இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு இசைப்பாட்டு
எனக்குச் சின்ன வயசில இருந்தே ஒரு வலைப்பதிவர் மாநாட்டில கலந்து கொள்ளவேணுமென்று நிரம்ப ஆசை. ஆனா அது ஒருக்காலும் நிறைவேறியதில்லை. ஒருதடவை சிட்னி ரயிலுக்குள்ளை ஸ்ரேயா என்ற பழைய பதிவரை (இப்பவும் எழுதுகிறாவா என தட்டிப்பார்க்க பஞ்சியாக இருக்கிறது.) சந்திச்சுக் கதைத்ததுதான் அதிகபட்சமாக நான் கலந்துகொண்ட நீளமான வலைப்பதிவர் மாநாடாயிருக்கும். அதிலும் அப்ப கோடைகாலமென்றபடியால நான் அடிக்கடி பராக்குப்பார்த்ததாக அவர் குற்றமும் சாட்டியிருந்தார். அதை விட மெல்பேணில் ஜோய் மகேஸ்வரனின் நிகழ்வு ஒன்றில் இடைவேளையில் வசந்தனை சந்தித்துக் கதைத்ததையும் ஒரு சின்ன மாநாட்டில் சேர்க்கலாம். ஒரே வானொலியில் சம காலத்தில் சேவை செய்தும் (சேவைதானே கானா) கானா பிரபாவை கடைசிவரை கண்ணால் காணமுடியவில்லை. கண்டிருந்தால் அதையும் ஒரு பதிவர் சந்திப்பாக்கியிருக்கலாம். இவற்றை விட இன்னும் இரண்டு சந்திப்புக்கள் உள்ளன.சுவிசில் ஒருமுறை மலைநாடான் வீட்டுக்கு வந்திருந்தார். மற்றயது எனக்கும் சாத்திரிக்கும் சபேசனுக்குமிடையிலானது. அது ஜெர்மன் பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு தொடரூந்து நிலையத்தில் நடந்தது. (ஸ்ஸ்ப்பா.. ஒரே பந்தியில நான் சிட்னி மெல்பேண் சுவிஸ் ஜெர்மன் பிரான்ஸ் முதலிய இடங்களைச்சுத்தியவன் எனச்சொல்ல எப்படியெல்லாம் மூக்கைச் சுற்றவேண்டியிருக்கிறது. ) இப்படியாகத்தான் எனது சின்னச்சின்ன சந்திப்புக்கள் நடந்தன.
உண்மையான ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இப்போதைக்கு நிறைவேறப்போவதில்லை என்பதால் எங்கு வலைப்பதிவர் சந்திப்பு நடந்தாலும் அதுபற்றி வரும் பதிவுகளை ஆவலுடன் படிப்பதுண்டு. ஒருகட்டத்தில் எல்லா பதிவர் சந்திப்புகள் குறித்த பதிவுகளும் ஒரே ரெம்பிளேட்டுக்குள் (அறிமுகம்.. பேச்சு.. போண்டா.. தாகசாந்தி) என்று சுற்றிச் சுற்றி வரத்தொடங்கினாலும் படிக்கிற ஆர்வம் தீரவில்லை. அதுபோலத்தான் இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக் குறித்த படங்கள் பதிவுகளையும் பார்வையிடும் ஆர்வம் கொண்டிருந்தேன்.
இதில் ஒரு கூடுதல் சந்தோசம் உண்டு. அது எனது அரசியல். பொதுவில் தேவையற்றது. நாங்களும் இருக்கிறோம் என்ற அந்தச் செய்திக்காகவும் நண்பர்கள் கலந்து கொள்ளும் வலைப்பதிவுச் சந்திப்பென்பதாலும் முதல்மாநாடு என்றதாலயும் எனது ஈடுபாடு இதில் இருந்தது. பதிவர் சந்திப்பு பதிவுகளை எதிர்கொண்டிருந்த நேரத்தில அவர்கள் ஒரு ஆச்சரியத்தை அளித்தார்கள். அது சந்திப்பு முழுதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அந்த நினைப்போது தூங்கச் சென்றதாலேயோ என்னவோ கனவும் அதுவாகத்தான் இருந்தது. அது ஒரு சுவையான கனவு. கனவில் நானும் பதிவர் சந்திப்புக்கு போயிருந்தேன். மாயாவும் வந்திருந்தார். கனவுச்சந்திப்பு என்னவோ ஏதோ திடீரென்று முடிந்ததுபோல இருந்தது. எப்போதும் கனவுகள் முடிகையில் எழும் ஏமாற்றத்தோடு விழித்தபோது இலங்கையில் சந்திப்புத் தொடங்கி ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்து விட்டிருந்தது. சடார் புடார் என எழும்பி தட்டினால் லோசன் கதைத்துக்கொண்டிருந்தார். நேரடி ஒளிபரப்பும் அதனூடான சற்றிங் வசதியும் மாநாட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தோற்றுவித்துக்கொண்டிருந்தன. என்ன.. ஒருவரையொருவர் தொட்டுப்பார்த்துக் கொள்ள முடியாது.
டக்கென்று எல்லோரையும் பார்த்த திளைப்பில் சற்றில் அரட்டைதான் அதிகமாகப்போனது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கொஞ்ச நேரம் கொடுங்கள் என நான் ஊரோடியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே கொடுத்திருந்தாலும் கேட்கிறதுக்கு என்னிடம் கேள்விகள் எதுவும் இல்லை. யாழ்தேவியின் பெயர் குறித்துப் பேசினார்கள். பாமினி தமிழ் 99 மற்றும் ரோமானிஸ்ட் முறைகள் குறித்தும் பேசினார்கள். முதலாமாண்டில் கடிதம் கொடுத்ததிலிருந்து பாமினியைப் பிடிக்குமென்றதால நானொரு பாமினிக்காரன். தமிழ் 99 ஐ முயற்சித்தும் பார்த்ததில்லை. ஆனால் அம்மா என்பதை Amma என எழுதுவதை நான் வெறுக்கிறேன். தமிழ், எழுத்து வடிவம் அழிந்த ஒரு மொழியல்ல. அந்த இடத்தில் பதிவர்கள் பயன்படுத்தும் முறைகுறித்து ஒரு ஓட்டுப்பதிவு நடாத்தியிருக்க வேண்டும் என வசந்தன் சொல்லிக்கொண்டிருந்தார்தான். யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. நான் உட்பட.
சந்திப்புக்கு ஒரு சின்னப்பெடியன் வந்திருந்தான். ஊரோடியிடம் கேட்டேன். அவரது பெயர் யசீர் நசருதீன். வயது 11. அவரது வலைப்பதிவில் அவர் ஒரு பதிவெழுதியிருந்தார். அது இப்படித் தொடர்ந்தது.
நான் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்
நீ அங்கு மரணத்தில் வாழ்கிறாயா?
எனக்கு இங்கு உணவு உண்டு
உனக்கு அங்கு உணவு உண்டா ?
எனக்கு பெற்றோர் உள்ளனர்
உனக்கு பெற்றோர் இருக்கிறார்களா?
நான் பாடசாலையில் கல்வி கற்கிறேன்
நீ அங்கு அகதி முகாமில் என்ன செய்கிறாய்?
பெண்களும் வந்திருந்தார்கள். ஊரோடி ஏழு என எண்ணிச்சொன்னார். நான் பார்த்தவரையில் அவர்கள் யாரும் பேசவில்லை. அவர்களும் பேசட்டும். அவர்களிடமும் மைக் கொடுங்கோ என்று கேட்டுக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். சரி பரவாயில்லை அடுத்த முறை சூம் செய்யக்கூடிய கமெரா பயன்படுத்துங்கோ..
சந்திப்பு அங்கிங்கென இலக்கற்று அலையாமல் திட்டமிடப்பட்ட முறையில் நடந்ததென நினைக்கிறேன். இந்தச் செய்திபரவுவதனூடாக வேறும் பல புதியவர்கள் அதென்ன புளொக்காம் என வருவார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிற ஒரு நிகழ்வை வைக்கலாம். பட்டறை மாதிரியான நிகழ்வுகளை நடாத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கிற நாமும் உதவத்தயாராயிருக்கிறோம். நிகழ்வினை சிறப்பாக்கிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.
0 0 0
இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது பதிவர் சாத்திரி இடையில் வந்து ஈரோப்பிலும் ஒரு சந்திப்பை வைச்சால் என்ன என்று ரண்டு மூன்று பேர் கேட்டதாகச் சொன்னார். ( இந்த முறை எந்த போர்டரோ தெரியாது.) நானும் ஓமண்ணை. இந்தியப்பதிவர் கூட்டம் – இலங்கைப் பதிவர் கூட்டம் எல்லாம் நடக்குது நாங்கள்தான் தனிச்சுப்போனம் என்றேன். அதெல்லாம் கலங்க வேண்டாம். வின்ரர் தொடங்கட்டும் .. வண்டியைக்கட்டுவம் என்றிருக்கிறார். (ரிக்கெற் மலிவாம்) வின்ரரோ சம்மரோ.. ஐரோப்பாவின் நடுவில சுவிஸ் இருக்கிறதால சுவிஸ்தான் எல்லாருக்கும் வசதி என்றதை மட்டும் என் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.




















// அது ஒரு சுவையான கனவு. கனவில் நானும் பதிவர் சந்திப்புக்கு போயிருந்தேன். மாயாவும் வந்திருந்தார். // இப்படியான கனவுச்சந்திப்புக்களில தான் நாம கலந்து கொள்ளமுடியும் என சொல்லாமல் சொல்லவாறியள் போல . . . .
சயந்தன்,
எங்களுக்கும் எல்லாரையும் தொட்டுப்பாக்கோணும் எண்டு ஆசையாத்தான் இருந்தது… என்ன செய்யிறது… முடியாமப் போச்சு..
)
முதல் அனுபவம்தானே சயந்தன், அடுத்த முறை நல்ல கமராவா பாவிப்பம். இணைய உரையாடலையும் சரியாக் கையாளுவம்.
ஊரோடியும் நானும் மடிக்கணிணியில வளைஞ்சு வளைஞ்சு தட்டச்சவேண்டியதா இருந்தது…
ஐரோப்பியப் பதிவர் சந்திப்பையும் நல்லா வையுங்கோ நாங்களும் பார்க்கத் தயாராக இருக்கிறம்.
பிரியமுடன்,
கௌபாய்மது
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு இசைப்பாட்டு
பாட்டு எங்கே….?
இந்தச் செய்திபரவுவதனூடாக வேறும் பல புதியவர்கள் அதென்ன புளொக்காம் என வருவார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிற ஒரு நிகழ்வை வைக்கலாம். பட்டறை மாதிரியான நிகழ்வுகளை நடாத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கிற நாமும் உதவத்தயாராயிருக்கிறோம்.
மகிழ்ச்சியான செய்தி.
ஒரே வானொலியில் சம காலத்தில் சேவை செய்தும் // சம்பளமில்லாத சேவை
அந்தச் சிறுவனின் பதிவு எவ்வளவு தூரம் அவனுடைய சிந்தனை இருக்கிறது என்று பாருங்களேன், நல்ல எதிர்காலம் உண்டு.
சிட்னியில் பதிவர் சந்திப்பென்றால் பெரும்பாலும் சிட்னி முருகன் கோயில் தான். அப்படிப் பார்க்கப்போனா ஒவ்வொரு திருவிழாவும் பதிவர் சந்திப்பு தான் போல
சுவிஸ்/ஐரோப்பா பதிவர் சந்திப்பு சிறப்புற 13ம் வட்டத்தின் சார்பில் வாழ்த்துகள்.
நன்றி சயந்தன்.. எல்லாம் உங்களைப் போல பலரின் ஆசிகளும் ஆசைகளும் தான்.. …
பெண்களும் வந்திருந்தார்கள். ஊரோடி ஏழு என எண்ணிச்சொன்னார். நான் பார்த்தவரையில் அவர்கள் யாரும் பேசவில்லை. அவர்களும் பேசட்டும். அவர்களிடமும் மைக் கொடுங்கோ என்று கேட்டுக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். சரி பரவாயில்லை அடுத்த முறை சூம் செய்யக்கூடிய கமெரா பயன்படுத்துங்கோ..//
உதிலேயே கவனமா இருந்தவையள் நீங்கள் தானோ?
அந்த இடத்தில் பதிவர்கள் பயன்படுத்தும் முறைகுறித்து ஒரு ஓட்டுப்பதிவு நடாத்தியிருக்க வேண்டும் என வசந்தன் சொல்லிக்கொண்டிருந்தார்தான். யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. நான் உட்பட.
//
இது பெரிய அரசியலாப் பொய் நிறைய நேரம் எடுத்து விட்டது.. விட்டாக் காணும் எண்டு நிறுத்த நாங்கள் பட்ட பாடு..
சந்திப்பு அங்கிங்கென இலக்கற்று அலையாமல் திட்டமிடப்பட்ட முறையில் நடந்ததென நினைக்கிறேன்.//
அதில் மிகக் கவனமாய் இருந்தோம்..
நீங்கள் அடிக்கடி வலியுறுத்திய புதியவர்களை எழுதச் செய்ய ஊக்குவிப்பதிலும் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம்..
லோசன் வந்திருந்தவர்களின் இணைய முகவரிகளைத் தாருங்களேன்.. (எப்பிடித்தனிய 7 முகவரிகளைத்தாருங்கோ என்று பப்ளிக்கில கேட்கிறது : )
நல்ல விசயம் தான் சயந்தன் அண்ணே,
எழுதுர ஆக்களிண்ட எண்ணிக்கைய விட எழுதுர விசயம் தான் முக்கியம் இல்லயோ !!! 80 பேர் எழுதின நம்மள மாதிரி வாசிகிற ஆக்கள் பாடு திண்டாட்டம் தான்.
நீக்கள் ஓரு உதவி செய்யிரிக்கள ? நீக்கள் வாசித ஆக்களின்ர பதிவுகளை மாதத்துக்கு ஒருக்க பதிவ பொடுங்க நம்க்கு சுவம்
சபா போன் நம்பர் தந்தால் மாதமொருக்கா போன் பண்ணி வாசித்தும் காட்டலாம். இது இன்னும் சுவமெல்லோ : )
நிறை பதிவர்களை சந்தித்த அனுபவம் மறகக்க முடியாதது…
அட நீங்க வேற சயந்தன்.. பகீ அப்பப திரையில தெரியிர பெயரெல்லாத்தையும் தொட்டுத் தொட்டுப் பாத்தவர். அது மாதிரி நீங்களும் திரையில தெரியிற ஆக்கைளை தொட்டு தொட்டுப் பாத்திருக்கலாமே???
முதலில் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
//ஆனால் அம்மா என்பதை Amma என எழுதுவதை நான் வெறுக்கிறேன். தமிழ், எழுத்து வடிவம் அழிந்த ஒரு மொழியல்ல. //
பாமினி பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தமிழ்99 பயன்படுத்துவது ஆங்கில வழியில் சிந்தித்து தட்டச்சுவதை எனக்குத் தவிர்த்திருக்கிறது.
phonetic முறையில் தட்டச்சும்போது என் மனத்திரையில் முழுவதும் ஆங்கில எழுத்துக்களே ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் தமிழ்99 மாறிய பிறகு, நான் தமிழிலேயே யோசிக்கிறேன், வேகமாகவும் தட்டச்ச முடிகிறது. நேரம் மிச்சமாகிறது, வார்த்தைகள் இலகுவாகக் கிடைக்கின்றன.
//சபா போன் நம்பர் தந்தால் மாதமொருக்கா போன் பண்ணி வாசித்தும் காட்டலாம். இது இன்னும் சுவமெல்லோ : )//
haa haa,உந்த நக்கல், நையாண்டி தான் உங்களிண்ட எழுத்தில பிடிச்சது
.
ஆன, உங்கட குரல் பதிவுகளை கேட்டானான் அதால தயவு செய்து எனக்கு உங்கட குரற் பதிவு வேண்டாம், எதற்க்கு வீண காத புண்ணாக்குவான்
.