மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிருந்து இரண்டு மூன்று காணிகள் கடந்து வீதியிலேறும் முடக்கில் இருந்தது. அவன் பாதைகள் சென்று சேராத ஒரு காணியின் அடித்தொங்கலில் இருந்தான். நிறையப்பேர் அப்படித்தான் இருந்தார்கள். காடுகளுக்குள்ளும் வீதிகளுக்கும் இடைப்பட்ட துண்டு நிலங்களில் புதிய முகவரிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்த தபாற்காரர்களுக்கு கடைகளும் டிஸ்பென்சரிகளும் முகங்களாயிருந்தன. “சயந்தன் இப்ப என்ன செய்யிறார்” என்று கேட்டேன். அவன் மீசையற்ற ஒருவர் கடக்கும்வரை அமைதியாயிருந்துவிட்டுச் சொன்னான். “அவர் ஏ எல் எடுத்துட்டு இருக்கிறார். நிலாந்திதான் ரீச்சிங்குக்கு ட்ரை பண்ணுறா..” “சரி நான் கடிதம் போடுறன்.” அன்றிரவு சயந்தனுக்கு நிறைய வாழ்த்துக்களையும் அவசரப்பட்டுக் கல்யாணம் கட்டியதற்காகக் கொஞ்சம் அட்வைஸ்களையும் நிரப்பி நீண்டதொரு கடிதம் எழுதினேன். நீண்ட காலத்திற்கு அது எனது டயறிக்குள் தூங்கியது. பின்பொருநாள் கிழித்தெறிந்த அந்தக் கடிதத்தில் அவனை விட அதிகமாக நாமகளையே விசாரித்தெழுதியிருந்தேன்.
0 0 0
“உம்மடை பேர் என்ன” என்று ஏகாம்பரம் சேர் கேட்டார். “சயந்தன்” எனது முதுகுப்பின்னாலிருந்து பதில் வந்தபோதே அவனைப்பார்த்தேன். நடு நெற்றியில் ஒரு வீபூதிக்குறியோடு அவன் நின்றான். அது விபூதியல்ல. முகப்பவுடர் என்பதே அவனைப்பற்றிய என் முதல் நினைப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு வந்து சேர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் புதியவர்கள் வருகிறார்கள். மரங்களுக்கு கீழே மேசைகள் போடப்படுகின்றன. மரங்களால் நிரம்பியிருந்த அந்த வளவில் நான்கோ ஐந்து வகுப்புக்கள் இருந்தன. வன்னியின் மரங்கள் பெயரறியாத புதியவை, பரந்து நிழல் பரப்பின. வேலிக்குள்ளால் பள்ளிக்கூடம் வீதியைக் கடந்து தெரிந்தது. அங்கே வகுப்பறைகளில் குழந்தைகள் ஏணைகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஏணைகளுக்கு அருகிலேயே அடுப்புக்களும் எரிந்தன. பெரிய மனிதர்கள் சுவர்மூலைகளுக்குள் சுருண்டிருந்தார்கள். சிறுவர்களே விளையாடித்திரிந்தனர். கடந்தநாட்களின் தங்களது அழுகைகளையும் வீரிடல்களையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். நானும் மறந்திருந்தேன்.
ஆண்டு பதினொன்று, பி பிரிவில் எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் பெரியபள்ளிக்கூடம், சிறியபள்ளிக்கூடம், இங்கிலிஸ் கதைக்கும் பள்ளிக்கூடம், கதைக்கமுடியாத பள்ளிக்கூடமென்று எல்லோருமிருந்தார்கள் மரத்தின் கீழே. கறுத்தச்சப்பாத்துப் போடவில்லையென்பதற்காக யாரும் இங்கே அடிக்கவில்லை. வெள்ளைச் சேர்ட்டை இன் பண்ணாவிட்டால் யாரும் காதினைத் திருகுவதில்லை. எத்தனை பேரை அடிக்க..? எத்தனை காதுகளைத் திருக..? எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. பக்கத்திலிருந்த பெட்டைகள் உட்பட. பள்ளிக்கூட பெட்டைகளின் அருகாமையை நான் ரசிக்கத்தொடங்கியிருந்தேன். “எடியே இஞ்சை பாரடி” என்ற வார்த்தைகளும் “என்னப்பா நீர்” என்ற அவர்களுக்குள்ளான சிணுங்கல்களும் எனக்கு விசித்திரமாக இருந்தன. முன்னைய பள்ளியில் தயாபரன் சேர் இப்படி நடித்துக்காட்டுவார். பாடங்களுக்கிடையில் அவர் இப்படிக்கதை சொல்லத்தொடங்கினால் பிறகு ஓ.. என்ற கூச்சல்தான் நிறையும். கடைசி வாங்கில் இருக்கிற யாராவது “சேர் சரியாக்கேட்கேல்லை” என்றுகொண்டே முன்னால் வருவார்கள். கதை முடியும் போது எல்லோருமே மேசையைச்சுற்றி நிற்பார்கள் கிளைக்கதையெதையாவது அவர் தொடர மாட்டாரா என. அடுத்த ஆண்டில் விஞ்ஞானப் புத்தகத்தில் நூற்று நாற்பதாம் பக்கத்தில் இனவிருத்தித் தொகுதியென்றொரு பாடம் இருந்தது. தயாபரன் சேர் அதனைப்படிப்பிக்கப்போகும் நாட்களுக்காக, படபடப்புக்களையும் கிளுகிளுப்புக்களையும் சேமித்தபடி தயாராயிருந்தோம். ஒரு ஒக்டோபரின் இறுதி நாளில் எல்லாம் கரைந்து போயின. பள்ளிக்கூடம் இல்லையென்றானது. பாடப்புத்தகங்களும் இல்லையென்றாயின. பாடசாலைக்கீதம் முடிந்த ஒரு பொழுதில் “நாளைக்கு யார் கூட்டுமுறை? நேரத்தோடை வரவேணும்” என்று போனவர்கள் இரவோடிரவாகத் தொலைந்து போனார்கள். அடுத்த காலையில் யாரும் பள்ளிக்கு போயிருக்க மாட்டார்கள். பிரேயர் கோலில் குசுகுசுவெனப்பேசும் சத்தங்கள் கேட்டிருக்காது. செவ்வாய்க்கிழமையின் இரண்டாம் பாடத்தில் பி.டி மைதானம் ஆளரவம் இன்றி தனிமையில் விரிந்திருக்கும். மதிலோரம் சைக்கிளைச் சாத்தி நிற்கும் ஐஸ்பழகாரரும் நின்றிருக்க மாட்டார்.
இங்கே தயாபரன் சேர்போல யாரும் கதை சொல்வதில்லை. பெடியங்களும் சொல்வதில்லை. பெட்டைகளை நேருக்குநேர் கண்டாலே படபடப்பாக இருக்கிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கெனத் தொடங்கும் மதியம் இரண்டுமணிப்பள்ளியை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தேன். சும்மா தோட்டங்களையும் துரவுகளையும் அளைவதே எனக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொருநாளும் ஆக்கினைப்படுத்தியே அம்மா என்னை அனுப்பி வைத்தாள். பாழாய்ப்போன கிபிர் காலைநேரங்களில் மட்டும் வந்து போகிறது. கள்ளமொழிக்கக் கிபிரைக்கூப்பிடுவதும் அது வந்தபிறகு பிச்சைவேண்டாம் நாயைப்பிடியென்பதும் இன்னமும் தொடர்ந்தது. சாமியறைக்குள் பிள்ளையாருக்கு பூப்போட்டு “பிள்ளையாரே நாளைக்கு காலமை மாதகலில இருந்து ஆமி மூவ் பண்ணினால் நாளையிண்டைக்கு மஞ்சள்பூ நிறைய வைப்பன்” என்றெல்லாம் இப்போது கேட்பதில்லை. அப்போதெல்லாம் பிள்ளையார் மஞ்சள்பூவுக்கு சில சமயங்களில் ஆசைப்பட்டிருந்தார். “பிள்ளையாரே உமக்கு பகிடியும் தெரியா வெற்றியும் தெரியா, முதல்ல ஆமிக்காரனை நிப்பாட்டும். வெள்ளைப்பூ வைக்கிறன்” என கை நடுங்க நடுங்க கும்பிட்டதையும் அவர் ஏற்றிருந்தார். ஒக்டோபர் இரவொன்றில் அவருக்கு வெள்ளைப் பூக்கள் திடீரென பிடிக்காமல் போனது. டிசம்பரில், பெப்ரவரியில், ஏப்ரலிலென அவருக்கு ஒரேயடியாகப் பூக்கள் பிடிக்காமல் போனது.
இரண்டு மூன்று வாரங்களாகக் கிபிரெதுவும் வரவில்லை. ஆனால் சனங்கள் வந்துகொண்டிருந்தார்கள். லான்ட் மாஸ்ரர்களும் மினி பஸ்சுகளும் வெறித்த முகங்களோடு அவர்களை ஏற்றிவந்தன. கிளாலியில் புறப்பட்ட இறுதிப்படகு வன்னிக்கு வந்து சேரவில்லையென்றார்கள். அந்தக்கடற்கரையில் குவிந்து நின்ற சனத்தை ஆமிக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே போய்விடும்படி இயக்கம் சொன்னதாம். அம்மா அங்கே, பிள்ளை இங்கே, புருசன் இங்கே, பெண்சாதி அங்கேயென்ற கதைகளே எங்கும் நிறைந்திருந்தன. வீதிநெடுகவும் மனிதர்களாயிருந்தார்கள். அவர்களில் சயந்தனும் ஒருவனாயிருந்திருக்கவேண்டும். அவன் தன் சொந்த இடமெனச் சொன்னது உயர் பாதுகாப்பு வலயமாகி ஐந்தாறு ஆண்டுகளாகியிருந்தன. இன்னும் இரண்டு மூன்று பேர் தங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் பின்னால் திரும்பி “என்ரை பேரும் சயந்தன்தான்” என்றபோது அவன் சிரித்தான். அடுத்தநாள் பள்ளிக்கூடம் வரும்போதே அவனுக்கருகில் ஒரு இடத்தை எனக்காக கிளியர் பண்ணவேண்டும் என நினைத்துக் கொண்டேன். அவன் வந்த ராசியெனச் சொல்வேன். அன்றிலிருந்து இரண்டுநேர பள்ளிக்கூடமும் இனி ஒன்றாக இயங்கும் என கடைசிப்பாடநேரம் அறிவித்தார்கள்.
0 0 0
எல்லாம் பிடித்திருந்தது இங்கிலிஸ் பாட நேரத்தைத் தவிர. அதிலும் சேரோடு இங்கிலிசில் கதைக்கும் சென் ஜோன்ஸ் பெடியனைப் பிடிக்கவேயில்லை. நான் கணக்குகளை டக் டக்கென முடித்துக்காட்டும்போது ஆச்சரியப்பட்டுப் பார்க்கிற அதே பெட்டைகள், அவன் இங்கிலிசில் கதைக்கும் போதும், ஆவென்று பார்ப்பது எரிச்சலாயிருந்தது. அதிலும் நாமகள் பார்ப்பது. இங்கிலிஸ் பாடநேரம், என்ன கதைக்கிறதாக இருந்தாலும் இங்கிலிஸ் மட்டும்தான் பாவிக்கவேணும் எனச் சொன்ன பிறகு வகுப்பு ஒரேயடியாக ஸைலன்ற் ஆனது. அந்தப் பெடியன் மட்டும் தஸ் புஸ் என அலட்டிக்கொண்டிருந்தான். I am suffering from fever என்பதை கொப்பியடிக்கும் போது மாற்றியெழுதுகிறேன் பேர்வழியென ஐயாம் சயந்தன் ப்றம் வட்டுக்கோட்டை என்றெழுதவல்ல விண்ணனாயிந்தேன் நான். இருபத்தெட்டு மார்க்ஸே எடுத்தாலும் “தமிழீழத்தில எதுக்கு இங்கிலிஸ்” எனக் குண்டியில் தட்டிவிட்டுப்போகிற எனக்கு இது பெருஞ்சிக்கலாக இருந்தது. பின்னேரப்பொழுதுகளில் பாஸ்ற் ரென்ஸ், பாஸ்ற் பார்ட்டிசிப்பிள் என அரட்டுவதை அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒரு நல்ல நாளில் அது நடந்தது. பெடியன் திரும்பவும் யாழ்ப்பாணம் போய்விட்டான். அங்கொன்றும், இங்கொன்றுமாக சனங்கள் யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கிடந்த யாழ்ப்பாணத்திற்கு, வவுனியாவுக்குப் போய் அங்கிருந்து திருகோணமலை, பிறகு கப்பலிலென அவர்கள் போனார்கள். அவர்களை நான் துரோகிகளென்று சயந்தனுக்குச் சொன்னேன். அவன் எப்போதும் போல சிரித்துவிட்டு நிலாந்தியையே பார்த்துக்கொண்டிருந்தான். நாமகள் கூட பிறகு என்னை மட்டுமே பார்ப்பதாய் உணர்ந்தேன். ஒழிந்தான் துரோகி!
நாமகளும் நிலாந்தியும் அருகருகில் இருந்தார்கள் என்னையும் சயந்தனையும் போல. நிலாந்தியும் சயந்தனும் இடைவேளைகளின் போது பட்டும்படாமலும் கதைக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படியோ அதற்கான வாய்ப்புக்கள் வந்துவிடுகின்றன. கொப்பிகளை, பெடியங்களிடமும் பெட்டைகளிடமும் மாற்றித்திருத்துவது பொஸ்கோ சேருடைய பழக்கம். அப்படிவந்த கொமர்ஸ் கொப்பியின் ஈழநாதம் உறையில் நிலாந்தி, ச-ய-ந்-த-ன் என்ற எழுத்துக்களைத் தேடித்தேடி வட்டமிருந்தாள். அதனைச் சயந்தனிடம் காட்டினேன். அவன் ஒரு பேச்சுக்குக்கூட அது நீயாயிருக்குமோ எனக்கேட்கவில்லை. “கொண்டா, நான் திருத்துறன்” என்று வாங்கிக்கொண்டான். எப்போதாவது நாமகளின் கொப்பி என்னிடம் வருமென நான் நம்பியிருந்தேன். பொஸ்கோ சேருக்கு ஒலுமடுப்பக்கமாக வந்த இடம்மாற்றம் நம்பிக்கையையும் கொண்டுபோனது.
நாமகள் கணக்கையும் இங்கிலிஸியும் தவிர மற்றப்பாடங்களில் நல்ல மார்க்ஸ் எடுத்தாள். நான் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருந்தேன். இங்கிலிஸில்….. வேண்டாம், தமிழீழத்தில் இங்கிலிஸ் எதற்கு? “என்னடா, வன்னிப்பெட்டை முதலாவதா வாறாள். நீ யாழ்ப்பாணத்தில இருந்து வந்துட்டு ரண்டும் மூண்டும் நாலுமெண்டு வாறாய்” என திட்டு விழுந்தது எனக்கு. ஆனால் எட்டொன்பது வருடங்களாக இரண்டாவதாய், மூன்றாவதாய் வந்து கொண்டிருந்த நிறையப்பேர் பத்து பதினொன்றென போய்விட்டிருந்தனர். அவர்கள் துயரத்தை அமைதியாய் வைத்திருந்தனர். நிலாந்தி புத்தகப் பையில் முகம் புதைத்து அழுதாள். “இது சரியில்லையடா, இவ்வளவுநாளும் முதலாவதா, ரண்டாவதா வந்தவங்களை, திடீரெண்டு நாங்கள் வந்து பின்னாலை ஒதுக்கிறது சரியில்லை. மார்க்ஸ் போடாமல் ஏ, பி, சியெண்டு மட்டும் போடச்சொல்லி யார் முதல் யார் ரண்டு எண்டெல்லாம் அறிவிக்க வேண்டாம் எண்டு சேரிட்டைச் சொல்லுவமா” என்றான் சயந்தன். “உதெல்லாம் நிலாந்திக்காகத்தான்” என்று நினைத்து நான் அக்கறையற்று இருந்தேன்.
மாவீரர் படிப்பகத்தில் இரவு பெற்றோமக்ஸ் வெளிச்சம் தந்து படிப்பதற்கான வசதியை இயக்கப்பொறுப்பாளர் செய்துதந்தார். நாமகள், நிலாந்தி சயந்தனென்று குரூப் ஸ்ரடிக்கு எல்லோரும் போனார்கள். நான் போகவில்லை. இரவுப்பயணம் எனக்கு பயத்தைத் தந்தது. நடுஇரவு பன்னிரண்டு மணிக்கும் உலவுகிற சுதந்திரத்தை யானைக்கூட்டங்கள் விளங்கிக்கொள்ளாமல் இருந்தன. வள்ளிபுனத்திலிருந்து தேவிபுரத்திற்குப் பிரியும் வீதியில் யானைகள் சிலசமயம் காடு கடக்கும் என்றார்கள். புதுக்குடியிருப்புக்குப் போகும் வழியில் கைவேலியில் அப்படியொரு மம்மல் பொழுதொன்றில் கண்டிருக்கிறேன். இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சிக்னலில் நிற்பதுபோல வாகனங்கள் நிற்க நடுவே யானைக்கூட்டம் வீதியைக் கடந்து காட்டுக்குள் நுழைந்ததை.
நிலாந்தியும் சயந்தனும் இப்போது ஒபிஸலாகக் காதலிக்கத்தொடங்கியிருந்தார்கள். வீடுகளில் ரியூசனுக்கெனப் புறப்படுபவர்களை உடையார்கட்டுக்குளக்கட்டும், புதுக்குடியிருப்பு கோயிலும் அவ்வப்போது அழைத்தன. மாவீரர் படிப்பகத்திற்கும் சிலசமயங்களில் அவர்கள் வருவதில்லையென்று சுகிர்தன் குசுகுசுத்தான். நான் “இதெல்லாம் சரியில்லை” என்று சொல்ல ஆசைப்பட்டேன். ஒரு இயக்கக்காரனைப்போல இடுப்பில் கைவைத்துக்கொண்டு சொல்லவேண்டும் “இதெல்லாம் எங்கடை கலாச்சாரத்துக்கு ஒத்துவராது” என்று. ஆனால் அவனைப் பகைத்துக்கொள்ள முடியாது. நிலாந்தி மூலம் நாமகளைக் கேட்டுச்சொல்லும்படி அவனிடம் கேட்டிருந்தேன். ஒரு சரஸ்வதி பூசை நாளில் நிலாந்தி எனக்குச் சொன்னாள். “ஏன் அவர் வந்து நேரா என்னட்டைக் கேட்கமாட்டாரோ எண்டு அவ கேட்கிறா” தூரத்தே நாமகள் நின்றாள் எங்களைப் பார்த்தபடி. நான் நிலாந்திக்கு “தாங்க்ஸ்” சொன்னேன். அதுக்குப்பிறகு விஞ்ஞானபாடத்தில் Sn என்ற அணுமூலக்கூறை கரும்பலைகையில் எழுதியபோதெல்லாம் அங்கே நான்கு சோடிக்கண்கள் குறுகுறுத்துச் சிரித்தன.
இயக்கக்காரர் மீற்றிங் வைக்க வருகிற பொழுதெல்லாம் நான் அதில் ஆர்வமற்றிருக்கிறேன் என நாமகளுக்கு உணர்த்த அசட்டையாக இருந்தேன். இரண்டு மூன்று தடவைகள் சிட்டு வந்திருந்தார். சிட்டுவை எனக்குப் பிடிக்கும். மீற்றிங்கின் முடிவில் “உங்களுக்கேதும் அரசியல் கேள்விகள் இருந்தால், அதை எழுதித்தாங்கோ, பதில் சொல்லுறம்” என்பார். ஆளாளுக்கு எழுதிக்கொடுப்பார்கள். “யாழ்ப்பாணத்தை எப்ப பிடிப்பியள்” “ஏன் யாழ்ப்பாணத்தை விட்டனியள்” “உங்களிட்டைப் பிளேன் இருக்கோ” என்ற கேள்விகளுக்கிடையில் “அன்புள்ள சிட்டு. உங்களின் பாட்டுக்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். எனக்காக ஒருதரம் உயிர்ப்பூ படத்தில் இருந்து சின்னச்சின்னக் கண்கள் பாட்டைப் பாடிக்காட்ட முடியுமா, இங்ஙனம் அன்பு ரசிகன்” என்ற கடிதத்தை வாசித்த மாணவியிடமிருந்து பறித்துக் கசக்கியெறிந்தார் சிட்டு. நான் குறுகுறுப்பாக நாமகளைப்பார்த்துச் சிரித்தேன். “சொல்லிக்குடுக்கட்டா?” என்று சாடைகாட்டினான் சயந்தன். பதிலுக்குக் கண்டாவளைச்சந்திக் கதையை அவனுக்கு ஞாபகமூட்டினேன். கண்டாவளைச் சந்தியில் நானும் சயந்தனும் சிட்டுவிடம் தனியே சிக்கியிருந்தோம். அப்போது கிளிநொச்சிக்கு ஆமி வரவில்லை. “சொந்த இடம் எது” என்று கேட்டார் அவர். இருவரில் யாரைக்கேட்டார் எனத்தெரியவில்லை. “மயிலிட்டி” என்றான் சயந்தன்.
“இடம்பெயர்ந்து எங்கையிருந்தனீங்கள்”
“யாழ்ப்பாணம், ரவுணுக்குள்ளை..”
“பிறகெங்கை இடம்பெயர்ந்தனியள்”
“பிறகு.. சாவகச்சேரி..” என்றவனுக்கு தொடர்ந்தும் சிட்டு கேட்கத்தான் போகிறார் என்பது தெரிந்திருந்தது. ” சாவகச்சேரியில இருந்து கொடிகாமம், எழுதுமட்டுவாள் எல்லாம் போய் இப்ப கிளிநொச்சியில வந்து இருக்கிறம்” என்று சொன்னான்.
“ம்.. இப்பிடியே ஓடிக்கொண்டிருக்கப் போறியளோ? ஆனையிறவில இருந்து ஆமி வெளிக்கிட்டு கிளிநொச்சிக்கும் வரப்போறான். என்ன செய்யப்போறியள்” இனி வருவதற்கு தம்மை விட்டால் வேறு இடமில்லையென்ற தொனியில் சிட்டு கேட்டார். சயந்தன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. “முல்லைத்தீவில தண்ணீரூற்றில பெரியப்பா இருக்கிறார். பெரும்பாலும் அங்கைதான் போவம் எண்டு நினைக்கிறன்” என்றான். சிட்டுவுக்கு கொஞ்சம் கோபம் வந்ததுதான்.
“உங்களோட மனிசர் கதைப்பினமே” என்றுவிட்டுப் போய்விட்டார். நான் “ஏன்ரா சும்மா கொழுவிறாய் அவையோட?” என்று கேட்டேன். “எங்கடை அண்ணைமாரோட கொழுவாமல் வேற யாரோட கொழுவுறது?” என்று விளக்கம் சொன்னான்.
இயக்கம் அப்போது யாரையும் பிடித்துக்கொண்டு போவதில்லை. மீற்றிங் முடிய “வந்து சேருங்கோ” என்றுவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு அதிபர், “யாரும் போறதாயிருந்தால், வீட்டைபோய் பள்ளிக்கூட யூனிபோமை கழட்டிவைச்சிட்டுப் போங்கோ” என்பார். திரும்பவும் வகுப்புக்கள் தொடங்கும். சிலவேளைகளில் அடுத்த நாளிலிருந்து யாரேனும் பள்ளிக்கூடம் வராமல் போய்விடுவார்கள். அவர்களில் சிலர் நாலைந்து மாதம் கழித்து திரும்பி வந்து சேருவார்கள். பகிடி பண்ணுவோம் என்றோ என்னவோ “நானாப் போகேல்லை, பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள்” என்று சொல்வார்கள். அவர்களை நாங்கள் மோட்டச்சைக்கிள் என்று கூப்பிடுவோம். நல்லவேளையாக அவர்களில் ஒருவன் கூட “நானாவது நாலுமாசம் இருந்தன். நீ..” என்று கேட்கவில்லை. இங்கிலிஸ் சேர் சொல்லுவார். “போகமாட்டாங்கள் எண்டு நினைச்சவங்கள் போட்டாங்கள், போவாங்கள் எண்டு நினைச்சவங்கள் ஒருத்தனும் போகேல்லை” என்று. போவான் என அவர் என்னை நினைத்திருக்கலாம். “சேர், ஓயாத அலைகளுக்கு இங்கிலிஸில எப்பிடிச் சொல்லுறது.” என்று சர்வதேச மீடியாக்களுக்கு தகவல் கொடுக்குமாற்போன்ற அவசரத்துடன் நான் கேட்டது அவரது நினைவிலிருந்திருக்கலாம்.
நான் பள்ளிக்கூடங்களைத் தவறவிடாதவனாயிருந்தேன். “சோதினை நெருங்குதுதானே, வீட்டில இருந்து படியன்” என்றாள் அம்மா. இயக்க மீற்றிங்குகள் அவளைப் பயப்படுத்தியிருக்கலாம். நாமகளைப்பற்றி எதுவும் அம்மாவிற்குத் தெரிந்திருக்காது. அவளைப்பற்றிய எந்த அடையாளங்களையும் நான் வீட்டீற்குள் கொண்டுவருவதில்லை. ஆனால், நிலாந்தி வீட்டில் அவளது காதல் பெரிய பூகம்பங்களை ஏற்படுத்தியது. அவள் பெரியதொரு கல்வீட்டில் இருந்தாள். சுற்றிலும் குடிசைகளும், கொட்டில்களுமாக இருக்க, ஒரு மாளிகையைப் போல் அவளது வீடு நிமிர்ந்திருந்தது. அப்பா நிறைய வயல்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவர் நிலாந்தியை இனி ரியூசனுக்கு விடப்போவதில்லை என்று நாமகள் எனக்குச் சொன்னாள். நிலாந்திக்கு அடி விழுந்ததை சயந்தனுக்குச் சொல்லவேண்டாம் என்றாள். தங்களுக்கும் மயிலிட்டியில் பெரியதொரு வீடிருந்ததென்றான் சயந்தன்.
சோதினைகள் முடிந்தபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறையப்பேர் யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். துரோகிகள் எனச்சொல்ல முடியாத அத்தை, அப்பம்மா, பெரியம்மா எல்லோரும் போய்விட்டார்கள். அவர்கள் கட்டியிருந்த கொட்டில்கள் வெறுமையுற்றுக் கிடந்தன. தோட்டங்களில் யாருமற்று இப்படி வீடுகள் இருக்கக்கூடாதென்று அவைகள் இடிக்கப்பட்டன. நிலாந்தியைப் பார்க்கவே முடியாமல் சயந்தன் அந்தரித்துத் திரிந்தான். நாமகளே அவனுக்குமான செய்திகளைச் சுமந்து திரிந்தாள். நாமகளிற்கு யாழ்ப்பாணம் போய் வேம்படியில் பயோ படிக்கும் ஐடியா ஒன்றிருந்தது….. ….. …… இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் கதைகள் இல்லாமற் போயின, நாமகளின் ஒரு மாலைநேரத்து விசும்பலையும், அவள் அனுமதித்த தழுவலையும் தவிர!
0 0 0
சயந்தனை பன்னிரண்டு வருடங்களாக நான் தீவிரமாகத் தேடவில்லை. ஆனால் அவனோடு பேசுவதற்கு நான் ஆவற்பட்டிருந்தேன். அவன் யாழ்ப்பாணத்தில் எங்கேயோ நிலாந்தியோடும் பிள்ளைகளோடும் இருக்கலாம் என நம்பினேன். பிள்ளைகளுக்கு பத்து வயதாயிருக்கும். நிலாந்திக்கும் நாமகளிற்கும் பின்னால் நாங்கள் துரத்தித்திரிந்த வயதிற்கு ஆறோ ஏழு வயது குறைச்சல். என்ன கோதாரிக்கு இந்தக் காலச்சனியன் இப்பிடி வேகமாக ஓடித்தொலைகிறது. நாமகளின் கதைகள் சயந்தனிடம் இருக்கலாம். நாமகள் யாழ்ப்பாணம் வேம்படியில் பயோ படித்திருக்கலாம். கம்பஸ் கிடைத்திருந்தால் டொக்டராயிருக்கலாம். அவள் ஆகுவாள்.
நாமகளின் ஊரை யுத்தம் தின்றுமுடித்துச் சனங்களைக் கடலுக்குள் தள்ளியிருந்த ஒரு நாளில் எனக்குச் சயந்தனின் மொபைல் போன் நம்பர் கிடைத்தது. சயந்தன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். “உன்ரை குரல் நல்லா மாறிட்டுதடா” என்றான். “கல்யாணம் கட்டிட்டியோ” என்று விசாரித்தான். அவனைப்பற்றிய விசாரிப்புகளை முடித்து நாமகளைப்பற்றிக் கேட்க நான் அவசரமுற்றேன். அதற்குமுதல் “ஏன்ரா சின்னவயசில கல்யாணம் கட்டினனி” என்று கேட்கவேண்டும்
“பிள்ளையள் பள்ளிக்குடம் போகினமோ, எந்தப்பள்ளிக்குடம்?”
“பிள்ளையளும் நிலாந்தியும் காம்பில இருக்கினம். ஒருத்தனுக்கு வயித்தாலயடி. நிலாந்தி ஆஸ்பத்திரியில வைச்சிருக்கிறா. நான் வவுனியாலதான் நிற்கிறன்.” சயந்தன் சொன்னான். நான் எந்த வார்த்தைகளையிட்டு என் பதில்களை நிரப்புவதென அறியாதிருந்தேன்.
“நிலாந்திக்கு ரீச்சிங் போஸ் கிடைக்கும் வரைக்கும் சரியாக் கஸ்டப்பட்டம். எனக்கும் ஒழுங்கான வேலையள் இல்லை. ஏதோ அப்பிடியிப்பிடி கடத்திட்டம். அவளுக்குப் புதுக்குடியிருப்பு பள்ளிக்குடத்தில் இடம் கிடைச்சது. நானும் என் ஜி ஓ ஒண்டில தொத்திக் கொண்டன். வன்னியிலேயே இருக்கத்தொடங்கின பிறகு யாழ்ப்பாணம் போறதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. சமாதானம், பேச்சுவார்த்தையெண்டாங்கள். சரியெண்டு அங்கேயே இருந்திட்டம். எல்லாம் போச்சு” என்று இடைநிறுத்தினான் அவன். பதிலுக்கு நான் எதனைப்பேசுவது?
“வீடொண்டைக் கட்டத்தொடங்கினம். அதுவும் அத்திவாரத்தோடயே நிக்குது. உதெல்லாம் சரிவராதெண்டிட்டு அண்ணை வெளிநாட்டுக்கு எடுத்து விடுறன் எண்டான். வெளிக்கிட்டு, இந்தா ஒருவருசமா வவுனியால நிக்கிறன். அதுவும் நல்லதாப்போச்சு. இல்லாட்டிப் பிள்ளையள் தவிச்சிருக்குங்கள். வேளாவேளைக்கு எனக்குச் சாப்பாடு கிடைச்சுக்கொண்டிருக்க, அங்கையென்ரை பிள்ளையள் ஒருநேரக் கஞ்சிக்கு தட்டேந்திக்கொண்டு நிண்டிருக்குதுகள். ஏன்ரா, மற்றாட்கள் மாதிரி நாங்களும் இருக்க முடியாதோ..? பிள்ளையளைப்பாத்தா துடிச்சுப்போயிடுவாய். எங்கையோ சோமாலியாவில பிறந்ததுகள்மாதிரி வத்தலாப்போய் வந்திருக்குதுகள். நிலாந்தி கெட்டிக்காரி, என்னென்டோ வந்து சேந்திட்டாள்” சயந்தனிடம் அச்சம் தரும் வார்த்தைகளே நிறைந்திருந்தன. நாமகள் எங்கேயோ எனக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்.
“ம்.. சொல்லோணுமெண்டு நினைச்சனான். நாமகளும் இங்கைதான் அதே காம்பில இருக்கிறாள் பிள்ளையோடை, புருசனைப் பிடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள். அவன் கொம்பனி ஆள் இல்லை. நிர்வாகப்பிரிவில சம்பளத்துக்கு வேலைதான் செய்தவன். பாவம் அவள், மாற்றுத்துணிகூட இல்லாமல் கஸ்டப்படுறாள்… அவளின்ர அப்பா.. ”
..
..
..
வெளிநாட்டுத்தொலைபேசிகள் பாதியில் நின்றால் கார்ட் முடிந்துவிட்டதென அங்கே நம்புவார்கள். அவனும் நம்பியிருப்பான்.




















தலைமுறை தலைமுறைக்கும் நமக்கு இதமாதிரியான நிறையக்கதைகளே கிடைத்திருக்கின்றன.
போதும் … இப்படி எத்தனை எத்தனை காதல் கதைகள் கல்லறையாகிப்போனது…
குற்றஉணர்ச்சிதான் பெருகிறது.
ஊமையாகி உருக்குலைந்து போன பல காதல்கள் இன்று இப்படித்தான் அந்தரத்தில்….
“எல்லோரும்” நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
// காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான்.//
நான் சத்தியமா..இப்பவும் வரமாத்தான் நினைக்கிறன்…ஆனா கட்டினப்புறம் சாபம் அது, இதுன்னு குதிக்கிறவங்களும் இருக்காங்க…
அவங்கள எப்படி நம்புறது…??
//….வெளிநாட்டுத்தொலைபேசிகள் பாதியில் நின்றால் கார்ட் முடிந்துவிட்டதென அங்கே நம்புவார்கள். அவனும் நம்பியிருப்பான்.//
இங்க “heart” puncture ஆயிருப்பது…பாவம் அவனுக்கெப்படி தெரியும்?.
முழுவதும் படித்து முடித்தபின் ஏனோ சொல்லவியலாத ஒரு பாரமேறியிட்டிருக்கிறது
ஆயிரமாயிரம் பேரின் அவலத்திலிருந்து ஓர் பதிவு. துயரம் ஆழியிலிருந்து பெருக்கெடுத்தாற் போல கதையோடு காலமும் கருத்தும் கவனப்படுத்தப்படுகிறது.
சாந்தி
Excellent story, but painful