உயிர்கள் எரிகிற நெருப்பு
“உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். ” என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் “எப்பிடித்தெரியும்?” என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் தெரியும் இப்ப பூலோகத்தாரிடமிருந்து ஒரு வெடிச்சிரிப்பும் நூற்றுப்பன்னிரண்டாவது தடவையாக அந்தப்பதிலும் வருமென்று. “எடேய்.. இந்தப் பூலோகத்தான் கண்ணால பார்த்தே கதையைச் சொல்லுவானடா. ” பூலோகத்தாருக்கு அப்பிடியொரு குவாலிபிக்கேசன் உண்மையிலேயே இருக்குதோ என்று எனக்கும் டவுட் இருக்கிறது. அதுக்கொரு காரணமும் இருக்கிறது. மூன்று வருசத்துக்கு முதல் பின்னேரப்பொழுதொன்றில் ட்ரெயினால இறங்கி நடந்தபோது படிக்கட்டுகளில் கம்பளிக்கோட்டும் காதுகளை மூடிய மப்ளரோடும் கையில் பியர் கானோடும் ஒராளைப்பார்த்தேன். அவரும் என்னைப்பார்த்தார். அடுத்தநாளும் அவர் என்னைப்பார்த்தார். மூன்றாம் நாள் அவர் என்னைக் கூப்பிட்டார். “டோய் தம்பி .. டோய் உன்னைத்தான்”. கையில சுருட்டி வைத்திருந்த சுவான்சிக் மினிட்டன் பேப்பரை விரிச்சுப்படிக்கிறமாதிரி நான் விலகி நடந்தேன். ஒரு வெள்ளைக்கார மனிசி தோளைத்தட்டி “அவர் உன்னை கூப்படுகிறார்” என்றாள். நான் பக்கத்தில் போய்நின்று என்ன என்பது போல் பார்த்தேன்.
“நீ இன்னாற்றை பெடியன் தானே”
“ஓம்”
“நீ இன்னாற்றை புரிசன்தானே..”
“ஓம்..”
“நீ இந்தவேலைதானே செய்யிறாய்…”
“நீ இப்ப இங்கைதானே போட்டுவாறாய்..”
நான் அவரைச்சுற்றி ஒருக்கா நோட்டம் விட்டேன். இவரொரு சாத்திரியாக இருக்கலாம். இப்பவெல்லாம் இந்தியாவில் இருந்து சாத்திரக்காரர்கள் இப்படி வருகிறார்கள். ஒரு சின்னக் காட்போட் மட்டையில் குருஜி சோதிட மைய்யம் என்றோ ஆதிபகவான் அற்புத சோதிடமென்றோ எழுதி ஏதாவது தமிழ்கடையின் ஓரத்தில் குந்திக் கொள்கிறார்கள். கத்தரிக்காய் வாங்கப்போனால் அப்படியே சாத்திரத்தையும் பாருங்கோவன் என்று கடைக்காரர் புரொமோட் பண்ணுகிறார். அல்லது ஆக்கினைப் படுத்துகிறார். அங்கிருந்து கொஞ்சம் முன்னேறி இவர் வீதிக்கு வந்திருக்கலாம். இனி இவர் என்னிடம் பிராங்குகள் கேட்கக்கூடும். அப்படியொரு ஆள் இங்கே சுற்றித்திரிகிறார். அவர் ஒரு சீக்கியர். கொஞ்சம் வயசானவர். ஜீன்ஸ் ரீ சேட்டில் எடுப்பாகத் திரிவார். ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஒருநாள் ட்ரெயினுக்குள் வைத்து உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றார் அவர். நான் புளுகம் தாங்காமல் தாங்ஸ் என்றேன். உனக்கு வர்த்தக ஆற்றல் இருக்கிறது என்றார். அதற்கும் தாங்ஸ் என்றேன். இன்னும் இரண்டு மூன்று தாங்ஸ் என்னிடமிருந்து வாங்கின பிறகு அவர் இப்பொழுது எனக்கு ஐம்பது பிராங்குகள் கொடு என்றார்.
“என்ன.. ?” நான் முகத்தைச்சுருக்கி அவரைப்பார்த்தேன்.
“ஆம்.. நான் எனது தொழிலைச் செய்தேன். நீ பணம் தரவேண்டும்” என்று எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்தினார். சீக்கியர்களுக்குப் பயந்த காலம் ஒன்றிருக்கிறது. அப்போது அவர்களிடம் துவக்குகளும் கிரேனைட்டுகளும் கத்திகளும் இருந்தன. ட்ரெயினுக்குள் சனங்கள் எங்களைப் பார்த்தார்கள். சீக்கியர் குரலை உயர்த்திக்கொண்டே போனார். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி “நீயும் இறங்கு பேசலாம்” என்றேன். சீக்கியர் இறங்காமலே போய்விட்டார்.
இப்போதைய சாத்திரியை எப்படிச்சமாளிப்பது என்று ஒரு தீர்மானத்திற்கு என்னால் வரமுடியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டு நின்றேன். “என்னடா முழுசுறாய்.. இதெல்லாம் எப்பிடித்தெரியுமெண்டோ..” என்றவர் முதலாவது தடவையாக வெடிச்சிரிப்பையும் அந்த ஸ்ரேற்மென்ரையும் சொன்னார். “எடேய் இந்தப் பூலோகத்தான் கண்ணாலை பார்த்தே கதையைச் சொல்லுவானடா..”
தொடக்கத்தில் ஒரு பேச்சுக்கு நூற்றுப்பன்னிரண்டாவது தடவை பூலோகத்தார் ஸ்ரேற்மென்ட் விடுறார் என்று சொல்லியிருந்தாலும் ஒழுங்கா எண்ணியிருந்தால் அதுக்குக் கிட்டவான கணக்கு வரும்தான். “பாலன்ரை பெட்டையும் மூர்த்தியின்ரை பெடியனும் தனியப்போய் இருக்கினம். இரண்டு வீட்டிலயும் பெரும் சண்டை. பெட்டைக்கு இந்த வைகாசி வந்தால் பத்தொன்பது வயசு. ” என்றதையெல்லாம் கண்ணாலே பார்த்துச் சொல்லமுடியுமா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. “அண்ணை உண்மையைச் சொல்லுங்கோ, நீங்கள் அவனை வெருட்டிக் கேட்டுத்தானே இந்தியாக்காரன் என்று கண்டுபிடிச்சனியள்.. ” என்றபோது பூலோகத்தார் அவசர அவசரமாக மறுத்தார். “அதொண்டுமில்லை.” என்று மட்டும் சொன்னார். அந்தப்பெடியன் வளைவொன்றில் திரும்பி மறைந்தான். பூலோகத்தார் டக்கென்று சொன்னார். “எங்கடை சனங்களின்ரை பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்”. நான் பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை. “ஏன் நாங்கள் குளிர்காயலாமோ” என்று நான் இப்போது கேட்கலாம். அதற்கு ” ஓம்.. நாங்கள் குளிர்காயலாம். ஆனால் கொழுத்தினவன் குளிர்காயலாமோ” என்றொரு பதிலை அவர் வைத்திருப்பார்.
இந்தியாவிலிருந்து இங்கு வருவதும் இலங்கைத் தமிழ் அகதி என தஞ்சம் கேட்பதுவும் பரம ரகசியமல்ல. அப்படி அவர்களில் ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். ஜெர்மன் மொழிக் கடிதமொன்றை வாசித்துச் சொல்வார் என யாரோ என்னைக் காட்டி விட்டிருக்கிறார்கள். அவர் தன்னை சதீஸ் என அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் தஞ்சாவூர். வந்து ஏழு மாதங்கள் முடிகிறதென்றார். அவர் தனது வழக்கு நிராகரிக்கப்பட்ட கடிதத்தைக் கொண்டுவந்திருந்தார். கடிதத்தில் அவர் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு பிறந்திருக்கிறார். மகாஜனாவில் படித்திருக்கிறார். தெல்லிப்பளையை இராணுவம் கைப்பற்றியதும் பிறகது உயர்பாதுகாப்பு வலயமானதும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. சதீஸ்குமார் இயக்கத்தில் ஐந்து வருசம் இருந்திருக்கிறார். இயக்கம் அவரை மலேசியாவிற்குப் படிக்க அனுப்பியிருக்கிறது. அங்கு இயக்கத்தோடு மனக்கசப்புக்கள் ஏற்பட அவரைத் திரும்பவும் வன்னிக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். அச்சம் காரணமாக அவர் அதை மறுத்தார். இயக்கத்தில் இருந்ததனால் அவரால் கொழும்புக்கும் திரும்ப முடியவில்லை. அதனால் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதாக கடிதத்தின் முதல் பன்னிரண்டு பக்கங்களில் இருந்தது. தஞ்சக்கோரிக்கை கேட்ட இடத்தில் வைத்து இலங்கை அடையாள அட்டையையும் இலங்கை பிறப்புச் சான்றிதழையும் சதீஸ்குமார் கையளித்திருக்கிறார். தெல்லிப்பளை கிராமசேவகர் இவரை இன்னார்தான் என உறுதிப்படுத்திய கடிதமொன்றையும் கொடுத்திருக்கிறார். கடிதத்தின் மிகுதிப் பக்கங்களில் வழக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என்றிருந்தது. சதீஸ்குமார் எல்.ரி.ரி. ஈ யில் இருந்தார் என விசாரணைகளில் சொல்லியிருந்தாலும் அதனை நிரூபிக்கும் ஆவணங்களைத் தராதபடியினாலும் மேலும் மலேசியாவில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான படிப்பு படித்ததற்கான ஆதாரங்களையும் அவர் தரவில்லையென்பதினாலும்… இப்படியாக அது இல்லை இது இல்லையென்றும் கொழும்பில் இருக்கலாம் கண்டியில் இருக்கலாம் என்றும் போய் கடைசியாக நாட்டை விட்டு வெளியேற அல்லது மேன்முறையீடு செய்ய முப்பது நாட்கள் அவகாசம் உள்ளதென கடிதம் முடிந்தது. ஆனால் சதீஸ்குமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் சந்தேகமிருக்கிறது என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இருக்கவில்லை.
“என்னத்துக்கு பிளேன் ஓட்டப் படிச்சனான் என்று கொடுத்தனியள்.. புரூப் இல்லாமல்” என்றேன் நான். யாரோ தமிழீழ இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்தனான் என்று சொல்ல மிருதங்கத்தைக் கொடுத்து வாசித்துக் காட்டச் சொன்னதாக உலவுகிற கதையொன்றை நினைத்துக்கொண்டேன். சதிஸ்குமார் எனக்குப் பதில் சொல்லாமல் திரும்பவும் “நான் தஞ்சாவூர்ண்ணே” என்றார். அவருக்கென்ன தெரியும். எழுதிக்கொடுத்த விண்ணன் திரைக்கதையில் பிளேன் கெலிகொப்டர் எல்லாம் வந்தால் த்ரில்லா இருக்குமென்று யோசிச்சிருக்கிறான். அவன் இப்படியும் யோசித்திருக்கலாம். பிளேன் குண்டுபோட வந்தது என்றால் அது எல்லாருக்கும் பொது என்று நிராகரிக்கிறார்கள். சதிஸ்குமாரே பிளேனில் குண்டுபோடப் போனார் என்றால்..
சதிஸ்குமாருக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ரீயைக் குடியுங்கோ” என்றேன். “நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா” என்றவர் அடுத்ததாத் தூக்கிப்போட்ட கேள்வியில் எனக்கு குடிச்சுக் கொண்டிருந்த ரீ புரக்கேறியது. “அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா..”
நான் சதீஸ் குமாருக்கு அப்பீல் செய்யச் சொன்னேன்.
“கிடைச்சிடுமா..”
“நிச்சயமாச் சொல்லத் தெரியேல்லை. ஆனால் இன்னும் ஒன்றிரண்டு வருசம் இழுக்கலாம்.. இடைப்பட்ட காலத்தில என்ன வேலையென்றாலும் செய்து காசு சேர்க்கப்பாருங்கோ” நான் காசுக்கதை கதைச்சதாலோ என்னவோ சதீஸ்குமார் தான் பத்து லட்சம் இந்தியரூபாய்க்களை செலவழித்து இங்கு வந்ததாகச் சொன்னார். இந்தியாவில் பத்தென்றால், இலங்கையில் இருபத்தைந்துகளுக்குக் கிட்டவருகிறது. சரியாகக் கணக்குப் பண்ணியிருக்கிறார்கள். சதீஸ்குமார் மேலும் சொன்னார். “நாங்க குடும்பத்தில மூணு பையன்கள்.. ஒரு பொண்ணு, எனக்கு மூத்தவங்க அவங்க.. தஞ்சாவூருதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம் நாங்க, எல்லாருமே விவசாயம்தான் பாத்திட்டிருந்தோம். கேள்விப்பட்டிருப்பீங்க.. தண்ணிர் பிரச்சனை அப்புறம் நிறைய பிரச்சனைகள். முன்னைய மாதிரி இல்லை. விவசாயம் சரியாகல்லை. அப்பா தவறிட்டாங்க , முதல்ல எங்காவது மிடில்ஈஸ்ற்தான் போவோம்ணு நினைச்சேன். அப்புறம் நம்ம கூட்டாளியொருவன் பாரீசுக்கு போனான். அதான் விவசாய நிலத்த வித்திட்டு வந்திட்டேன். அக்கா கல்யாண வயசில இருக்கிறாங்க.. தம்பிங்களைப் பாக்கணும்..” சதீஸ்குமாருக்குச் சென்னையை அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. நான் சென்னை பற்றிப் பேசிய போதெல்லாம் “அது வேற உலகம், நமக்கு அவங்களைத்தெரியாது. அவங்களுக்கு நம்மைத்தெரியாது. நாங்கெல்லாம் தனித்தீவு” என்றார்.
சதீஸ்குமாரு ஒரு கமரொ உதவியாளராக வந்திருக்கிறார். வருசத்தொடக்கத்தில் இங்கத்தைய தியேட்டர்களில் இரவு பன்னிரண்டு மணிக்கும் கவுஸ் புல்லாக ஓடிய படத்தின் பாட்டொன்றை இங்குதான் எடுத்திருந்தார்கள். கொட்டும் ஸ்னோவில் நடிகையால் குளிரைச் சிம்பிளாகத் தாங்கமுடிந்தது. நடிகர்தான் முடியாமல் கைக்கு க்ளவுஸ் ஜக்கெட் சால்வ் என அந்தரப்பட்டார். சதீஸ்குமார் அவர்களோடு வந்தார். வருவதற்குமுதல் சதிஸ்குமார் இருபது தரத்திற்கு மேல் தெனாலி படத்தைப்பார்த்தாராம். அவருக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெனாலி கன்னத்தில் முத்தமிட்டால் நளதமயந்தி என்று எக்கச்சக்கப் படங்களைப்பார்த்து இலங்கைத்தமிழ் படிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியா அவர் சொன்னார். “உங்களை மாதிரித்தாண்ணே.. நாட்டில வாழ முடியல்ல..”
சதீஸ்குமார் நிராகரிக்கப்பட்ட வழக்கை மேன்முறையீடு செய்தார். வன்னியோடு தொடர்பில்லாமல்ப் போனதால் எந்த ஆதாரங்களையும் பெறமுடியவில்லையென்று கரித்தாஸ் அவருக்காக வாதாடியது. சரியாக எட்டாவது மாதத்தில் பதிவுத்தபால் ஒன்றில் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட கடிதமும் சுவிஸில் வாழும் பிரஜைக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய புத்தகமும் சதிஸ்குமாருக்கு வந்து சேர்ந்தது. சதீஸ்குமார் ரெஸ்ரோரன்ற் ஒன்றில் வேலை தேடிக்கொண்டார். அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியாக்கு போக இருப்பதாகச் சொன்னார். பிறகொருநாள் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பிறந்த தமிழர்களுக்கு இந்திய எம்பசியில் விசா கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் தனக்கும் விசாத் தரவில்லையென்றும் சதீஸ்குமார் சொன்னார்.
சதீஸ்குமாரின் கதையை நான் பூலோகத்தாருக்குச் சொல்லியிருக்கிறேன். அவர் பதிலுக்கு ஒரு விழல் கதை சொல்லியிருப்பார். என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் இன்னொரு பனிக்கதை நினைவிருக்கிறது. உண்மையாகவே அப்ப பனி பெய்து கொண்டிருந்தது. ஒருநாள் பூலோகத்தார் போன் பண்ணி “வாவன் மாவீரர் தினக் கொண்டாட்டத்துக்குப் போட்டு வருவம் என்றார்.” ரேடியோவாகட்டும் ரிவியாகட்டும் சிலர் மாவீரர் தினக் கொண்டாட்டம் என்றுதான் சொல்கிறார்கள். நாட்டில்த்தான் நினைவு கூருகிறார்கள், இங்கே கொண்டாடுகிறார்கள் என்று யாரோ எழுதியுமிருக்கிறார். விசுவமடுவோ, முள்ளியவளையோ தங்கள் சாவு வெளிச்சப்புள்ளியாக இருக்கும் என்று நம்பியவர்கள், நிற்கும் நிலத்திற்கு கீழே இருக்கிறார்கள் என்ற நினைப்புத் தருகிற உள்ளொடுக்கம் வேறை எங்கையும் கிடைக்காதென்று நான் நம்பினேன். அதனாலேயே பூலோகத்தாரை “நீங்கள் போட்டு வாங்கோ” என்றேன். அவர் டக்கென்று நீயெல்லாம் ஒரு தமிழனோ என்று கேட்டார். மேலும் வலு சிம்பிளாக இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழன் அடிமையாக இருப்பதற்கு நான்தான் காரணமென்றார். நான் பூலோகத்தாருடன் போனேன். பிறகு வந்தேன். வரும்போது பூலோகத்தாருக்கு இப்படிச் சொன்னேன். “இதுகள் பிழையென்றதாக நான் சொல்லவில்லை. ஆனால் இப்பிடியாப்பட்ட ஒருநாளில் அங்கை வைச்சு ஒரு பெடியன் தன்ரை போன் நம்பரை எழுதி ஒருத்தியிடம் கொடுத்ததும் அவளுடையதைக் கேட்டதும் பதிலுக்கு அவளும் எழுதிக்கொடுத்ததும் என்னாலை சீரணிக்க முடியாமல் கிடக்கு.. ” இப்பொழுது பூலோகத்தாரின் முகம் சீரியஸானது. அவர் மேலேயெங்கையோ பார்த்தார். அவர் எச்சில் விழுங்குவது தொண்டைக்குழிகளில் தெரிந்தது. பெருமூச்சுக்குப் பிறகு சொன்னார். “இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காகவும் தான் எங்கடை பிள்ளைகள் உயிர்களை விட்டார்கள்”
இப்படியாக எங்கு முடிவதெனத்தெரியாது அங்குமிங்குமாக இந்தக் கதை அலைந்த போதுதான் அது நடந்தது. கதையின் தொடக்கத்தில் எங்களைத் திரும்பிப்பார்த்து நடந்தவனும் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தாரால் முறைக்கப்பட்டவனுமான பெடியன் என்னைச் சந்தித்தான். அவன் மிக மெலிதாகக் கதைத்தான். “உங்களோட அவரைப் பார்த்திருக்கேன். அவர்கிட்ட சொல்லுவீங்களா” என்றே தொடங்கினான். என் தலையிலிருந்து மூன்று நான்கு வட்டங்கள் பெரிதாகிப் பெரிதாகி கடைசிப் பெரும் வட்டத்திற்குள் பூலோகத்தாரின் வெடிச் சிரிப்புடன் கூடிய முகம் முளைத்தது. அவன் தொடர்ந்தான். “அவர் என்னை கண்ட இடங்களில் இந்தியாக்காரன் எனத்திட்டுகிறார். நான் எவ்வளவோ சொன்னேன். அவர் நம்புகிறார் இல்லை” என்று அழுவானைப்போல அவன் சொன்னான். “சே.. அவர் அப்பிடித்தான். அதை பெரிசா எடுக்காதேங்கோ, நான் அவரிட்டைச் சொல்கிறேன்” என்று நான் ஆறுதல் சொன்னேன். “இல்லையே.. என்று தொடங்கியவன் சொல்லச் சொல்ல எனக்கு பூலோகத்தார் மீது பத்திக்கொண்டு வந்தது. எப்போதும் பூலோகத்தாரைக் காய்வெட்டி விட்டு விலகிச் செல்ல விரும்புகிறவன் அன்றைக்குப் பூலோகத்தாரைத் தேடி படிக்கட்டுகளுக்குப் போனேன். அவரைக் காணவில்லை. இரண்டு மூன்று இடங்களில் தேடியபிறகு ஏரிக்கரையில் வைத்து அவர் அகப்பட்டார்.
“அவன் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமோ” என்றபோது பூலோகத்தார் எவன் என்பது போலப் பார்த்தார். கொஞ்சத்துக்கு முதல் அவன் சொன்ன கதையை நான் அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.
அவன் சொன்ன கதை
இரண்டு வருசத்துக்கு முந்திய நாளொன்றில் இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நான் பிரான்சிலும் கொஞ்சக்காலம் அகதியாய் இருந்தேன். இங்கும் கேஸ் முடியாதபடியால் சரியான விசா இல்லை. விசா இல்லாதபடியால் வேலையும் தருகிறார்கள் இல்லை. கிழமைக்கு எழுபது பிராங்குகள் முகாமில் தருகிறார்கள். நாளுக்குப் பத்து பிராங்குகளை வைத்து என்ன செய்துவிட முடியும் என்று உங்களுக்கு நன்றாகத்தெரியும். இருந்தும் அதிலும் நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டியிருக்கிறது. அப்பாவையும் அக்காவையும் வெளியே எடுத்துவிட வேண்டும். அவர்கள் செட்டிக்குளம் முகாமில் இருக்கிறார்கள். பாருங்கள்.. நானும் முகாமில்.. அவர்களும் முகாமில்.. உங்களுக்குத் தெரியுமா..? யாருக்கோ பணம் கொடுத்தால் முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்கலாமாம். விசாரிக்க வேண்டும். ஆனாலும் எப்பிடியும் எடுத்துவிட வேண்டும். அவர்கள் வெளியே வந்த பிறகு எங்கே செல்வார்கள்… என்பதுதான் புரியவில்லை. அப்பா புசல்லாவவிற்கு போவாரா தெரியவில்லை. புசல்லாவ எங்கிருக்கிறது என்று தெரியுமா? அது நுவரெலியாவிற்கு கிட்டவாக இருக்கிறதாம். அல்லது கண்டிக்கு கிட்டவோ தெரியாது. பாருங்கள் அப்பா அம்மாவின் சொந்தஇடம் எங்கிருக்கிறதென எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அப்பா தன் சொந்த இடமென ஒருபோதும் புசல்லாவவைச் சொன்னதில்லை. அவர் செட்டிக்குளம் முகாமிலும் தன் சொந்த இடமென கிளிநொச்சி என்றே கொடுத்திருப்பார். நான் புசல்லாவவிற்குப் போனதில்லை. அண்ணனும். ஆனால் அவன் அங்கேதான் பிறந்தான். ஏதோ கலவரத்தில் வன்னிக்கு ஓடிவந்தபோது அவனுக்கு ஒன்றோ இரண்டு வயது நடந்துகொண்டிருந்தது. அவன் கிளிநொச்சியிலேயே வளர்ந்தான். கிளிநொச்சியிலேயே படித்தான். கிளிநொச்சியிலேயே இயக்கத்துக்குப் போனான். கிளிநொச்சிச் சண்டையிலேயே செத்தும்போனான். அந்தச் சண்டையில் கிளிநொச்சியிலிருந்து ஆமி ஓடிப்போனது. நாங்கள் திரும்பவும் கிளிநொச்சிக்குப் போனோம். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு கண்ணைத்துடைச்சுக் கொண்டு அப்பா சொன்னார். அண்ணன் தனது மண்ணைக் காப்பாற்ற உயிரைக்கொடுத்ததாய்.. கிளிநொச்சியில் எங்களுக்குப் பெரிய காணி இருந்தது. அது முன்னர் பற்றைக் காடாக இருந்ததாம். அப்பா தன்னந்தனியனாக அதை வெட்டிச் சீரமைத்தாராம். நான் உங்களுக்கு அம்மாவைப் பற்றியும் அக்காவைப்பற்றியும் சொல்லவில்லை. அம்மா என் சின்ன வயதுகளிலேயே செத்துப்போனா. ஏதோ ஒரு இங்கிலிஸ் வருத்தம். அக்காவிற்கும் எனக்கும் நாலைந்து வயது வித்தியாசம். ஆனால் அவள்தான் என் அம்மாவாய் இருந்தாள். அப்பா அவளுக்கொரு கல்யாணம் முடித்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். யாருக்குத்தெரியும்..? இப்படியெல்லாம் .. இம்முறையும் கிளிநொச்சியிலிருந்து அவராக வெளிக்கிட்டிருக்க மாட்டார். போனமுறை நானும் அக்காவும் அவரை இழுத்துக்கொண்டு வந்தோம். “நீங்க போங்க நான் வரலை” என்றார் அவர். அப்பா பேசுவது போலவே எனதும் அக்காவினதும் அண்ணாவினதும் பேச்சு இருக்கும். யாழ்ப்பாணத்தில் பேசுகிற தமிழை நான் தொன்னூற்றைந்துகளுக்குப் பிறகுதான் கேட்கத்தொடங்கினேன். அப்போதெல்லாம் திருவிழா போல கிளிநொச்சி சனங்களால் நிறைந்திருந்தது. எங்கள் காணியிலும் கொட்டில்கள் போட்டு சிலர் தங்கியிருந்தார்கள். கொஞ்சக்காலத்தில் யாழ்ப்பாணம் போய்விட்டார்கள். நாங்களும் புசல்லாவவிற்குப் போயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் அப்பா ஒருபோதும் மாட்டார். பாவம் நோய்களோடு முகாமில் என்ன செய்வாரோ.. அவரையும் அக்காளையும் வெளியே எடுக்கவேண்டும். காசு சேர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் ஏதாவது வேலை இருக்கிறதா..
0 0 0
கதையைக்கேட்டு பூலோகத்தாரின் முகம் கலவரமடையும் என நான் எதிர்பார்த்தேன். அவர் சலனமற்று இருந்தார். அவர் என்னிடம் சிலசமயம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கையில் அதை எப்படி எதிர்கொள்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்தது. “சரியண்ணை முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ” என்று சொல்லவேண்டும். கொஞ்ச அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. “ஹா.. ஹா.. ஹா.. அப்பிடிப்பாத்தாலும் அவன் இந்தியாக்காரன் தானே” என்ற பூலோகத்தார் என்னைத் தனிய விட்டுவிட்டு எழும்பி நடந்தார்.




















man of the world
பொருத்தமான தலைப்பு
யோகா..
பூலோகத்தாரா?
இறுதிப்பந்தி சூடு……….
Superb !!!!
Nalla iruku …..
சயந்தனின் எழுத்துக்கள் புதிய ஆழுமையாகா உருவெடுகிறது… அதில் உயிரோட்டமும்..உணர்வோட்டமும் மட்டுமன்றி ஒரு முன் அரசியலும் இருக்கிறது
“அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா..”
ஆவணப்படுத்தப்பட வேண்டிய புலம்பெயர் தமிழரின் வரலாற்றுப் பதிவுகள். உங்கள் கைகள் பட்டு இலக்கியமாக உருவெடுக்கின்றன.
பூலோகத்தார் என்பது என்னருமையாகப் பொருந்துகிறது! மோட்டுச் சிங்களவன் என்று பூலொகத்தார் அடிக்கடி சொல்வது உண்டு. ஆனால் மோட்டு பூலோகத்தான் என்பதை எத்தனை அருமையாக உங்கள் எழுத்துக்கள் படம்பிடித்து காட்டுகின்றன.
பூலோகத்தான் !!!!!!… பூலோகத்தில் இருந்து வந்ததாகத் தான் நினைத்துக்கொள்கின்றான். ஆனால் இந்த பூலோகத்தானும் இந்தியாவில் இருந்து வந்தவன்கள் தான் என்று இந்த மர மண்டை பூலோகத்தானுக்கு தெரிவதில்லை போலும்.
7000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒட்டி இருந்தக் காலங்களிலேயே இருந்த ஒரே இனக்குழுமம் பின், கடற்கோல்களால் பிளவுண்டு பிரிந்ததாகவும், அதனால் பூலோகத்தார் பூர்வீகம் இலங்கை என்றும் கூறியும் நம்பியும் வருகிறான்கள். அடே பூலோகத்தானே …. உனக்கு தெரியுமா…. ஒரே இனக்குழுமம் இரண்டாக பிரிந்தாலும் காலப்போக்கின் அதன் பேச்சு வழக்கு, பண்பாடு பழக்க வழக்கம் போன்றவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடும். தமிழில் இருந்து பிரிந்த கரநாடகா, மளையாளம் மொழிகள் பிரிந்தப் பின்னரான ஏற்பட்ட மொழி, பண்பாட்டு வேறுப்பாடுகளை உணர வேண்டும். (இவை சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்தவை)
7000 ஆண்டுகளுக்கு முன்பே கடற்கோலால் பிரிந்த தமிழர்களாக (இந்தியாவில் இருந்து வராமல்) இருப்பவர்களானால் எத்தனை வேறுப்பாடுகள் பூலோகத்தான்கள் கொண்டிருக்க வேண்டும்????
சரி 7000 ஆண்டுகள் தொன்மையாக பூலோகத்தான் அங்கேயே வாழ்ந்து வருகிறான் என்றாலும், சேரன், சோழன், பாண்டியன் கட்டகட்டமாக பல்வேறு கட்டங்களில் பூலோகத்தானை ஆண்டு வந்துள்ளனர் அப்படித்தானே, அப்படியானால் அவர்கள் வழித்தோன்றல்களுடனும் கலந்தவன் தானே இந்த பூலோகத்தான்.
பூலோகத்தில் இருந்து வந்தது போல் பேசிக்கொள்ளும் இந்த நாறிப்போனான்களுக்கு அந்நிய நாட்டினன் தரும் அகதி வாழ்க்கையிலும் இத்தனை எடுப்பு…..!!!!!!
அருமையான பதிவு. கதையின் இடை இடையே சம்பவங்களை கோத்திருக்கும் விதம் அருமை.
இரண்டு முரண் பட்ட தமிழரின் நிலைமை அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது.
////நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா////
///ஆனால் இப்பிடியாப்பட்ட ஒருநாளில் அங்கை வைச்சு ஒரு பெடியன் தன்ரை போன் நம்பரை எழுதி ஒருத்தியிடம் கொடுத்ததும் அவளுடையதைக் கேட்டதும் பதிலுக்கு அவளும் எழுதிக்கொடுத்ததும் என்னாலை சீரணிக்க முடியாமல் கிடக்கு///
இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.
//இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.//
ரவி இவ்வரிகளை என்னமாதிரியான பார்வையுடன் இட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் பூலோகத்தான் நினைத்தப்படியெல்லாம் ஆட்டம் போட முடியாது வைத்திருந்த மகத்தான திட்டங்களையும் சட்டங்களையும் விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர். 1977, 1983 கால பகுதிகளில் சிங்கள இனவெறித்தாக்குதல்களின் போது மலையகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டதும் இந்த வன்னி மண்ணில் தான். அப்போது ஊரவன் எனும் பேரில் பூலோகத்தான் ஆட்டத்திற்கெல்லாம் ஆப்படித்ததும், எல்லோரும் ஈழத்தமிழர்களே என கூறியவர்களும் புலிகள் மட்டும் தான். 2000 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப் புலிகளின் படையில் கணிசமானோர் மலையகத் தமிழர்களாகவே இருந்தனர். இந்த பேதமைகளை கொஞ்சம் கொஞ்சமாக புலிகள் காலத்திலேயே கலைந்தன.
இருப்பினும் மலையகத்தான் பொருளியல் வளர்ச்சியில் தொடர்ந்தும் பின்னோக்கி இருந்ததால், அவன் ஈழத்தை தன் தாயகமாக நினைத்து களத்தில் இறங்கினான். ஆனால் பூலோகத்தானோ வன்னி அவலங்களை தனது அவலங்களாக கூறி அந்நிய தேசங்களில் அனுகூலங்களைப் பெற்றான். இன்றும் ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானும் எப்படி எதைச் சாட்டி வெளியேறுவது என்ற நோக்கத்தின் தான் அவன் உள்ளான்.
நாளை வவுனியா முகாமில் இருந்து மக்கள் மீண்டாலும், பூலோகத்தான் மெல்ல மெல்ல என்ன விலைக்கொடுத்தேனும் வெளியேறிவிடுவான். ஆனால் மலையகத்தானின் நிலையோ ………..??????
புலிகள் இல்லாத இடத்தில் பூலோகத்தான் என்ன செய்வான் என்பதும் மலையகத்தானுக்கு தெரியும். தப்பி தவறி தஞ்சம் கோருப் போகும் இடத்தில் நடக்கும் இதுப்போன்ற நிகழ்வுகள் பூலோகத்தானின் செயல்களை அகில உலக்தானுக்கு அறிவித்தலுக்காக உமக்கு ஒரு நன்றி.
அடடே!! மோட்டு சிங்களவன் என்ற அறிவு ஜீவி அற்புதவான்கள் யாழ்ப்பாணத்தில் மாட்டு பலிக்கொடுக்க தொடங்கிவிட்டானுகளாம்..
அட என்ன அறிவோ……..அறிவு!
வணக்கம் பஸ்பன்,
பெரும்பாலான புலம்பெயர்ந்த மக்கள்தான் போராட்டத்தை வியாபாரமாக்கினார்கள். அவர்கள் புலிகளை தங்கள் அடியாட்களாகத்தான் பாவித்திதார்கள் யுத்த வெற்றிகள் ஒன்றை மட்டுமே எதிர் பார்த்தார்கள் அப்போதான் அவர்கள் தலை நிமிர்ந்து சிங்களவனுக்கு எதிராக நடக்க முடியும் தமிழீழமெல்லாம் அப்புறம்தான்.நான் சொல்ல வந்தது இதுதான்.
நன்றி.
அன்புடன் இரவி!
//நான் சொல்ல வந்தது இதுதான்.//
//இவ்வரிகளை என்னமாதிரியான பார்வையுடன் இட்டீர்கள் என்று தெரியவில்லை// என்று நான் வினவியதன் காரணம்: “இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.” நீங்கள் கூறிதனால் தான். ஆனால் சிலவேளை உங்களுக்கு உண்மை தெரிந்திருக்குமோ என்று நினைத்துவிட்டேன். காரணம், “இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது” என்பதன் இரகசியம் ஈழத்தமிழர்களுக்கு குறிப்பாக பூலோகத்தானுக்கு அன்றே தெரிந்திருந்தது.
இந்த பேரழிவுக்கு பிரதானக் காரணியும் அவன் தான். ஆனால் அவன் எங்கும் மூச்சு விடுவதில்லை. (இதன் காரணத்தை நீங்கள் இணையத்திலும் எங்கும் காணமுடியாது)
தெரிந்த காரணங்கள்:
1 . பின்லாடனின் (உண்மை பயங்கரவாதி) அமெரிக்க தாக்குதலின் பின் படுவேகமாக பயங்கரவாதத்திற்கு எதிரான மனநிலை பன்னாட்டு மக்களிடம் வலுவடைந்தது. அதனால் விடுதலை போராட்ட அமைப்புகளும் பயங்கரவதாமாகவே பார்க்கப்பட்டது. இரண்டுக்கும் இடையே வேறுப்பாடுகள் இருந்தப்போதும் அதன் தார்ப்பரியங்கள் சரிவர பன்னாட்டினரின் மனங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. (அதற்கான காரணம் -1)
2 . இந்த பன்னாட்டு சமூகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான மனவெழுச்சியை தமக்கு சாதகமாக காய் நகர்த்திக்கொண்டது இலங்கை அரசு. அது எப்படி? தமிழனுக்கு இலங்கையில் பிரச்சினை இல்லை என்று ஒரு தமிழனை வைத்து பரப்புரைகளை பன்னாடுகள் எங்கும் பரப்பியது இனவாத அரசு. பதவி மோகத்திற்கும், சிறுபிராயத்து நற்புக்கும் (சந்திரிக்கா- கதிர்காமர்) விலைப்போனார் கதிர்காமத்தார். (கதிர்காமத்தாருக்கு தமிழே பேசத்தெரியாது என்பது வேறு விடயம்) இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினையே இல்லை, நடப்பது “அரசுக்கும் எதிரான பயங்கரவாதம்” என்று ஒரு சிறுபான்மையினத்தவனே சிங்களவனுக்கு பிரதிநிதியாகப் போனால் பன்னாடுகள் என்ன செய்யும்? கதிர்காமத்தாரின் சரக்கு நன்றாக விற்பனையானது. (காரணம் -2)
3. கதிர்காமர் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது புலிகளை மேலும் இக்கட்டிற்கு இட்டுச்சென்றது.
4. கருணாவின் துரோகம்.
5. இந்தியாவின் தென்னாசிய நலன்சார்ந்தக் கணவு.
6. இலங்கையின் சீனாவுக்கு சாதகமான உறவுநிலை.
7. மாற்று கருத்து எனும் பேரில் சிலர் வேண்டுமென்றே விதைத்த (தற்போதும் விதைத்துவரும்) மாட்டுக்கருத்து வித்துவான்களின் பலிவாங்கல் செயல்பாடுகள்.
புலிகளின் மேல் சுமத்தப்படும் குற்றங்களை புலிகள் தொடர்ந்தும் மறுத்தனர். அதற்கான காரணிகள் சிலவற்றையும் முன்வைத்தனர். இவைகளும் பன்னாடுகளிலும், ஐக்கிய நாட்டு அமைப்புகளிலும் பரீட்சிக்கப்பட்டன. சில நாடுகள் புலிகள் தரப்பில் நியாயம் இருப்பதையும் உணர்ந்தன. சில நாடுகள் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் இருந்தன.
இவைகள் உங்களுக்கு தெரியும்.
தெரியாத காரணங்கள்:
(காரணம் -1) தொடர்பாக (காரணம் -2) பன்னாடுகளும், ஐக்கி நாட்டு அமைப்புகளும் (UN) பரீட்சிக்கத் தொடங்கின.
எது உண்மை? எது பொய்? எது பயங்கரவாதம்? எது நியாயவாதம்?
இதனை எவ்வாறு கண்டறிவது?
புலிகளின் முன் எவரும் துணிந்து புலிகளின் தவறுகளை சொல்லமாட்டார். இலங்கை இராணுவத்தின் எந்த அட்டூழியங்களை எடுத்துக்கூறும் தைரியமும் எவருக்கு வராது. இரண்டுமே ஆயுதம் தாங்கிய தரப்புகள். எனவே உயிராபத்துக்கள் உள்ளன. எனவே இரண்டு தரப்பும் இல்லாத இடத்தில் ஒருவரை சந்தித்தால் உண்மை வெளிப்படும். அதுவும் இலங்கையை விட்டு வெளியேறிய ஒருவரிடம் கேட்டால், அதுவும் அக்கம் பக்கம் ஒருவரும் இல்லாத பாதுகாப்பான இடத்தில் வைத்து கேட்டால், அதுவும் பாதுக்காப்பின் உச்ச இடமான ஐக்கிய நாட்டு அகதிகளுக்கு ஆணையத்திலேயே கேட்டால், எவரும் யாருக்கும் எதற்கும் அச்சமின்றி உண்மைகளை சொல்லலாம்.
அப்படித்தானே!
ஆம் அப்படித்தான். அவர்கள் கேட்காமலே புலிகள் செய்யாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் புலிகள் மேல் சுமத்தினர். தான் விரும்பி சென்று வெட்டிய பங்கரையும் பலவந்தமாக வெட்ட வைத்தனர் என்றனர். வாகன விபத்தில் இறந்தவனும் புலிகளால் சுடப்பட்டான் என்றனர். விரும்பி இயக்கத்தில் இணைந்தவனும் புலிகளால் கடத்தப் பட்டனர் என்றனர். (2008-2009 உண்மை). கட்டில் மேல் கால் போட்டு படுத்தவனும், கட்டிப்போட்டு அடித்தனர் என்றனர். ஆயுதம் எடுத்தவனும் மிரட்டலுக்கு பயந்து போனேன் என்றான், பாதிப்பே இன்றி பல்கலைக் கழகத்தில் படித்தவனும் புலி வந்து மிரட்டியது என்றான். கொழும்பு யுனிவசிட்டியில் படித்தவனும் புலி வந்து வேவு பார்க்கச் சொன்னது என்றான். இன்னும் இன்னும் புலிகளின் பத்திரிக்கை எழுதியவனும், பாடல் பாடியவனும், ஆடியவனும் எல்லோருமே சேர்ந்து இப்படித்தான் அடித்தனர் ஆப்பு விடுதலைப் போருக்கு.
ஆப்பு அடித்தவனுக்கோ கிடைத்தது அந்நிய நாட்டில் அற்புத வாய்ப்பு.
ஏன் ஆப்பு அடிக்க வேண்டும்?
இலங்கை அரசக் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்க முடியாது என்றால், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கலாம் என யுஎன் சொல்லும். எனவே புலிகளின் பக்கமும் வசிக்க முடியாது. புலிகள் என்னை கொன்றுப்போடுவார்கள் எனக்கு இருத்தரப்பிலிம் உயிர் ஆபத்து. இப்படித்தான் ஒவ்வொரு ஈழத்தானும் அந்நிய தேசங்களில் அகதி அந்தஸ்து பெற்றான். அந்நிய தேசக் கனவுகள் மத்தியில் தமிழீழமாவது மண்ணாங்கட்டியாவது?
இன்று புலி வீரம் பேசுவோனும், புலியின் நியாயப்பாடுகளை இணையத்தில் பேசுவோனும் எல்லோரும் ஒன்றுத்தான். அதில் அதிகமானோன் பூலோகத்தான் தான்.
அப்பொழுது தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அது நீங்கள் கூறிய:
//இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது//
அது பன்னாடுகளும், ஐக்கிய நாட்டு அமைப்புகளும் இணைந்து எடுத்த முடிவு.
இந்த முடிவை அவர்களுக்கு எடுக்க உத்தரவிட்டவர்களே இந்த ஈழத்தான் தான்.
இவர்களின் முடிவு படியே கடைசி முடிவு எடுக்கப்பட்டது.
இந்த மக்களின் கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு பலிசுமத்துகளுக்கும் ஏற்பவே மாற்று கருத்து எனும் பேரில் காகித புரட்சியாளர்களின் எழுத்துக்களும் முடிவை விரைவாக்கின. இணையத்தில் ஏசித்திரியும் பூலோகத்தான், அந்த புரட்சி சிங்கங்களின் எழுத்து வண்ணங்களை பிறிண்ட் எடுத்து சாட்சியாகக் கொடுக்கத் தொடங்கினான். புலிகள் செய்ததாக வேறு என்னேன்ன குற்றங்கள் மாற்று புரட்சிகள் எழுதியுள்ளன என்று தேடித்தேடி நகலெடுத்தே கொடுக்கத் தொடங்கினான்.
போதாமைக்கு கருணாவிடமும், டக்ள்ஸிடமும், ஆனந்த சங்கரியாரிடமும் ஆவணங்களும் பெற்றும் கொடுத்தான்.
இப்படி இலங்கை சிங்களவன் புலிகள் மேல் சுமத்திய போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் சான்றுகளாக எம்மவனே தேடித் தேடி கொடுத்தான். பன்னாடுகள் எங்கும் கொடுத்தான். ஐக்கிய நாட்டு அகதிகள் ஆணையத்திடமே கொடுத்தான். அனைத்தும் பரிசீலிக்கப் பட்டு அப்போதே முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது எதனையும் எவனும் வெளிச்சொல்லவில்லை. எப்படிச்சொல்வான்.
வன்னியில் ஏது ஏசி? தான் வாழ வேண்டும், தனது குடும்பத்தாரையும் எப்படியும் எடுத்துவிட வேண்டும். வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும். அக்கம்பக்கத்தானிடம் ஆடம்பரமாய் அகம்பாவம் காட்ட வேண்டும். சும்மாவா!!! புலி வென்றால் வீரம் பேச வேண்டும். அது அவனவன் கனவு. இங்கே ஏது தாயகக் கனவு?
வீனே புலம் பெயர் தேசங்களில் கொடி பிடிக்கிறானாம், ஊர்வலம் போகிறானாம், இது யாரை ஏமாற்ற????
இன்று வவுனியா முகாம்களில் முடங்கிக் கிடப்போர் கிடக்க, அதை கூறிக்கூறு வெளியேறிக்கொண்டிருப்பவனும் இந்த பூலோகத்தான் தான்.
கேட்டால் கருணா துரோகி என்பான்.
எத்தெத்தனை துரோகிகள் எம்மினத்தில்!!! கடைசியில் ஒரு ஒப்பற்ற மாமனிதனும், எண்ணற்ற வீரரின் தியாகமும் இந்த பூலோகத்தானின் அகதி வாழ்விற்கு அல்லவா இறையாகிப் போனது.
இது எழுத்துக்கள் அல்ல ரவி, வரலாற்று குறிப்புகள். மெல்லத் தமிழினி சாகட்டும்.
வணக்கம் பஸ்பன்,
நீண்ட விளக்கமளித்தமைக்கு நன்றி. எனது எண்ணமும் அதேதான். உலக நாடுகளும் ஐ நாவும் நமக்கெதிராக இருந்திருந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் கடைசியில் நடத்திய போராட்டங்களை முன்பே ஆரம்பித்திருந்தால், கடைசி நேரத்திலாவது தமிழக மக்கள் வெகுண்டெழுந்து இந்திய அரசை போரை நிறுத்த சொல்லி நிர்ப்பந்த்திருந்தால் இன்று ஏதாவது பிழைத்திருக்கும். வடக்கு கிழக்கு, தமிழகம், புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதையெல்லாம் தாண்டி ஒட்டு மொத்த தமிழர்களின் தோல்விதான் புலிகளின் வீழ்ச்சி.
சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் கூறியது
“இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.”
எத்தனை சத்தியமான வார்த்தை. இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து பேட்டி கொடுத்தால் தமிழகத்துடன் புலம்பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கொள்வார் பிறகு மொத்த தமிழினத்தையும் சேர்க்கலாம்.
இனியும் வீரம் பேசாமல் சிக்கியிருக்கும் மக்களை மீட்டெடுக்க போராடினால் எதையாவது மீட்களாம் இல்லையெனில் அம்மக்களும் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு போவார்கள். புலிகளின் வீழ்ச்சி அதிகார வர்க்கத்தின் முதல் கட்ட சோதனையின் பெரு வெற்றி. இனி இன விடுதலைக்காக போராடும் ஒவ்வொரு இயக்கத்துக்கும் இதே முறையே பயன்படுத்தப்படும்.
எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ஒரு அகதியின் கோரிக்கை வேறு எதற்காகவும் பயன்படுத்தப் பட மாட்டது எனும் ஒப்புமை யுஎன் வைத்திருந்தாலும்; அகதிகளின் கோரிக்கைகள் வெறுமனே அகதி அந்தஸ்து வழங்குவதற்கு மாத்திரமன்றி, அது சார்ந்த நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆன வாக்குமூலங்களாக பதிவுசெய்யப்பட்டு தரவுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்த தரவுகளே முடிவுரைகளாயின.
இங்கே வேடிக்கை என்னவென்றால், இயக்கத்தின் கட்டுப்பாடுகளையும், அவர்களின் நியாயத்தையும் பேசி வருவோரும், அந்நிய நாடுகளில் இறங்கிய உடன் அல்லது அதற்கு சற்று முன்பு இப்படி இப்படி கோரிக்கை விடுத்தால் தான் அகதி கோரிக்கை ஏற்கப்படும் என அறிவுருத்தப் படுகின்றனர். சிலர் கதை எழுதிக் கொடுப்பதும் உண்டு. ஒருவன் மட்டுமன்றி, புலத்தில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவனும் தனது வாக்குமூலங்களை இப்படித்தான் பதிந்துள்ளான்.
அதன் அறுவடைதான் இறுதி போரின் முடிவு. இந்த முடிவு எப்போதே தீர்மானிக்கப்பட்டு விட்டது. தீர்மானத்தை கொடுத்தவன் ஈழத்தான் தான். இப்படி பூலோகத்தான் பெற்றிருப்பது அகதி அந்தஸ்து அல்ல. உயிர்கள் எரித்த நெருப்பு.
இன்று புலிகளின் கதை முடிந்து விட்டது. தற்போது அகதி கோரிக்கை விடுப்பவனுக்கு வவுனியா முற்கம்பி முகாம்களின் அவலம் ஒரு காரணியாக உள்ளது. இதுவும் முடிவுக்கு வந்து இயல்பு நிலை தோன்றி விட்டால், எதைக் கூறி எந்த நாட்டில் தஞ்சம் கோருவது எனும் கவலையுடன் இருக்கும் பூலோகத்தானே அதிகம்.
உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். எல்லாம் நெருப்பு! உயிர்கள் எரித்த நெருப்பு. எரிக்கும் நெருப்பு.
தலைப்பிட்ட கொழுவியாருக்கு கோடி நன்றிகள்
வணக்கம் இரவி!
//உலக நாடுகளும் ஐ நாவும் நமக்கெதிராக இருந்திருந்தாலும்//
உலக நாடுகளும் ஐ நாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எப்பொழுதும் இருந்ததாக ஒரு போதும் கூற முடியாது. அவர்கள் சிங்கள அரசின் இனவொடுக்கு முறைகளையும் அழிப்பையும் நன்கு அறிந்தே இருந்தனர். அதனடிப்படையில் தான் ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் அதே அமைப்புக்கள் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு எதிர் நிலையை எடுக்க வைத்தது ஈழத் தமிழர்களே தான் என்பதே எல்லோருக்கும் தெரியாத விடயம்.
//புலம்பெயர்ந்த மக்கள் கடைசியில் நடத்திய போராட்டங்களை முன்பே ஆரம்பித்திருந்தால், கடைசி நேரத்திலாவது தமிழக மக்கள் வெகுண்டெழுந்து இந்திய அரசை போரை நிறுத்த சொல்லி நிர்ப்பந்தித்திருந்தால் இன்று ஏதாவது பிழைத்திருக்கும்.//
இலங்கையில் இருந்து புதிதுப் புதிதாக அகதி அந்தஸ்து கோரி வெளிநாடு வந்தடைவர்களிடம் இருந்தே பன்னாட்டு அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் ஒன்றியமும் தரவுகளை பெற்றுக்கொள்கின்றன. அந்த தரவுகளின் அடிப்படையிலேயே அவர்களது நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதாவது புலம்பெயர் நாடுகளில் தமிழர் விடுதலைக்காக கொடி பிடித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் பங்கு பற்றுவோனும் புலிகளின் பிரதிநிதிகளால் தூண்டப்பட்டு அல்லது பயந்தே இப்போராட்டங்களில் பங்குபற்றுவது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கின்றது. சிலர் தனது தனிப்பட்ட வாக்குமூலத்தின் போது அவ்வாறு கூறுபவை நிறையவே உள்ளன.
இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே இறுதி முடிவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமான ஆதரவாக இலங்கை அரசுக்கு மாறின. ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தின் சார்பு நிலையும் ஈழத்தமிழர்களிடம் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எல்லாம் நடந்து முடிந்தது. புதுமாத்தளன் பகுதியில் உக்கிரப் போர் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது கொழும்புல் இருந்து உயர்கல்வி வீசா எனும் பேரில் வேறு நாடுகளின் தஞ்சம் புகுந்தவர் வரை அனைவரதும் கோரிக்கைகள் அவ்வாறு தான் இருந்துள்ளன.
இவைகளே இலங்கை அரசிற்கு அனுகூலமாக மாறியது. வெளிநாடுகளில் வாழும் புலி உருப்பினர்களே மக்களை இவ்வாறு கிளர்ச்சியில் ஈடுபடுத்துகின்றனர் எனும் இலங்கை அரசின் குற்றச்சாட்டிற்கு ஏற்றாற் போலவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோரிக்கைகளும் அமைந்தன.
இதுவே மற்றக் காரணிகளையும் விட இவ்வாறான வாக்கு மூலங்களால் கிடைக்கப்பெற்ற தரவுகளே தமிழர் போராட்டத்தை அழித்த முதன்மை காரணி என நான் சொல்கிறேன்.
பூலோகத்தார் டக்கென்று சொன்னார். “எங்கடை சனங்களின்ரை பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்”. நான் பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை. “ஏன் நாங்கள் குளிர்காயலாமோ” என்று நான் இப்போது கேட்கலாம்.