வலை மேயவும் வீசவும் வந்த கதை – தொடராம்


இதுவொரு விளையாட்டு. கூகுள் குரூப்பொன்றில் நான்கேட்க மு.மயூரன் தொடக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. மயூரன் சொன்னதுபோல தனியே விளையாட்டு அன்றி உள்ளே ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது. அவரவர் தனது வலைபதிய வந்த கதையைச்சொல்வதனூடாக அக்கால கட்டத்தைய இணையம்/ தமிழ்/ திரட்டிகள் குறித்த இன்னோரன்ன சங்கதிகளை ஆவணப்படுத்துகிறார் என்பதே அது. இத்தொடரில் சந்திரவதனா அழைத்தார். நன்றி.

அருண்மொழிவர்மன், கீத் ஆகியோரது இத்தொடர்பதிவுகள் படித்தேன். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு மனநிலையிலிருந்து வந்தவன் நானென்று சொல்லலாம். தனிமை. 2004 யூலை மெல்பேணில் ஒரு புறநகர் மாணவர் விடுதியொன்றில் போய் விழுந்தபோது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது. பாணுக்கு பட்டரைப்பூசிக் கொண்டு போவதும் படிப்பு முடிய வருவதும் பிட்சாவைச் சுடவைத்துச் சாப்பிடுவதும் பேயறைந்தவன் போல இருப்பதும் அவ்வப்போது தொலைபேசி வழி குரல்களூடு ஆசுவாசப்படுத்திக் கொள்வதுமாக கரைந்த காலம். நான் தனிமையை விரும்புகிறவன் என்று நானே நம்பியிருந்தவன். உண்மையில் அப்படி இருந்தவனும்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக தனிமை தன்னை என்னில் திணித்தபோது மூச்சடைத்துப்போனது. தமிழில் பேசுவதற்கு தொலைபேசி அழைப்புக்கள்தான் இருந்தன. ஒருவித வெறுமை சூழ்ந்தபோது வெளிக்கிட்டதுதான் சாரல்.

இணையத்தில் ஏற்கனவே பரீச்சயம் உண்டு. புளொக்தான் புதியது. 2002 சமாதானம் துளிர்த்தபோது இன்று புது உதயம் எழுகிறது. எழுநா என்னும் கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது நன்றென்று வாழ்த்தி நான் மிதந்து கொள்கிறேன் என்கிற புதுவை இரத்தினதுரையின் வாழ்த்தோடு வெளியான எழுநா இணையத்தளத்தின் ஆசிரியர் என பேக்காட்டிய நி. கெனடி நான்தான். தமிழ் எழுத்துருவை தரவிறக்க என்னும் ஒரு மூலையிலிட்ட இணைப்போடு பாமினி எழுத்துருவில் எழுநா ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் சோமிதரன் யாழ்ப்பாணத்து குடிநீர் வளம் இல்லாமல்போய் அதுவொரு பாலைவனமாகும் என்கிற ஒரு கட்டுரையை எழுதி அதையொரு ப்ளொப்பியில் தந்தார். ப்ளொப்பி அளாப்பி விட்டது. அதற்குள் இருந்த ஏதோ ஒரு ட்ரோஜன் எட்டுக்கால்ப் பாய்ச்சலில் இணையத்துக்குள்ளும் புகுந்து… அத்தோடு இணைய முயற்சிகள் கைவிடப்பட்டன.

இனி புளொக் கதைக்கு வருவோம். மு.மயூரன் ஒரு இணையம் வைத்திருந்தார் என கொழும்பில் அறிந்திருக்கிறேன். ஆனால் அது புளொக் நுட்பமென்றோ புளொக் என்றால் என்ன என்றோ அறியமுற்படவில்லை. இப்படியான இடைவெளிக்குப்பிறகு யாழ் இணையத்தில் புளொக் பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது. யாழ் இணையத்தில் குடில் என்றார்கள். அப்போது யாழ் இணையமே குடில் அமைக்கும் வசதியினையும் வழங்கியது. ஒரு பின்னிரவு அந்த மாணவர் விடுதியில் அனைவருக்கும் பொதுவான இணைய மையத்தில் குடில் எப்படி அமைப்பது என்ற சுரதாவின் விளக்கங்களினூடு உருவானது சஜீ என்கிற அந்த முதல் வலை. முகவரி sajee.yarl.net. முதற்பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்கள் பாரி, மூக்கன், ஸ்ரேயா, மதி, சந்திரவதனா. அப்போதே தமிழ்மணம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு மாசக்குழந்தை அது. வலைப்பூ என்கிற ஒரு வலையும் இருந்தது. அதில் வாராவாரம் ஒரு பதிவர் ஆசிரியராக இருந்து தான் படித்து சுவைத்த பதிவுகள் புதிய அறிமுகங்கள் என எழுதுவார். இந்நாளைய தமிழ்மண நட்சத்திரத்தின் முன்னோடி அதுதான். அவ்வாறான பதிவொன்றில் சந்திரவதனா என்னைக்குறிப்பிட்டிருந்தார். மகிழ்ச்சியாயிருந்தது.

நான் பாமினி முறையில் எழுதப்பழகியவன். கணணியில் தமிழ் அறிமுகமானதே கணணி வாங்கும்போது அந்தக்கடைக்காரர் போட்டுத்தந்த அலங்காரம் ஆடம்பரம் ரஞ்சனி ரசிகை பாமினி என்ற எழுத்துருக்களூடாகத்தான். ஆக அது தவிர்க்க முடியாததாகி விட்டது. புளொக் என்ற அறிமுகத்தில் எனக்குள் முன்னிலையில் இருந்த சங்கதி அதற்கென எழுத்துருக்களை தரவிறக்கத் தேவையில்லை என்பதுதான். மற்றும்படி அதன் நுட்பப்புதினங்கள் புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுவும் ஒரு பொன்ட் என்ற நினைப்புத்தான் இருந்தது. சுரதாவின் பொங்குதமிழ் பக்கத்தை படியெடுத்து அறையிலிருந்த என் கணணியில் வைத்திருந்தேன். இரவுகளில் பாமினியில் எழுதி பொங்குதமிழில் இட்டு யுனிகோட் ஆக்கி புளொப்பியில் எடுத்து விடுதியின் இணைய மையத்திற்கு சென்று பதிவேற்ற வேண்டும். அவ்வாறுதான் செய்தேன். அறைக்கான வாடகை 300 டொலர்களாவகவும் இணையப்பாவனைக்கான வாடகை 200 டொலருமாக வந்தது.

என்ன எழுதினேன் என்றால் எல்லாம் சுயபுலம்பல்கள்தான். மொத்தமாக நனவிடைதோய்தல்கள்தான். ஆனால் அதில் ஒரு சுகம் இருந்தது. வலைப்பதிவில் இருக்கிற பின்னூட்ட வசதிதான் ஆரம்பத்தில் அங்கிங்கென விலகாத ஆர்வத்தை தந்தது.

                               யாழ் தந்த வலைப்பதிவு வசதி வாபஸ்பெறப்பட முன்னராகவே நான் புளொக்கருக்கு மாறினேன். அப்போது சஜீ என்ற பெயரை எடுத்துவிட்டு சாரல் ஆக்கினேன். பிறகு வேர்ட்பிரசில் சொந்தமாகப் புகுந்து கொள்ளலாம் என sajeek.com இற்கு மாற்றிக்கொண்டேன். சாரல் ஏதாவது பெயர் வைக்கவேண்டுமென்பதற்காக வைத்த பெயர் இது. இப்பொழுது மாற்ற விருப்பம் ஆனால் அடையாளமாகிவிட்டதே என்ற யோசனை இருக்கிறது. சாரல் மீறலாகலாம்.

இனி சில குறிப்புக்கள்

இப்போது யாரும் பெரிதாகப்பயன்படுத்துவதில்லை. ஆனால் முன்பு சகலரும் மாட்டிவைத்திருந்தார்கள். ஒரு பின்னூட்ட மஜிக் பெட்டி. ஆங்கிலத்தில் தட்டுங்கள் பாமினியில் தட்டுங்கள் யுனிகோட்டில் வரும் என்ற அறிவிப்புடன். இப்போதும் அதனை வைத்திருப்பவர்களில் வசந்தன் ஒருவர். ஆரம்பத்தில் அதனைப் பயன்படுத்துவதற்காக நிறைய சில்லெடுப்பு வேலைகளை செய்திருக்கிறேன்.

வலையில் எழுத ஆரம்பித்தபிறகு அச்சூடகங்களில் பெயர் வரவேண்டும் என்ற என் முன்னைய அவா பெரிதும் குறைந்து இல்லாமலேயே போனது.

பின்னூட்டங்கள் குறித்த எதிர்பார்க்கை இப்போ அறவே இல்லாமல் போய்விட்டது. (இது வலைப்பதிவின் முத்தி நிலை) முன்பு தமிழ்மணத்தின் எல்லையாகிய நாற்பதைத் தொட்டபிறகுதான் மறுவேலை என்ற கணக்காய் அவ்வப்போது அனானிப்பின்னூட்டங்களைப்போட்டும் நன்றிசொல்லியும் தமிழ்மணத்தில் தூக்கிவிடுவேன். பத்துக்கும் குறைந்த இப்போதைய பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரியுமே : )

இரண்டுதடவைகள் அனானியாக என்னைத்திட்டியே நான் எனக்கு பின்னூட்டியிருக்கிறேன் யுவர் ஆனர்..

சாரல் பதிவுகளை பல இடங்களிலிருந்து எழுதியிருக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் 2005 யூன் சில பதிவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பிடித்த பதிவுகளில் சாரலில் எழுதிய இந்த யாழ்ப்பாணப் பயணக்கட்டுரையும் கொழுவியில் எழுதிய தமிழ்மணத்தில் யுத்தப்பிரகடனம் என்ற பதிவும் உள்ளடங்கியவை.

வலைப்பதிவு நிறைய நண்பர்களைத்தந்திருக்கிறது. தொடர்பற்றுப்போன நண்பர்களை கூட்டிவந்திருக்கிறது.

என்ர வலைப்பதிவு பற்றி கட்டுரைக்கு என்ரை படம்தானே போட வேண்டும் : )


நான் அழைப்பவர்கள்
கானா பிரபா (இவர் வராவிட்டால் கட்டாயமாக இழுத்து வரப்படுவார்)
வசந்தன் (இவரது ஆண்டாண்டு கால மெளனவிரதத்தை அன்றைக்கு இலங்கைப் பெடியங்கள் கலைச்செழுப்பி கூட்டிவந்திருக்கிறார்கள்)
சாந்தி

This entry was posted on Wednesday, September 2nd, 2009 and is filed under குறிப்புகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 Responses to “வலை மேயவும் வீசவும் வந்த கதை – தொடராம்”

  1. கிருத்திகன் on September 3rd, 2009 at 12:45 am

    இதன்ன அண்ணை… கானா பிரபா அண்ணைக்கு மிரட்டல் வேற விட்டிருக்கிறியள்…
    வசந்தன் அண்ணாவையும் இழுத்தாச்சு… இன்னும் ஒராளை அழைக்கோணும் எல்லோ..(மொத்தம் 4 பேர்)

    உங்கட வழமையான நடையில நல்லா இருந்தது.. இனி மற்றவை ஓடி அஞ்சலைக் கை மாற்ற வேண்டும்….

    ///பின்னூட்டங்கள் குறித்த எதிர்பார்க்கை இப்போ அறவே இல்லாமல் போய்விட்டது. (இது வலைப்பதிவின் முத்தி நிலை)///
    அதுதானே பாத்தன்….

  2. kana Praba on September 3rd, 2009 at 1:18 am

    உங்கட வரலாறை எழுதேக்க சோமி வருவது தவிர்க்கமுடியாத அங்கம் போல ;-)

    நல்லாத்தான் சொல்லியிருக்கிறியள், ஆனா எனக்கு இந்த சங்கிலிப் பதிவுகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஒரு முடிவெடுத்திருக்கிறேன் இந்த நேரத்தில் இன்னொரு அழைப்பா அவ்வ்வ்

  3. தமிழன்-கறுப்பி... on September 3rd, 2009 at 2:56 am

    //(இது வலைப்பதிவின் முத்தி நிலை)//

    உங்கடை படம்தான் போடோணும் ஆனால் கலர்ப்படம் முழுப்படம் போடாணும் ஏனெண்டால் நீங்கள் ஒரு சிறந்த படப்பிடிப்பாளர் எண்டுற பெயரும் இருக்குது.

    உண்மை வசந்தன் அண்ணையை இனி அடிக்கடி மேடைக்கு இழுத்து விடோணும்.

    :)

  4. தமிழன்-கறுப்பி... on September 3rd, 2009 at 2:59 am

    நானெல்லாம் எப்ப முத்தி அடையிறது..இது விடுபட்டுப்போச்சுது..

    :)

  5. சயந்தன் on September 3rd, 2009 at 10:49 am

    கீத் சிநேகிதி பதினொரு பேரைக் கூப்பிட்டிருக்கிறா.. அது அளாப்பியாட்டம் இல்லையோ :)

  6. Saba on September 3rd, 2009 at 10:55 am

    History !!!!

    History is important ;)

  7. சயந்தன் on September 3rd, 2009 at 11:09 am

    History !!!!//

    வரலாறு முக்கியம் அமைச்சரே..

  8. நிமல் - NiMaL on September 3rd, 2009 at 10:23 pm

    இத்தகைய நெடிய நீண்ட கொடிய வலையுலக வரலாற்றை கொன்ற மூத்த பதிவராம் ‘சாரல்’ சயந்தன் வலைப்பதிவு எழுதிய காலங்களில் நானும் நானும் ஒரு வலைப்பதிவராயிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.. பெருமை கொள்கிறேன்.. புளகாங்கிதமடைகிறேன்…!!!

    உங்கள் படத்தை இன்னம் பெரிதாக போட்டிருந்தா பதிவுக்கு இன்னும் கொஞ்சம் கலர்ஸ் கூடியிருக்கும்…

  9. நிமல் - NiMaL on September 3rd, 2009 at 10:25 pm

    முந்தய பின்னூட்டத்திலுள்ள சில பல எழுத்து பிழைகளை போறுத்தருள்க…

  10. மாயா on September 4th, 2009 at 12:34 am

    உங்கட வார்ப்புருவும் கறுப்பு வெள்ளையாக இருக்குது…. படங்களும் கறுப்புவெள்ளையுமாக இருக்குது …. ஏதாவது நுண்அரசியல் ஏதாவது…..

  11. சயந்தன் on September 4th, 2009 at 12:46 am

    மாயா இதுதான் கறுப்பு வெள்ளை அரசியல். இதை சாம்பலாக்கவேணும்.

  12. கொண்டோடி on September 4th, 2009 at 4:40 am

    //பிடித்த பதிவுகளில் சாரலில் எழுதிய இந்த யாழ்ப்பாணப் பயணக்கட்டுரையும் கொழுவியில் எழுதிய தமிழ்மணத்தில் யுத்தப்பிரகடனம் என்ற பதிவும் உள்ளடங்கியவை.//

    நான் வேற ஆரோவெல்லோ கொழுவி எண்டு நினைச்சுக் கொண்டிருந்தன்.

  13. வந்தியத்தேவன் on September 4th, 2009 at 6:03 am

    நல்ல பதிவு.

    //பின்னூட்டங்கள் குறித்த எதிர்பார்க்கை இப்போ அறவே இல்லாமல் போய்விட்டது. (இது வலைப்பதிவின் முத்தி நிலை)//

    அனானிகளினால் தாக்கப்பட்டபோது பின்னூட்ட பெட்டியை எடுக்க இருந்தேன் ஆனால் இப்ப சகலதும் முத்தி நிலை அடைந்து விட்டது. எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையும் உங்களைப்போன்ற மூத்த பதிவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டாயிற்று,

    //கானா பிரபா (இவர் வராவிட்டால் கட்டாயமாக இழுத்து வரப்படுவார்)//

    அவர் ஏதோ விரதமாம். மனிசனுக்கும் வலையுலகில் முத்தி நிலை வந்துவிட்டது.

    //சயந்தன்
    கீத் சிநேகிதி பதினொரு பேரைக் கூப்பிட்டிருக்கிறா.. அது அளாப்பியாட்டம் இல்லையோ //

    சினேகிதிக்கு அந்த அனுமதியை நான் தான் கொடுத்தேன். அவர் என்ரை பக்கத்து ஊர் என்ட அன்பில் தான் அந்த அனுமதி ஆனால் 11 பேரைக்கூப்பிடுவார் என்ற விடயம் எனக்குத் தெரியாது. ஏன் 11 பேர் என்ற ரகசியத்தையும் சினேகிதி இன்னும் சொல்லவில்லை.

  14. Chandravathanaa on September 4th, 2009 at 6:18 am

    சயந்தன்,
    அழைப்பை ஏற்று உங்கள் வலையுலக அனுபவத்தை எழுதியதற்கு நன்றி.

    இன்னும் சில விடயங்களை நினைவுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்.
    உயிர்ப்பு சஞ்சிகையும் உங்களுடையதுதானே.
    எழுநா வந்த போது நாட்டில் இருந்து வருகிறது என்பதில் மிக மகிழ்ந்தேன்.
    வந்த வேகத்தில் அது இல்லாமல் போனது அந்த நேரத்தில் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

  15. Friend of கொண்டோடி on September 4th, 2009 at 10:30 am

    //பிடித்த பதிவுகளில் சாரலில் எழுதிய இந்த யாழ்ப்பாணப் பயணக்கட்டுரையும் கொழுவியில் எழுதிய தமிழ்மணத்தில் யுத்தப்பிரகடனம் என்ற பதிவும் உள்ளடங்கியவை.//

    //நான் வேற ஆரோவெல்லோ கொழுவி எண்டு நினைச்சுக் கொண்டிருந்தன்.//

    அது சரி !!!

  16. சாந்தி on September 5th, 2009 at 6:49 pm

    //நான் அழைப்பவர்கள்
    கானா பிரபா (இவர் வராவிட்டால் கட்டாயமாக இழுத்து வரப்படுவார்)
    வசந்தன் (இவரது ஆண்டாண்டு கால மெளனவிரதத்தை அன்றைக்கு இலங்கைப் பெடியங்கள் கலைச்செழுப்பி கூட்டிவந்திருக்கிறார்கள்)
    சாந்தி //

    அழைப்புக்கு நன்றி சயந்தன். விரைவில் வருகிறேன்.

    சாந்தி

  17. Anonymous on September 16th, 2009 at 12:42 pm

    //மாயா இதுதான் கறுப்பு வெள்ளை அரசியல். இதை சாம்பலாக்கவேணும்.

    ஆஹா… என்னுடைய பின்னூட்டல் கருத்து சாம்பல் பெட்டிக்குள்ளே…

  18. ஆதிரை on September 16th, 2009 at 12:44 pm

    // இதுதான் கறுப்பு வெள்ளை அரசியல். இதை சாம்பலாக்கவேணும்.

    ஆஹா… என்னுடைய பின்னூட்டம் சாம்பல் பெட்டிக்குள்ளே…

  19. இளையதம்பி தயானந்தா on September 19th, 2009 at 10:40 pm

    நல்லாயிருக்கு சயந்தன்

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231