சேயோன்! விடுபட்ட சில நட்புக் குறிப்புக்கள்
பிளான் பண்ணி ஒருவனை பிரண்ட் ஆக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா? காதலிக்கவே முடிகிறது. நட்பென்ன நட்பென்று சப் என்று முடித்துவிடாதீர்கள். என்னையும் கொஞ்சம் பில்டப் கொடுக்க அனுமதியுங்கள். ஏனெனில் நான் பிளான் பண்ணியே ஒருவனைத் தோழனாக்கினேன். தோழன் என விளிப்பதற்கும் ஒரு காரணமுண்டு. ஏனெனில் அது புரட்சிகரமாயிருந்தது. இவ்வளவும் சொன்னபிறகு என்ன பிளான் என்றதைச் சொல்லத்தான் வெட்கமாக் கிடக்கிறது. பம்மிக்கொண்டு கடந்து போகலாம். பரவாயில்லை. புரட்சிகளும் வெட்கங்களும் என்றுவிட்ட பிறகு உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிளானுகள் தோன்றலாம். அவைகளும் தோன்றல்களும் சாதாரணமெனிலும் உண்மையென்றொன்றிருக்கிறதல்லவா. அதைச் சொல்ல வேண்டும்.
பள்ளிக்குட மூன்றோ நான்காம் நாள் அது. யாரையும் தெரியாத நாட்களாயிருந்தன அவை. அப்பதான் அவரைப்பார்த்தேன். அவரையல்ல.. அவரது ரியூசன் பாக்கைப் பார்த்தேன்.. பாக்கையல்ல.. அதுக்கையிருந்த அந்தக் கசெட்டை.. சொன்னால் நம்புங்கோ. யாரையாவது சினேகிதனாக்கிக்கொள்ள வேண்டுமென அலைந்த மனசு டப்பெண்டு குறித்துக் கொண்டது நீதான்ரா என்ரை பிரண்ட் என்று. என்ரை மனசு குறித்துக்கொண்டால் பிறகென்ன : ) அடுத்த இரண்டாவது மணியில் அவர் எனது பிரண்ட். அது இங்கு முக்கியமில்லை நண்பர்களே.. அடுத்த நான்காவது மணி நேரத்தில் அந்த கசெட் என்ரை பாக்கில் இருந்தது இரைதேடிய கழுகொன்றின் கால்களில் அகப்பட்ட கோழி குஞ்சைப்போல
இப்படியாகச் சிக்குப்பட்டவர்தான் சேயோன்.
0 0 0
சேயோன் கண்டிப்பு நிறைந்தவர். அதை முதல் நாட்களிலேயே நான் கண்டுகொண்டேன். நட்பு வலையில் அவரைச் சிக்கவைத்து பெற்றுக்கொண்ட கசெட்டில் நான் சும்மா இருக்க முடியாத வியாதியில் திருவிளையாடல் என பெயரெழுதிக் கொடுத்த போது அவர் எள்ளும் கொள்ளுமாய் வெடித்துச் சொன்னார். “இனி உனக்கு சப்ளை இல்லை” என்று. நட்பென்று நான் போக இவன் என்னை ஒரு கஸ்டமரா டீல் செய்திருக்கிறான் என்றது கவலைதான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அந்தநேரம் அவரொரு பொன் முட்டையிடும் வாத்து. அதை விட என்னைத்திட்டும் உரிமை அவருக்கில்லாமல் வேறு யாருக்கு
0 0 0
காதலென்றது உடடியாக கவர்ச்சி காமம் என ஏகப்பட்டப் புள்ளிகளின் உருவானாலும் காலப்போக்கில் அவற்றிற்கு அப்பாலான புரிந்துணர்வொன்றில் வாழ்க்கை ஓடுகிறதல்லவா. அப்படித்தான் சேயோனுடனான நட்பும். அதற்காக காதலுக்குரிய காரணத்தை இங்கு பொருத்திப் பார்க்க கூடாது நீங்கள். சொல்லப்போனால் முதலிரண்டு பந்திகளையும் நீங்கள் வாசித்திருந்தால் அந்தக்காரணங்களும் பொருந்தி வருகின்றன தான்.
கொழும்பில் எனது முதலாவது நண்பராயிருந்தார் சேயோன். வகுப்பில் எனது அருகிலிருந்தார். இரண்டாவது வரிசையில் நாங்கள் இருந்தோம். தனுஸ், நான் சேயோன் அனந்தன் நிரஞ்சன் (கிளின்டன்) எனது ஞாபகம் சரியாக இருந்தால் இதுதான் அந்த வரிசையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் சைவ்பிரியாணி கொண்டு வருவேன். இடைவேளை மணியடிக்கவும் பாய்ந்து பறந்து சுழன்று அதை எடுத்துத் அமுக்கும் கூட்டத்தில் அவரிருப்பார் எப்போதும். எல்லாம் முடிந்தபிறகு எஞ்சிய பார்சல் கட்டிய தினமுரசுப்பேப்பரில் மீனாவையோ ரோஜாவையோ பார்த்து பெருமூச்செறிவேன் நான். அந்த நாட்களில் சில நாட்கள் பள்ளிக்கூடம் முடிய சேயோன் வீட்டில் நின்று ரியூசனுக்குப் போக வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் அவர் வீட்டில் பயிற்றங்காய் குழம்பும் பருப்புக்கறியும் பச்சையரிசிச் சோறும் தினமும் இருக்கும். எனக்கும் சேர்த்தே இருக்கும். என்னதான் இருந்தாலும் பயிற்றங்காய் கறிக்கு பிரியாணி கட்டுப்படியாது அல்லவா..
0 0 0
வகுப்புக்கு அருகில் இருந்தது அந்த நாணயக்குற்றியிட்டுப் பேசும் தொலைபேசி. அதில இருந்து கள்ளக் கனக்சன் எடுத்து திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கண்டி என கன ஜோராக ஓடிக்கொண்டிருந்தது அந்த தற்காலி ரெலிபோன் பூத். ஒரு தொலைபேசி கொஞ்சம் வயர் ஒரு ஊசி. இவ்வளவும்தான். கொஞ்சக் காலங்களில் பிடிபட்டுவிட்டது. சேயோன் ஒரு மாணவத் தலைவனாக இருந்ததால் அவரைத்தான் அதிபர் விசாரித்தார். “ஓம் சேர்.. நானும் கண்டனான். ஒரு வெள்ளைநிற, தலையை மேவி இழுத்த ஒருவர்தான் இந்தக் கள்ளக் கனெக்சனை எடுத்துச் செய்தவர். நான் அடையாளம் காட்டுறன் என அதிபரை அலைக்கழித்ததுதான் மிச்சம்.
எனக்குத் தெரியும். அந்த அங்க அடையாளங்கள் ஒருபோதும் சேயோனுக்குப் பொருந்தியதில்லை. சிறிலங்கா ரெலிகொம் அப்போ முழு அரசுரித்தாய் இருந்தது. அரச சொத்துக்களை நஸ்டப்படுத்த வேண்டுமென்ற புரட்சிகர விதை அவர் மனதில் இருந்ததை அவரே அறியமாட்டார்.
0 0 0
சேட்டை விட்டியெண்டால் உதை வாங்குவாய் என சேயோனை ஒருவ பேசியபோது நான் அருகில் இருந்தேன். இல்லை ஐந்தாறு அடி தள்ளித்தான் நின்றேன். அதை ஒளிந்து நின்றதென்கிறார்கள். பூசைகள் முடிந்த பிறகுதான் போய்க் கூட்டிவந்தேன். அது ஏதோ போன்/ பெண் பிரச்சனை. சேயோனிடமிருந்து நம்பரை வாங்கிய யாரோ சீரியசாக விளையாடி விட்டார்கள். அவர் அந்த விசயத்திலும் ஒரு சப்ளையர் தான். ஒரு டிஜிற்றல் டயரியில எக்கச்சக்க போன் நம்பர்கள் இருந்தன. எனக்குத் தந்ததில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான அவரது நடவடிக்கைகளில் நானும் இருந்திருக்கிறேன். போனைப் போட்டு சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடுவது நினைவிருக்கிறதா சேயோன். ?
இவ இருக்கிறாவா என்றும் இன்னார் கதைக்கிறதென்றும் யாரும் அக்காமாரைக் கொண்டு பதிவு செய்து வைத்து ஒவ்வொருக்காவும் அதை ஒலிக்கவிடுவதும் அது முன்னைப்பின்னை ஓடுவதும்.. ரீ வைன்ட் செய்து திரும்ப முயற்சிப்பதும்.. அட.. வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்கிறோம் நண்ப,
0 0 0
ஒரு முறை சேந்தன் சேர் என் மீது இன்ப நிழலை நானே எழுதியதாக குற்றம் சுமத்தினார். சேயோன் நீயாவது சொல்லியிருக்கலாமே அதை நான் எழுதவில்லையென்று.. ? இதற்கு முதல் நான் எழுதியவற்றை பத்திரிகையில் வந்தவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத நீங்கள் அன்று மட்டும் ஏன் அமைதியாயிருந்தீர்கள்..? பதில் சொல் நண்ப பதில் சொல்..
0 0 0
சேயோன் எங்களை நுவரெலியாவிற்கு கூட்டிக்கொண்டு போனார். அவரா அல்லது தினேசலிங்கமா அல்லது கீரனா என்று இன்றுவரை சரியாகத்தெரியவில்லை. நிறையத் தலைமைத்துவப் போட்டிகள் யார் வழிநடத்துவது என்று. நானெல்லாம் சேயோன் உன் தலைமையிலிருந்தேன். அன்றிரவு கீரன் என்னை வெருட்டிய போது நீ ஓடிப்போய் ஒளிந்து கொண்டாய். நினைவிருக்கிறதா ? நானும் ஓடி வந்தொளிந்த இருண்ட அறையில் உனது ஸ் ஸ் என்ற மூச்சும் யாரது என்ற அச்சக்குரலும்
சரி போகட்டும். காலைக்கடனை கழிக்கவே முடியாத இடத்தினின்று நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருந்தபோது நீ மட்டும் நைசாக போய் உன் சொந்தகார வீடொன்றில் அலுவலை முடித்து விட்டு வந்தாய். நாங்கள்அதிகாலை ஏதோ அருவிப்பக்கம் ஒதுங்கி பிறகு ஆற்றில் கையை வைத்து கொஞ்ச நேரம் கையைக்காணவில்லையென்று தேடிக்கொண்டிருந்தோம்.
0 0 0
இன்னும் சேயோன் வீட்டு மொட்டைமாடி அந்தப் பைனாக்குலர் ஒரு பழைய ரி வி எஸ் சட்டப்புத்தகங்கள் நிறைந்த அந்த முன் அறை உன் நெற்றியில் விழும் முடியென தொலைந்து போன எல்லாவற்றையும் மீள நினைவுறுத்தி முடிக்கிறேன். நன்றி




















superb!!
சேயோன் இவ்வாறு வரலாற்றில் இடம்பிடிக்குமளவுக்கு ஓர் உன்னதமான நண்பராயிருந்திருக்கிறாரா…!!!
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” – குறள்423
சயந்தனுக்கே உரிய கதையின் சுவாரசியத்துக்கான பொய்களுடன் கதை SUPER!
//சேயோனிடமிருந்து நம்பரை வாங்கிய யாரோ சீரியசாக விளையாடி விட்டார்கள். அவர் அந்த விசயத்திலும் ஒரு சப்ளையர் தான். ஒரு டிஜிற்றல் டயரியில எக்கச்சக்க போன் நம்பர்கள் இருந்தன. எனக்குத் தந்ததில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான அவரது நடவடிக்கைகளில் நானும் இருந்திருக்கிறேன். போனைப் போட்டு சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடுவது நினைவிருக்கிறதா சேயோன். ?//
இப்பதானே விளங்குது அந்த நேரம் கனவீடுகளில கண்ட கண்ட நேரமெல்லாம் ஏன் ரெலிபோன் மணி ஒலிச்சதெண்டு.
சாந்தி
Hi Sajenthiran,How r u? This is the first time i read your article.
Do u remember our “Apputhady Drama” in reminton tution.
As friends we tortured u a lot that time.