சாரல் » சிறுகதைகள்

என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன்.

மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர்.

´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ  எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட்.

´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ… அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர்.

´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.

´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை.

´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார்.

வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.

வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´
´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´
´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´
´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´
´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´
சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.

காயத்திரி.. நீ போய் விட்ட பிறகு
த.அகிலன்

வாழ்வு, ஆசைப்படுகிற காலத்திலேயே ஆசைகளைத் தீர்த்து வைக்கிறதா என்ன? கனவுகள் நீர்த்துப் போன பிறகு கனவு களை அடையும் வழிகளைக் காட்டுகிறது சில வேளைகளில். துயரத்தின் புன்னகையைத் தவிர வேறெதுவும் தோன்றுவதில்லை அப்பொழுதுகளில். காயத்திரி இதை இவ்வளவு தாமதமாக நான் எழுதியிருக்கக் கூடாது. தாமதம், என் வாழ்வில் பெரும் பாகத்தைத் தின்று விட்ட தாமதம். அணு அணுவாய்ப் பிசைந்து மனசை நெருப்பில் வாட்டி யெடுக்கிற தாமதம். தயக்கங்களும் அச்சங் களும் என்னை அரித்துத் தின்று எனது தைரியத்தை விழுங்கிவிட்டன. உனக்கும் இதுதான் பிரச்சினையாய் இருந்தாத காயத்ரி.

நான் உன்னை நேசித்தேன் என்பதை இந்தக் கடிதம்தான் உனக்குச் சொல்லும் என்பதை நான் நம்பமாட்டேன். எனக்குத் தெரியும், உனக்குள் ஒளிந்திருந்த என் மீதான காதலை. என் மீது வருடிப் படர்ந்து கடந்துபோகும் உன் பார்வை பல தடவைகள் அதை எனக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் கடைசிவரைக்கும் உதடுகள் சொல்லவேயில்லை. உதடுகள் எப்போதும் காதலைச் சொல்லத் திணறுகின்றன. கண்கள் அப்படியல்ல. அவை எந்த  ரகசியங்களையும் காப்பாற்றுவதில்லை. ஒளிந்திருக்கும் மனதின் ரகசியங்களை வெளியே கசிய விட்டு விடுகின்றன. பெரும் கூட்டத்துக்குள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும் என்னையும் என்னைத் தேடிக் கொண்டிருக்கும் உன்னையும் கண்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால், உதடுகள் ஒத்துக்கொண்டதில்லை ஒருபோதும்.  காயத்திரி, நம் உதடுகள் ஒத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை இந்தக் கடிதத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ?

காயத்திரி , உனக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கவிதைப் போட்டியில் பரிசு கிடைத்த நாளை. நான் மாணவர்களால் சூழப்பட்டிருந்தேன். எனது கவிதைத் தாள்களை மாணவிகள் போட்டிபோட்டு பறித்துப் படித்தபடியிருந்தார்கள். நான் எனக்குக் கிடைத்த பாராட்டுகளைச் சொரிய விட்டுக்கொண்டிருந்தேன். வெறுமனே எனது இதயத்தை எந்தப் பாராட்டுகளும் நெருங்க விடாதபடிக்கு இதயத்தைத் துடைத்து சுத்தமாக வைத்திருந்தேன். எனக்குக் கிடைக்கப்போகும் உன்னுடைய பாராட்டுகளை என்றைக்குமாய்ப் பத்திரப்படுத்துவதற்கு. ஆனால் எப்போதும் போல உனது வில்லத்தனமான உதடுகள் அன்றைக்கும் பேசவேயில்லை. நீ எனைச் சுற்றிய கூட்டத்தினின்றும் விலகி ஒரு ஆட்டுக் குட்டியைப்போல தனியே நடந்துகொண்டிருந்தாய், அப்போது ஒரு தரம் உன் தலையைத் திருப்பி புருவங்களை மேலேற்றி ஒரு பார்வை பார்த்தாய். அதை இப்போது வரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். உன் கண்கள் என்னை வாழ்த்தின. நிச்சயமாய் எனது வெற்றிக்கான பெருமிதத்தை நான் உன் கண்களிடம் கண்டேன். மறுநாள் வகுப்பறையில் எனது கவிதைத் தாள்கள் உன் கைகளில் இருப்பதை நான் கண்டேன்.  நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே நீ படித்துக் கொண்டிருந்தாய். அன்றைக்குத் தான் நான் தீர்மானித்தேன் கவிதைகளாக எழுதித் தீர்க்க வேண்டும் என்று. இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன் படிக்கிறாயா? அன்றைக்கு யாரிடமோ சொல்வதுபோலச் சொன்னாய், நல்லா எழுதிறியள் என்று. தோழிகள் நீ சம்பந்தமில்லாமல் பேசுகிறாய் என்று நினைத்திருப்பார்கள். உன் சொற்களின் உள்ளே ஒளிந்திருந்த சங்கேதங்கள் எனக்கு மட்டுமானவை என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்.

உனக்குத் தெரியுமா எனது நகரத்தை விட்டுவிட்டு உனது கிராமத்துக்கு நாங்கள் இடம்பெயர்ந்து வந்த நாள். எனது நகரத்தாரின் துயரத்தின் குறிப்புகளில் இடம்பெறுகிறது அந்த நாள். எனக்கு மட்டும்தான் அது பிரகாசத்தின் குறியீடு. நான் அந்த நாளைக் கொண்டாடுகிறேன். நிச்சயமாக சொந்த நிலத்தின் பிரிவு துயரமானதுதான். ஆனால் அதே பிரிவுதான் நான் உன்னைக் கண்டடைவதற்கு உதவியது. அந்த நாள் மட்டும் என் வாழ்வில் வராவிட்டால் யுத்தம் தன் கொடும் கரங்களால் எங்களை சொந்த ஊரை விட்டு விரட்டியிருக்காவிட்டால் வாழ்க்கை உன்னை எனக்குக் காட்டியிருக்காது. அது வரைக்கும் நான் கேள்விப்பட்டேயிராத பெயர் உன் கிராமத்தினுடையது. யுத்தம் அதைத்தான் செய்தது. பெயர் தெரியாத ஊர்களுக்கும் திசைகளுக்கும் மனிதர்களை விரட்டியது. நாங்கள் கொண்டல் மரத்தில் கட்டிய ஊஞ்சலைக் கூட அவிழ்க்காமல் அவசர அவசரமாய் ஓடிவந்தோம். ஆட்களற்ற ஊஞ்சல் காற்றில் ஆடியபடியிருந்திருக்கும். குழந்தைகளின் குதூகலத்தை எண்ணி அழுதபடி. “மாமர ஊஞ்சல் இற்று வீழ்ந்தது” என்று ஒரு கவிதையின் வரி நினைவுக்கு வருகிறது. இது கொண்டல் மரத்து ஊஞ்சல். மஞ்சள் பூக்களும் கறுத்த நீளப் பழங்களும் அற்புதமாயிருக்கும் மரம் அது. பூக்கும் காலங்களில் அதைப்போல ஒரு மஞ்சளை நான் எந்தப் பூக்களிலும் கண்டதில்லை. என் கனவுகளை  நீ நிறைத்த காலத்திலும் ஊஞ்சல் இருந்தது. நீ சிணுங்கச் சிணுங்க நான் உச்சாணிக் கொப்பை எட்டும்வரை ஊஞ்சலை வேகமாக ஆட்டுவேன் கனவுகளில். அவை ரம்யமான நினைவுகள் காயத்திரி.  நீ வாழ்க்கையை இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறாயா எப்போதாவது.

நானும் தம்பியும் தங்கையும் ஒருவருக்கொருவர் பெயர் வைத்துக்கொண்டு வளர்த்த பூஞ்செடிகள் நீரூற்ற ஆளின்றி வாடிப் போயிருக்கும். எனது செவ்வரத்தை வெள்ளை நிறம். சண்முகம் டீச்சரிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்து வளர்த்தேன். அது வெள்ளையாயிருப்பதில் தம்பிக்கும் தங்கச்சிக்கும் பொறாமை. காயத்திரி, நான் இழந்துபோன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக் கண்டேன். உன் கிராமத்தின் கரும்பு வயல்களை விடவும் உனது கூந்தல் குளுமையாயிருந்தது. வயல் வெளிகளில் வீசும் காற்றைவிடவும் உன் பார்வைகள் மென்மை யளித்தன. உன் கிராமத்தின் வாய்க்கால்களைப் போலவே உன் கண்களில் அடுத்தவர் மீதான பிரியம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. தொலைந்துபோன என் ஊரின் தேவதையாய் நீ தெரிந்தாய்.  எல்லா வற்றையும்விட நாங்கள் ஊரைவிட்டு வரும் வழியில் குண்டுகளின் சத்தத்திற்கு வீரிட்டு ஓடி திசைதப்பித் தொலைந்துபோன என் செல்ல நாய்க்குட்டியின் பெயரே உன் வீட்டு நாய்க்குட்டிக்கும் இருந்தது.

காயத்திரி உன்னை முதல் முதலாக நான் பார்த்தது என்றைக் கென்று நினைக்கிறாய். பன்னிரண்டாம் வகுப்பில் நீ எங்கள் பள்ளியில்  என் வகுப்பில் வந்து சேர்ந்தாயே அன்றைக்கன்றோ? ஒருவேளை நீ என்னை அன்றைக்குக் கண்டிருக்கலாம். தேவதை களின் கவனம் திருப்புவது அவ்வளவு எளிதான காரியமா என்ன? ஆனால் நான் உன்னை உன் வீட்டில்தான் பார்த்தேன். ஒரு பெரிய கூட்டத்தோடு. அப்போதெல்லாம் ஊரில் சினிமாப்படங்கள் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. ஏதாவது கொண்டாட்டம் என்றால் அதைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் படம்போடுவது  இருந்தது. விடிய விடியப் படம். ஒரே நாளில் நான்கைந்து படம் பார்த்துவிட்டு  எந்தப்படத்தில் யார் கதாநாயகன் என்பதே குழம்பியிருக்கும் அடுத்த நாள் காலையில். நான் ஒரு சினிமாப்பைத்தியமாக இருந்தேன். டீ.வியில் எதைப்போட்டாலும் பார்க்கத்தயாரான மனோநிலை. அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் காசைத் திருடிக் கொண்டு போய்ப் படம் பார்த்திருக்கிறேன். மாதாமாதம் வாங்குகிற காமிக்ஸ் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டு எஸ்.ஆர். தியேட்டரில் படம் பார்த்தி ருக்கிறேன். அம்மாவின் அகப்பைக் காம்பிற்கு அஞ்சாமல் நான் செய்த ஒரே துணிச்சலான காரியம் அதுதான். 3.30 மணிக்கு டியூசனுக்குப் போவதாகச்சொல்லிவிட்டு குமார் வாத்திக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியிருக்கிறேன். அவர் நான் டியூசனுக்கு வராதது குறித்து அதிகம் கவலைப்படுகிறவராயிருந்தார். நான் தியேட்டர்கள் லீவான நாட்களிலும் காலைகளிலும் அவருடைய வகுப்புகளிற்குப் போய்க்கொண்டிருந்தேன். காயூ உனக்கு சாமத்தியச் சடங்கு நடந்த அன்றும் படம் போட்டார்கள். ஜெனரேட்டர் சத்தம் ஊரைத் திரட்டிக் கொண்டிருந்தது. நானும் வந்தேன் படம் பார்க்க. அன்றைக்குத்தான் உன்னை நான் முதன்முதலாகப் பார்த்தது. அன்றைக்கு எல்லாரையும்விட பொலிவாகத்தான் நீ இருந்தாய். நீ சாய்ந்து அமர்ந்திருந்த புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்ட கதவுகள் உன் பிரகாசத்தில் மங்கின. தொலைக்காட்சியில் இருந்து பிறந்த ஒளி உனது கண்களை அடைந்து ஆனந்தித்து திக்குமக்காடி நடனித்து என் கண்களில் படிந்தது. அப்போதுதான் நான் உன்னைப் பார்த்தேன் முதல்முதலாக. பிறகு என்னால் படத்தைப் பார்க்க முடியவில்லை. படத்தைவிட அதிகநேரம் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைவிட அதிக நேரம் நான் உன்னைப் பார்ப்பதை யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சியின் நீல ஒளி ஒரு தேவதையாய் உன்னைச் சமைத்தது. நீல நிறத்தேவதை நீ.  அன்றைக்கு மனசுக்குள் உட்கார்ந்து கொண்ட உன் பிம்பத்தை அகற்ற விருப்பமற்றவனாய் நான் மாறிப்போனேன் பிறகெப்போதும்.

உங்களது காணியின்  தெற்கு மூலையில் ஒரு பழைய தட்டிவானைப் பெயின்ட் அடித்து, ஒரு பெட்டிக்கடையாக உன்னுடைய அப்பா மாற்றியிருந்தாரே அப்போதிலிருந்தே நாங்கள் அந்தக்கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினோம். முன்பெல்லாம் கடைக்குப் போகச் சொன்னாலே புறுபுறுக்கிற நான் இப்போது கடைக்கு ஒரு பேச்சுமில்லாமல் போகிற ரகசியம் அறியாத அம்மா நான் பொறுப்பான பிள்ளையாகிவிட்டதாக அம்மம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். என் பொறுப்பின் ரகசியம் நீ என்றறியாது. எனக்கு எப்போதாவது உன் கடையில் நீ இருக்க மாட்டாயா? அப்பாவும் அம்மாவும் இல்லாத நேரத்தில் கடையைக் கவனித்துக்கொள்ள மாட்டாயா என்றிருந்தது. உன் அப்பாதான் நான் எப்போது போனாலும் கடையில் அமர்ந்திருப்பார். நீ இருக்க வேண்டும் என்கிற என்னுடைய பிரார்த்தனைகள் பலிப்பதே இல்லை. ஒரு புன்னகை ஒரு பார்வை கிடைத்துவிடக் கூடாதா என்கிற என் ஆசைகள் நிறைவேறாமலேயே எனக்குள் இறந்தன. அந்தத் தருணங்கள் எனக்கு வாய்க்கவில்லை.

எப்போதாவது கடையின் தடுப்புக்குப் பின்னாலிருந்து ஒரு பறவையின் குரலைப்போல அம்மா கடைக்கு ஆள் வந்திருக்கு என்று அழைக்கும் உன் குரல் கேட்கும். கடையின் படிகளில்  இறங்கிப்போகும் உன் கொலுசின் ஓசை, குதிக்காலின் மென்சிவப்பு, காதோர நெளிமுடி என்று எப்போதாவது கத்தரிக்கப்பட்ட ஒரு அழகியின் ஓவியத் துண்டுகளாய் உன் தரிசனங்கள் கிடைத்தன. அதுவே போதுமென்றாகியது எனக்கு. கவனிப்பாரற்று அழுக்கேறிப் போயிருக்கும் என் பாதங்களை அதற்குப் பிறகு அதிகமாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் முடியவில்லை. இப்போது வரைக்கும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. எனது கவிதை முதல்முதலாகப் பிரசுரமாகிய அன்றைக்குக் கடைக்கு வந்த முக்கால்வாசிப் பிரதிகளையும் நானே வாங்கினேன். எதற்கடா இவ்வளவு பேப்பர் என்று உன்னுடைய அப்பா கேட்டார். நான் என்னுடைய கவிதை வந்திருக்கிறது என்று சத்தமாய்ச் சொன்னேன். உனக்குக் கேட்டிருக்கும் என்கிற நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

2

காயத்திரி என் நேசம் உனக்குத் தெரியாது என்று எப்போதும் சொல்ல முடியாது உன்னால். ஏனெனில் எனது மௌனத்தின் மொழி பேசிக்கொண்டேயிருந்தது உன்னிடம். என் கவிதைகள் தூது போய்க் கொண்டிருந்தன உன்னிடம். ஆனாலும் நம் உதடுகளும் சொற்களும் நம் அன்பை ஒளித்து வைத்துக் கொண்டன தமக்குள். எப்போதும் சதா என்னிடம் பேசிக் கடக்கிற உன் பார்வைகளும் புன்னகைகளும் என் கவிதைகளின் சொற்களைத் தந்தன. உன் பேரழகினின்றும் எனது சட்டையில் உதிர்ந்த ஒரு துளி ஈர நினைவுகளினின்றும்தான் நான் கவிதைகள் செய்தேன் என்று உனக்குத் தெரியும். என் கவிதைகளின் குறியீடுகள் பிரியத்தின் சங்கேதங்களாகி உன் புன்னகையைப் பரிசாக என்னிடம் கொண்டு வந்தன.

காலம் என்னைச் சுழற்றி அடித்தது. என்னைவிட இரண்டு வயது சிறியவளான நீயும் நானும் ஒரே வகுப்பில் படிக்கிற வாய்ப்பை எனது வாழ்வின் பெரும் சறுக்கல் எனக்குக் கொடுத்தது. என்னைச் சுற்றியிருந்த எல்லாரும் என் பொருட்டு கவலைப் பட்டார்கள். எனது வகுப்புத்தோழர்கள் என்னைக் கடந்து போயிருந்தார்கள். ஆனால் நான் இதை வரமாகக் கருதினேன் காயத்திரி. எப்போதும் எனக்கான துயரங்கள் தம்மோடு கூட ஒரு மலர்ச்செண்டை  எடுத்து வருவதாக நான் உணர்கிறேன். அதுபோலத்தான் இப்போதும். உன்னோடு உனது வகுப்பறையில் அமர்ந்திருந்த முதல் நாள். முதலாம் வாங்கிலிருந்து நீ நான்காம் வாங்கிலிருந்த என்னைத் திரும்பிப் பார்த்தாயே நினைவிருக்கிறதா? எனக்கு உனது அந்த வரவேற்பே என் குற்ற உணர்வு களிலிருந்தெல்லாம் என்னை விடுவித்தது. என்னைவிட வயது குறைந்தவர்களோடு ஒன்றாய் அமர்ந்து படிப்பதற்கான என் தயக்கத்தைத் துடைத்தது.

3

உனது சாமத்திய வீட்டு ஆல்பம் எல்லா வீடுகளிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதை சுமந்து கொண்டு திரியும் பேற்றை உன் தங்கைக்குக் கொடுத்திருந்தார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்கார ஆச்சியிடமும் காட்டுவதற்கு உன்தங்கை கொண்டு வந்திருந்தாள். நான் தேர்ந்த திருடனாய் என்னை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டது அன்றைக்குத்தான். அந்த ஆல்பத்திலிருந்து யாரும் அறியாமல் ஒரு படத்தைத் திருடி ஒளித்துவைத்தேன். பிறகு நிறைய தடவைகள் அந்தப் படம் என்னைத் திருடன் என்று சொல்லி நாக்கைச் சுழித்தபடி எள்ளி நகையாடியிருக்கிறது. ‘உன் பொருட்டு திருடனாயிருக்கவும் சம்மதம்தான் எனக்கு’ என்று அன்றைக்கு எனது நாட்குறிப்பில் எழுதினேன். நான் உன் மீதான பிரியங்களையெல்லாம் என்  நாட்குறிப்பிடம் சொல்லி வந்தேன். உதடுகள் இறக்கி வைக்காத என் பிரியத்தின் சொற்களையெல்லாம் அதன் தாள்களில் பேனாவால் கிறுக்கி வைத்தேன். காயத்திரி என் காதலை உன்னிடம் நான் சொல்லும் நாள் வாய்த்த பிறகு உனக்குத் தரப்போகும் மிகப் பெறுமதியான பரிசாய் அது இருக்குமென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் கடைசிவரைக்கும் அந்தத் தருணங்கள் வாய்க்க வில்லை எனக்கு. எனது நகரம் யுத்தத்தில் இருந்து மீண்டது. கண்ணிவெடிகள் துடைக்கப்பட்ட பிறகு எல்லோரும் மிகச் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள். நான் மட்டும்தான்  துயரத்தோடு திரும்பினேன். அந்த அழகான கரும்பு வயல்கள் நிறைந்த உன் கிராமத்தை, என் பிரியமான உனது வீட்டை, எனது நாய்க்குட்டியின் பெயரைக்கொண்ட உனது நாய்க்குட்டியை, அதை அழைக்கும் உன் குரலை எல்லாவற்றையும் விட்டுத் துயரத்தோடு வெளியேறினேன். மணியங்குளமும் காட்டம்மன் கோயில் திருவிழாவும் இனி எப்போது என்னும் ஏக்கம் நிறைந்திருந்தது மனசு முழுக்க. எனது சொந்த நிலத்தை விட உன் கிராமத்தின் மீதான பிரியம் அதிகமாய் இருந்தது இப்போது என்னிடம். நான் அப்படித்தான் எனக்குக் கிடைக்கிற சந்தோசங்களில் வாழப் பழகிக் கொள்கிறவனாயிருக்கிறேன். என் துயரங்களை எளிதில் மறந்துவிடுகிறேன். எனது ஊரில் இழந்ததையெல்லாம் என்னால் உனது கிராமத்திலும் உன்னிலும் பிரதியிட்டுக் கொள்ள முடிந்தது. ஆனால் காலம் என்னைப் பயணியாக்குகிறது. அது எந்த இடத்திலும் என்னை நிரந்தரியாய்த் தங்கவிடுவதில்லை. எந்த மகிழ்ச்சியையும் நிரந்தரமாக என்னிடம் தங்கவிடுவதுமில்லை.

4

யுத்தம் எங்களை ஊரைவிட்டுத் துரத்தியது. எமது கிராமங்களின் மீது ஒரு கொடு நிழலெனப் படிந்திருந்தது. காயத்திரி நினைவிருக்கிறதா உங்கள் கிராமத்தின் மீது ஒரு இரவில் திடீரென்று போரின் திசைகளில் இருந்து பீரங்கிகள் வெடித்தன. அடுத்தடுத்து 5 குண்டுகள். ஊரே பீதியில் உறைந்து கிடந்தது. தலைக்குமேல் குண்டுகள் தமது ஆதிக்கத்தைக் காற்றில் அலறியபடி பறந்து பின் வீழ்ந்து வெடித்தன. அந்தக் குண்டுகளில் ஒன்று எங்கள் வீட்டிலிருந்த தென்னை மரத்தின் மீது வீழ்ந்து வெடித்தது. நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை. நீளக்கூந்தல் வீசிக் காற்றைக் கலைத்தபடி கிடந்த தென்னை மரம் கடைசியில் மூழியாய்ப் போனது. காலையில் எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்தார்கள். தலைக்கு மேல் விமானங்கள் குண்டுகள்போடுகையில் பதற்றம், உயிர் குறித்தான இறைஞ்சல், பதுங்கல். விமானங்கள் குண்டுகள் வீசிப்போனபின் அது வேடிக்கை, துயர் பகிர்தல் இதுதானே எங்கள் வாழ்க்கை.  இரவு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கையில் அஞ்சிப் பதுங்கிக் கிடந்தவர்கள் காலையில் வீழ்ந்து வெடித்த இடத்தை வேடிக்கை பார்க்க வந்தார்கள். எங்கள் வீட்டில் விழுந்த குண்டு தென்னைமரத்தின் தலையைக் கொண்டு போனதுபோல கிராமத்தின் பல திசைகளிலும் பலபேரின் தலையைக்கொண்டு போயிருந்தது. மரணம் அப்போதெல்லாம் எங்கள் காலைச் சுற்றிய நாய் மாதிரிக் கிடந்தது. மூளித்தென்னை மரத்தை எல்லாரும் பார்க்க வந்தார்கள். நீயும் வேடிக்கை பார்க்கத் தோழிகளோடு வந்திருந்தாய். நான் உனது வருகையைக் கொண்டாடினேன்.  நீ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாய் என்று எண்ணினேன். அன்றைக்கு என்னை நீ கவனிக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்தேன். நான்தான் தென்னை மரத்தின் காவல்காரன் மாதிரி மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். நீ வந்து நின்ற சில நிமிடங்களுக்குள் வீட்டுக்குள் ஓடிப்போய்த் தலைவாரிக்கொண்டு வந்தேன் மறுபடி மறுபடி. காயத்திரி இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏன் எரிச்சலாகக்கூட இருக்கிறது. என் செயல்களின் அறியாமை என்னைக் கோபப்படுத்துகிறது இப்போது. அன்றைக்கு நீ என்னைக் கவனிக்கவேயில்லை. நான் அந்தத் தென்னைமரமாக இருந்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். நான் ஒரு சைக்கிள் வாங்கினேன். அப்போதெல்லாம் அங்கே சைக்கிள் வாங்குவது ஒரு யானை வாங்குவது மாதிரி. 2500 ரூபாய்ச் சைக்கிளை 12000 கொடுத்து வாங்குவதென்றால் சும்மாவா? புத்தம் புதுச் சைக்கிள் வைத்திருப்பது தேர் வைத்திருப்பதுபோல, புதுசாகச் சைக்கிள் வைத்திருப்பவர்கள் ராஜகுமாரர்கள். நான் ஒரு ராஜகுமாரனானேன். உன்னை மலைகளில் கடத்திச் செல்லப்பட்ட இளவரசியாக்கி எனது தேரில் தேடி அலைந்து திரிந்தேன். அப்போதெல்லாம் புதுசாகச் சைக்கிளை வாங்குவதென்றால் கடத்தல்காரர்களிடம் சொன்னால் தான்.  கடலால் சைக்கிளைக் கடத்தி வந்துதான் அவர்கள் கொடுப் பார்கள். சைக்கிள் தரைக்கு முன்பாக கடலில் பயணித்திருக்கும். கடல் காற்றுப்பட்டு லேசாகக் கறுத்துக் கூட இருக்கும். நான் லேசாகக் கறள் ஏறியிருந்தாலும் மினுமினுப்பான அந்தச் சைக்கிளில் உங்களது வீட்டடியை நிறைய தடவைகள் சுற்றி வந்தேன். நீ அதைப் பார்த்தாயா என்று தெரியவில்லை. நீ பார்ப்பதற் காகவே அன்றைக்கு சைக்கிள் ஓட்டினேன்.

5

காயத்திரி நான் இத்தனை தாமதமாக இதையெல்லாம் உன்னிடம் சொல்லியிருக்கத் தேவையில்லை. அன்றைக்கே எல்லா வற்றையும் சொல்லியிருக்கலாம். நான் உன்னோடு பேசி யிருக்கலாம். என்னை உன்னிடம் சொரிந்து கொட்டியிருக்கலாம். நான் வளவளவென்று பேசுகிறவன். எப்போதும் அடுத்தவர்களின் செவி ஓய்ந்து போகிறவரை பேசுகிறவன். ஆனால் உன்னிடம் மட்டும் ஏன் முடியவில்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது. நான் ஒரு கொக்கைப் போலக் காத்திருந்தேன், என்னிடம் வரும் மீன்களையெல்லாம் தப்பவிட்டு உறுமீன் வருமென்று. ஆனால் கடைசி வரைக்கும் வரவேயில்லை. நான் நிமிர்ந்து பார்க்கையில் நான் கட்டாந்தரையில் மீனுக்காகக் காத்திருந்தேனா என்று தோன்றியது. நீர்ப்பரப்பையே காணவில்லை. வாழ்க்கை என்னை எல்லாவற்றையும் தொலைத்துவிடச் செய்கிறது தன்னிரக்கம் பொங்கிப் பிரவாகிக்கிறது. வெறும் தன்னிரக்கம் கொண்டு அழுகிற இரவுகள் கொண்டு முடிகின்றன என்னுடைய நாள்கள் இப்போ தெல்லாம். உனது கிராமத்திலிருந்து எனது சொந்த நகரத்தில் இருந்த, நாம் 12ம் வகுப்பு படித்த எனது பாடசாலைக்கு ஒரு மணிநேரம் சைக்கிளில் போக வேண்டியிருந்தது. அதற்கும் அதிகமான நேரம்கூட எடுக்கும். அநேக நாள்களில் நானும் நீயும் மட்டுமே அந்த நீளச் சாலையின் தனித்த பயணிகளாயிருந்தோம். நான் வீட்டிலிருந்து வெள்ளனவே புறப்பட்டு சந்தியில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். உனக்காகக் காத்திருக்கிறேன் என்பதை நீ அறியக்கூடாதெனவும் விரும்பியவனாயிருந்தேன். ஆனாலும் உனக்காகக் காத்திருக்கிறேன் என்பதை நீ அறிந்தவளாயிருந்தாய். எங்காவது நான் மறைவாக நிற்கையில் சந்தியைக் கடந்துபோகும் உன் விழிகள் என்னைத் தேடுவதை நான் பார்த்திருக்கிறேன். காத்திருப்பது ரணமானது. நீ திடீரென்று ஒருநாள் வராதபோது நான் சிந்தனைகளில் அலைந்து கொண்டிருக்கும் என் சொற்களைக் கோக்கத் திராணியற்றவனாகிவிடுவேன். கூடைக்குள் ஒளிந்து கொண்டு எங்கேயோ தப்பியோடுபவனைப் போலாகிவிடுகிறது என் நிலைமை. அப்படியான நாள்களில் நீ கூரான கத்திகொண்டு கூடையைக் குத்திச் சோதிப்பாய். நீ வராமல் போன தினங்கள் வெண்ணெய் வெட்டும் கூரான கத்தியைப்போல எனக்குள் இறங்கின. காயத்திரி, அதேபோல எப்போதாவது பாடசாலையில் இருந்து வீடு திரும்ப இருட்டிவிடுகிற நாள்களில் உனது சைக்கிள் எனக்காகத் தயங்கி நிற்பதையும்  நான் கண்டிருக்கிறேன். வீடு திரும்பும் வரை உனது நிழலைப் போல நான் வருவேன். எனக்குப் பாதுகாப்பாக நீயும் உனக்குப் பாதுகாப்பாக நானும். தெரு விளக்குகளே அற்ற இருட்டில் உன்னையும் என்னையும் கண்களால் அன்றி உணர்வுகளால்  அறிந்தபடி பயணித்திருக்கிறோம்.

உனக்கு அந்தத் தகரம் தகரம் றீப்பைக் கதைகள் ஞாபகத்தில் இருக்கிறதா? இருக்கும் ஏனென்றால் அதை நீதானே அடுத்த நாள் அதைப் பள்ளிக்கூடத்தில் பரப்பிவிட்டாய். கிளிநொச்சியில்  யுத்தம் ஓய்ந்தபிறகு, அங்கேயிருந்து உனது கிராமத்திற்கு, கைவிடப்பட்ட இராணுவ முகாம்களிலிருந்தும் எஞ்சிய வீடுகளிலிருந்தும் தகரக் கூரைகளைக் கழற்றி சைக்கிள் கரியரில் கட்டி எடுத்து வருவார்கள். அது ரோட்டை அடைத்தபடி வரும். அப்போது அந்தச் சைக்கிள் மட்டும்தான் ரோட்டில் போக முடியும். மற்றவர்கள் போனால் அவ்வளவுதான், தகரத்தின் வாய்களில் கொஞ்சம் நமது தோல் பயணப்பட்டு விடும். இரவுகளில் எதிரே வருபவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்திக்கொண்டே வருவார்கள். வேகமான இறக்கங்களில், வளைவுகளில் எதிரே வருபவரைத் தெரியாமலிருக்கும் போதெல்லாம் நான் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்திக்கொண்டே வருவேன். அப்படித்தான் ஒருநாள் ஒரு மிகவும் இறக்கமான ஒரு வளைவில் மிக வேகமாக ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. நான் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்த அந்தச் சைக்கிள்காரர் பயந்து நிலை தடுமாறி பக்கத்து வாய்க்காலுக்குள் குதித்துவிட்டார். பிறகுதான் எங்களிடம் தகரமும் கிடையாது றீப்பையும் கிடையாது என்று தெரிந்து டேய் என்று கத்தியபடி எழுந்து விரட்டிக்கொண்டு வந்தார். அவரது சைக்கிளை அவரால் அவ்வளவு சீக்கிரத்தில் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லையாதலால் நாங்கள் மிகவேகமாக ஓடிவந்துவிட்டோம். நீ சிரித்திருப்பாய் என்று எண்ணினேன். ஆனால் அடுத்தநாள்  வகுப்பே ஒட்டுமொத்தமாகச் சிரித்தது.

அந்த நாள்களில் நமக்கு வாய்த்த ஒரு மணிநேரப் பயண வழியில் நானும் உன்னிடம் பேச எத்தனித்ததில்லை. நீயாவது முயன்றிருக்கலாம். இந்தத் துணிவற்ற பயலின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ம்… இருவரும் பேசாமலே நாம் தனித்த பயணங்களைத் தொலைத்துவிட்டோம். அந்த நாள்களைப் போன்ற தருணங்கள் வேறொரு காதலர்களுக்கு வாய்த்திருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பார்கள். நாம் கொண்டாடத் தெரியாதவர்களாய்த் தயங்கி நின்றோம். நாங்கள் நிரந்தரமாக  எங்களது சொந்த நகரத்திற்கு, சொந்த நிலத்திற்குத் திரும்பி விட்டோம். உங்களுடைய கிராமத்தைக் கொஞ்ச நாளில் எல்லாரும் மறந்துபோகலாம். அதற்குப் பிறகு அந்தத் தருணங்கள் வாய்த்ததே யில்லை பயணங்களும். நீயும் பாடசாலைக் காலம் முடியும்வரை யாரோ தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கியிருந்து படித்தாய்.

காயத்திரி, இவ்வளவு சீக்கிரத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதே என்றிருந்தது. பள்ளிக்கூடம் இன்றைக்குத்தான் கடைசி நாள் என்றார்கள். நாங்கள் குரூப் குரூப்பாக நின்று போட்டோ பிடித்துக்கொண்டோம். அந்தப் போட்டோக்களில் நீ அழகா யிருந்தாய். உன் நாக்குச் சுழிப்போடு. உன்னை மாதிரி அழகாக அவ்வளவு லாவகமாக யாரும் நாக்கைச் சுழற்ற முடியாது. உனது அதிக மகிழ்ச்சி, வெட்கம், துயரம் எல்லாவற்றிற்கும் நீ நாக்கைச் சுழற்றினாய். நாக்கைச் சுழித்தபடியான உன் புன்னகை ஒரு தேவதை சிரிப்பதைப் போலிருக்கும். எனக்குள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன் பிம்பங்களில் நீ நாக்கைச் சுழித்தபடிதான் இருந்தாய். நான் உன்னுடைய அந்தத் தருணங்களையெல்லாம் புகைப்படமாக்க விரும்பினேன். ஆனால் என்னிடம் காமிரா இருந்ததில்லை அப்போதெல்லாம். அதனால் மனசுக்குள் படம் பிடித்துக்கொண்டேன். வாத்தியார் கேள்வி கேட்டாலும் சுழிப்பாய், பாராட்டினாலும் சுழிப்பாய். அது உனக்கேயான மொழிவடிவம் என்று தோன்றும் எனக்கு. எனக்குத் தெரியும் நாம் சந்திப்பது அதுதான் கடைசித் தடவை என்று. இனிமேல் என் பிரியத்தை சொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காதென்று. ஆனாலும் அன்றைய நாளையும் கரைத்தன என் தயக்கங்கள். கடைசி வரைக்கும் என்னை வென்றுகொண்டேயிருந்தன அவை உன் விசயத்தில்.

பிறகு நான் வேலை தேடிக் கொண்டேன், போட்டோ பிடிக்கும் வேலை. பத்திரிகைக்காரனாக. உன் நினைவுகள் மனசுக்குள் அலைகளற்ற படகாக இருந்தது. நான் நிறைய படங்கள் எடுத்தேன். வயல்கள் பறவைகள் கல்லறைகள் அதைவிட இன்னும் இன்னும் சுழித்தோடும் ஆறுகள் நீர்வயலாய்க் குளங்கள். ஆனால் என்றைக்குமாய் உன் உதட்டுச் சுழிப்பு மட்டும் பிரதியெடுக்கப்படாத படமாய் எனக்குள் கிடந்தது. உன்னைப் பற்றி நண்பர்களைச் சந்திக்கும் போது பேசிக் கொள்வேன். உனது அப்பா நோயாளி யாகிப் போனார் என்று யாரோ ஒரு தோழி சொன்னாள். உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதை எனக்காக உன்னிடம் சொல்ல முடியுமா என்று அவளிடம் கேட்கையில், வெளிநாட்டில் இருக்கிற மாமா உனக்கு அங்கே மாப்பிள்ளை பார்ப்பதாகவும் நீ அங்கே போனால்தான் நோயாளி அப்பாவையும் மீதிக்  குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அவள் அபிப்பிராயப்பட்டாள். நான் அன்றைக்குத் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். என்னால் உனக்குவெறும் காதலையும் நம்பிக்கையையும் மட்டுமே கொடுக்க முடியும். வெளிநாடு உனக்கும் குடும்பத்துக்கும் வசதிகள் கொடுக்கும் என்று அவள் சொன்னதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதன்பிறகு உன்னைப் பற்றி அறியும் வாய்ப்புகளை வேண்டு மென்றே தவறவிட்டேன். அவை என் துயரத்தை மறுபடி மறுபடி கிளறுபவையாக இருக்குமென்பதால் அவற்றினின்றும் விடுபட விரும்பினேன்.

காயத்திரி, என்னையும் உன்னையும் பிரித்திருந்த தயக்கத்தின் கடலைத் தாண்ட முடியாத நான் எந்தத் தயக்கங்களும் இன்றி கடல் கடந்தேன். நாடுகளைப் பிரிக்கும் கடல். நான் எழுதிய நாட் குறிப்புகளையும் என்னால் திருடப்பட்ட உனது புகைப்படத்தையும் பத்திரமாக வைத்திருக்கும்படி அண்ணியிடம் கொடுத்தேன். அண்ணி காதலின் வசீகரங்கள் அறிந்தவள். பத்திரமாக வைத்திருப்பாள். இங்கே அவசர நகரத்தில் அலைதலும் என் இருப்பினை நிறுவும் தேவையும்  உன் நினைவுகளை ஒரு கடற்படுகையைப்போலாக்கின.

திடீரென்று ஒருநாள். அந்தப்படுகை கடலிலிருந்து சுழன்று எழுந்து என்னைத் தலைகுப்புற அடித்தது. காலையில் எனது தொலைபேசியின் குறுஞ்செய்தி உன்னைக் கொன்றுவிட்டு இரக்கமில்லாமல் என்னை வெறித்துக்கொண்டிருந்தது.

hi pratheep. h  r u?

very bad news. gayathri died in manner on 8th.

everything finished on 11th.

what 2 do?

I feel so bad.

what else?

take care. bye.

நான் நம்ப விரும்பவில்லை அந்தக் குறுஞ்செய்தி நீயாக இராது வேறு யாரோ ஒரு காயத்திரி. நீ செத்துப் போயிருக்க மாட்டாய். கூடாது. இது வெறும் வதந்தி அல்லது அது என் காயத்திரி அல்ல.

ஆனால் இன்னொரு குறுஞ்செய்தி வந்தது.

hi machchan

koli gayathri seththup ponalam mannarila

kelvippattaniya?

நீதான் என்பதை தெளிவாகச் சொல்லி உன் பட்டப் பெயரை அப்பட்டமாய்ச் சொல்லி. உன் பட்டப்பெயரை நீ அறிவாயா. அது பையன்களின் சங்கேதம். காயத்திரி நான் இப்போதும் நம்பினேன். தேவதைகளை மரணம் நெருங்குவதில்லை என்று.  ஏதோ ஒரு வெளிநாட்டு வீட்டின் வரவேற்பறையில் ஆட்களை உள்ளே புதைக்கும் சோபாக்களின் மேல் குண்டுகுண்டாய் இரண்டு குழந்தைகள். கொஞ்சம் சதையேறிய உனது உடம்போடு இருக்கும் ஒரு புகைப்படம் உனது கிராமத்து வீட்டில் தொங்கவிட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப்போன உனது சீருடைப் படத்திற்கு உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை, தான் போய்ப் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை. நீ சீருடைப் படத்திலும் நாக்கைச் சுழித்தபடியேதான் இருந்தாயா என்று மனம் அங்கலாய்த்தது. எனக்குக் குழப்பமாயிருக்கிறது. என் சுவிஸ்காரி திடீரென்று மன்னாரில் செத்துப்போனதெப்படி. உன் நோயாளி அப்பா என்னவானார். அண்ணி எழுதியிருந்தாள் இப்படித்தான், இப்போது நிறைய பேர் செத்துப் போகிறார்கள் என்று. மேலும் எனது நாட்குறிப்பையும் உனது புகைப்படத்தையும் இனி என்ன செய்வது என்றும் கேட்டிருக்கிறாள். என்ன பதில் எழுதுவது. இதோ இந்த இரவில் தூக்கம் பிடிக்காமல் லைட்டைப் போட்டுக்கொண்டு உனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விஜய் அண்ணா எழுந்து கேட்கிறான், என்ன செய்கிறாய். உனக்குக் கடிதம் எழுதுகிறேன் என்று சொன்னேன். செத்துப் போனவளுக்குக் கடிதம் எழுத உனக்கென்ன விசராடா. லைட்டை நிப்பாட்டீட்டுப் படு என்று குரைக்கிறான். உண்மையில் பைத்தியக்காரர்கள் அதிஸ்டசாலிகள் என்று தோன்றுகிறது. நான் லைட்டை அணைத்தேன். திசையெங்கும் இருட்டிக் கிடக்கிறது… வாழ்க்கையும்….

த.அகிலனின் மரணத்தின் வாசனை நூலில் இடம்பெற்ற சிறுகதை. ஓவியம் ட்ராஸ்கி மருது

ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்
“சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். “தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான்.

சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை.

“தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவரது உச்சரிப்பு தமிழ்த் தொலைக்காட்சிப் பெண்களின்/ ஆண்களின் தமிழை விட இலகுவாக சீலனுக்குப் புரிந்தது.

“ஒரு வருசம்´´

“ஒரு வருசம்.. இருக்கிறது.. சிங்களம் தெரியாது?´´ என மீளவும் கேட்ட அவர் முகத்தில் சிரிப்பு உதிர்ந்தது. அது நட்பானதா, ஏளனம் சுமந்ததா என்பதை ஆராயும் மனநிலையில் சீலன் இருக்கவில்லை. அவன் முகம் சிரிப்பற்று கடுமையாயிருந்தது. மீண்டும் தெரியாது எனத் தலையை ஆட்டினான். அவர் இப்போது ஒவ்வொரு பேப்பர்களாக எடுத்து கவனிக்கத்தொடங்கினார். அவ்வப்போது அருகிலிருந்த பெண்மணியிடம் சிங்களத்தில் உரத்தும் சிரித்தும் கதைத்தார்.

“ம்.. எல்லாம் சரி.. ஈவினிங் வந்து எடுங்க ´´

கடந்த சில நாட்களாக உணர்ந்த, அதுவும் கடைசி நிமிடங்களில் அதிகரித்துக் கிடந்த ஒரு வித அந்தரித்த நிலையிலிருந்து விடுபட்டான் சீலன். ஒரு பெரும் அலைச்சலுக்குப் பிறகு பாஸ்போட் கையில் கிடைக்கப் போகிறது. ஊரிலிருந்து கொழும்பு வருவதற்கான (கொழும்பும் அவனது ஊரும் ஒரே நாடெனச் சொல்லப்படும் இலங்கையில் இருந்தன) அனுமதியைப் பெறுவதற்காக விதானையூடாக அரசாங்க அதிபர், அவரூடாக ஆமிச் சின்னவர், அவரூடாக ஆமிப்பெரியவர் என ஆரம்பித்தது அந்த அலைச்சல்.

வெளியே இன்னும் நிறையப் பேர் வரிசையில் நின்றார்கள். “அண்ணை உள்ளை நிறையச் சனமோ?´´ என்று இளைஞன் ஒருவன் கேட்டான். இல்லையெனத் தலையாட்டி ச் செல்ல எத்தனித்தவன் நின்று நிதானித்துச் சொன்னான். “இல்லை எல்லாரையும் உள்ளை எடுப்பாங்கள்´´

சற்றுத் தூரத்தில் கடலைக் குறுக்கிட்டு மறைப்பது போல புகைவண்டியொன்று பார்வைச் சட்டத்தில் நுழைந்து பின் விலகிப் போனது. மதியம் எங்காவது சாப்பிட்டுவிட்டு, கடலோரம் அமர்ந்தும், காலாற நடந்தும் மாலை வரை நேரத்தைப் போக்கலாம் என்றெழுந்த எண்ணம் கொஞ்சம் தள்ளி துப்பாக்கி ஏந்தி விறைத்து நின்ற பச்சை சீருடைக்காரனைக் கண்டதும் தானாகவே அடங்கிப் போனது.

பஸ் தரிப்பிடத்திற்கு நடந்து வந்தான். வீதியின் அருகெங்கும் கண்ணாடிச் சுவர்க் கடைகள் விரிந்திருந்தன. இரண்டு, மூன்று அடுக்குக் கட்டடங்கள். உள்ளேயும் வெளியேயும் தனித்தனியாக, சோடி சோடியாக ஆட்கள் சிங்களத்திலும் அவ்வப்போது தமிழிலும் கதைத்தபடி திரிந்தார்கள்.

சனம் நிறைந்து பிதுங்கித் தள்ளியபடி வந்து நின்றது பஸ். ஒருவாறு உள்நுழைந்து ஏறிக்கொண்டான். “இசரட்ட இசரட்ட ´´ (முன்னுக்கு) என கொண்டக்டர் கத்தினான். ஒவ்வொரு முறையும் அவன் கத்தும்போதெல்லாம் தன்னைத்தான் சொல்கிறானோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ட்றைவருக்கு அருகில் வந்து நின்று கொண்டான். அதற்குப் பிறகும் கொண்டக்டர் கத்திக்கொண்டிருந்தான்.

வீதி முழுக்க வாகனங்கள் நிறைந்திருந்தன. கிடைக்கும் இடைவெளிகளுக்குள் பஸ்ஸை நுழைத்து அநாயாசமாக ஓடும் ட்ரைவரை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. அதை விட பஸ் தரும் அங்குல இடைவெளிகளுக்குள் எல்லாம் நுழைந்து ஓடும் ஓட்டோக்கள் (ஆட்டோ) மேலும் கவனத்தை ஈர்த்தன.

சீலனுக்கு அவனது பார்வதி ஓட்டோ நினைவில் வந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சும்மா இருந்தவனுக்கு அம்மா பார்வதிதான் ஓட்டோ வாங்கி தொழில் செய்யும் படி சொன்னாள். அவளே அங்கிங்கென்று கடனும் புரட்டிக் கொடுத்தாள். ஏற்கனவே ஒருவர் பாவித்த ஓட்டோ தான். ஆயினும் பார்வைக்கு புதியதாகத் தான் தோன்றியது. அவனும் கொஞ்சம் காசு போட்டு ஓடியோ பிளேயர், பேஸ் சவுண்ட் சிஸ்ரம், சொகுசான இருக்கைகள் என மேலும் விருத்தி செய்திருந்தான்.

ஊருக்குள் இவனொருவனே ஓட்டோ வைத்திருந்தபடியால் அதுவே நிறைய வாய்ப்புக்களுக்கு காரணமாகியது. தவிர பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கான ஓட்டம் என்றெல்லாம் தனித்தனியே வருமானம் கிடைத்தது. அப்பா இருபது வருடங்களிற்கு முதல் இயக்கத்துக்குச் சாப்பாடு கொடுத்ததற்காக சவமாகிப் போன பிறகு இப்போது தான் நினைத்தவற்றை, விரும்பியவற்றை அடைய முடிந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிற்கெல்லாம் ஓட்டம் வரும். ஒரு தடவை வவுனியா வரை கூட போய் வந்திருக்கிறான்.

திடீரென ஒரு நாள் பாதையை மூடிவிட்டதாக சொன்னார்கள். பரவாயில்லை உள் ஓட்டமே போதும் என்றுதான் அப்போது நினைத்தான்.

அடுத்தடுத்து ஓட்டோக் காரர்கள் கொலை செய்யபடுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. தொடக்கத்தில் என்னவோ, கொலை செய்யப்பட்டவர்கள் எதேச்சையாக ஓட்டோக் காரர்களாக இருந்திருக்கலாம் என சீலன் நினைத்திருந்தான். பின் வந்த ஒரு நாள் ஓட்டோகாரர் சங்கத்தில் அறிமுகமான பிரபு என்ற இருபத்தொரு வயசுப் பொடியன் பிணமாகக் கிடந்தான். பிரபுவைத் தொடர்ந்து துரையண்ணையும்..

வீதியில் முழத்திற்கு ஒன்றென இருக்கும் ஆமிச் செக் பொயின்ற்றுகளை (Army check point) கடந்து வந்து சுடும் இனந்தெரியாதவர்களை இன்னமும் ஆமிக்காரர் பிடித்த பாடில்லை. ஆனால் சந்தைக்கு கிழங்கு விற்கப் போகும் பூரணத்தையும், பள்ளிக்கூடம் போகும் பன்னிரண்டு வயசுப் பொடியனையும் மறித்து வைத்து ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள்.

சீலனின் அம்மா ஓட்டோ ஓட்டம் ஒன்றிற்கும் போக வேண்டாமெனத் தடுத்தா. ஊருக்குள் ஓடவே அவனுக்குப் பயமாயிருந்தது. வீட்டுக்குள் அடைந்தான். யாழ்ப்பாணத்து ஓட்டோக்காரர் இயக்கத்திடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவையாம். அதனால தானாம் ஒவ்வொருவராக சுடுறாங்கள் என்று கதை பரவியது. ஆயுதப் பயிற்சி எடுக்காதவர்களைச் சுட மாட்டார்கள் என சீலனால் சந்தோசப்பட முடியவில்லை. ஏனெனில் பிரபுவும் துரையண்ணையும் ஆயுதப் பயிற்சி எடுத்ததில்லையே..

அம்மா வெளிநாட்டில் இருக்கும் யார் யாரோவுக்கெல்லாம் தொலை பேசினாள். தூரத்து உறவினர் ஒருவர் அதற்கான ஒழுங்குகளைச் செய்வதாக கூறினார்.

சீலன் கொழும்பிற்கு வெளிக்கிடுவதற்கு முன்னால் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட ஓட்டோவைத் தேடிச்சென்று ஒரு தடவை ஓடிப்பார்த்தான் வீட்டு வளவிற்குள்ளேயே..

பஸ் நின்றது. சனங்கள் ஒட்டுமொத்தமாக இறங்கினார்கள். சீலன் வெளியே பார்த்தான். செக் பொயின்ற்! ஆயுதம் தரித்த ஒரு இராணுவத்தான். மிகுதி இரண்டு பேரும் பொலிசார்.

அடையாள அட்டையையும், பொலிஸ் பதிவு துண்டையும் எடுத்து வரிசையில் நின்றான். முன்னால் நின்ற பயணி சிங்களத்தில் ஏதோ சினந்தார். அநேகமாக அவர் தமிழர்களையோ அல்லது புலிகளையோ அல்லது இருவரையும் சேர்த்தோ திட்டியிருக்கலாம். அபூர்வமாக அரசாங்கத்தை அல்லது ஆமியை கூட திட்டியிருக்கலாம்.

வரிசை ஒரு கட்டத்தில் நகராது நின்றது. இலங்கைச் சனநாயகக் குடியரசு கொடுத்த அடையாள அட்டை வைத்திருந்தும், கொழும்பில் தங்குவதற்கான பொலிசின் அனுமதிப் பதிவு வைத்திராத ஒருவரை பொலிசாரில் ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

“ஐயா நேற்றுத்தான் வந்தனான். இண்டைக்குப் பின்னேரம் தான் எடுக்க வரச்சொன்னவை ´´

“ஏன் கொழும்புக்கு வந்தது..´´

“பாஸ்போட் எடுக்க வந்தனான். இண்டைக்கு எப்பிடியும் பொலிசில பதிஞ்சிடுவன் ´´ அவர் ஒரு ஓரமாய் நிற்கப் பணிக்கப்பட்டு மற்றவர்கள் அழைக்கப்பட்டார்கள். வரிசை நகர்ந்தது.

சீலனின் அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அடையாள அட்டையின் பின்னால் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்று இருப்பதால் ஒருபோதும் கேள்வியின்றி விடுவிக்க மாட்டான் என சீலனுக்கு நன்றாகவே தெரியும்.
“எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ காலை பாஸ்போட் ஒபிசில் கேட்ட அதே கேள்வி. இந்த பஸ் பயணத்தில் இன்னொரு தடவையும் இப்படிக் கேட்கப்படலாம். தனியே யாழ்ப்பாணத்தைப் பிறந்த இடமாய்க் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல இக்கேள்விகள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை என பட்டியல் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக நீளும்.

பஸ் புறப்பட்டது. இரண்டு பேர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கண்களிலிருந்து மறைந்தது.

இப்போதும் என்னைக் கைது செய்திருந்தால் அது மூன்றாந் தடவையாக இருந்திருக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான். முதல் தடவை அவனைக் கைது செய்த காலங்கள் நினைவில் வந்தன.

வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள சீலன் கொழும்பில் வாழைப் பழக் கடையொன்றில் தங்க வைக்கப்பட்டான். கீழே கடை. மேலே 3 பேர் தங்கக் கூடியவாறான ஒரு அறை. இன்னுமொருவனும் இவனைப் போலவே ஏற்கனவே அங்கு தங்கியிருந்தான்.

சிறுவயதில் அப்பாவுடன் ஒருமுறை வந்துபோன கொழும்பின் காட்சிகள் நினைவுகளில் மங்கிப் போய்விட, சீலனுக்கு இதுதான் முதற் தடவை கொழும்பு. ஆங்காங்கே கைதுகள், இரவுத் தேடுதல்களென பத்திரிகைச் செய்திகள் வந்தாலும் ஓட்டோக் காரனைச் சுடவோ, கைது செய்யவோ மாட்டார்கள் என நம்பியிருந்தான், நான்கு மாதங்களுக்கு முன்னான ஒரு மாலை வரை.

ஏதோ ஒரு புதிய படம் பார்த்து வரலாம் எனக் கிளம்பியவனை துறைமுக வீதியில் வைத்து வழி மறித்தனர் இரண்டு நாட்டைக் காப்பவர்கள். அந்தக் கணத்திலேயே சீலன் நிலைகுலைந்து போனான். நாவரண்டு போனது. அவர்கள் ஆரம்பத்தில் சிங்களத்தில் கேட்ட கேள்விகளுக்கு சிங்களமா, தமிழா என்று அடையாளம் காண முடியாதவாறு பதில்கள் திக்கித் திணறி உடைந்தன. கண்களில் நீர் திரண்டது.

துறை முகத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துவதற்காக உளவில் ஈடுபட்ட எல் ரி ரி ஈ பயங்கர வாதியை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தார்கள்.

நான்கரை மாதங்கள். பொலிசில் ஆரம்ப கட்ட உடல் உளச் சித்திரவதைகள், விசாரணைகள், கோட், கேஸ் என இழுபட்டு அவன் வெளியே வந்தான். அதிஸ்ரம் என ஒன்று இருந்தால் அது அவன் பக்கம் இருந்திருக்க வேண்டும். என்னதான் திட்டித் திட்டி வேலை வாங்கினாலும் கடை முதலாளியும் அவனுக்காக அலைந்தார். வெளிநாட்டிலிருந்தும் உதவி கிடைத்தது. தொலைபேசிய அம்மா பறாளாய் முருகன் தான் விடுதலைக்கு காரணம் என்றா.

அப்போதிருந்தே சீலன், கடை கடை விட்டால் அறையென முடங்கிப் போனான். ஒரு தடவை பிடித்தால் மறுமுறை பிடிக்க மாட்டார்கள் என கடைக்கு வந்த சிலர் சொன்னார்கள். ஒருவேளை அது உண்மையாயிருக்குமோ என எண்ணத் தலைபட்ட நேரத்தில்த் தான் ஒரு ஐந்தாறு மாதம் கழித்து குண்டொன்று வெடித்தது. வெடித்ததென்னவோ சத்தம் கூட கேட்காத அளவு தூரத்தில்த் தான். அன்று இரவு அதை செய்தியில் பார்த்துக் கொண்டிருந்த போது வந்து கதவைத் தட்டினார்கள். பாய் தலயணை, பை, வாழைக் குலையென ஒன்றும் விடாமல் குண்டுகளைத் தேடினார்கள். கிடைக்கவில்லையென்ற ஏமாற்றமோ, கோபமோ, என்னவோ போகும் போது சீலனையும் கூட இருந்த பொடியனையும் கூட்டிச் சென்றார்கள்.

அன்று இரவு முழுதும் பொலிஸ் நிலையத்தில் தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு இடமில்லை. வெடித்த குண்டுகளைக் கண்டிருப்போர் என்ற சந்தேகத்தில் நிறையச் சீலன்களையும் சீலிகளையும் அழைத்து வந்திருந்தார்கள். காலை முதல், விசாரணை நடந்தது. மிரட்டலின் பயத்தில் வார்த்தைகள் குழறிப் பதில் சொன்னவர்கள் கூட சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். சீலன் இரண்டாவது தடவையாகவும் விடுவிக்கப்பட்டான். இம்முறையும் கடை முதலாளி சென்ற முறை விடுதலையான ஆவணங்களோடு காலையே வந்திருந்தார்.

கைது செய்யப் பட்டவர்கள் விடுதலைக்காக காத்திருக்க விடுதலை செய்யப்பட்டவர்கள் அடுத்த கைதினை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பிறகொரு நாள்த் தொலைபேசி அழைப்பில் பாஸ்போட்டினை உடனடியாக எடுக்கும் படி சீலன் அறிவுறுத்தப் பட்டான்.

000

விமான நிலையத்தில் மனதும் உடம்பும் இலேசாய்ப் படபடத்தது. “தம்பி ரென்சனாய் இருக்கப்பிடாது. நோர்மலாய் இருக்க வேணும் சரியே.. ´´ காலையிலிருந்து இங்கே கொண்டு வந்து விடும்வரை ஏஜென்சிக்காரர் சொன்னதை அசைபோட்டான் சீலன்.

“ஒண்டுக்கும் யோசியாதையும். எல்லாம் அரேஞ் பண்ணிக் கிடக்கு. றூட்டால போறதெண்டால்த்தான் பயப்பிட வேணும். இது த்றூ பிளைற். ஏறுறதும் இறங்கிறதும் தான். …. மற்றது அவசரப் படாமல் லான்ட் ஆகிறதுக்கு முதல் நான் சொன்னதைச் செய்யும். ´´

விமானம் மேலெழும்பியது. வயிற்றுக்குள் இருந்து அமிலம் மேலெழுகின்றது போல இருந்தது. காது அடைத்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. முன்னே பொருத்தப்பட்டிருந்த வீடியோவை நோண்டிப்பார்த்து அதில் தமிழ்ப்பட சனலைப் பிடித்துக் கொண்டான்.

அது அவன் முதற் தடவை கைது செய்யப் பட்டபோது பார்க்கப் போன படம். எரிச்சல் கிளம்பியது. வீடியோவை நிறுத்தி விட்டு பாஸ்போட்டை கொண்டெழுந்தான். ஏஜென்சிக் காரர் லான்ட் ஆவதற்கு சில மணிநேரம் முன்னால் செய்தால் போதுமென்றிருந்தார். இன்னும் நேரமிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை.

ரொய்லெற்றைத் (Toilet, டாய்லெட் ) திறந்து உட்சென்று கதவை முடினான். பாஸ்போட்டை எடுத்து விரித்தான்.

இக்கடவுச் சீட்டை வைத்திருக்கும் நபர் தங்கு தடையின்றி பயணம் செய்ய ஆவன செய்யுமாறு சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்

சீலனின் வாயில் ஒன்றிரண்டு கெட்டவார்த்தைகள் வந்து போயின. பாஸ்போட்டை ஒவ்வொரு தாளாக கிழிக்கத் தொடங்கினான். பிறகு ஒவ்வொரு தாளையும் இரண்டாய் நான்காய் என பேப்பர் குவியலாக்கி வீசியெறிந்து தண்ணீரை அழுத்தினான்.

மீதமிருந்து மிதந்த ஒன்றிரண்டு தாள்களில், முதற் கைதின் போது அவனை நிர்வாணமாக்கி குரூரமாயச் சிரித்த பொலீஸ்காரனின் முகம் தெரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான் சீலன்.

“தூ……. ´´

மீண்டுமொருதடவை தண்ணீர். இப்போது எந்த தடயமும் இல்லை. வெளியே வந்தமர்ந்து போர்வையால் இழுத்து முடியவன் தூங்கிப் போனான்.

உந்துதல் தந்தவருக்கு நன்றி

விரியும் சூனிய வெளியும்..
குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. செத்து விட வேண்டும் . இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை. வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ?. அவர்களையும் அள்ளிச் சென்றிருக்கக் கூடும். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து தலையைத் தேய்த்து…

எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ? அருள் இடத்தை விட்டு அகன்றிருப்பான் என்றே தோன்றியது. அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது”

சாகீருக்கு அது அவசியமானதாகத் தெரியவில்லை. “ஆயிரம் கிலோ சக்கை.வெடிச்சால் வாகனம் புக்கைதான். செஸி நம்பர் சிக்குமெண்டு நினைக்கேல்லை. எண்டாலும் இடிச்சு ரண்டு மூண்டு நம்பரை அழிச்சு விடுவம்” என்றான் அவன். இரும்பில் உள்ப்புடைத்திருக்கும் இலக்கங்களை அழித்து விடுவது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமாயிருக்கவில்லை.

சாகீரின் கைகளைப் பின்புறமாகக் கட்டி கண்களை மறைத்து கிட்டத்தட்ட பிணம் போல இழுத்து வாகனத்தில் தூக்கியெறிந்த போது அவன் நிர்வாணப்படுத்தப் பட்டிருந்தான். இடுப்புக் கயிற்றை வெட்டியெறிந்த போது சதையில் கீறல் விழுந்திருந்தது. அவர்கள் பிளேடைப் பாவித்திருக்க வேண்டும். மெலிதாக இரத்தம் கசிவதை உணரக் கூடியதாயிருந்தது. தட தடவெனஆட்கள் வாகனங்களில் வந்து ஏறினார்கள். இன்னும் சில வாகனங்கள் சர் சர் என உயிர்பெறும்சத்தம் கேட்டது. நிறையப் பேர்தான் வந்திருக்கிறார்கள். முன்னிரவே வந்து சுற்றிவளைத்திருக்கக்கூடும். கிட்டத்தட்ட ஒரு ஒபரேசன் போலத்தான் முடித்திருக்கிறார்கள். போகும் வழியில் கொலை செய்து களனி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்களா? அவ்வாறேதும் நடந்தால் எவ்வளவுநல்லது?

சாகீரை சீற்றுக்களுக்கிடையில் குப்புறக் கிடத்தி அவன் கழுத்தில் முதுகில் குண்டியிலென துப்பாக்கிகளாலும் சப்பாத்துக் கால்களாலும் அழுத்தி வைத்துக்கொண்டார்கள். அவனுக்கு நேர் மேலே மூன்று பேர் இருக்கிறார்கள் என்பதனை கால்களை வைத்து அனுமானித்துக் கொண்டான்.வேறும் பலர் இருக்கக் கூடும். துப்பாக்கியின் சுடு முனையொன்று தோள்மூட்டை இறுக்கிக்கொண்டிருப்பது நொந்தது. இது வெடித்தாலே போதும். டேய்.. சுடன்ரா பேப் ..… ´

சந்திராவோடுபோயிருக்கலாம். சந்திராவிற்கு வாகனமோட்டுவதில் சிக்கல் இருந்தது. இங்கத்தய தெருக்களில் அவனால் அறவே முடியாது. இனிப் பழக்கியெடுப்பதற்கும் முடியாதிருந்தது. சந்திராவிற்குப் பதில் தான் போனால் என்ன என சாகீருக்குத் தோன்றியது. ஆனால் சந்திரா ஒரு போதும் உடன்பட மாட்டான். “மனிசராயப் பிறந்தவைக்கு ரோசம் இருக்க வேணும்” எனசொல்லிக் கொண்டு வந்தவன் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான். “முன்னாலயும் வையுங்கோ -அங்கையிங்கை பிசகிப் போனாலும் நான் வெடிச்சிட வேணும். அப்பிடியே இல்லாமல் காத்தோட காத்தாப் போயிடணும். மூஞ்சை வெளிய தெரிய வந்தால் – பிறகு எங்களோடை பழகினவைக்குத்தான் கரைச்சல்.”

அடுத்த நாள் சந்திராவை அழைத்துக் கொண்டு குலேந்திதான் போனான்.கொஞ்சத் தூரத்தில் அவனை விட்டுத் திரும்பியவனை அருள் அழைத்து வந்தான். சந்திரா புறப்பட்டகொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்டது. ஆயிரம் கிலோ வெடிமருந்தின் அதிர்வை சாகீரும் உணர்ந்தான்.

(2)

“சொல்லு, ஜொயின்ட் கோப்ரேசன் அற்றாக்கிற்கு யார் றெக்கியெடுத்தது? யார் பிளான் பண்ணியது? யார் இடித்தது ?”

இந்தக் கேள்வியை அந்த உடல் பருத்தவன் சீக்ரெட்டை ஊதி ஊதி நான்காவது தடவை கேட்கிறான். சுவர் மூலைக்குள் தன்னை அடக்கிக் குந்தி முழங்கால்களை கைகளால் வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்த தினேசலிங்கத்தின் உதட்டிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

“சொல்லு.. இந்த மிசன்ரை மாஸ்டர் மைன்ட் யார்?”

“தெரியேல்லை சேர்” தலைக்குள் மின்னல் துகள்களை விசிறுவது போல் விழுந்த குத்து பொய் மூக்கை உடைத்திருக்க வேண்டும். ரத்தம் வழிந்தது. தினேசலிங்கம் கேவிக் கேவி அழத்

தொடங்கினான். “சேர் உண்மையா எனக்கொண்டும் தெரியா சேர். ஊரில கோப்பிரேசன் எண்டு சங்கக் கடையைச் சொல்லுறவை. சிலர் தவறணையையும் சொல்லுறவை. ஆனா இங்கை கொழும்பில அது எது எண்டு எனக்குத் தெரியாது சேர். நான் வெளிநாடு போக வந்தனான் சேர்..”

உதையிறதுக்கும் குத்துவதற்குமென வசதியாக முன்னால் கதிரை போட்டிருந்தவனுக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “என்ன நக்கலா ? வெளிநாடு போறதுக்கெண்ட பெயரில தான் நீங்க இங்கை இருக்கிறீங்கள். அதுதெரியும். உங்கடை நெற்வேக்கை முழுசா பிடிச்சிருக்கிறம். அதனால ஒண்டையும் மறைக்காமல் சொல்லு. நீயா சொன்னால் நல்லது.”

தினேசலிங்கத்துக்கு தண்ணி குடிக்க வேண்டும் போல இருந்தது. உலர்ந்து போன உதடுகளை இரத்தம் மட்டுமே ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. எச்சில் விழுங்கும் போது இரத்தமும் உட்சென்றது.எனக்கொரு சின்னக் காயம் என்றாலும் அம்மா எப்படித் துடித்துப் போவாள்..?இதெல்லாம் தெரிந்தால்… ? அம்மாவிற்கோ நாமலாவிற்கோ விசயம் தெரிய முதல் வெளியில் போய்விட வேண்டும் கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போனால் எப்பிடியும் விட்டு விடுவார்கள்.

“என்னடா ……..யாண்டி? பதில் சொல்ல மாட்டியா..? எழும்புடா எழும்பி நில்” அவன் பூட்ஸ் காலை முகத்துக்கு நேரே நீட்டினான். உதைக்கவில்லை. உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இன்னொருவன் முன் நிற்க வேண்டியிருந்ததை நினைத்து தினேசலிங்கம் குறுகிப் போனான். இன்னும் எத்தனை பேருக்கு என்னைத் தோலுரிக்க வேண்டும்

“ரஞ்சன் விஜயரட்ண கொலையில உனது பங்கு என்ன?அடுத்தது யார் லிஸ்ட்டில? வரதனைப் பற்றிச் சொல்லு இந்திராவைச் சந்தித்திருக்கிறியா? யாரெல்லாம் ஏஜென்ட்? யார் கோர்டினேட்டர்”

ரஞ்சன் விஜயரட்ண என்ற ஒருவர் அமைச்சராக இருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் தினேசலிங்கத்திற்கு தெரிந்திருக்கவில்லை. அவர் செத்த போது அவன் கொழும்பிற்குக் கூட வந்திருக்கவில்லை. தினேசலிங்கம் பதிலேதும் இன்றி நின்றான். அது அவனை சினப்படுத்தியிருக்க வேண்டும்.

“ஒளிக்காமல்சொல்லு. உனக்குஎல்லாம் தெரியும்.”

“சேர்..எனக்குஉண்மையாவே.. ” தினேசலிங்கம் முடிக்கவில்லை. இடுப்பிற்கு கீழே சப்பாத்துக்கால் பதிந்தது. அம்மா… கைகளால் பொத்திக் கொண்டு தினேசலிங்கம் சுருண்டு விழுந்தான். “பறத் தெமிழு..” முதன் முறையாக அவன் சிங்களத்தில் வார்த்தைகளை உதிர்த்தான். அவை சிங்களத் தூசண சொற்களாயிருக்க வேண்டும். தினேசலிங்கம் மேலும் மிதிபட்டான். அவனை மிதித்தவர்களில் ஒருவன் அழகாகத் தமிழ் பேசினான்.

(3)

என் இனிய நாமலாவுக்கு நான் நலம் நீர் எப்பிடி? உம்மை பிரிஞ்சு வந்து ஒண்டரைக் கிழமையாயிட்டுது. என்ன தைரியத்திலோ மூண்டு வருசம் தானே எண்டு ஈசியா சொல்லிட்டு வந்திட்டன். ஆனா ஒரு நாள் கூட உம்மை பார்க்காமல் இருக்கிறது எவ்வளவு கொடுமை எண்டு இப்பதான் விளங்குது. ஏதோ உம்மடை நினைவுகளில தான் நாட்களை போக்காட்டுறேன். நாமலா கடவுளைப் பிரார்த்தியும் இந்த மூண்டு வருசமும் கெதியா ஓடிப் போயிடோணும். நேற்றுத்தான் பாஸ்போட் குடுத்திருக்கிறன். ஒரு கிழமையில விசா குத்தி வருமாம். முடிஞ்சவரைக்கும் உழைச்சுக்கொண்டு நான் திரும்பின உடனை கல்யாணம். அதுக்குப் பிறகு நான் போக மாட்டன். ஊரிலயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திடுவன். நாமலா.. அம்மாவை அடிக்கடி போய் பாரும்.ஏதாவது உதவி தேவையெண்டா செய்து குடும். பாவம் அவ. இனி நாங்கள் தானே பார்க்கவேணும். நாமலா.. கடைசியா சீக்காய் வயல் பின் காணியில நீர் தந்ததை என்னால மறக்க முடியாது. அந்த முத்.……… ´இந்த இடத்தில் தினேசலிங்கத்தின் பிடரியில் அடிவிழுந்தது. பேனா பெரிய கோடொன்றை பேப்பரில் இழுத்தது. நான்கு பேர்தான் வந்திருந்தார்கள். தினேசலிங்கத்தின் பாஸ்போட் அவர்களில் ஒருவனின் கைகளில் இருந்தது. இது நீதானே பாஸ்போட்டை அவன் விரித்துக் காட்டினான்.ஓம்.. லொட்ஜில் மற்றவர்கள் கூடிவிட்டார்கள். தினேசலிங்கம் லொட்ஜ் முதலாளியைக் கண்களால் தேடினான். அவருக்கு சிங்களம் தெரியும்.

“வா எங்களோடை”

“சேர் நான் வெளிநாடு போக வந்திருக்கிறன். வந்து ஒரு கிழமைதான் ஆகுது”

“கதைக்காத.. வா..” ஒருவன் பின் கழுத்தில் கை வைத்து தள்ளினான். தினேசலிங்கத்துக்கு அழுகை வருமாப் போல இருந்தது.அடிப்பார்களோ..?

தன்னை யாரோ காட்டிக் கொடுத்துவிட்டதாய் தினேசலிங்கம் நம்பினான். யாராயிருக்கும்..வந்ததில இருந்து வெளியாலும் திரியாமல் லொட்ஜில் தானே நிற்கிறேன். நாமலாக்கு கடிதம் குடுத்து அடி வாங்கின பொடியன் இங்கைதான் நிற்கிறதா சொன்னவள். ஒருவேளை அவன்தான் போட்டுக் குடுத்திட்டானோ

தினேசலிங்கத்துக்கு கொழும்பு பிரமிப்பாகத்தான் இருந்தது. என்றாலும் வெளிய திரிய பயமாய் இருந்தது. குண்டுகள் வேறு வெடித்துக் கொண்டிருந்தன.எதற்கு வீண் சோலி? அபுதாபிக்கான மூன்று வருட வேலை ஒப்பந்த விசா கிடைக்க வேண்டியிருந்தது. அதுவரையும் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். செலவுக்கென அம்மா கொஞ்சம் பணம் தந்திருந்தாள்.அது சாப்பாட்டுக்கும் வாடகைக்குமே சரியாயிருந்தது. ஜேர்மனியில் இருக்கிற சாந்தியன்ரியின் நம்பரை அம்மா தந்திருந்தா. சாந்தியன்ரி ஏதாவது உதவி செய்யலாம் என அவ நம்பியிருக்கக் கூடும்.

“ஹலோ நான் தினேசலிங்கம். சுபத்திரையிடை மகன். கொழும்பில இருந்து கதைக்கிறன்.அம்மா உங்களோடை கதைக்க சொன்னவ. நான் தாற நம்பருக்கு ஒருக்கா எடுக்கிறியளோ..?” ஒரு நிமிசக் கோல் எடுத்து ஒருமுறை சொன்னான். ஒரு நிமிசத்துக்கு நூற்றியம்பது ரூபா.

“ஓ..ஆர்.. தினேசலிங்கமோ.. ஆ.. ஊரில இருந்தோ.. இவர் வேலைக்கு போட்டார். வந்தவுடனை எடுக்கசொல்லுறன்.” சாந்தியன்ரி நம்பர் வாங்காமலேயே போனை வைத்தது தினேசலிங்கத்துக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. இனி அவக்கு எடுக்கிறேல்லை.அம்மாக்கு இதைப் பற்றி எழுதக் கூடாது. கவலைப் படுவா. அம்மா எவ்வளவு நல்லவ.. நான் நாமலாவை காதலிக்கிறன் எண்டு தெரிஞ்ச உடனை எப்பிடிப் பக்குவமா நடந்து கொண்டா. நாமலாவின் அப்பாவோடு அம்மா தான் பேசினா.அவயளுக்கும் விருப்பமாத்தான் இருந்தது. ஆனா கல்யாணத்துக்கு முதல் கொஞ்சம் காசு உழைக்கவேணும் எண்டு நான் தான் விரும்பினேன். நாமலாக்கு இதில துண்டற விருப்பம் இல்லை. ஆனா குடும்ப உறவுகளுக்கை பணமும் ஊடாடுகிறது என்பதை தெரிஞ்சு வைத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவிருந்தது.

“நாளைக்கு காசு பணம் இல்லையெண்டால் பெஞ்சாதி பிள்ளையளோடை எரிஞ்சு விழுந்து வாழ்க்கை அந்த சந்தமில்லாமல்ப் போயிடும். உன்ர அப்பாவோடை நல்ல அனுபவம் எனக்கு. நீ கொஞ்சம் காசைச் சேர்த்து வைச்சுக் கொண்டு கல்யாணம் கட்டுறது தான் நல்லது.” அம்மாவிற்கும் அந்த நினைப்பிருந்தது.

தினேசலிங்கத்தின் கையில் நேற்றுக் காலைதான் பாஸ்போட் கிடைத்தது. கிடைத்த உடனேயே கொண்டு வரச் சொல்லிருந்தார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் அவர்கள் பிரபலமானவர்கள். பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளுக்கும் அனுப்புகிறார்களாம். ஆனால் அதுக்கு லட்சங்கள் தேவைப்படும். பம்பலப்பிட்டியில் பஸ் எடுத்து வெள்ளவத்தைக்குப்போய் பாஸ்போட்டை கொடுத்து விட்டு மீண்டும் மருதானைக்கு வரும் போது மதியம் தாண்டிவிட்டது. இரண்டொரு நாட்களில் விசா குத்தித் தருவார்கள்.

அன்று இரவு இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய வாகனத்தின் செஸி நம்பரைப் பெற்றுக்கொண்ட இலங்கை குற்றப் புலனாய்வுப் படைப் பிரிவினர் வாகனம் பதிவு செய்யப் பட்டிருந்த முகவர் நிலையத்திற்குள் புகுந்தனர். அந்த முகவர் நிலையம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

(4)

“நான்தான் தினேசலிங்கம் கதைக்கிறன். எனக்கு இப்ப சிறை வாழ்க்கை பழகிட்டுது. பின்னே. ? தொன்னூற்றொன்றிலிருந்து ரண்டாயிரத்து ஒன்று . பத்து வருசம்.. பிறகொரு ஏழு…வருசம்.. மொத்தம் பதினேழு வருசம் சிறைக்குள்ளை இருந்தால் பழகித்தானே போகும். இந்த பதினேழு வருசத்தில பூசா வெலிக்கடை களுத்துறை எண்டு நிறையச் சிறைகள் மாற்றி விட்டினம். ஆனால் சிறை எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கு. நான் ஒரு புலி எண்டதுக்கான வீடியோ ஆதாரம் சிக்கினதாலயும் (அவங்களே துவக்கைத் தந்து வைச்சிருக்கச் சொல்லி வீடியோ எடுத்தாங்கள்) வலி பொறுக்க முடியாமல் காட்டின பேப்பர் எல்லாத்திலயும் கையெழுத்துப் போட்டதாலயும் கோர்ட்டில எனக்கு தீர்ப்பு எழுதி களுத்துறையில கொண்டு போய் போட்டினம். ஐஞ்சாறு கேஸ் எனக்கு மேலை. அதுகள் என்னவென்றே இன்று வரைக்கும் சரியாத் தெரியாது.முதல் நாள் சிறையில கொண்டு போய் போட்ட உடனை எனக்கு உலகமே இருண்டு போனமாதிரி இருந்தது. எனக்கு சொர்க்கம் எப்பிடியெண்டு தெரியாது. ஆனால் நரகத்தை அனுபவிக்கத் தொடங்கினேன். என்னை மாதிரியே எவ்வளவு தமிழ்ப் பெடியங்கள். வேறை இடங்களில பெட்டையளும் இருக்கிறதாக் கேள்வி. கொஞ்சம் கொஞ்சமா சிறை பழகத் தொடங்கியது எனக்கு.

மாசத்தில ஐஞ்சாறு என வரும் நாமலாவின் கடிதங்கள் தான் ஒரே ஆறுதல். நாமலா எனக்காக எத்தனை வருசமெண்டாலும் காத்திருப்பதாய் எழுதினாள். அப்பிடி அவள் எழுதினால் எனக்கும் சந்தோசமாய்த்தான் இருக்கும். அவ்வப் போது செஞ்சிலுவைக் காரர் வந்து எங்கையெல்லாம் அடி விழுந்தது எண்டு எழுதிப்போவினம். எழுதிக் கொண்டு போய் என்ன செய்யினம் எண்டு தெரியாது. தமிழ் அமைச்சர்களும் வாறவை. வந்தென்ன.. ?

ஒருதடவை இந்தியாவில இருந்து கார்த்தி என்பவர் வந்திருந்தார். மரியாதை தெரியாத மனுசன். 2பொட்டம்மானைக் கடைசியா எப்ப சந்தித்தாய்” என அவர் கேட்டார். கடவுளே.. ராஜீவ் கொலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சிவராசன் தாணு சுபா இவர்களெல்லாம் யார்..?

தொன்னூற்றைந்து ஒக்டோபருக்குப் பிறகு நாமலாவின் எந்தக் கடிதமும் வரவில்லை. யாழ்ப்பாணச் சனங்களெல்லாம் இடம் பெயர்ந்து போய் விட்டார்களாம். யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்ததை இங்கே சிங்கள கைதிகள் பெரிதாய்க் கொண்டாடினார்கள். நாமலா எங்கை போனாள் எண்டு தெரியேல்லை. எனக்கு நித்திரையே வாறதில்லை.அவளது பழைய கடிதங்கள் தான் துணையாக இருந்தன. அம்மாவின் கடிதமொண்டு கனகாலத்துக்குப் பிறகு வந்தது. நாமலா மல்லாவிக்கு போயிட்டாளாம். ஏன் நாமலா நீ கடிதம்போடவில்லை..?

தொன்னூற்றெட்டில் நாமலா கொழும்பு வந்திருந்தாள். அது கூட பிறகுதான் அம்மா எழுதிய கடிதத்தில் தெரிந்தது.அவளுக்கு பிரான்சில் ஒருபொடியனைப் பார்த்து கல்யாணம் பேசியிருந்தார்கள். கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாட்களில் அவளும் பிரான்ஸ் போய்விட்டாள். பாவம்.. அவளும் என்ன செய்வாள்..

எனக்குப் பெரிதாய் அழவேண்டும் போல இருந்தது. இனி அவளிடமிருந்து கடிதமேதும் வராது. உங்களுக்காய் காலமெல்லாம் காத்திருப்பேன் என அவள் சொல்லப் போவதில்லை. இரவு முழுதும் அழுது தீர்த்தேன். யார் யாரோ மீதெல்லாம் கோபம் வந்தது. அந்தக் கோபத்தில்தான் அடுத்த நாள் அந்த அமைச்சர் மீது நான் கை வைத்தேன். நானொரு காட்டுமிராண்டியாய் இருந்திருக்க வேண்டும். இல்லாட்டி அப்பிடித் தாக்கியிருக்க முடியாது. “ஏன்ரா ஏமாத்திறாய்.. செத்துப் போடா.. உன்னாலை தான்ரா எல்லாம்.. ”

அவரோடு வந்திருந்த அன்ரி “தம்பியவை என்ன இது” என்று என் கையைப் பிடித்து தடுத்தா. நான் அவவையும் பிடித்து தள்ளி விட்டேன். அவ சுவர் ஓரத்தில போய் விழுந்தா. இதற்கிடையில் யாரோ அமைச்சரின் கண்ணை மடித்துக் கூராக்கிய சாப்பாட்டுக் கோப்பையால் குத்தி விட்டார்கள். அவர் சரிந்து விழுந்தார். செத்துப்போனார் என்று தான் நினைத்தேன்.

அடுத்த நாட்களில் போட்டுத் துவைத்தெடுத்தார்கள். முதன் முறையா அடித்து கொலைசெய்யட்டும் என நினைத்தேன். அம்மா பாவம்

சமாதானம் வருகுது. எங்களையெல்லாம் விடபோறாங்கள் என மற்றவர்கள் பேசித்திரிந்தார்கள். அது உண்மை போலத்தான் இருந்தது. பத்திரிகைகளில் ஆமியும் புலிகளும் கைகோர்த்து நிற்கும் படங்கள் வெளியாகின. அன்ரன் பாலசிங்கம் லண்டனில இருந்து இரணைமடுவில போய் இறங்கினாராம். பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பை ரூபவாகினியில போட்டு காட்டினார்கள். இப்போதெல்லாம் புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதை ரூபவாகினி நிறுத்தியிருந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கப் போகிறதாம். கைதிகள் விவகாரமும் பேசப்படும் என்றார்கள். இப்பவெல்லாம் சிறைக்கு தமிழர்கள் யாரும் வருவதில்லை. வெளியேறுவது குறித்த மகிழ்ச்சி நாமலாவின் நினைவில் சட்டென்று ஒடிகிறது. நாமலா நீ கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே..

அம்மாவும் கொழும்பு வந்திருந்தாள். அவளைப் பார்க்கவும் முடிந்தது. ஓவெனப் பெருங் குரலெடுத்து அழுதவளை ஆறுதல்ப் படுத்த முடியவில்லை. கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரவலாக செய்திகள் வந்தது. எல்லா தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வார்களா.. ?

சந்திரிகா வரையும் இந்த விவகாரம் இழுபட்டது. கடைசியில் கைதிகளைப் பரிமாறுவது என இரண்டு தரப்பும் முடிவுக்கு வந்தார்கள். தம்மால் கைது செய்யப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுதலை செய்யும் அதேவேளை அரசு கைது செய்து சிறையிலடைத்திருக்கும் தமது உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டுமென புலிகள் இயக்கம் கேட்டுக்கொண்டது. விடுவிக்க வேண்டியவர்களின் பெயர் விபரங்கள் சந்திரிகாவின் இறுதி முடிவுக்குப் போனது. வவுனியாவில் கைதிகள் பரிமாற்றம் நடந்தது. அந்தச் செய்தியை நான் பத்திரிகையில் படித்தேன். படமும் போட்டிருந்தார்கள். புலிகள் தரப்பில் விடுதலையானவர்களில் நிலவனையும் சாகீரையும் எனக்குத் தெரியும். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வெலிக்கடையில் என்று நினைக்கிறேன் சாகீரைச் சந்தித்திருக்கிறேன். சாகீர் நல்ல பொடியன். மற்றவர்களுக்காக முன்நிற்பான். சிங்களக் கைதிகளுடன் சண்டை நடக்கும் போது அவனை முன் வரிசையில் பார்க்கலாம். பத்திரிகையில் சாகீர் தனது அம்மாவைக் கட்டியணைத்த படி நின்றான்.

(5)

என்னை இப்ப பூசாவுக்கு மாத்தியிருக்கு. திரும்பவும் தமிழ் பெடியங்களை பிடிச்சு வரத் தொடங்கிட்டாங்கள். அண்டைக்கு ஒரேயடியா நானூறு பேரைக் கூட்டியந்தாங்கள். இங்கை இரவில

ஆட்கள் அலறுற சத்தம் கேட்கிறது வழமையாப் போச்சு. சிலரை கொலை செய்து இரவோடிரவா குப்பை வண்டியில ஏத்திப் போறதா கதைக்கிறாங்கள்.

அமைச்சர்கள் வழமை போலவே வருகினம். நாமலாவுக்கு பிரான்சில இரண்டாவது குழந்தை பிறந்திருக்குதாம். பெடியன் நல்லா வைச்சுப் பாக்கிறானாம். ஆசொல்ல மறந்து போனன். சாகீர் இயக்கத்தை விட்டு விலகி இப்ப சுவிஸ் போயிட்டானாம். செஞ்சிலுவைச் சங்கம் தானாம் அனுப்பி வைத்தது. அம்மாதான் இதையெல்லாம் எழுதினாள். அவள் திரும்பவும் ஊருக்குப் போயிட்டாள். கொழும்பில இருக்கிறதென்றால் இலேசுப்பட்ட காரியமே..? இன்னுமொரு உண்ணாவிரதம் இருப்பம் எண்டு பெடியள் பேசிக்கொள்ளுறாங்கள்.

கெதியில வீட்டை வருவன் எண்டு அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுத வேணும். அவள் உயிரோடு இருக்கும் வரைக்குமாவது இப்படி எழுதிக் கொண்டிருக்க வேணும்.

வெற்றியண்ணை – சிறுகதை
நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´

´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென மெழுகு கலரால்த் தேய்த்தேன். மனிதர்களை வரையும் போது அவர்களுக்கு தொப்பியும் போட்டு கையில் துப்பாக்கியும் வரைந்தால் என்ன என மூளை யோசித்தது. வெளியே நாய்கள் ஓய்வதும் குரைப்பதுமாக இருந்தது. மணியடித்ததும் முதலாக வரிசையில் போய் நின்றேன். வழியில் வேலிகளை வெட்டிக் கொண்டு ஆமிக்காரர் கள் நின்றிருந்தார்கள். சிலர் சிரித்தார்கள்.

விறாந்தையில் அம்மம்மா பனையோலைப் பெட்டி செய்து கொண்டிருந்தா. ´´அம்மம்மா வெற்றியண்ணையாக்கள் உள்ளை நிக்கினமோ´´

´´ம்.. ஒரு மணித்தியாலத்துக்கு முதலே போயிட்டாங்கள். இஞ்சை ஒரு பத்துமணி போலவே ரவுண்டப். காலமமை சந்தைக்கு போன சாந்தா இடையில வந்து சொன்னது. பொடியள் அப்பவே போயிட்டாங்கள். ´´ சாந்தாக்கா முன் வீட்டில இருக்கிறவ. அவவுக்கு இஞ்கை பொடியள் வந்து போறது தெரியும். அவவின்ர அம்மாக்குத்தான் பொடியள் வந்து போறது விருப்பமில்லை. ´´என்னத்துக்கு தேவையில்லாத பிரச்சனையள். உதாலை அயலில இருக்கிற எங்களுக்கும் வில்லங்கம் வரும். ´´ என்று ஒரு தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறா. ´

நான் அறைக்குள்ள போனேன். அங்கை தான் வெற்றியண்ணையாக்கள் இருக்கிறவை. நினைச்ச உடனை ஓடிப்போறதுக்கு வசதியான அறையும் கூட. கதவைத் திறந்து சிறியண்ணையின் கிணற்றடி வளவைத் தாண்டினால் போதும் பிறகு அங்காலை குடிமனையற்ற வளவுகளும், வயற்காணிகளும் தான். அதையும் தாண்டினால் அடுத்த கிராமம்.

அந்த அறையை ஒருதடவை நோட்டம் விட்டேன். ஒருமுறை இப்பிடித்தான் இரவு வந்து தங்கியிருந்தார்கள். காலையில் கச்சான் விக்கப் போன அம்மம்மா வியர்வை வழிய படபடப்புடன் ஓடிவந்து கடகத்தை இறக்கினா. ´´ஒழுங்கை.. ஒழுங்கை வாசலில ஆமி.. அறுவாங்கள் காலைமையே வந்திட்டாங்கள் போல.. ஓடிப்போங்கோடா..´´ அவாவுக்கு குரல் ஒரு சீராக வரவில்லை. விக்கி விக்கித் தான் கதைத்தா.

வெற்றியண்ணையோடு இன்னும் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். சடசடவெண்டு துவக்குகளை உரைப்பையில் திணித்து விட்டு கட்டியிருந்த சாரத்தை கழட்டிவிட்டு ஓட்டமெடுத்தார்கள். தெருவில் நாய்கள் குரைப்பது அதிகமானது. ´´உள்ளை வருவாங்கள் போலத்தான் கிடக்கு´´ என்றா அம்மா. ´´இந்த சாரங்களை என்ன செய்யிறது? இதை யார் கட்டுறது எண்டு கேட்டா என்ன சொல்லுறது.. எட்டு வயது பொடியன் கட்டுறது எண்டு சொன்னால் நம்புவாங்களோ..´´ அது கொஞ்சம் மிகையான பயம்போலத்தான் இருந்தது. ஆனாலும் குப்பைகளையே கிளறிப் பார்ப்பவர்கள் அவர்கள்.

அம்மம்மா சாரங்களை சுருட்டி எடுத்துக் கொண்டா. ´´இஞ்சை விடு பிள்ளை.. நான் கட்டியிருக்கிறன். கேட்டா என்ரை சாரம் எண்டு சொல்லுறன்´´

அன்று இராணுவம் வீட்டுக்குள் வரவில்லை. வீதிகளில் ரவுண்டப் செய்து யாரையோ கைது செய்து கொண்டு போனார்களாம். அவர் கிட்டடியிலதான் கல்யாணம் கட்டியவர் என வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

´´வெற்றியண்ணை வீணா ஓடினது.. பேசாமல் வீட்டிலயே இருந்திருக்கலாம்´´ என நான் நினைத்துக் கொண்டேன். வாரத்தில் ஒருதடவையேனும் அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். சில நாட்களில் இரவுகளிலும் தங்குவதுண்டு. சுவர்களில் சாத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் பெரும்பாலும் உரப் பையின் வெளியே தலை நீட்டிக் கொண்டிருக்கும். கிரேனைட்டுக்கள் பெல்ட்டுக்களில் பொருத்தப் பட்டிருக்கும். வெற்றியண்ணையிடம் ஒரு அல்பம் இருந்தது. அதில் அவரது சிறு வயதுப் படங்கள், அவரது அம்மா அப்பா சகோதரங்களுடனான படங்கள் முதல் பயிற்சியெடுக்கின்ற படங்கள் வரை இருக்கும். அப்பா அம்மாவுடனான படங்களை அவர் அதிக நேரம் பார்ப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

மற்ற ரண்டு பேரும் நிறைய அமைதியானவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். நான் ஆர்வத்தில் கேட்கும் கேள்விகளுக்குக் கூட சிலசமயங்களில் அவர்களிடமிருந்து பதில் வராது. ஆனால் வெற்றியண்ணை அப்படியில்லை. ஏதாவது பேசிக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு பழக்கம். என்னோடும் நல்ல வாரப்பாடு. ´´வோக்கி டோக்கியென்பதும் ரெலிபோனும் ஒண்டு தானோ.. இதில யாரோடும் கதைக்கலாமோ.. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கதைக்கலாமோ.. ´´ இப்படி நானும் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஒருமுறை ´´ஆமிக் காரர் வைச்சிருக்கிற துவக்கில எல்லாப் பக்கமும் ஓட்டை இருக்கே.. அதெல்லாத்தாலையும் குண்டு வருமோ´´  என்று கேட்டதுக்கு ´´ம் அதாலை தான் பக்கத்தில நிக்கிற சனமெல்லாம் சாகுது´´ என்றவர் கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ´´எங்களிட்டையும் எல்லாப் பக்கத்தாலையும் குண்டு வாற துவக்கு இருக்கு பாக்கப் போறியோ எண்டு கேட்டுக் காட்டினார்.

´´யார் தந்தது உது´´

´´ஒரு ஆமிக்காரர் தனக்குத் தேவையில்லையெண்டு எடுக்கச் சொன்னவர்´´

இப்போதெல்லாம் பாடசாலை விட்டு வரும்போதே  வாசலில் வைத்து வெற்றியண்ணை வந்தவரோ எனக் கேட்டு வருவது என் வழக்கமாகி விட்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு வித இடைவெளியுடன் பழகியவர்கள் இப்போது குடும்பத்தில் மிக நெருக்கமாகிப் போனார்கள்.

எனக்கு ஞாபகமிருக்கிறது. கொஞ்சக் காலத்திற்கு முதல், இரண்டு மூன்று பேர் கொஞ்ச மூட்டைகளுடன் வந்து தயங்கித் தயங்கி கேட்டார்கள். ´´அக்கா உங்கடை கிணத்தில குளிச்சிட்டு போகலாமோ.´´ அம்மா மோட்டரைப் போட்டு தொட்டியில் நீர் நிரப்பி விட்டா. எல்லோரும் வெளியே நின்று குளிக்க, ஒருவர் மட்டும் உள்ளே ஏறிக் குதித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார். தண்ணியில் சட சட வென கைகளால் அடிப்பதும், வாயில் தண்ணியெடுத்து அதை மேலே பாய்ச்சுவதுமென ஏதோ என் வயதொத்தவர்கள் போல இருந்தது அவரது செய்கைகள்.

குளித்து முடித்தபிறகும் அவர்கள் தயங்கித் தயங்கி நின்றார்கள். ´´தம்பி அம்மாவைக் கூப்பிடும்´´

´´அக்கா சரியா பசிக்குது. எங்களிட்டை பாண் வாங்க காசிருக்கு. கறி ஏதாவது தருவியளே..´´ அம்மாவின் கண்களில் நீர் கசிந்ததை நான் பார்த்தேன். ´´கறி வைக்கிறன்..இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ.. ம்.. ஆராவது கோழி உரிப்பியளே..´´

´´நான் உரிப்பன் அக்கா´´ என்று சொன்னவர் தானாகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ´´என்ரை பேர் வெற்றி.. ´´

அதற்குப் பிறகு அவர்கள் வருவதும், போவதும் சில சமயங்களில் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதும் வழமையாகி விட்டது.

பாடசாலை விட்டோ ரியுசன் முடிந்தோ வரும் வழிகளில் எந்த வீட்டிலிருந்தாவது சமையல் தாளிக்கும் வாசம் வந்தாலும் அது சப்பாத்தியெண்ணை வாசமா என மணந்து பார்க்கின்ற பழக்கமொன்று எனக்கு கொஞ்சக் காலமாகவே வந்துவிட்டிருந்தது. வீட்டில் அன்று வெற்றியண்ணையாக்கள் இருந்தார்கள். வெற்றியண்ணை நிலத்தில் படுத்திருந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

´´எனக்கும் ஒரு வீடியோ கேம் அப்பா அனுப்பறவர் எண்டு எழுதினவர்´´ நான் வெற்றியைப் பாத்துச் சொன்னேன். ´´அவர் சும்மா எழுதியிருப்பார். இருந்து பார் அனுப்ப மாட்டார்.´´ நான் அதை பெரிசா எடுத்துக் கொள்ளவில்லை.

´´உதுவும் யாரும் ஆமிக்காரர் தேவையில்லையெண்டு தந்ததோ´´ எனக் கேட்டேன். எனக்கு வீடியோ கேம் ஒன்று வைத்திருக்கவேண்டும் என்று நிறைய நாள் ஆசையிருந்தது. பக்கத்து வீட்டு செல்வன் அண்ணைக்கு அவரின்ர அப்பா ஒன்று அனுப்பியிருந்தவர். ஒரிரண்டு தடவைகள் அவரிடம் வாங்கி விளையாடியிருப்பேன். ஆனால் பெரும்பாலான நேரம் நான் அவர்கள் வீட்டுக்கு போனதும் அவர் அதை எடுத்து விளையாடத் தொடங்கிவிடுவார். பிறகு எப்படிக் கேட்பது என்ற தயக்கம் எனக்குள் ஏற்பட்டு விடும். எனக்கும் ஒரு வீடியோ கேம் வேணுமென்று அப்பாக்கு எழுதிவிட்டு நிறைய நாளாயிற்று. அதை யாருக்கும் குறிப்பா செல்வன் அண்ணைக்கு கொடுப்பதில்லையென்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன்.

செல்வமண்ணையிட்டை வீடியோ கேம் இருக்கு. இப்ப வெற்றியண்ணையிட்டையும் இருக்கு. எனக்குத் தான் இன்னமும் இல்லை என்று மனசுக்குள் ஓடிய ஏமாற்ற உணர்வு என் முகங்களிலும் தெரிந்திருக்க வேண்டும்.

´´இஞ்சை வாடா .. உன்ரை கொப்பர் தான் அனுப்பினவர் இது. ஆரோ கொண்டந்து தந்திட்டு போகினம். நான் பொழுது போகேல்லையெண்டு வாங்கி விளையாடுறன். இந்தா..´´

அன்று முழுவதும் நான் அதோடையே இருந்தன். அது  ஒரு சின்னக் கறுப்பு வெள்ளைக் கேம். மேலே இருந்து பாயும் தவளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வளவும் தான்.

மாலை வெற்றியண்ணை அதை கேட்டபோது எதுவும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்று இரவு முழுதும் யோசித்தேன். அவசரப் பட்டு குடுத்திட்டேனோ என்று இருந்தது. அம்மாக்கும், அம்மம்மாவிற்கும் கூட சரியான ஆச்சரியம். அதற்குப் பிறகு நிறைய நாட்கள் வெற்றியண்ணையைக் காணவில்லை. அவர் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.

பறாளாய் முருகன் கோவில் திருவிழா ஒன்றில் வெற்றியண்ணையைக் கண்டேன். வேட்டி கட்டி, கைகளுக்கும் நெஞ்சுக்கும் சந்தனம் பூசி ஆளை அடையாளமே தெரியவில்லை. ´´என்ரை வீடியோ கேம் எங்கை.. ´´ என்று கேட்டது அம்மாவுக்குப் பிடிக்கவில்லைப் போலிருந்தது. ´´இருக்கு இருக்கு.. கொஞ்சம் அவசர வேலையள். கொண்டு வந்து தாறன்´´ வெற்றியண்ணை கூட்டத்தோடு கலந்து போனார்.

பாடசாலை நண்பர்களிடம் எனக்கொரு வீடியோ கேம் வந்ததாக சொல்லிவிட்டு, நாளைக்கு கொண்டு வருகிறேன் நாளைக்கு கொண்டு வருகிறேன் என நாட்களைக் கடத்தினேன். ´´நீ சும்மா புளுகிறாய். உன்னட்டை அப்பிடியொண்டும் இல்லை´´ என்று நண்பர்கள் கேலி செய்த போது வெற்றியண்ணை மீது கோபம் கோபமாக வந்தது. ஒரு நாள் வீட்டை சண்டை பிடிப்பதென்ற முடிவுடன் தான் வந்தேன். வீட்டில பெரியப்பா இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

´´சண்டை நடந்ததாம். எல்லாம் முடிஞ்சுதெண்டு அவங்களை சரண்டர் பண்ணச் சொல்லி வெற்றி வெளியில வந்தவனாம். சுட்டுப் போட்டாங்கள். அந்த இடத்திலேயே சரி. அவசரப்பட்டிட்டான் போல´´

நான் மரணம் ஒன்றிற்காக முதன் முதலில் அழத் தொடங்கினேன்.

அதற்கடுத்த நாட்களில் வீடியோ கேம் எங்கு என்ற கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன். ´´ஓம்.. நான் சும்மாதான் சொன்னனான். அப்பா எனக்கு அப்பிடியொண்டும் அனுப்பவில்லை. எனக்கு அதில பெரிசா விருப்பமும் இல்லை. ´´

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்
ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.

ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.

செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.

ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.

நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.

எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.

ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.

அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை.  இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.

நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள்.  ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.

நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.

ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?

அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.

அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா…

ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.

ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களை நினைப்பேன் ஆனந்தன் அண்ணா. அது தவிர நீங்கள் இறந்த ஐந்தாவது நாளும் 2001 இன் நடுப்பகுதி ஒன்றிலும் நேற்றும் உங்களை நினைத்தேன்.

சில செய்திகள்:

1995 யூலை 9 இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டின் வலிகாமம் மேற்குப் பகுதியில் மேற்கொண்ட ஒபரேசன் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை காரணமாக தமது கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து சண்டை நடக்கும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள நவாலித் தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது இலங்கை அரச விமானப்படைக்குச் சொந்தமான புக்காரா ரக விமானம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

1995 யூலை 14 முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடாத்திய எதிர்ச்சமரில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2001 யூலை 24 கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தினுள் நுழைந்த புலிகள் அங்கிருந்த விமானப் படைக்குச் சொந்தமான 13 வான்கலங்களைத் தாக்கியழித்தனர்.

2007 மார்ச் 26 வான்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

வெட்கம்
கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.

‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து காத்திருப்பார்கள்..

”எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..” அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

‘ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..’ போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

“கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே..” தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

“அதுக்கென்னடா வாவன்…”

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

‘அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?’

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. ‘முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..’

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. ‘ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..’

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

‘அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..’

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

“அக்கா அக்கா..” வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மண் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

“அம்மா ஆரோ வந்திருக்கினம்…” அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

“கெனடியே.. வா வா என்ன திடீரென்று..” அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

“கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்..”

“இல்லையக்கா வேண்டாம்..” கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

“இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்..” அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

“நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு..” அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

“அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?” கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

“வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்..”

“ஓம் அக்கா..” கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

‘ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..’ அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

‘கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..’ என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் ‘நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்’ என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து … அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

“அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா..” அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு ‘முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..’ என்று தான் முதலில் நினைத்தான்.

“வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு..”

“குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்”

“சத்தம் வையுங்கொ அது போயிடும்.”

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

“அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்.” என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

“அக்கா இப்பவும் யானையள் வாறதோ?”

“அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்..” சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். “எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. “வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

‘மனிசன் மாறேல்ல’

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

“தம்பி என்ன படிக்கிறியள்”

“நேசறி”

“படிச்சு என்னவா வர போறியள்”

“டொக்டரா வருவன்..”

“டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ”

“இல்லை”

“அப்ப..?”

“பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்..”

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். “இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை.” கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

“பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்..” சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

“என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ..” என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

“அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்..” அக்கா அமைதியானாள்.

“அவன் இப்ப இல்லை” கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

“வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்”

கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். “ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது.” படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

“கிழடுகள் மாதிரி கதையாதையடா” என்று  கெனடி கூட சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

“ஏதேனும் அலுவலா வந்தனியோ..?”

“இல்லை சும்மா உங்களையும்..” என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

‘மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..’ கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

“மாலிக்கா நில்லும்” இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

“நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ”

“ம்..”

“போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ” மாலிக்கா பேசாமல் நின்றாள்.

“போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ..” என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. ‘இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..’

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. ‘மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..’

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

“ஆரப்பன் உள்ளை வாரும்”

“ஐயா மாலிக்கா நிக்கிறாவோ..”

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

“இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா..” கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

“வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்” கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

“எப்பிடி சுகமாயிருக்கிறியளோ..”

“ம்” கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

“என்னோடை படிச்சவை”

மாலிக்கா நிறைய பேசினாள். “என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை..” தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

“அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு.” கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

“சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்.” மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். “கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ..”

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

“ம்..” கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.
(யாவும் கற்பனையல்ல)
20.04.2003 தினக்குரல்

கேள்விகள்
ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். ‘ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். அற்புதமான குரல் அவனுக்கு.. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக்கச்சேரியுடன் தான் கழிந்தது.

‘கவனமடா.. பாத்துப்போ..” பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம் அறிவிப்புக்கள்.

‘ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன்,இந்தியன் எண்டு ஒரு முன்னு}று வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது.. இதுக்காக நாங்கள் கொடுத்த உயிர் விலை முவாயிரத்துக்கும் மேலை..”

பக்கவாட்டாக வீசிய காற்று என் காதுகளில் ‘இர்…” என்று இரைந்து கொண்டிருந்ததால் அவன் குரலை உயர்த்தியே சொல்ல வேண்டியிருந்தது.நான் அமைதியானேன். கிட்டத்தட்ட மூன்று வருசத்துக்கு முதல் இதே வீதிகளில் இரவுகளில் அவர்கள் உலவியிருப்பார்கள். காயம் வழி குருதி வழிந்தோட கிடந்திருப்பார்கள். உயிர் பிரிந்திருப்பார்கள். அவர்களின் சுவாசப்பையை தொட்டு வந்த காற்று இந்தப்பெரு வெளியில் உலவக்கூடும்.

நகுலன் மோட்டர்சைக்கிளை மெதுவாக்கி ஓரமாக்கினான். டொல்பின் வாகனமொன்றில் ‘காய் கூய்” என்று கத்தி கை தட்டிப்பாடி, இளைஞர் கோஷ்டியொன்று எங்களைக் கடந்து எதிர்த்திசையில் சென்றது. சற்று முன்னர் நாங்கள் கடந்த ஆனையிறவு வரவேற்புப் பலகை முன்பாகவோ அல்லது தகர்க்கப்பட்டுக் கிடந்த இராணுவ டாங்கி முன்பாகவோ இறங்கி நின்று அவர்கள் படமெடுத்துக்கொள்ளக் கூடும்.

‘டேய்.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பேர் என்ன..? ” வரும் வழியில் இயக்கச்சிக்கு பிரியும் வழியில் இருந்த அந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி நான் கேட்டேன். ஒன்றிரண்டு மரநிழல்கள் தான். அவற்றின் கீழ் பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். பெயர்ப்பலகை கூட இல்லை எப்பிடியும் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்குள்ளை தான் எல்லோருக்கும் இருக்கும். மோட்டர் சைக்கிளை நிறுத்தச் சொல்லி விட்டு நான் இறங்கிக்கொண்டேன். மர நிழல் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களும் இடம் பெயர வேண்டியிருக்கும். எப்பிடியும் உச்சி வெயில் தலையைப் பிளக்கும்.

‘என்ன.. இங்கை நிறைய பள்ளிக்குடங்கள் இப்படித்தான்.. கட்டடிடங்களெல்லாம் சிதைஞ்சு போச்சு.. கட்டித்தருவாரும் இல்லை. கணக்கெடுப்பாரும் இல்லை..அதுக்காக.. விடமுடியுமே..? ” நகுலனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.

‘நகுலா.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பெயர் என்னண்டு கேட்டன்.”

‘ஓ.. அந்த இயக்கச்சிப் பள்ளிக்குடமோ.. தெரியேல்லையடா.. வேணுமெண்டால் வரேக்கை கேட்பம்” என்றவன் ‘இல்லை கேட்க முடியாது” என்றான்.

‘ஏன்..”

‘பின்னேரம் அந்தப் பள்ளிக்குடம் இருக்காது. நாளைக்கு காலமை தான் இருக்கும்..”.
உண்மைதான். மாலையில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததென்று அடையாளமே தெரியாமலிருக்கும். பரந்தன் சந்திக்கு வந்தோம். எனக்கு கால் விறைத்திருந்தது. ‘நகுலன்.. கொஞ்ச நேரம் நிப்பாட்டு.. கால் விறைச்சுப் போச்சு.. ” நகுலன் நிறுத்தினான்.

‘சங்கீதா எங்கை நிற்பாள்..? வீட்டிலயா.. அல்லது..?”

‘ரண்டிடத்திலயும் போய்ப்பாப்பம். சரி ஏறு..” நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

‘சங்கீதாவை எப்பிடித்தெரியும்..?” நான் அவனுக்கு பதில் சொல்ல வில்லை. அவனும் திருப்பிக் கேட்கவில்லை.

சங்கீதாவிற்கு முழங்காலுக்கு கீழே ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்ததை முதல் சந்திப்பிலேயே நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் படு இயல்பாக ஊன்று கோலுடன் அவள் நடப்பதும், சில சமயங்களில் ஓடுவதும், கால் மேல் கால் போட்டுக்கொள்வதும்.. எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு வேளை மனசுக்குள்ளே வலியிருக்குமோ..? ஆறேழு மாதங்களுக்கு முதல் ஏதோவொரு நிகழ்வில் எங்கேயிருந்து வாறியள் என்று அவள் கேட்டபோது தான் அவள் அறிமுகமானாள். பதில் சொன்னபோதே அவள் முகத்தில் ஏதோ ஒரு ஏளனம் தோன்றியது உடனடியாகத் தெரிந்தது. அதனை நேரடியாகச்சொல்லும் வரை காரணம் கேட்க முடியவில்லை. அன்று மாலை வந்து அழைத்த போது கேட்க முடிந்தது.

“தமிழ் வளக்கிறவரே.. ரீ குடிக்க வாங்கோ..” எழுந்து போகும் போதே கேட்டேன். “அதென்ன தமிழ் வளர்க்கிறவர் எண்டு நக்கலாய்….?”

“தமிழைச்சாகவிடாமல் வளக்கிறது நாங்கள் தான் எண்டு மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லுறது நீங்கள் தானே…..நீங்கள் எண்டால் நீங்கள் இல்லை..உங்களைச் சார்ந்த பிரதேசம், சூழல்..இதெல்லாம் தான்..”

உண்மைதான் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும்… அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்க ரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக்கேட்டது.

“அப்படி வளர்க்கிறதிலை என்ன பிழை.”

“ஒண்டு சொன்னா பிழையா நினைக்கக்கூடாது. தமிழை வளக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..? என்ன உரிமை இருக்கு..?தமிழ் எண்டுறது வெறும் மொழி மட்டுமில்லை. அது சார்ந்த இனம் பண்பாடு பொருளாதாரம் அரசியல் எல்லாம் தான்.. நீங்கள் என்னத்தை வளர்த்திருக்கிறியள்..? ”

இதுநாள் வரை எனக்குள்ளேயே பொங்கி எழுந்த கேள்விகள் தான் அவை. இப்போது இன்னொருவரிடமிருந்து வந்தது. வெளியே சொல்லாது உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ‘சரியான வாய்க்காரி..’ அதற்கடுத்த அடுத்த நாட்களில் அவள் எழுதிய சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஒரு கொப்பி முழுதும் எழுதப்பட்ட கவிதைகளை அவளே கொடுத்தாள். ஒரு காலையில் ஓரமாயிருந்து புரட்டிக்கொண்டிருந்தபோது நடந்து வந்து முன்னால் அமர்ந்து கொண்டாள்.

தெருப்புழுதியில்
கந்தகம் மட்டுமே
கரைந்திருந்தது..
குழந்தைகளின் கூக்குரல்களே
காற்றலைகளை
நிறைத்திருந்திருந்தன

“என்ன கவிதைக்குள்ளை எதுகை மோனையை தேடுறியள் போலை கிடக்கு.. அதெல்லாம் கிடைக்காது…. எங்கடை கவிஞர் சொன்னது போல உள்ளே கொதிப்புறும் உலைமுகத்தின் வாய்மொழியில் புனைவுகள் இருக்காது. பொய்யான வேஷங்கள் இருக்காது. அது மாதிரித்தான் இதுவும்.. அதைவிட்டிட்டு சும்மா விழ விழ எழு எழு எண்டு வழ வழாவெண்டு எழுத எனக்கு தெரியாது. அப்படி எழுதுறாக்களுக்கு ஒரு பெயர் சொல்லட்டே.. சொல்லடுக்குக் கொத்தனார்கள். கவிதைக்கான வார்த்தைகளை தேடுவதிலேயே சொல்ல வந்த பொருளை மறந்து போகின்றவர்கள்..” அவள் சொன்ன எதுவுமே எனக்கு புதிய விடயமாகத்தெரியவில்லை. ஆனாலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘எங்கடை மண்ணிலை இருந்து எழுதுற எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்..” அது வரை பேசிக்கொண்டிருந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

‘எங்கை தெரியப்போது..? உங்களுக்கு சாண்டில்யனையும் ராஜேஸ்குமாரையும் உங்கடை பொம்பிளைப்பிள்ளையளுக்கு ரமணிச்சந்திரனையும் விட்டால் ஆரைத்தெரியும்..?”

‘இல்லை எனக்குத் தெரியும்..” என்றேன் நான்

‘உங்களுக்கு என்றால் நீங்கள் இல்லை..நீங்கள் சார்ந்த பிரதேசம்,சூழல் இவையெல்லாம் தான்..” மீண்டுமொரு முறை அவள் நினைவூட்டினாள். எனக்கு கோபம் எதுவும் வரவில்லை. ஆனாலும் குரலை கடுமையாக்கி வார்த்தைகளில் செயற்கையாய் சூடேற்றிச்சொன்னேன்.

‘இஞ்சை பாருங்கோ.. எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டுமென்றில்லை.. அது அவையின்ரை தேடலைப்பொறுத்தது. எல்லாத்தையும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும் எண்டு எந்த கொம்பனும் கட்டளையிட முடியாது..” கடுமையான எனது தொனி அவளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. ‘கொம்பன் இல்லை கொம்பி..” என்று அவள் சொல்ல அவளுடன் சேர்ந்து நான் தான் சிரிக்க வேண்டியதாய்ப்போனது.

‘உங்களை, உங்கடை எழுத்துக்களை ஏன் எங்களுக்கு தெரியாமல் போனதெண்டால் அதுக்கு காரணம் இஞ்சை நடந்த சண்டைதான். இவ்வளவு காலமும் நீங்கள் எங்களை வந்து சேரேல்லை. இனி வருவியள்..சரியான ஊடகங்கள் அந்த வேலையைச் செய்யும். சரி.. நீங்கள் எழுதின கவிதையளைத் தாங்கோ.. நான் கொண்டு போய்க்குடுக்கிறன்.. “

அவள் அப்போது கோபப்பட்டிருக்கக்கூடும். ‘என்ன..? நான் என்ன பப்ளிசிட்டிக்கு அலையிற ஆளெண்டு நினைச்சியளே..?” அவளது கேள்வியில் வேறு யாரோ அலைகிறார்கள் என்கிற தொனி அப்பட்டமாய்த் தெரிந்தது. அதனைக்கேட்டு பெரிசுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பப்ளிசிட்டியை விரும்பாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்குள் தொக்கி நின்றது.

அன்று மதியம் வரை அவள் நிறையப்பேசினாள். . ‘செம்மணியில் புதைக்கப்பட்ட சனங்களுக்காக அந்த இடத்தில ஒரு நினைவுச்சின்னம்..அல்லது ஒரு ஞாபகச்செய்தி எண்டு ஒண்டும் இல்லை. ஆனா எங்கையிருந்தோ வந்த ரேடியோக்காரன் அதிலை கட்அவுட் வைச்சு வரவேற்கிறான்.” என்று சினந்தாள். ‘யாழ்ப்பாண லைபெறறி எண்டுறது சுண்ணாம்பு அடிச்ச அந்தக்கொங்கிறீட் கட்டிடமில்லை. அது எங்கடை ஆத்மா..” என்று விளங்கப்படுத்தினாள். ‘எந்தவொரு ஆக்கிரமிப்பாளனுக்கும் மண்டியிடாமல் கடைசி வரை நின்று போராடிய பெருமை முல்லைத்தீவைத்தான் சேரும்..” என்று பெருமைப்பட்டாள். உறுதியாக, மாற்றுக்கருத்துக்களே கிடையாது என்ற ரீதியில் அவள் பேசிய விடயங்கள் பரவலாயிருந்தது

ஆண்கள் நிறைந்த சபைகளிலே அவர்கள் என்ன சொன்னாலும் வாய்மூடி மௌனிகளாகக் கேட்டுவிட்டு ஆட்டு மந்தைகள் போல் தலையசைத்துச்செல்கின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். ‘அவையும் அவையின்ரை வெட்கமும்..”
சில வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றின் முகப்பில் வைத்து ‘தேவையில்லாத வேலை பார்த்தாயெண்டா உதை வாங்குவாய்” என்று ஒருத்தி சொன்ன போது அவமானத்திற்குமப்பால் மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த மகிழ்ச்சி சங்கீதாவைச் சந்திக்கும் போதும் வந்தது.

மோட்டார் சைக்கிள் சடார் சடார் எண்டு வீதியின் குழிகளுக்குள் துள்ளித்துள்ளி விழுந்தது.

‘எங்கடை சர்வதேசத் தர வீதியிலை பயணம் செய்ய குடுத்து வைச்சிருக்கவேணும் நீ..” எனக்குச் சிரிப்பு வந்தது. பிரதான வீதியிலிருந்து விலகி மோட்டர் சைக்கிள் உள் வீதியொன்றில் நுழைந்து சங்கீதா வீட்டின் முன் நின்றது. நான் கேற்றைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன். நகுலன் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான். கேற் திறந்த சத்தம் கேட்டிருக்க வேண்டும் போல.. சங்கீதா தான் வந்து பார்த்தாள்.

‘அட.. வாங்கோ.. வாங்கோ..” அழைத்துக்கொண்டு போய் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நகுலனை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கிடுகுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்றலில் பூங்கன்றுகள் வரிசையாய் பூத்திருந்தன.

சங்கீதா இப்போதெல்லாம் அவள் ஊன்று கோல் இல்லாமலே நடக்கிறாள்
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். சங்கீதா சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசினாள். ‘எங்களில கன பிள்ளையள் கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியயெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப அனைத்துலக கல்வியறிவும் இருக்கிறது தான். அதை எங்களுக்கும் தரவேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை..”

‘சரி சங்கீதா.. நாங்கள் வரப்போறம்.. நகுலனுக்கு வேறை இடத்திலை அலுவல் ஏதோ இருக்காம்..” நான் புறப்பட்டேன்.

‘சரி..சந்திப்பம்..” மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார நகுலன் ஸ்ரார்ட் செய்தான்.

‘என்ன நகுலன்.. போச்சிப்போத்திலை எறிஞ்சிட்டீர் போலை..” பெற்றோலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் மோட்டர் சைக்கிளை ஸ்ரார்ட் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிறிற் அல்லது ரின்னர் அடைக்கப்பட்ட சிறு குப்பியைத்தான் சங்கீதா போச்சிப்போத்தல் என்றாள். இப்போது அது தேவைப்படவில்லை.

‘இல்லை. எறியேல்லை.. பத்திரமா வைச்சிருக்கிறன். திரும்பத் தேவைப்படுமோ தெரியாது..”

வரும் வழியில் நகுலன் பேசிக்கொண்டே வந்தான். இங்கையிருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையை சுமந்து கொண்டு தான் வாழுகினம். பாத்தாய் தானே படிக்கப்பள்ளிக்குடம் இல்லை.. சரியான வேலையில்லை. யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கியிருக்கு..? கையை இழந்து காலை இழந்து எத்தனை ஆண்கள்…பெண்கள்… “
நான் அமைதியாகவே வந்தேன். ‘இப்பிடி அங்கவீனமான ஆண்களைப்பற்றி பெண்களைப்பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நாளைக்கு கலியாணம் எண்டொரு நிலை இவைக்கு வரேக்கை கலியாணத்தின்ரை தேவையை வேறை விதமா விளங்கிக்கொள்கிற ஆக்களே நிறைய இருக்கிற எங்கடை சமூகத்திலை இருந்து அங்கவீனமானவர்களை கலியாணம் கட்ட எத்தனை பேர் முன்னுக்குனு வருவினம்..?”

‘நகுலன் நிப்பாட்டு நான் ஓடுறன்..” நகுலன் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் மோட்டர் சைக்கிளை ஓட்டத்தொடங்கினேன். ஆரம்பித்து விட்ட ஆனையிறவுப் பெருவெளியின் காற்று முகத்திலடித்தது. சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூமழை தூவியது..இப்போது நான் தான் பாடினேன். என்னாலும் பாட இயலும்.
November 13, 2004

நம்மைப் பிடித்த …………… போயின..
‘எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. ” சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள்.

சாரகன் அமைதியாய் நின்றான்.

‘அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ..” எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.

‘ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா..” நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.

‘சொல்லுங்க”

‘இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?”

அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..

“இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா..”

“உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..

“எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா..”

“உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..?

ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்… நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்..

கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.

சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..

‘சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா…” சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.

வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.

‘அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க..” சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.

‘சாரகன் உங்க நம்பர் என்ன..?” ஒரு முறை கேட்ட போது சொன்னான்.

‘வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்” என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.

‘நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?” தொடர்ந்து கேட்டாள்.

‘ம்.. நிறைய..”

தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.

‘என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?”

‘இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்..” சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.

நிரோஷா சிரித்தாள்..

‘நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்… ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. “

சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான்.

இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.

‘என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க..”

சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான்.

ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..?

வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. ” என்று தொடர்ந்தவனை ‘நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க..” என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.

‘அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்..” கை குவித்துச் சொன்னான்..

‘கீப் இற் அப்..” என்றாள் நிரோஷா

‘உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு..” இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.

இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.

‘இந்தச்சிரிப்புத்தானே….” என்றெழுந்த மனதை ‘ச்சே.. சும்மாயிரு..” என்று சாரகன் அடக்கினான்.

அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.

தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..

‘ஹலோ..”

‘ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. “

சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. ‘சின்ன வயது தானே.. அது தான் அப்படி..” என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..

‘சொல்லு.. ” தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

‘என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?”

‘குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு..”

‘உங்கடை பிறந்த நம்பர் என்ன..”

உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.

‘ஏன்.. கேட்கிறாய்..”

‘நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்… சொல்லுங்கோ.. என்ன நம்பர்..”

‘இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. ” என்றான் சாரகன்.

‘பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ..” அட்சயா விடாது கேட்டாள்..

‘ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்..” சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.

நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.

‘என்னடா..” என்று கேட்டான் சாரகன்.

‘அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்..”

சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..

‘நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி..” ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

‘முழுப்பாட்டும் என்னண்ணா..”

‘கொஞ்சம் பொறு..எடுத்தாறன்” சாரகன் உள்ளே போனான்.
October 18, 2004

என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்
அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது.

1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் எனக்கு எவரையுமே அறிமுகம் இல்லாதிருந்த காலத்தில் அச் சிறுகதை வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு மகனின் தாயின் உணர்வுகளை பேசிய அச்சிறுகதை எனது அச்சில் வெளிவந்த முதற் கதையாயினும் கடந்த வருடம் நின்று திரும்பி பார்த்த போது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கதை என் தொகுப்பில் இடம் பெறவும் இல்லை.

என் சிறுகதை அச்சில் வெளிவந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த கதைகளை எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 நாள் இடை வெளியில் கூண்டு என்னும் அடுத்த சிறுகதை வெளிவருகிறது. வெளிநாடு செல்ல வெளிக்கிட்டு இடைநடுவில் பிடிபட்டு திரும்ப இலங்கை வந்து மீண்டும் வெளிநாடு போகவே மாட்டன் என்றிருந்த வேளையில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு விசாரணையின் பின் விடுதலையான பின்னர் மீண்டும் வெளிநாடு போக விரும்புகின்ற ஒரு பெண்ணின் கதை. கதையோட்டத்தில் எனக்கு திருப்தி தந்த சிறுகதை அது.

இவ்வேளை சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். நான் கதை எழுதுவதையும் அவை பத்திரிகைகளில் வருவதையும் எனது பாடசாலை நண்பர்கள் நம்பத் தயாராய் இருக்க வில்லை. கதிர் சயந்தன் எண்ட பெயரில வேறை யாரோ எழுதுகினம். நீ பொய் சொல்லாதே என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அவர்களை நம்ப வைப்பதற்காக நான் எழுதிய கதைகளின் பாத்திரங்களின் பெயர்களுக்கு என் நண்பர்களின் பெயர்களை இட்டேன். அதன் பின்பே அவர்கள் ஒருவாறு நம்பத் தொடங்கினார்கள்.

அக்கரை என்று நான் எழுதிய ஒரு சிறுகதை எனது இந்திய படகு பயண அனுபவத்தை மையப் படுத்தியது. சிறுகதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அந்த சிறுகதையே இலகுவாக வழி சமைத்தது.

அது வரை காலமும் தினக்குரலில் மட்டுமே எனது சிறுகதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தில் தான் உயிர்ப்புவை நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். கொழும்பில் இயங்கிய தமிழாலயம் என்னும் அமைப்பின் ஊடாக அது வெளிவந்தது. (பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சந்தித்த கருத்து முரண்பாடுகள், கொள்கைப் போரிடல்கள், மனஸ்த்தாபங்கள் என்று எல்லாவற்றையும் நாங்கள் அப்போதே சந்தித்தோம் என்பது வேறு விடயம்)

பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பி விட்டு எப்ப வரும் என்று எதற்காக பார்த்து கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுது தான் நம்மிடமே பத்திரிகை இருக்கிறதே. அதிலேயே என் சிறுகதைகளை வெளியிடலாமே என்ற எண்ணத்தில் அதன் பின்னர் தினக்குரலுக்கு கதைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

முதலாவது உயிர்ப்பில் வந்த சிறுகதை ஐயோ சயந்தா நீயுமா என்று என்னை நானே கேட்க வைக்கின்ற கதை. முழுக்க முழுக்க பாலகுமாரன் பாதிப்பில் அது கிடந்தது. காதலை வெளிச்சொன்ன ஒரு இளைஞனுக்கு காதலிக்க வேண்டாம். கல்யாணம் கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகின்ற ஒரு பெண் தொடர்பான கதை அது. இளைஞன் தமிழனாயும் பெண் சிங்கள இனத்தை சேர்ந்தவளாயும் இருந்தார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி ஒரு கதையை நான் எழுதியிருக்கத் தேவையில்லை என்று தோன்றினாலும் அதுவே எனக்கு பல பெண் நண்பர்களை தேடித்தந்தது என்பது உண்மை… உண்மை… உண்மை…

அடுத்த உயிர்ப்பு இதழில் எனக்கு மன நிறைவு தந்த அர்த்தம் வெளிவந்தது. போராளிகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் சாதாரண மனித உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லிய அந்தச் சிறுகதையின் பெயரிலேயே என் தொகுப்பு இருந்தது. லீவில் வீடு வந்திருந்த போராளி முன் வீட்டில் இருந்த அவனோடு படித்த பெண் பற்றி கேட்பதும் அவளுக்கு கல்யாணம் முடிந்து அவள் வெளிநாடு போய் விட்டாள் என தாய் சொல்வதும் மெல்லிய இதய சுவரோரம் கூரிய முள் ஒன்று லேசாய் கீறிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுவதும் இப்படியாக பல விடயங்களை அச் சிறுகதை தொட்டது.

அந்த போராளி எழுதி வைத்திருந்ததான

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும் இரு விழிகள்

என்ற கவிதை என்னை மிகக்கவர்நத எனது வரிகளில் ஒன்று.

சில விதி முறைகளை மீறிய காரணத்திற்காக நானும் எனது நண்பன் சேயோனும் உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். (பலர் செய்வது போல நானும் அவனும் புதிய உயிர்ப்பு என்ற பெயரில் பத்திரிகை தொடங்குகின்ற முட்டாள்த் தனமான காரியத்தை செய்ய வில்லை. நானும் அவனும் விளம்பர பிரிவுக்கு நியமிக்கப் பட்டோம். அக்கால கட்டத்தில் தான் தமிழ் வெப் றேடியோ மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஆகியவற்றின் விளம்பரங்கள் தாங்கி உயிர்ப்பு வெளிவந்தது என்பதனை எங்களுடைய திறமை குறித்து உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இங்கே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ணுவதாம்.)

அக்கால கட்டத்தில் நான் எந்த சிறுகதையையும் உயிர்ப்புக்கு எழுத வில்லை. எங்கே எனது கதைகள் புறக்கணிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குட்டி குட்டி கவிதைகள் எழுதி வந்தேன்.

மீண்டும் உயிர்ப்பின் ஆசிரியர் குழுவில் நான் இடம் பெற்றேன்.(தண்டனைக் காலம் முடிவடைந்ததும்?????). அதுவே கடைசி வெளியீடு என்பது எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. பேசாமல் இதழின் கடைசி பக்கத்தில் கை கூப்பி நன்றி சொல்லும் பெண்ணின் படம் போட்டு நீங்கள் இது வரை காலமும் தந்த ஆதரவுக்கு நன்றி என்று போட்டு விடலாமா என்றும் யோசித்தேன்.

அந்த இதழில் ஒரு பெண்ணின் புனை பெயரில் நான் எழுதியிருந்த முகங்கள் கதையும் எனக்கு பிடித்தது.

கேள்விகள் என்கின்ற ஒரு சிறுகதை திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட கலைமுகம் என்னும் இதழில் வெளிவந்தது. அக்காலப் பகுதியில் கலைமுகத்தின் ஆசிரியராக இருந்தவன் எனது நண்பன் சோமிதரன். கிட்டத் தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அக் கதையை என்னிடமிருந்து வாங்கி இந்தா வருது அந்தா வருது என்று கொண்டிருந்தான். உது வேலைக்காவாது என்று கருதி விட்டு அச்சிறுகதையை நான் சுடரொளிக்கு அனுப்பியிருந்தேன். பிறகும் பல காலத்தின் பின் ஒருவாறு கலைமுகம் திருமுகம் காட்டியது எனது கதையோடு . நல்ல வேளை சுடரொளியில் வரவில்லை என்று ஆசுவாசப் பட்டபோது அட.. அடுத்த வார சுடரொளியில் அச்சிறுகதை வெளிவந்தது. சோமிதரனிடம் நான் நன்றாகவே வாங்கி கட்டிக்கொண்டேன்.

2003 ஏப்ரல் 20 மீண்டும் தினக்குரலில் எனது சிறுகதை வெளிவருகிறது. கலக்குறே சயந்து என்று என்னை நானே பாராட்டிக் கொள்கின்ற சிறுகதை அது. போர் மையம் கொண்டிருந்த காலத்தில் வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த இளைஞன் ஒருவன் போர் ஓய்ந்த பின் மீண்டும் வன்னிக்கு போகின்றான். அவனது நினைவுத் தடத்திலிருந்த ஒரு பெண் தொடர்பான கதை தான் அது. வெட்கம் என்ற பெயரில் அது வந்தது. (ஆட்டோகிராப் படம் வெளிவர முன்னமே அது வந்து விட்டது என்பதை இத்தால் அறிய தருகிறேன்.) அதுவே இது வரைக்கும் என்னுடைய இறுதிக் கதை.

(இவை தவிர காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகுதல் என்ற பார்வையில் அல்லது போர்வையில் கண்ட கேட்ட ஒரு காதல் பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு வித்தியாசமான தீர்வு கொடுத்து கதையாக்கி நான் எழுதுகின்ற சிறுகதைகள் சஜீ என்ற பெயரில் சுடரொளியில் அவ்வப்போது வெளிவரும். அம்மாவுக்கு கூட தெரியாமல். அம்மாவுக்கு தெரிஞ்சா படிக்கிற வயசில என்ன காதலும் கத்தரிக்காயும் என்று பேசுவா)
September 29, 2004