கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு


இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.

இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடுகிறது.
அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் முன்னுரை இன்னும் நிறையச் செய்திகளைச் சொல்கிறது.

நாவல் தயாரிப்பில் வந்தபோது ஒரு பரிசோதனை முயற்சி செய்து பார்த்தோம். இலங்கையின் எண்பதுகளில் வந்த புத்தக அட்டைகளுக்கு என ஒரு தனியான ஸ்டைல் இருந்தது. ஆரம்பகால வீர கேசரிப் பிரசுர நாவல்கள் மற்றைய நாவல்களில் இவ் அட்டைப்படங்களில் ஒருமிப்பைக் காணமுடியும். கே. எஸ் பாலச்சந்திரனது நாவலும் கதைப்படி எழுபதுகளில் நிகழ்கிறது. ஆகவே அட்டைப்படத்தை அந்தக் காலங்களுக்குரியதாக செய்யலாம் என்றொரு எண்ணம். இலங்கைத் தமிழ் நாவல்களில் பரீட்சயம் உள்ளவர்களுக்கு இந்நாவலின் அட்டைப்படம் நாவல் பேசப்போகும் காலத்தை நினைவு படுத்தும் என நினைக்கின்றேன். தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஓவியர் ரமணி நாவலுக்கான அட்டைப்படத்தை தயாரித்துத் தந்தார் அவருக்கு நன்றி. இரண்டொரு தினங்களில் தமிழகத்திலும் ஓரிரு வாரங்களில் கனடாவிலும் ஓரிரு மாதங்களில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் மற்றும் வடலி இணையத்தில் உடனடியாகவும் இந்நாவல் கிடைக்கும்.

0 0 0

பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் முன்னுரை

பன்முகக் கலைஞன் பாலா வனொலி,தொலைக்காட்சி,மேடை,திரைப்படக் கலைஞர் நேர்முக வர்ணனையாளர், (சிறுகதை,திரைக்கதை,கட்டுரை) எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,தொகுப்பாளர், இத்தனை முகங்கள் இருந்தும், தன் வித்துவத்தைச் செருக்காய்க் கொள்ளாமல், பண்போடு பழகும் பக்குவம் தெரிந்தவர்.
“எவனுக்கு எவனும் தாழ்ந்தவன் இல்லை அவனவன் திறமை- ஒரு துறை” – ஈழத்து ரத்தினம்

இதனை நன்கு உணர்ந்து, எவரையும் மதித்து நடப்பவர் என்பதால் பல்துறை சார்ந்த விற்பன்னர்களின், பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர். சிறுவர்மலர், இளைஞர்மன்றம், எனப் படிகள் பல தாண்டி, 1967ல் ஒரு “அறிவிப்பாளனாக” வானொலியில் என்னை முழுநேரமும் பிணைத்துக்கொண்ட பின் நான் சந்தித்த கலைஞர் வரிசையில், “பாலா” தனித்துவமானவர். அவர் வானொலிக் கலைஞராகத் தெரிவானது-1970ல். இயல்பான தனித்துவமான குரலினால், நகைச்சுவை உணர்வினையும், அதேவேளை பாசமும், சோகச்சுவையும் நிரம்பிய உணர்வுகளை இவரால் எப்படியெல்லாம் பிரதிபலிக்க முடிகிறது என, நான் வியந்ததுண்டு.

postcoverநண்பர் எஸ்.ராம்தாஸ் எழுதி, என்னால் நெறிப்படுத்தப்பட்ட, “கோமாளிகள் கும்மாளம்” வானொலி ரசிகர்களின் அமோக வரவேற்பினைப்பெற்றுப் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது பலர் அறிந்ததே. ஆனால் அதனைத் தொடர்ந்து ஒலிபரப்பான, “தணியாத தாகம்”(சில்லையூராரின் எழுத்தில்,கே.எம்.வாசகர் நெறிப்படுத்திய வானொலி நாடகத்தொடர்) கோமளிகளின் கும்மாளத்ததை விடப் பலமடங்கு ரசிகர்களது குடும்பத்து உணர்வுகளின் பிரதிபலிப்பாய் வரவேற்பினைப்பெற்றது என்றால் அதற்குக் காரணம், அந்தக்கதாபாத்திரங்களை தம் குரலால் உயிருள்ள பாத்திரங்களாய் மாற்றி, வானலைகளில் வலம் வரச்செய்த கலைஞர்களே. குறிப்பாக “சோமு” என்ற பாசமிகு அண்ணனாய் தன் மிகையற்ற நடிப்பால், ஆயிரமாயிரம் உள்ளங்களை ஈர்த்த, கே.எஸ்.பாலச்சந்திரனை அந்த நாளைய வனொலி நேயர்கள், இன்றும் பசுமையுடன் நினைவு கூர்வார்கள்.
1965ல் நெல்லியடி, ஐக்கிய கலசாலையில் ஆரம்பித்த தன் மேடைநாடகப் பயணத்தின் வெள்ளிவிழாவை 1990ல் இவர் கொழும்பில் கொண்டாடியபோது இவரது கலைப்பயணத்தின் பரிணாமம் எத்தகைய பெருமைக்குரியது என்பதை அறிந்து பலரும் வியந்தனர். இதிகாசம்,நகைச்சுவை,சமுக,நவீன, பா நாடகம் எனப் பரந்து விரிந்த இவரது நடிப்புத்திறமையின் ஆளுமை, 1973ல் முதன் முதலாய்த் தமிழுக்கு இவர் அறிமுகப்படுத்திய “தனி நடிப்பு” நகைச்சுவைச்சித்திரத்தின் மூலம், புதுப் பரிமாணம் பெற்றது. 1974ல் உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டுக்காக முழுக்க முழுக்க பெண்களே பாத்திரங்களை ஏற்று நடிக்து, நான் நெறிப்படுத்திய, “வீணைக்கொடியோன்” நாடகத்தை மேடையேற்ற யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்குப் போயிருந்தவேளையில் தான் இவரது தனிநடிப்பின் திறன் கண்டேன். பின் அந்தத் தனி நடிப்புக்குக் கிடைத்த பெரும்வரவேற்பு இவரை “ அண்ணை றைற் பாலச்சந்திரன்” என அடையளம் காணும் அளவு நிலைத்தது. ஓர பேரூந்து நடத்துனரின் அன்றாடப் பணியின் அவஸ்த்தைகளை குணச்சித்திரம் கலந்து வரிக்கு வரி, ரசிகர்களைவ வாய் விட்டுச்சிரிக்கும் வகையில் இவர் அமைத்திருந்த பாணி, நமது இலங்கைக் கலையுலகத்துக்கு ஒரு புதிய அறிமுகமாய் அமைந்திருந்தது. தனது பிரதியை, தானே தயாரிக்கும் ஆற்றலை அந்த நாளிலேயே கொண்டிருந்தவர் பின்னாளில் படைப்பாற்றல் மிகு எழுத்தாளராகப் பரிமளித்தில் வியப்பில்லை

தான் பிறந்த மண், கரவெட்டியை, கதைக்களமாய்க்கொண்டு, இவர் எழுதிய, “கிராமத்துக்கனவுகள்” நாடகத்தொடரை, அன்றைய “~ப்றா யுனிக்கோ
பினான்ஸ்” நிறுவனத்துக்காக நெறிப்படுத்தி வனொலிக்கென அமைத்துத்தரும் பாக்கியம் எனக்குக்கிட்டியது. அந்த நாடகத்தை நான், நெறியாழ்கை செய்யும்போது, நாடகபாத்திரங்களுக்கு குரல்கொடுக்க வந்திருந்த கலைஞர்கள், ஒருமுறையேனும் பிரதியை வாசித்துப்பார்க்காமல், முதல்ஒத்திகையின்போதே அப்பாத்திரங்களோடு ஒன்றிப்போவதை அவதானித்திருக்கிறேன். அந்த அளவு வசனங்களில் இயல்புத்தன்மையும், உயிரும் கலந்திருந்தமையே காரணம். வானொலிக்கென உருவாகிப் பின், வர்த்தக ரீதியில் “ஒலியிழைப்பேழை” வடிவில் வெளியான முதல் நாடகம் என்ற பெருமையும் அதற்குக்கிடைத்தது அதற்குப்பின், தனது புகழ்பெற்ற நகைச்சுவைச் சித்திரங்களான “அண்ணை றைற்” – “வாத்தியார் வீட்டில்” போன்ற நாடகங்களையும் இவர் ஒலியிழைப்பேழைகளாக வெளியிட்டார். இம்மூன்று ஒலியிழைப்பேழைகளும் பின்னாளில் ஒரு மகத்தான கலைஞருக்கு உந்து சக்தியாகப் பயன்படப்போகின்றன, என்பதை அன்று அவர் நினைத்திருக்கமாட்டார்.

பத்மஸ்ரீ கமல்ஹாஸன் தனது, “ஹேராம்” படத்துக்கு, அமைதியான சூழலில் திரைக்கதை எழுத, பாரிஸ் மண்ணில் தங்கியிருந்தபொழுது, அங்கு பணிபுரிந்த, நமது மண்ணின் மைந்தர்கள் பேசிய பேச்சு வழக்கினால் கவரப்பட்டு, தானும் இந்த மொழிவழக்கைப் பேசி நடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாராம். “தெனாலி” திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப்படமாயினும் அந்த பாத்திரம் யாழ்மொழி வழக்கைக் கொண்டதாக அமையவேண்டும் என்று கமல் விரும்பினார். (இயக்குனரும்,தயாரிப்பாளருமான, திரு.கே.எஸ்.ரவிக்குமாருக்கு இதில் உடன்பாடில்லை) ஆனால், நகைச்சுவைப்படமென்று வரும் ரசிகர்களுக்கு நமது மண்ணின் துயரத்தினை, ஒன்றிரண்டு காட்சிகளிலாவது சிறுகண்ணீர்த் துளியாச்சொல்லவேண்டும் என்பதே கமலின் அடிப்படை நோக்கம் என்பதை பின்னால் அறிந்துகொண்டேன். எனவே யாழ் மொழிவழக்கில் வசனங்களை அமைக்கவும் பேசவும் கமல் எனது உதவியை நாடினார். ஏற்கனவே வானொலியில் யாழ் மொழி வழக்கிலமைந்த நாடகங்களை நெறிப்படுத்தித் தயாரித்தவன் என்ற வகையில் நானும் இசைந்து, கமலைச் சந்தித்த வேளையில், கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது, மூன்று ஒலியிழைப்பேழைகளையும் அவர் கையில் கொடுத்து, முதலில் இவற்றைக்கேட்டு மொழி இயல்பினை பரிச்சியப்படுத்திக்கொள்ளுங்கள், பின் பயிற்சி செய்யலாம் என்று கூறினேன். அடுத்த நாள் காலை என்னால் நம்பவே முடியாத வகையில் அவர் பேசிக்காட்டியபோது, அவரது கிரகிக்கும் தன்மையின் ஆற்றலைக்கண்டு வியப்பிலாழ்ந்தேன். ஆயினும் இம்மொழிநடை தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியாமல் போனால் “ஹேராம்” படத்துக்கு ஏற்பட்ட கதி, தன் படத்துக்கும் வந்துவிடக்கூடாதே என்று, திரு.கே.எஸ்.ரவிக்குமார் ஆதங்கப்பட்டதால், தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொற்களையும், உச்சரிப்பையும் மாற்றிமைத்து, யாழ்மொழிவழக்கின் சாயலை மட்டும் காட்டும் வகையில் அந்தப்பாத்திரத்தில் நடித்து முடித்தார் கமல். அந்த வகையில், தெனாலி பாத்திரத்துக்கு தோன்றாத்துணையாய் விளங்கியவர் நண்பர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே.

1992ம் ஆண்டு, இலங்கை அணி, கிரிக்கட் விளையாட்டில் “டெஸ்ட்” அந்தஸ்த்து பெற்றபின் முதன் முதலாக நடைபெற்ற “அவுஸ்திரேலிய-இலங்கை” டெஸ்ட் விளையாட்டின்போது, நேர்முகவர்ணனை செய்தவர்கள் வரிசையில் பாலாவுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு. 1991ல் “தெற்காசியக் கூட்டமைப்பின்” விளையாட்டுப் போட்டிகளின்போது, கூடைப்பந்துப்போட்டிக்கும் நேர்முக வர்ணனை செய்யக்கூடிய ஆற்றலைப் இவர் பெற்றிருந்தார்.

இலங்கை வானொலியில், “கலைக்கோலம்”சஞ்சிகை, “விவேகச்சக்கரம்”பொது அறிவுப்போட்டி. புலம்பெயர்ந்தபின், கனேடியவானொலிகளில், “மனமே மனமே” “ஓல்ட்-இஸ்-கோல்ட்”, “தோழியர் கும்மாளம்” போன்ற நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர். கனேடியத் தொலைக்காட்சியில்-இவர் “வை.ரி.லிங்கம்” எனும்பாத்திரமாய் உருமாறி நேர்முகம் காணும் நகைச்சுவைத் தொடரில், நானும் கலந்துகொண்டு உரையாடியபோது, சாதாரணமாக நகைச்சுவை உணர்வுடன் பேசத்தெரியாத எனக்கும் கூட நகைச்சுவை உணர்வனைப் பொங்கிப்பிரவகிக்க வைத்தவர்.

“நாடுபோற்ற வாழ்க”, “நான் உங்கள் தோழன்”, “அவள் ஒரு ஜீவநதி” “வாடைக்காற்று” “~ர்மிளாவின் இதயராகம்” “அஞ்சனா(சிங்களம்),டீடுநுNனுஐNபுளு (ஆங்கிலம்)ஆகிய இலங்கைத்திரைப்படங்களில் இவர் பதித்த தடங்கள் தனித்துவமானவை. அவற்றில் தன்னிகரற்றது “வாடைக்காற்று” திரைப்படத்தில் அவர்ஏற்றபாத்திரம். அந்தப் படம் வெளியிடப்பட்ட சில நாட்களின்பின்,
“பைலட் பிரேம் நாத்” படத்துக்காக நடிகர் திலகத்துடன் படப்பிடிப்புக்கு வந்திருந்த, நண்பர் மேஜர் சுந்தர ராஜன் “விஜயா ஸ்டூடியோவில்” வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்த்து, பாலாவின் நடிப்பை வியந்து என்னிடம் பாராட்டியபோது, ஒரு இலங்கைக்கலைஞன் என்ற வகையில், நான் பெருமிதம் கொண்டேன்.

நமது மண்ணில் தினகரன்,வீரகேசரி,நாளிதழ்களில் “மலர் மனாளன்” எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள், சிரித்திரன் இதழில் எழுதிய “சிரிகதைகள்” பின்னாளில் புலம்பெயர்ந்த மண்ணில் வெளிவரும் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் என, இவரது எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டேயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது
இதோ! முதன்முதலாக ஒரு நவலைப்படைத்துள்ளார் பாலா.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்”

finalrgbஇதன் அச்சுக்கோர்த்த முதல்பிரதியை வாசித்தபொழுது 35 ஆண்டுகள் பின்னோக்கி என் நினைவுகளை இழுத்துச்சென்றது. ஏறக்குறைய அதே காலகட்டத்திலேயே,தன் கதைக்களத்தையும் சம்பவங்களையும் உருவாக்கியிருக்கிறார் பாலா. எழுபதுகளின் நடுப்பகுதியில்-மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களான “ஜஃபர்-ஜீ-பிரதர்ஸ்”; நிறுவனம் வானொலியில் “மீனவர் விரும்பிக்கேட்ட பாடல்கள்” எனும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க விரும்பி என்னை அணுகியபோது, மீனவர்களே பங்குகொள்ளும் ஒருநிகழ்ச்சியை அவர்கள் வாழும் சூழலுக்கே சென்று ஒலிப்பதிவு செய்து, ஒலிபரப்பினால் நன்றாய் இருக்குமே என ஆலோசனை சொன்னேன். அது ஜனரஞ்சகமாய் இருக்குமா? என்ற சந்தேகத்துடன் அரை மனதாக மூன்று மாதங்கள் ஒப்பந்தத்துடன் ஆரம்பித்தார்கள். “மீனவ நண்பன்” என்ற பெயரில் நான் தயாரித்தளித்த அந்த நிகழ்ச்சி நேயர்களின் பெரும் வரவேற்பைப்பெற்று மூன்றரை வருடங்கள் தொடர்ந்தது. இலங்கைத் தீவில், தமிழ் பேசும் மீனவர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று ஒன்றிண்டு நாட்கள் அங்கு தங்கியும், ஆழ்கடல் வரை அவர்களோடு பயணித்தும் அவர்களது வாழ்க்கைச் சூழலின் சிறப்பினை ஆய்ந்து அறிந்த அன்றைய அனுபவத்தை, மீண்டும் இரைமீட்டி மகிழும் வாய்ப்பினை இந்த நாவல் எனக்குத் தந்தது. பாலா, பிறந்து வளர்ந்த கரவெட்டி கிழக்கின் சூழலிருந்து தன்னைப் பெயர்த்தெடுத்து ஒரு “காலச்சக்கரத் தேரிலேறி” பின்னோக்கிச்சென்று 70 பதுகளின் இறுதியில், “மான்பாஞ்ச வெளிக்கிராமத்தில்” தன்னைத்தானே பிரசவிக்கச்செய்து அவர்களுடனே வாழ்ந்து அந்தத் துயரம்தோய்ந்த வாழ்வை அனுபவித்து உருகி உருகி எழுதியிருக்கிறார். தன் எழுத்தால், பயன்படுத்தும் சொற்களால், வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்க்கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலின் முதல் அத்தியத்தின் முதல் பந்தியை வாசிக்கும்போதே நீங்களும் மான்பாஞ்ச வெளிக்கும்,புங்குடு தீவுக்கும்,இழுத்துச் செல்லப்படுவீர்கள். கச்சான் காற்றின் தழுவல் உங்களை வெற்றுடம்பாக்கித் தழுவிச்செல்லும். விரிந்து பரந்த வெண்மணற்கடற்கரையும், பச்சைநிறம் கொண்டு சாமரம் வீசும் தென்னையும் அதன் ஓலைகளும் உங்களுக்குப் பரிச்சியமாகும். அலைகடலோடு போராடி ஜீவமரணப்போராட்டம் நடத்தும் அவர்களது வாழ்க்கையை நீங்களும் வாழ்வதுபோன்ற உணர்வுக்குள் ஈர்க்கப்படுவீர்கள். அதன்பின் நீங்கள் ஒரு அந்தோணியாகவோ, ஸ்டெல்லாவாகவோ, மாறி இந்தக்கதையை வாழ்ந்து அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். கதையும் அதன் முடிவும் நீங்கள் வாசித்து அனுபவிக்க வேண்டியது. அதை சுருக்கமான வரிகளில் நானே சொல்லிவிட்டால் உங்கள் சுவாரசியம் குறைந்து போகலாம்.

“செம்மீன்”எனும் பெயரில் மீனவர் வாழ்கையை, மலையாள மொழியில் ஒரு காவியமாய்த் தந்த தகழிசிவசங்கரம் பிள்ளையும், “ஒருகடலோரக் கிராமத்தின் கதை” எழுதிய தோப்பில் முஹம்மது மீரானும், “கடலும் கிழவனும்” நாவல் தந்த ஏர்ணஸ்ட் ஹேமிங்வே-யும் இவருக்கு உந்து சக்தியாய் இருந்ததாகவும். பேசாலைக்கிராமத்தில் “வாடைக்காற்று” படப்பிடிப்புக்காகச் சென்றிந்த வேளையில் அவர்களது வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் பரிச்சியப்பட்டதாகவும் சொல்கின்றார்;. ஆனால், சம்மட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோணி,அவனது தங்கை எலிசபெத்,சின்னத்தங்கை மேரி, இளம் விதவையான ஸ்டெல்லா எனத்தொடரும் அத்தனை பாத்திரங்களாகவும் மாறி அவர்கள் கோணத்திலிருந்து அந்தந்தக் குணஇயல்புகளோடு பேசும் வார்த்தைகளும், அவர்களது மனஉணர்வுகளைச்சித்தரிக்கும் வரிகளும், மீனவர் வாழ்க்கைக்கே உரிய சம்பிரதயாங்களைச் சித்தரிக்கும் பாங்கும், அற்புதம்,அச்சரியம்! வேறொரு சூழலில் இருந்துகொண்டே அவர்களது வாழ்கை முறைமைகளையும், சம்பிரதாயங்களையும்,தொழில் சம்பந்தமான நடைமுறையையும்,குண இயல்புகளையும், எப்படி இவரால் சித்தரிக்க முடிகிறது.?
உலகளாவிய ரீதியில், இந்த நாவல் வாசகர்களைச்சென்றடைந்தால், சிறந்த படைப்புகளைச் சீர்தூக்கிப்பார்த்து விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், நமது மண்ணுக்கும் பெருமைதேடித்தரும்

எல்லோருக்கும் பொதுவான இறையின் அருளால் அது நிறைவேற வேண்டுகிறேன்.

நமது மண்ணின் படைப்பாளனுக்குக் கைகொடுக்கும் “வடலி” பதிப்பகத்துக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள்
அன்புடன்
பி.எச்.அப்துல் ஹமீத்
0 0 0
இரண்டொரு வாரங்களில் வெளியாகவுள் வடலி வெளியீடான அபராதி நூலின் அட்டைப்படம் இது
coverpost
அபராதி – குற்றம் புரிந்தவன்

This entry was posted on Wednesday, August 5th, 2009 and is filed under குறிப்புகள், புத்தகங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231