சின்ராசு மாமா என்கின்ற துரோகி


சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக்கு என அதை வித்துப்போட்டு கடனை அடைப்பார். வட்டி கட்ட மனிசியின்ரை சங்கிலி காப்பையும் விற்பார். ஆனா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல அவர் வலைகளோடை காத்திருந்தார். “பொறு பொறு பிரேமதாசா எல்லாம் சரிப்பண்ணுவான்” “என்ன இருந்தாலும் சந்திரிக்கா ஒரு பொம்பிளை. அவள் எங்கடை கஸ்ரங்களைத் தீர்ப்பாள்” “ரணில் செய்வான்போலதான் கிடக்கு” என அவர் காலாகாலத்துக்கும் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் “உவங்கள் பூழல்மக்கள் ஒன்றும் புடுங்கமாட்டாங்கள். எங்கடை சொந்தக் கடலம்மா என்ற காலம் வராட்டி நாங்கள் உப்பிடியே கரையில கிடக்கவேண்டியதுதான். அவனவன் வந்து அள்ளிக்கொண்டு போகட்டும்” என்றார். கடலுக்கை இயக்கம் நேவியை அடிக்கிற நேரமெல்லாம் அவர் பேப்பரை ரண்டுமூன்று தடவை படிப்பார். சிலநேரம் சத்தம் போட்டும் படிப்பார்.

சின்ராசு மாமா கடலை ஒருபோதும் கடல் என்றது கிடையாது. கடலம்மா அல்லது அம்மா அல்லது சீதேவி இப்படித்தான் சொல்லுவார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. ஆனா வீட்டுக்கை எப்பவும் ஒரு கடல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். “உந்த வலையளை வேறை எங்கயாவது கொண்டுபோய் பொத்தலாம் தானே” என்றால் அவர் சிரிப்பார். “எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே ? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு எண்டபடியால இந்த வாசம் எப்பவும் இருக்கும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னை முதலில் கடலுக்குள் கொண்டுபோனவர் சின்ராசு மாமா. ஆழமொண்டும் இல்லை. கரை தெரிகிற தூரம்தான். கட்டுமரத்தில் களங்கண்ணி வலிக்க அவர் கூட்டிக்கொண்டு போனார். அது உலாஞ்சி உலாஞ்சிக்கொண்டு போனது. கடலுக்குள் இரண்டு பேர் குதித்து ஒவ்வொன்றாக வலைத்தடியைப்பிடுங்கி தடிகள் வலைகள் என்றெல்லாத்தையும் சுத்தி மரத்தில் ஏற்றினார்கள். வெள்ளி நிறத்தில் மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. மரத்தில என்னைவிட்டு அவர்கள் கடலுக்கை இறங்கின நேரம் நான் கத்தத்தொடங்கியிருந்தேன். “நான் போப்போறன்.. கூட்டிக்கொண்டே விடுங்கோ..”
சின்ராசு மாமா கெக்கட்டம் போட்டுச் சிரிச்சார். “உன்ரை வயசில உசரப்போய் ஐஞ்சு நாள் கிடந்திட்டுவந்தனாங்கள். தெரியுமே.. ” பிறகு டக்கெண்டு அமைதியானார். “இப்ப.. இந்தா கரையைத்தடவிக்கொண்டு இருக்கிறம். இருந்துபார் ஒரு காலம் வருமடா..”

எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம். ஒருதரம் இதைச்சொல்லி “கடல் சனியன்” என்றபோது சின்ராசு மாமா ஓங்கியொரு குட்டு விட்டார். கடல் பரவாயில்லையென்று நான் நினைச்சன். “கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்” என்றார் அவர். நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு 97 இல் வலைப்பாடு கிராமத்தில் இந்தியாக்கு வெளிக்கிட்ட நூற்றுஐம்பது பேரை கடலம்மா விழுங்கித்தள்ளியபோது நான் கரையில் நின்றேன். “சின்ராசு மாமா ஏன் பொய் சொன்னார்” என யோசித்துக்கொண்டு.

அப்ப அவர் அனலை தீவில வாடிபோட்டுத்தொழில் செய்த நேரம். என்னையும் அனலைதீவுக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நான் கேட்டேன். சின்ராசுமாமா என்னை கல்லுண்டாய் வெளியால கூட்டிக்கொண்டுபோனார். பொம்மை வெளி நாவாந்துறை கடல்களோரம் வந்து ரவுணுக்குள் ஏறி சுற்றிக்காட்டினார். “எட அனலைதீவு நல்லாத்தான் டெவலப் ஆகியிருக்கு. பிறகென்ன.. ” என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அனலைதீவுக்கு றோட்டு இருக்கா என்றது ஒரு டவுட் ஆகத்தான் இருந்தது. “மடையா காரைதீவுக்கே றோட்டிருக்கேக்கை அனலைதீவுக்கு இருக்காதா என்றார் அவர். அவர் சொன்னாச்சரி.

பிறகு எல்லாம் மாறியது. நேவியின்ரை கப்பல் கடலின்ரை அடியில அவ்வப்போது தெரியத்தொடங்கியது. இரவுகளில் கடலுக்கை வெடிச்சத்தங்கள் கேட்டன. எல்லா மீன்பிடி வள்ளங்களும் கரையில கவிண்டு கிடந்தன. நேவியை உச்சிப்போட்டு சிலர் போயிட்டு வந்தார்கள். அப்பிடிப்போன பரன் அண்ணா ஒருநாள் வராமலேயே போனார். ரண்டு மூண்டு நாள் கரையில சோறு தண்ணி இல்லாமல் அவரின்ரை மனிசி காத்திருந்தா பிள்ளைத்தாச்சி வயிற்றோடு..

சின்ராசுமாமா தன்ரை மூன்று வள்ளங்களையும் கொண்டு கிளாலிக்கு வெளிக்கிட்டார். “இனித் தொழில் சரிவராது. கிளாலி ஓட்டம் செய்வமெண்டு போறன்” என்றார் அவர். ஆனையிறவிலும் பூநகரியிலும் ஆமி இருக்க யாழ் குடாநாட்டுச் சனங்கள் கிளாலிக் கடலால வன்னிக்கும் வவுனியாக்கும் கொழும்புக்கும் போய்க்கொண்டிருந்தினம். அதுக்கையும் நேவிக்காரன் வந்து இடையில சனத்தை மறிச்சு வெட்டியும் சுட்டும் தன்ரை விளையாட்டைக்காட்டிக் கொண்டுதான் இருந்தான். சின்ராசு மாமாவின் மூன்று வள்ளங்களும் கிளாலிக் கடலில் இரவுகளில் ஓடின. ஒரு வள்ளத்தோடு மிச்ச இரண்டு வள்ளத்தையும் கயிற்றால் இணைத்து அவரே ஓட்டியாவும் இருந்தார். அந்தநேரம் அவரின்ரை பொக்கற்றுக்கை சிகரெட்டுகள் எட்டிப்பார்த்தன.

திடீரென்று ஒருநாள் சின்ராசு மாமா ஓடிவந்தார். “அவன் அங்கை கிளாலியெல்லாம் வந்து பிடிச்சிட்டான். வள்ளங்கள் கரையில நிக்குது. ” என்று பதைபதைத்தார். மூன்றோ நாலு நாளில் ஒபரேசன் யாழ்தேவியை புலிகள் முறியடித்து இராணுவத்தினரை விரட்டியடித்தனர் என்ற செய்தி வந்தபோது “கிளாலியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வள்ளங்களை இங்காலை கொண்டுவரும்” எனப் போனார். போனவர் 3 வள்ளங்களினதும் எரிந்த எலும்புக்கூடுகளைத்தான் கண்டார்.

அன்றிலிருந்து சின்ராசுமாமா ஒடுங்கிப்போனார். கரைவலை களங்கண்ணியென்று போறதையும் நிப்பாட்டினார். வருத்தங்களும் வந்து ஆளும் நல்லா கொட்டுண்டு போனார். “என்ரை சாம்பலை இந்தக்கடலுக்கை கொட்டுங்கோடா” என்றெல்லாம் புசத்தினார்.

பிறகு யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சு கடலுக்கை நேவிட்டை காட்ட ஸ்பெசல் ஐடென்ரி காட் எல்லாம் கொடுத்து இத்தனை மணிக்குப்போய் இத்தனை மணிக்கு வா என்று நேரத்தைக் கட்டுப்படுத்தி தீடீரென்று போகாதையென்று நிறுத்தி கடலில வந்து மீனைப்பறித்து என எல்லாவற்றையும் நடாத்திக்காட்டியது. பிள்ளைகளுக்காகவும் கடனுக்காகவும் இதெல்லாத்தையும் கடப்பதாய் அவர் சொன்னார்.

0 0 0

சின்ராசுமாமா கதைத்தார். “இப்ப நான் சிகரெட்டெல்லோ பிடிக்கிறன்” என்றார் அவர். இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்லை கடல் தடையெல்லாம் விலத்தி மீன்கள் கொழும்புக்கு போகுதாம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவரது கடலம்மா திரும்பவும் தன் மடியைச் சுரக்கத்தொடங்கியிருப்பாள்.
ஆனால்…
ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?

சின்ராசு மாமா இந்தக் கேள்விகளை எல்லாப்பக்கமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். உப்புச்சப்பில்லாமல் “சந்தோசம் ” என்றேன்.

“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?

This entry was posted on Tuesday, July 14th, 2009 and is filed under குறிப்புகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 Responses to “சின்ராசு மாமா என்கின்ற துரோகி”

  1. tamilcircle on July 14th, 2009 at 12:35 pm

    சின்ராசு மாமா என்கின்ற துரோகி – சயந்தன்

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5988:2009-07-14-10-18-21&catid=75:2008-05-01-11-45-16

  2. Anonymous on July 14th, 2009 at 2:09 pm

    good post

  3. சினேகிதி on July 14th, 2009 at 4:40 pm

    கதை இன்னும் வாசிக்கேல்ல ஆனால் தலைப்பைப் பார்த்துப் பயந்திட்டன் ஏதோ எங்கட சின்ராசு மாமா பற்றித்தான் எழுதிட்டடிங்கிளோ என்றடு. பெரியராசு மாமா நல்லவர்)

  4. சயந்தன் on July 14th, 2009 at 10:41 pm

    இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

    எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

    ஆசிரியர் : ஒருபேப்பர்.
    கதையின் முடிவு :

    சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

    ஆசிரியர் தமிழரங்கம்
    கதையின் முடிவு :

    சின்ராசு மாமா ஓடிப்போய் குசினிக்கை ஒரு உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். ஓடமுதல் அவர் சொன்னார். மீனவத் தோழர்களே.. நாம் நம்மைத்திரட்டி கூட்டுப்புரட்சியை ஏற்படுத்தி – அதனூடாக நமது கடலை நமக்காகப்பெறுவோம். நமது எதிரி ஆமிக்காரன் மட்டுமல்ல.. சம்மாட்டியாரும்தான்.” முதலில் எல்லோரும் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். சம்மட்டியார் ஊரைவிட்டு ஓடிப்போயிருந்தார். பிறகு எல்லோரும் ராணுவ முகாமுக்கு ஓடினார்கள்.

    ஆசிரியர் சத்தியக்கடதாசி
    கதையின் முடிவு

    சின்ராசு மாமா சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்லுறன் கேளுங்கோ . வெள்ளாளர் மீன்பிடிக்க கடலுக்கை போவதில்லை என்ற காரணத்தால தான் ஓம்.. அந்த ஒரு காரணத்தினால தான்.. இதுவரை காலமும் புலிகள் நாங்கள் சுதந்திரமா மீன்பிடிக்க ஒரு வழியைச் செய்து தரேல்ல. இப்ப ராணுவம் அதைச் செய்திருக்கு. அந்த ஒரு காரணத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்கே எல்லோரும் பாடுங்கள்.. நமோ நமோ தாயே.. நம் சிறிலங்கா.. நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி

  5. அருண்மொழிவர்மன் on July 14th, 2009 at 11:17 pm

    கதை நன்றாக வந்திருக்கிறாது. அதிலும் ’’ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?” இந்த வரிகள் சொல்லும் மனநிலை நாம் பலரிடம் (பிறைடம் மட்டும் எதிர்பார்ப்பார்கள்) அவதானித்த ஆனால் நடைமுறாஇயில் எவருமே பின்பற்றாத ஒரு மன நிலை…

    கதைக்கு மூன்று முடிவுகள் தந்திருப்பதும், அவற்றிற்கான தளங்களாக 3 வலைப்பதிவுகளை சொன்னதும் கூட நன்றாகவே இருந்தது…

  6. கண்டும் காணான் on July 15th, 2009 at 2:03 am

    சயந்தன், சின்ன ராசு மாமா போன வாரம் இலங்கை தேசிய தொலைக்காட்சியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பை மறந்து விட்டீர்களா? அதில் சின்ராசு மாமா , தனது படகுகளை எரித்தது புலிகள் தான் , இலங்கை ராணுவம் அல்ல என்றும் புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாக தான் , முன்னர் அவ்வாறு மாற்றிக் கூறியதாக தெரிவிதிதிருக்கிறார்.

  7. கனகசபை on July 15th, 2009 at 5:14 am

    அட கண்டும் காணான் எண்டு பொருத்தமாத்தான் பேர் வைச்சிருக்குது பிள்ளை.. பிள்ளை . அப்ப சின்னராசு மாமா .. என்ன சொல்லியிருக்க வேணும் எண்டு நினைக்கிறாய்.. நீ.. 25 வருசமா சின்னராசு மாமா.. தன்ர தொழில் மயிர் மட்டை எல்லாத்தையும் விட்டுப்போட்டு. யாரைச் சுமந்தாரோ.. கடைசியில் வேலியே பயிரை மேய்ந்த கணக்கா.. மண்மூட்டைகளாத் தாங்கள் அடுக்கப்பட்டதைச் சொல்லேல்ல எண்ட மனக்குறை போல உனக்கு.. இல்லாட்டி.. இராணுவம் தான் முழுக்க முழுக்க காரணம்.. புலிகள் தரப்பில் தவறேதுமில்லை எண்டு பொய்சொல்லி… சாகச்சொல்றியோ அவரை… உனக்கென்னடாப்பா.. நீ இலங்கை தேசியத்தொலைக்காட்சி பாக்கிறாய்.. பாவம் சின்ராயர் அவருக்கு அடுத்தநேரத் தேத்தண்ணிக்கான வழிகளே பிரச்சினை.. ம்.. அப்படிச் சொல்லி சின்ராயர் செத்தாலும் நீ என்ன செய்வாய்.. நாடுகடந்த தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிகளில.. அவருக்கு அஞ்சலிகளை உனக்கு ஓய்வுநேரத்தில பாத்திட்டு.. விடியக் கக்கூசுக்கு சுகமாப்போவாய்.. சின்ராயருக்கு அப்படியே அதுக்கு.. 2மணித்தியாலம் லைனாம்.. ம்…. ம்… ஏதோ யோசிச்சு கதையுங்கப்பு.. வாயால போராடினது போதுமப்பு.. அங்க முகாமில போய் இரண்டு நாள்.. இருந்திட்டு வாங்கோ.. அங்க இராணுவம் உள்ள விடாதெண்டா… இராமேஸ்வரம் முகாம்.. போய் இரண்டு நாள் கடல்ல குண்டி கழுவும் உம்மட வருத்தங்கள். சரியாகும்…

  8. Anonymous on July 15th, 2009 at 6:16 am

    //நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி// சயந்தன் அது பூரணி இல்ல..சீரணி. ஒரு சேட்டும் ஜீன்ஸும் வச்சுக் கொண்டு உலகம் பூராவும் சுற்றி அசோகனுக்கு அடுத்ததாக ஆயுதங்களைக் களைந்து பவுத்தத்தை தழுவிய சுகன் அண்ணாவிடம் கேளூங்கோ சரியாக பாடிக் காடுவார். இப்பிடி நமது நாட்டின் தேசிய கீதத்தை தவறாக சொல்லக் கூடாது.

  9. Anonymous on July 15th, 2009 at 6:24 am

    சயந்தன் மேல பின்னூட்டம் போட்டுட்டு தேசிய கீதத்தை ரசிச்சுப் பாடினதில பெயரை போட மறந்துட்டன். மற்றது கனசபை அண்ணை, ராமேஸ்வரம் கடல் தண்ணில குண்டி கழுவ கோஸ்ட்கார்ட்டிட்ட பெர்மிசன் வாங்கோணும்.கண்டும் காணான் 3 நாள் கியூ பிரிவு பொலிசில அலைஞ்சு இதை வாங்க வேணும்.

    சயந்தன் இந்த கதைக்கு நீங்கள் இன்னும் பல முடிவுகள் எழுதலாம். ஆனந்த விகடன் …அநிச்ச……கீற்றூ….தினகுரல்…. என்ன தமிழ் நாட்டு பிரபல இதழ்களில் எழுதுவதாக இருந்தால் கடைசியில தலைவன் இருக்கிறான். அவன் வெளியே வரும் நாளில், நாம் நமது கடலில் விடுதலைப் பாட்டிசைத்து மீன் பிடிப்போம் என்று முடிக்க வேண்டியிருக்கும்.

  10. சோமி on July 15th, 2009 at 6:25 am

    அட திரும்பவும் மறந்துட்டன். என்னோட பெயர் போட…கடைசி 2 அனானியும் நாந்தான்

    சோமி

  11. சோமி on July 15th, 2009 at 6:30 am

    சயந்தன் மேல பின்னூட்டம் போட்டுட்டு தேசிய கீதத்தை ரசிச்சுப் பாடினதில பெயரை போட மறந்துட்டன். மற்றது கனசபை அண்ணை, ராமேஸ்வரம் கடல் தண்ணில குண்டி கழுவ கோஸ்ட்கார்ட்டிட்ட பெர்மிசன் வாங்கோணும்.கண்டும் காணான் 3 நாள் கியூ பிரிவு பொலிசில அலைஞ்சு இதை வாங்க வேணும். சயந்தன் இந்த கதைக்கு நீங்கள் இன்னும் பல முடிவுகள் எழுதலாம். ஆனந்த விகடன் …அநிச்ச……கீற்றூ….தினகுரல்…. என்ன தமிழ் நாட்டு பிரபல இதழ்களில் எழுதுவதாக இருந்தால் கடைசியில தலைவன் இருக்கிறான். அவன் வெளியே வரும் நாளில், நாம் நமது கடலில் விடுதலைப் பாட்டிசைத்து மீன் பிடிப்போம் என்று முடிக்க வேணும்

  12. கண்டும் காணான் on July 15th, 2009 at 6:58 am

    சந்தோசம் கனகசபை அண்ணை. உங்கண்ட வைத்தியத்தை முயற்சி செய்யுறன் அப்பவாவது இந்த வருத்தம் மாறுதா எண்டு பாப்பம். ஆனா சோமீ இந்த மருந்தெடுக்க போகேக்க நேவிக்காரன் தடுத்துப் போட்டானாம். உங்களுக்கு யாரண்ணை அனுமதி வாங்கி தந்தது ? சொல்லுங்கோவன் நீங்கள் குணமானது போல நாங்களும் ஆகிக் காட்டுறம்.

  13. சயந்தன் on July 15th, 2009 at 10:42 am

    ஆ.. அப்பிடியா. கண்டும்கானான்.. எனக்குத்தெரிய சின்ராசுமாமா சாப்பாட்டுக்கு கியூவில நின்று கால் நோகப்படுக்கிறதாகக்கேள்வி. அவருக்காரோ சொன்னவையாம்.. கவலைப்படாதேங்கோ.. அமெரிக்காவில கண்டும் காணாமலும் ஆட்கள் இருக்கமாட்டினம். உங்களை கட்டாயம் வெளிய எடுத்து விடுவினம் என்று. சின்ராசுமாமா இப்ப அதை நம்பிக்கொண்டு இருக்கிறாராம்.

  14. கண்டும் காணான் on July 16th, 2009 at 5:31 am

    தமிழர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அது அமெரிக்காவோ , கனடாவோ , சுவிசோ கண்டும் காணாதவர்களாக இருக்கவேண்டியதுதான்.
    எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.இந்தக்கதையில் சின்ராசு மாமா தொலைக்காட்சியில் அப்படி பேட்டி கொடுத்தாலும் தற்போதிருக்கும் ஈழச் சூழ்நிலையில் அது நியாயமே. //“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?// என்ற ஒரு மனப் புலம்பல் தான் இன்று இந்த கதையின் சின்னராசு மாமாவிடம் மட்டுமல்ல் , ஈழத்தில் தங்கியிருக்கும் அநேகமான தமிழ் மக்களிடம் குடி கொண்டுள்ளது. அன்றாட ஜீவனாபாயதுக்கே பாடுபட வேண்டியிருக்கும் போது, உரிமை பற்றி எவரால் சிந்திக்க முடியும்?
    இதை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை தூரோகிகள் என்று முத்திரை குத்த எவருக்கும் அருகதை அல்ல. குறிப்பாக ஈழப் போராட்டத்தை எந்தவித உணர்வுமின்றி ஒரு தமிழ் மசாலாப் படம் போல பார்த்து வரும் “ஒரு சில” புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கோ அல்லது இதைவைத்து பிழைப்பை ஓட்டும் “சில” தமிழக அரசியல்வாதிகளுக்கோ எந்த யோக்கியதையும் இல்லை. ( நான் அனைத்து புலம் பெயர் தமிழர் மற்றும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை குறிப்பிடவில்லை அதனாலேயே “சிலர்” என்று அழைக்கின்றேன் )மக்களுக்காக உழைத்த அந்த வைதியர்களுக்காக அப்போது ஒலிக்காத குரல்கள் எல்லாம் இப்போது “தூரோகிகள்” என்று உரத்து ஒலிக்கின்றன. ஆனால் இங்கே கல்லெறிவதற்கு யாருக்கு தகுதியுள்ளது ?

  15. வாயுபுத்திரன் on July 16th, 2009 at 5:32 pm

    உந்த சின்ராசு மாமா துரோகியானது மாதிரி எனக்கும் ஒண்டு நடந்தது. கனடா இலிருக்கும் நண்பியுடன் சற் பண்ணின போது ( போனமாதம்) இஞ்சை சனம் கஸ்டப்படுது அதையும் கவனிக்கவேணும் எண்டு சொன்னதற்கு எனக்கு துரோகிப் பட்டமும் அவங்களை விட்டுட்டு வந்த சனம் சாகவேணும் எண்ட சாபமும் அந்த தமிழ்(?!) நங்கையிடமிருந்து கிடைத்தது. நீங்கள் எழுதினது கதையில்லை நிஜம்!!!!

    நன்று

  16. Anonymous on July 23rd, 2009 at 3:07 pm

    சயந்தன், நல்லவேளை இதை புதினம் தமிழ்நெட்டுக்கு அனுப்பவில்லை!

    புதினம்:

    “தற்போது சின்னராசு மாமாவை லண்டனில் உள்ள உறவினர்கள் தொடர்புகொள்ள முயற்சித்தபோது எந்த பலனும் கிடைக்கவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி சோதனைச்சாவடி ஒன்றில் இவரிடமிருந்த சிகரட்டுப் பெட்டியை இராணுவச் சிப்பாய் ஒருவர் பறிக்க முயன்றதாகவும், அதில் ஏற்றபட்ட தகறாறின் பின்னரே இவர் காணமல் போனதாகவும் அறியமுடிகிறது!

    Tamilnet:

    Later Mr. Sinnarasu Mama found dead 500m from a check point which is located in the Analai Tivu (ãΝæĹåì TîVü) junction. Also few Cigarette Boxes found in the close proximity of the area which is commonly used by SLA.

  17. பதி on July 23rd, 2009 at 3:50 pm

    நல்ல பதிவு…

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231