காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்


தமிழ்மணம் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அதன் நிறுவனர் காசி இந்தவாரம் நட்சத்திரமாகத்திகழ்கிறார். நட்சத்திரப்பதிவுக்கான தேவையாக அவர் சிலருக்கு ஐந்து கேள்விகளை அனுப்பிப் பதில்களைக் கோரியிருந்தார். எனக்குக் கிடைத்த கேள்விக்கொத்திற்கான பதில்களை அனுப்பியிருந்தேன். தற்போது திட்டம் மாற்றப்பட்டு அவரவர் தங்கள் தங்கள் தளங்களிலேயே அவற்றை வெளியிடச்சொல்லி ஓலை வந்திருக்கிறது. ஜிமெயிலின் அடி ஆழங்களில் தேடிக்கொண்டிருந்த போது அவரிடமிருந்து வந்த ஓலை கொண்டுபோன பதில்களையும் கொண்டுவந்தது. இனி கேள்விகள் பதில்கள்..

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ஒன்றுக்காக இணையத்தில் தேடி மிகச்சரியாக இல்லாது விடினும் அது தொடர்பான தகவல்களை தமிழிலேயே முடிந்தவரை பெறமுடிகிறது என்பதனால் ஆம் எனச் சொல்லலாம். ஆயினும் விடயப்பரப்புகளில் சமபரம்பல் இல்லாமல் அறிவியல் விடயங்கள் மிகக்குறைந்தும் புனைவுகள் மிக மலிந்தும் கிடக்கின்றன. கணணியும் இணையமும் உள்ள தமிழர்கள் பெரும்பாலானவர்கள் இணையத்தை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு வானொலியை போல.. தொலைக்காட்சியைப்போல.. பாடல்கள் கேட்க.. திரைப்படங்கள் பார்க்க என.. அதைதாண்டி அவர்கள் செல்ல அவர்களாகத்தான் தம்மை தயார்ப்படுத்தவேண்டும்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

பயனை பெறுகிறது. ஆனால் முழுப்பயனையும் அல்ல.. ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); இவற்றில் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. இது இணையம் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்படுவதால் நடைபெறுகிறது. அதேபோல தமிழில் இணையத்தில் வாசித்தலும் பரவலாக நடைபெறுகிறது. அதாவது இணையமுள்ள தமிழர்கள் இணைய பாவனையுள்ள தமிழர்கள் இவற்றை பரவலாகப்பயன்படுத்துகிறார்கள். ஆனால் மின்வணிகம் போன்றதுறைகள் பரவலடையவில்லை என்று சொல்வேன். அதற்கு நம்பிக்கைத்தன்மை போன்ற நுட்பம் சாராத காரணிகளும் உண்டு.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

முன்பே சொன்னதுபோல தெரியாத ஒரு தகவல் குறித்து இணையத்தில் தமிழில் தேடினால் தகவல்களை வழங்குவதில் விக்கிபீடியா முன்னணியில் நிற்கிறது. பலதரப்பட்ட துறைகளில் தமிழ் பரம்பலடைய இவை துணைபுரிந்திருக்கின்றன. இதேவேளை விக்கிபீடியா என்றல்ல.. வலைப்பதிவுகளிலும் தமிழில் அதிக பரவலான துறை சார்ந்த விடயங்களை அதிகம் உள்ளிடுவதனால் தேடல்களில் அவற்றிலிருந்தும் கிடைக்ககூடிய நிலை ஏற்படும். தமிழில் இந்த உள்ளடக்கங்கள் அதிகரிக்க பயன்பாடும் அதிகரிக்கும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

சட்டங்களால் என்ன செய்யமுடியும்? மக்களிடத்தில் தம் மொழி குறித்த ஆர்வமும் அதனையும் இணையத்தையும் பொருத்திப்பார்த்தேற்படும் இயல்பான ஆக்க உணர்வும் ஏற்படவேண்டும். வேண்டுமானால் தமிழில் இணையத்தில் அதிகம் புழங்குவதற்கேதுவாக – தமிழரைச்சார்ந்த – தமிழர்களுக்கான இணையங்களை தமிழ்படுத்திவிடலாம். உதாரணாக நூலகங்களின் இணையங்கள்..

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

5 வருடத்திற்குமுதல் வலைப்பதிவிற்கு வந்தபோது கிட்டத்தட்ட சகல பதிவுகளையும் அறிந்திருக்க முடிந்தது. இப்போது அப்படியல்ல. தமிழில் எழுதுவது குறித்த ஆர்வம் ஆயிரக்கணக்கில் பெருகியிருக்கறது. மகிழ்ச்சி. இணையம் அதனை உடனடியாக எடுத்துச்செல்வதும் பாராட்டுகள் (வசவுகளும்) உடனடியாகவே கிடைக்கின்றன என்பதும்தான் அதிகம் வலைப்பதிவுகளுக்கான உளவியலாக இருக்கவேண்டும். நிறுவன அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைத்தாண்டி எழுத்துக்கள் வரவேண்டியிருந்த நிலையை உடைத்ததும் வலைப்பதிவின் வெற்றி. மற்றும்படி யோசனை கூற எதுவும் இல்லை. எதுவுமே எழுதாமல் பதிவிட்டால் கூட பார்ப்பதற்கு ஆட்கள் இருக்கிற நிலையில் அவரவர்கள் எழுதுகிறார்கள். அவரவர் வாசிக்கிறார்கள். (வலைப்பதிவில் எழுதுவோர் – வாசகர் உறவு குழு மனப்பான்மை நிலையில் உள்ளது). வலைப்பதிவில் துறைசார் எழுத்துக்கள் அதிகமில்லையென்பதை ஒரு குற்றச்சாட்டாக அல்ல.. குறிப்பாகச் சொல்லமுடியும். அதேபோல வாசகர்களும் பின்னூட்டங்களுமே என்ன எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்கின்றன என்பதும் ஒரு குறிப்பு. இதன் சரி தவறுகள் குறித்து சொல்வதற்கில்லை. என்னைப்பொறுத்த வரை எனக்கான வலைப்பதிவுகள் எவையென்பதை கூடிய சீக்கிரமே கண்டுபிடித்துவிடுகிறேன் :)

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் 2004 உருவான அடுத்த (செப்டம்பர்) மாதத்தில் வலைப்பதிந்து தமிழ்மணத்தில் இணைத்து வருபவன் :) ஆதலால் கிட்டத்தட்ட தமிழ்மண வரலாறும் அதனூடு காலத்துக்கு காலம் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். ஏனென தெரியவில்லை. தமிழ்மணத்திற்கு பிறகு நிறைய திரட்டிகள் வந்துவிட்டன. தமிழ்மணத்தையொட்டியும் வருகின்றன. சில தமிழ்மணத்தைவிட மேம்பட்ட சில வசதிகளோடும் வருகின்றன. ஆனால் இன்றளவும் ஒரு குடும்பத்தலைவர் போல தமிழ்மணம்தான் திகழ்கிறது. என்னளவில் 5 வருடங்கள் கூட இருந்துவிட்டோம். இனியும் இருப்போம் என்பதைப்போன்றது. ஒருவேளை எல்லோருக்கும் அப்படி இருக்கலாம்.

தமிழ்மணம் செய்யவேண்டியவை.. என ஆணையிட வில்லை. (பதிவர்களால் சம்பாதிக்கும் திரட்டிகள் பதிவர்களுக்கு எதுவும் செய்வதில்லை என சிலர் சொல்கிறார்கள் :) ஆனால் ஒரு விருப்பம் உண்டு. அது தனித்த பயணர் கணக்கினை உருவாக்கி அதனூடு உட்செல்லின் நமது விருப்பத் தெரிவுகளின் புதிய இடுகை மறுமொழிகளை பார்ப்பது. அதாவது பொதுவான தமிழ்மணமாக இருக்கும் அதேவேளை எனக்கான தனியான தமிழ்மணமாகவும் இருத்தல். எனக்கானவை என நான் அடையாளப்படுத்தியிருக்கும் வலைப்பதிவுகளுக்கானது மட்டும். எளிமையாகசொல்லபோனால் ஒரு கூகுள் றீடர்..

இன்னொன்று.. தமிழ்மணம் சிலநேரம் செய்திகளுக்கான திரட்டியாக தெரிகிறது. செய்திகளை தளங்களில் இருந்து கொப்பி செய்து அவற்றை தங்கள் செய்தி தளங்களில் இட்டு தமிழ்மணத்தில் இணைக்கிறார்கள். தமிழ்மணம் நியூஸ் என்ற தனிப்பக்கத்தை தொடங்கி சகல தமிழ் செய்திதளங்களில் இருந்தும் செய்திகளை ஓடை முறையில் இணைத்துவிடலாம். செய்தி விமர்சனங்கள் வேறு.. செய்தியே வருவது வேறு அல்லவா.. செய்திகளுக்கு என்ன பின்னூட்டம் இடமுடியும்..? இது ஒரு நல்ல செய்தி என்றா..

கொஞ்சம் அதிரடியாக செயற்பட்டால் கட்டுபடுத்தகூடியது என்றே நினைக்கிறேன்.

This entry was posted on Wednesday, August 26th, 2009 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்”

  1. வசந்தன் on August 27th, 2009 at 2:29 am

    //இன்னொன்று.. தமிழ்மணம் சிலநேரம் செய்திகளுக்கான திரட்டியாக தெரிகிறது. செய்திகளை தளங்களில் இருந்து கொப்பி செய்து அவற்றை தங்கள் செய்தி தளங்களில் இட்டு தமிழ்மணத்தில் இணைக்கிறார்கள். தமிழ்மணம் நியூஸ் என்ற தனிப்பக்கத்தை தொடங்கி சகல தமிழ் செய்திதளங்களில் இருந்தும் செய்திகளை ஓடை முறையில் இணைத்துவிடலாம். செய்தி விமர்சனங்கள் வேறு.. செய்தியே வருவது வேறு அல்லவா.. செய்திகளுக்கு என்ன பின்னூட்டம் இடமுடியும்..? இது ஒரு நல்ல செய்தி என்றா..//

    ஓய்! ஈழச்செய்திகள் உப்பிடி அதிகமாக வருதெண்டு சொல்லி அதுகளை ஒண்டாக்கி ஒருபக்கத்துக்க இணைக்கப் போய் ‘தமிழின விரோதி’ எண்டு வசை வாங்கினது தமிழ்மணம். மறந்திட்டீரோ?

  2. சயந்தன் on August 27th, 2009 at 9:32 am

    எல்லாச்சண்டையும் தெரியுமென்றிட்டு இந்தச் சண்டையை மறந்திட்டேனோ..

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231