ஆ(வா)ய்வுத் தொல்லையும் `ஆ´ என்ற வாய்களும்


ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக் குண்டுகளுக்கும் வானிருந்து உயிர்குடிக்கும் எமப் பறவைகளின் கொலைக் கொத்தல்களிலிருந்தும் தன்னை மனைவியை சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றி இளைப்பாற எங்காவது ஒரு மரநிழல் கிடைக்காதா என ஓடிய இடம்பெயர்வு வாழ்வின் அவலத்தினை வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் இன்றும் உலகின் எங்கெங்கோ தெருக்களில் திரியும் ஆடும் பாடும் வேலை செய்யும் விளையாடும் குழுச் சண்டைகள் பிடிக்கும் எந்த ஈழத்தமிழர்களும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் இடப் பெயர்வுகளும் அதன் வலி மிகுந்த வாழ்வும் ஈழத்தமிழர் எல்லோருக்கும் பொதுவானது. அனுபவித்தவர்கள் அனுபவிக்கின்றவர்கள் என்ற இரு பிரிவுகளே இருக்கும் வித்தியாசம். இனி அனுபவிக்கப் போகிறவர்கள் என ஒரு பிரிவை உருவாக்கலாமோ..?
000
தற்போதைய யுத்த நிலைமையும் அதில் புலிகளின் நில இழப்புக்களும் இங்கே புலம் பெயர் நாடுகளில் பார்க்குமிடமெங்கும் பேசும் பொருட்களாகி விட்டிருக்கின்றன. நிலங்களை இழத்தலில் ஏற்படும் யுத்தம் சாரா மக்களின் மானுட துயரத்தினைத் தவிர (தவிர என்று சொல்வதினூடாக அதனை குறைத்து மதிப்பிடவில்லை. ) வேறைதையும் சொல்வதற்கு எனக்கு ராணுவ ஆய்வுத் தகுதி இல்லை.

ஒருவகையில் அதுவும் நல்லதுக்குத் தான். அல்லது நானும் என் பங்குக்கு விரக்தியை விதைத்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கும்.
000
கொசுக்கள் போல அதிகரித்து விட்ட ராணுவ ஆய்வுகளை ஏகத்துக்கும் இணையப் பக்கங்களில் பார்க்க முடிகிறது. ஒரு வகையில் மக்கள் மனதில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்ட அல்லது சுதியேற்றிய ஆய்வுகள் இவைதான். புலிகள் போர்நிறுத்தத்திலிருந்து விலகிய இரண்டாவது நாளே யாழ்ப்பாணம் வீழும் எனச் சொன்ன ஆய்வுகள் முதல் கடந்த நான்காம் திகதி சார்க் மாநாட்டிற்கென அறிவித்திருந்த அரசியல் சார் யுத்த நிறுத்தம் முடிவடைவதோடு புலிகளின் ஆறு வருட யுத்த நிறுத்தமும் முடிவடையக் கூடும் என எழுதிய ஆய்வுகள் வரை..

அப்பப்பா.. எத்தனை ஆய்வுகளடா.. அதில்த்தான் எத்தனை கதைகளடா..

வாராந்த ஆய்வுகளின் இறுதி வரிகளில் தப்பாமல் ஒரு பஞ்ச் டயலொக் இடம்பெறும். எது எவ்வாறெனினும் அடுத்த நாட்களில் புலிகள் தமது பாய்ச்சலை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே உள்ளன. என்றவாறு அது அமையும்.

இவ்வாறு யதார்த்தத்தைப் புறக்கணித்து (என்னளவில் யதார்த்தம் என்ன என்பதனை புலிகளின் இராணுவ மையம் நன்றாகவே உணர்ந்திருந்தது என நம்புகிறேன். ) ஊதப்பட்ட சங்கொலிகளும் பேரிகைகளும் தான் இன்றைய மக்களின் சோர்வு நிலைக்கு காரணமாயிருந்திருக்க முடியும். (இதில் வெற்றிச் செய்தியினை எதிர்பார்த்தலையும் மக்களின் இத்தகைய மனநிலை super hit திரைப்படங்களை எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஒப்பானது என்ற ஒரு குற்றச் சாட்டும் உண்டு. )

ஆயுத வளத்திலும் ஆளணி வளத்திலும் அரச இயந்திரத்தை விட குறைவான வலுவுடைய புலிகள் இதுவரை காலமும் பெற்று வந்த வெற்றிகள் அவர்களது மூலோபாயத்தின் வெற்றிகளே. அந்த யதார்த்தத்தினை மக்களுக்கு கூறாமல் வெட்டுறம் புடுங்கிறம் வெற்றிக் கொடி நாட்டுறம் என ராணுவ ஆய்வுகளை புறநானூற்றுக் கணக்கில் எழுதினால் பின்னால் மக்கள் புறுபுறுக்கத்தான் செய்வார்கள்.
000
மேற்கூறிய ஆய்வுகள் தவிர்த்து இன்னொரு வகையான ஆய்வுகள்.. அல்லது அடிமன விருப்பின் எழுத்துரு வெளிப்பாடுகளையும் காண நேர்கிறது. வெம்பி வீங்கி விபசாரம் பாசிசம் என கலந்து கட்டி ஒரே விசயத்தையே பல்வேறு கட்டுரைகளில் எழுதும் இவைகளும் சுவாரசியாமன எழுத்துக்கள் தான்.

சிறிலங்கா அரச இராணுவத்தின் முன்னேற்ற வன் முயல்வுகளின் போது சில இடங்களில் சண்டையற்றும் சில இடங்களில் சண்டைகளின் போது இராணுவத்தினரின் கை ஓங்கிய நிலையிலும் புலிகள் நிலங்களை விட்டுப் பின்வாங்குகின்றனர். இதனை மக்களின் துயர் புலிகளைத் தோற்கடிப்பதாக தீவிர மார்க்சிஸ்ட்டுக்களாக உணரப் படுபவர்கள் குறிப்பிடுவது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் அல்லது தெய்வம் நின்று கொல்லும் போன்ற நம்பிக்கைகளின் வழி சொல்வது போலத் தோன்றுகிறது.

20 வருடங்களாக புலிகள் மக்களுக்கு ஏற்படுத்திய துயரே இன்று புலிகளைத் தோற்கடிக்கின்றது எனில்.. 50 வருடங்களாக சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய துயர் ஏன் அவர்களைத் தோற்கடிக்க வில்லை? யாருக்குத் தெரியும்.. யுத்த களத்தில் புலிகளின் கை ஓங்கினால்.. பேரினவாதத்தை தோற்கடிக்கும் மக்களின் துயர் எனத் தலைப்பிட்டு எழுதுவார்களோ என்னவோ..?
000
மாவீரர் தினத்திற்கு தலைவரின் உரை எப்படி இருக்கும் என ஒருவர் கேட்டார். மாவீரர் தினத்து உரை தொடர்பான அதீத ஆர்வத்தினையும் எதிர்பார்ப்பினையும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் பார்க்கின்றேன். குறிப்பாகச் சொல்லப் போனால் 2004 மாவீரர் தின உரையின் போது போர் நிறுத்தத்திலிருந்து புலிகள் விலகும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பினை ஊடகங்கள் உருவாக்கியிருந்தன. மாவீரர் தின உரையென்பது சமகால நிகழ்வுகள் தொடர்பான புலிகளின் தலைமைப் பீடத்தின் அதிகாரபூர்வ பார்வையென்பதற்கும் அப்பால் அவ்வுரையில் அதிரடியான திடுக்கிடும் முடிவுகளை அதில் தலைவர் பிரபாகரன் அறிவித்ததாக நான் அறிந்திருக்கவில்லை.

மாவீரர்தின உரை குறித்து எந்த எதிர்வு கூறலையும் என்னால் கூற முடியவில்லை. ஆனாலும் பொதுவாக தற்போதைய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் தொடர்பாக பாரா முகமாக இருக்கும் உலக நாடுகள் மீதான விசனத்தை வரிகளுக்கிடையில் மென் தீவிரத்தைப் புகுத்தி அவர் சொல்லக் கூடும் என்றேன்.

அப்ப சண்டையைப் பற்றிச் சொல்லமாட்டாரோ என்றார் அவர்.

நான் நடையைக் கட்டினேன்.

This entry was posted on Friday, June 27th, 2008 and is filed under குறிப்புகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231