாங்கள் கடற்கரைகளுக்குச் சென்று பாணும் இறைச்சியும் சாப்பிட்டோம். எவரும் பிடித்து விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இராணுவ முகாம்களைக் கடந்தோம். ஏதாவது ஒரு உள்நுழைவில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த புலிகள் மற்றும் இராணுவத்தினரைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். அடையாள அட்டை கேட்காத இராணுவத்தை நட்பாகப் பார்த்தோம்.

நடு இரவுகளில் கள்ளுக் குடித்தோம். கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என பாடிக்கொண்டு இரவின் வீதிகளில் எந்தப் பயமுமற்றுத் திரிந்தோம்.

அது போலவே கொழும்பில் சோதனைச் சாவடியற்ற பிரயாணங்களை அனுபவித்தோம். காலி முகத் திடல் கடற்கரையில் சாமம் தாண்டியும் கதைகள் பேசினோம். பொலிஸ் பதிவுகளை தூக்கி வீசியெறிந்தோம்.

அந்த ஒன்றிரண்டு நாட்களின் அனுபவங்களில் யுத்தமற்ற வாழ்வு எத்தனை மகிழ்ச்சியானது என்பதை அறிந்து கொண்டேன். இவையெதுவுமற்று இழந்த வருடங்களை எண்ணி வருந்தினேன். தங்கள் காலங்களை மகிழ்ச்சியாகக் களித்த அன்றைய இளைஞர்கள் மீது பொறாமை வந்தது.

வயதின் குறும்புகளுக்கு இடம் கொடுக்காத காலம் எங்களது. அந்த அனுபவங்களையெல்லாம் யுத்தம் எங்களிடமிருந்து அடித்துப் பறித்தது.

இதோ அந்த வயதுகளைக் கடந்து அடுத்த கட்டங்களிற்குள் உள் நுழைந்து விட்ட போதும் எப்போதாவது சிதறிக் கிடக்கின்ற நண்பர்களைக் காணுகின்ற போது கடந்த காலத்தினை அனுபவிக்கத் துடிக்கிறது மனது.  அந்த அரட்டைகள், அந்த நக்கல்கள், கேலிப் பேச்சுக்கள் என மீண்டும் சிறு பையன்களாகி விடுகிறோம். அது நண்பர்கள் இணைந்த எந்த நிகழ்விலும் வெளித் தெரிகிறது. தவிர்க்கவும் முடியாதது.

சமாதானம் மீண்டும் தன் முகத்தை மறைத்துக் கொண்டு விட்டது. மீண்டும் யுத்தம், சாவு, கடத்தல்கள், அடையாள அட்டை, குண்டு வீச்சுக்கள், செல்லடி. அடுத்த தலைமுறையும் எங்களைப் போலவே வாழ வேண்டுமென்ற விதியாகி விட்டது அங்கே. அவர்களும் நட்பை இழந்து, அரட்டைகளை இழந்து, கடற்கரைகளை இழந்து, பூங்காக்களை இழந்து …..

யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..