நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..?
000
ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிறைந்து விட்டிருந்ததனால்.. வெளிச்சமாவது இருட்டாவது.. புதுவை இரத்தினதுரையின் பொறுப்பிலிருந்த கலைபண்பாட்டுக் கழகத்தின் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் கருணாகரன். நான்அறிய அண்மைக்காலம் வரை அவரே அதன் ஆசிரியர்.
000
2003 இல் ஒருநாள். கொழும்பில் ரவி அருணாச்சலம் எழுதிய காலமாகி வந்த கதையின் வெளியீட்டுக்கு கருணாகரன் வந்திருந்தார். அமைதிக் காலமது. நிகழ்வு முடிந்த பிறகு கருணாகரனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். சற்று சிலநாட்களுக்கு முன் தினக்குரலில் வெளியாயிருந்த எனது சிறுகதையொன்றின் புண்ணியத்தில் அவருக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவராலும் அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தது புளுகமாகவும் இருந்தது. தொடர்ச்சியா எழுதுங்கோ என்றார் அவர். அவ்வாறு தொடர்ச்சியாக எழுதினால் ஏதோ ஒரு பொழுதில் நான் நல்ல சிறுகதைகள் எழுதக்கூடும் என அவர் நம்பினாரோ என்னவோ..
000
2005 யூன். கிளிநொச்சி திருநகரிலிருந்த தேசியத்தொலைக்காட்சியின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போது அதன் இயக்குனராயிருந்தார். கிட்டத்தட்ட 10 வருசக்கனவை கேட்டேன். வெளிச்சத்துக்கு ஆக்கம் எழுதித்தந்தால் போடுவியளோ.. கருணாகரன் சிரித்தார். எழுதித்தாரும் பாப்பம் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அந்த அலுவலகத்திற்குள் நிலாந்தன் தவபாலன் ஆகியோரும் இருந்தார்கள். அரசியல் குறித்த பேச்சுத் தொடர்ந்தது.
000
கருணாகரனோடு நண்பர் அகிலனுக்கு அண்மைக்காலம் வரை தொடர்பிருந்தது. கருணாகரன் ஒரு வலைப்பதிவையும் வைத்திருந்தார். பிறகு… யுத்தம் எல்லாவற்றையும் தின்னத் தொடங்க அவருடனான எல்லாத் தொடர்புகளும் அறுந்து போனது. யுத்தம் வன்னியை முழுவதுமாக விழுங்கியது. பெப்ரவரி இறுதியில் என நினைக்கிறேன். ஜெயமோகன் தன்னுடைய வன்னி என்கிற கட்டுரையொன்றில் தனது நெருங்கிய இலக்கிய நண்பர் ஒருவரை போர் காவுகொண்டதாக எழுதியபோது பதட்டமாக இருந்தது. ஜெயமோகன் யார் எவர் என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் ஜெயமோகனும் கருணாகரனும் நீண்டகால நண்பர்கள் என்பது தெரிந்திருந்தது. பதட்டத்துடன் ஜெமோவிடம் விசாரித்த போது அவர் அது கருணாகரன் இல்லையென்பதைச் சொன்னார்.
000
onkarunaஒருவருடங்களுக்கு முன்பாகவே கருணாகரன் அண்ணை எழுதிய கவிதைகள் சிலவற்றை வெளியிடுவதற்காக பெற்றிருந்த சிலர் கனடாவில் இருந்தார்கள். வடலியின் வெளியீடாக அவரின் கவிதைத் தொகுதியொன்றை வெளியிடுவதற்காக அவற்றை அவர்கள் தொகுத்துத் தந்தார்கள். மொத்தம் 50 கவிதைகள் தொகுக்கப் பட்டு வெளியாகியிருக்கிறது கருணாகரனின் பலி ஆடு கவிதைத் தொகுதி. கருணாகரன் அண்ணையின் தொடர்பு இப்போது இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதுவும் தெரியாது. ஏதோ ஒரு பொழுதில் அந்தச் செய்தியை அவரிடம் சொல்லுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே உண்டு.
000
வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்குகுழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்
சூரியன் வந்ததா சென்றதா
நானறியேன்
நிலவின் ஒளியும் மறந்து போயிற்று
நிலம் அதிர்கிறது
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தக நெடில்
கபாலத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கிகளிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்..
பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா..
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக்கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா..
இந்தப் பதுங்கு குழிக்கு
நம் எதிர்காலத்தைக் காப்பாற்றும்
கருணையும் வலிமையுமிருக்கிறதா..
அல்லது
எதிரியிடம் பலியிடும்
ஒற்றனைப் போல்க் காத்திருக்கிறதா..
000
அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்கு முன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தினில் வெளிவருகிறது
-வடலி
பலி ஆடு
வடலி வெளியீடு
மே 2009
மேலும் விபரங்களுக்கும் வாங்கவும் இங்கு அழுத்துங்கள்.
(தமிழக முன்னணி புத்தக கடைகளில் இப்போது கிடைக்கிறது.)




















Leave a Reply