சட்டவிரோத “குடி” யேற்ற வாசிகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகமாகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது.
மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறுக்கிறது போல உட்சென்று ஐயோ அக்கா என்ர பிளேன் போயிட்டுது. வாற வழியில நெரிசல் அது இது எனச் சொல்லி தனது பயணத்திகதியை அடுத்த நாளுக்கு மாற்றினார்.
வரும் வழியில் தொடரூந்து நிலையமொன்றின் படிக்கட்டுகளில் அரசியல் இலக்கிய ஆன்மீக பகுத்தறிவு பொருளாதாரம் என பலதும் பத்துக்குமான சந்திப்பாக அது அமைந்தது. மூன்று வலைப்பதிவர்கள் சந்தித்திருப்பதனாலும் அங்கு உட்கார்ந்து கோப்பி குடித்ததினாலும் அதை ஒரு வலைப்பதிவர் மாநாடு என அழைப்பதற்குரிய முழுத்தகுதியும் உண்டு என்றார் சாத்திரி. அதுவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வருகை தந்திருந்ததனால் அது ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பும் ஆகுமென்று அவர் உறுதிப்படுத்தினார்.
இலங்கை வலைப்பதிவுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையைப் போக்க ஏதாவது ஊக்குவிப்புக்களை பரிசுத் திட்டங்களை அறிவிக்கலாம் என ஒருபேப்பர்காரன்கள் காரிகள் சொல்லிக் கொண்டார்கள். அவை கெட்டிக் காரர். சொன்னதைச் செய்வினம்.
இதற்கிடையில் இருட்டத் தொடங்கியது. ஏழுமணிக்கெல்லாம் கடைகள் பூட்டப் பட்டுவிடும் என்றதால எங்களில் ஒருவர் அவசரப் படுத்தினார். கெதியா போய் வாங்க வேணும். வெளிக்கிடுங்கோ என்றார் அவர். சரியென்று இருக்குமிடம் திரும்பினோம். சற்றுமுன்னர் தான் யாரோ சுவிசில ட்ராபிக்கே இல்லைப்பா என சொன்னதன் வாய்முகூர்த்தமோ என்னவோ வீதியில் நடந்த விபத்து ஒன்றிற்காக ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக ஊர்ந்து செல்ல வேண்டியதாய்ப் போனது.
இருந்தாலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் டொச்லாந்து என்றால் என்ன ரவியண்ணையின் கேள்விக்கு நானும் சாத்திரியும் மாறி மாறி விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வந்தோம். டொச்லாந்து என்றால் ஜேர்மனி அண்ணை..
இதற்கிடையில் ஏழுமணி தாண்டிவிட்டது. எதிர்பார்த்த கடைகளும் பூட்டிவிட்டது. வீடு திரும்பிய பிறகு மீளவும் நான் சாத்திரியாட்கள் புறப்பட்டோம். ஒரு கடையும் திறந்திருந்ததாக தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக நாக்கு செத்துக் கிடக்கு என்ற புலம்பல்கள் வேறு..
அண்ணை சுவிசிலதான் கடைகள் பூட்டியாச்சு. ஜேர்மனியில திறந்திருக்கும் என்றேன் நான். பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை பாலத்தின் மேல் ஏறிக் கடந்தால் ஜேர்மனி. சாத்திரியண்ணை திடீரென்று காரை ஜேர்மனுக்குள் திருப்பினார். முடிவில் செக்கிங் போஸ்ட் தெரிந்தது. ஜேர்மனிக்கு போகலாம் எனச் சொன்னது நானேயாகிலும் இன்னமும் சிறிலங்கா பாஸ்போட்டுடன் இருக்கும் எனக்கு ஜேர்மனுக்குள் நுழைய விசா தேவைப்படுகிறது. என்னிடம் அப்போது விசாவோ.. ஏன் கைவசம் பாஸ்போட்டோ இல்லை. அதனால் கொஞ்சம் உதறல் எடுத்தது.
அண்ணை திருப்புங்கோ.. சட்டவிரோத குடியேற்றகாரர் எண்டு பிடிச்சு அடைச்சிடுவாங்கள் என்றேன் நான். சாத்திரியண்ணைக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்க் சாப்பிடுற மாதிரியாம். போவம்.. வழியில விசா கேட்டால்.. ஓ.. இது தான் ஜேர்மனியா sorry எண்டு சொல்லிட்டு திரும்புவம் என்றார் அவர். மெதுவாக காரை ஸ்லோ செய்து எல்லையைக் கடக்கின்றோம். எம்மை ஏன் என்று கேட்க எந்த நாதியும் அங்கில்லை. ஜேர்மனிப் பொலீசாரைக் காணவேயில்லை. ம்.. உலகம் ஒரு கிராமமாக சுருங்கித்தான் விட்டது.
ஜேர்மனிக்குள் நுழைந்து பிறிதொரு கடை தேடி தேவையானதை வாங்கி ஒரு குழந்தையைப் போல் நெஞ்சோடணைத்து வெளியேறினார் சாத்திரி. மீளத் திரும்பும் வழியில் எனக்கு பயமில்லை. சுவிஸ் வதிவிட அனுமதியை காட்டி.. ஐயோ தெரியாமல் உள்ளை வந்திட்டம். சொன்னாப் போல இது ஜேர்மனாம் எனச் சொல்லி திரும்பிவிடலாம். சுவிஸ் பொலிசார்தான் சோதனைச் சாவடியில் நிற்பார்கள். ம்.. அவர்களும் நம்மைக் கண்டுகொள்வதாக இல்லை.
சட்டவிரோத ´குடி´ யேற்ற வாசிகள் என்பது நமக்கும்தான் பொருந்துகிறது.




















//வழியில விசா கேட்டால்.. ஓ.. இது தான் ஜேர்மனியா sorry எண்டு சொல்லிட்டு திரும்புவம் என்றார் //
சாத்திரியாரின் எழுத்துக்கள் போல் தான் ஆளும் இருப்பார் என்பது தெரிகிறது. நல்ல அனுபவம். நீங்கள் தேடிய சாமான் சொக்லேட் பெட்டிதானே
அப்ப நீங்க வாங்கினது வெளிநாட்டு சரக்கோ… (அதாவது சொக்லேட்…!!)