கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்
அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா என்று இறைஞ்சுவதோடு வாலையும் ஆட்டிக் காட்டுகிறோம் என்பதைக் குறித்த வலியே அது.
அன்றைய நாளில் கானாபிரபாவிடம் இதுபற்றிக் கேட்டிருந்தேன். அவர் ஐயோ சத்தியமா அந்த அமைப்பில நானில்லை என கற்பூரமடிக்காத குறையாக சொல்லியிருந்தார். அடுத்தநாளோ அதற்கடுத்தநாளோ பதிலுக்கு நான் சத்தியம் செய்யவேண்டியிருந்தது. சுவிசில் இருந்து சென்ற அந்த கடிதத்தில் இம்முறை ஈழத்தாய் என விளிக்கப்பட்டிருந்தது. அவவுக்கு அது பிடித்துக் கொண்டதாலேயோ என்னவோ அக்கடிதம் ஒரு பரப்புரைக் கூட்டத்திலும் வாசிக்கப்பட்டது.
அக்கடிதங்களை எழுதியவர்கள் மீது கோபம் எதுவும் வரவில்லை. தொடர்ச்சியான ஏமாற்றங்களால் எந்தக் கொப்பிலாவது பற்றிக்கொள்ளலாமா என்றிருந்த மனநிலையது. அதையும் தவிர தார்மீக ரீதியாக எனக்கு அந்த உரிமையும் கிடையாது. ஏனெனில் கலைஞரை உலகத்தமிழினத்தின் காவலரே என விளித்து கடிதம் எழுதிய லூசுப் பயல் நான்.
0 0 0
ஏழுமாதங்களாகி விட்டது. அப்போது கலைஞர் கவிழ்ப்பதற்கான (கவிழ்த்தார்தான்) ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். இரண்டுவார காலக்கெடு. பதவி விலகல் கடிதங்கள் என அமர்க்களமோ அமர்க்களம். தனிப்பட எனக்கு கலைஞர் ஏதோ செய்யத்தான் போகிறார் என சபலம் கூட ஏற்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
புலம்பெயர்ந்த நாடொன்றிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்தார். அந்த நாட்டின் ஏதோ ஒரு தமிழ் சம்மேளத்தின் சார்பாய் அவர் பேசினார். கலைஞருக்கு உடனடியாக ஒரு நன்றிக் கடிதம் தேவை. வரும் திங்களுக்கு முதல் தேவை என்றார். முதலில் ஜோக் அடிக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் விடுவதாயில்லை.
கொஞ்சம் பொறடாப்பா இரண்டு வாரம் முடியட்டும். பிறகு எழுதுவோம் என்றேன். இல்லையடா இப்பவே எழுதுவதுதான் அவருக்கு இன்னும் இன்னும் ஈடுபாட்டைக் கொடுக்குமென்ற கண்டுபிடிப்புகளை அவன் சொன்னான். உண்மையாகவே தமிழகத்தில் தோன்றிய அன்றைய நிலை வன்னியில் மக்களுக்கு ஓர் மன ஆறுதலைக் கொடுத்திருந்ததை நான் அறிவேன். முல்லைத்தீவில் கலைஞருக்கு ஆதரவான கூட்டங்கள் கூட நடந்தன.
ஆனாலும் இன்னதெனச் சொல்லவியலாத தயக்கமொன்றிருந்தது எனக்கு. நண்பரோ மணித்தியாலங்களை காலக்கெடுக்களாக்கி அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். ஏதோ ஒரு நாட்டின் தமிழ் சம்மேளனம் கடிதம் எழுத என்னை அழைக்கிறது என்ற கெத்தும் எழுதித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் சேர்ந்துவிட நான் அதற்குச் சம்மதித்தேன். எனது தனிப்பட்ட கருத்துகள் ஈடுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு – நான் எப்போதும் வருந்தக்கூடியவாறு முதல் வரியை எழுதினேன். உலகத் தமிழினத்தின் தலைவர் கலைஞர் ஐயா அவர்களே…
0 0 0
அந்தக் கடிதம் ஊடகங்களின் வெளியானது. தலைமைச் செயலகத்திற்கும் அது பக்ஸ்ஸில் அனுப்பப்பட்டது. அப்போது தேர்தல் நேரம் இல்லையாகையால் யாரும் அக்கடிதத்தினை மக்கள் மத்தியில் படித்துக் காட்டவில்லை.
ஈழத்தமிழர் சம்மேளனங்களும் இலேசுப்பட்டவையல்ல. அவர்கள் இரு திருத்தங்களைக் கோரியிருந்தார்கள். முதலாவது முதல் வரியிலேயே ஆரம்பித்தது. உலகத்தமிழின காவலர் என்பதை நீக்கவும். காரணம், இதைப்படிக்கிற உங்களுக்கே புரிகிற அதே காரணம்தான். என்னளவிலும் அதற்கு தயாராய்த்தான் இருந்தேன். உலகத்தமிழின காவலர் பின்னர் எம் உணர்வுகளில் ஒன்றித்துக் கலந்துவிட்ட தாய் தமிழகத்தின் தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே என்றானார்.
அடுத்த திருத்தத்தினை நான் முழுமையாக மறுத்துவிட்டேன். அது தனியே போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்வை பெற்றுத்தருக என்று மட்டுமே எழுதாமல் தமிழீழத்தினையும் பெற்றுத்தருக என்றெழுதுக என்பதாகும். முன்னைய திருத்தம் எவர் குறித்துச் சொல்லப்பட்டதோ அவரை பின்னைய திருத்தம் மிகக் கேவலப்படுத்தும் என நான் நம்பினேன். இந்தத் திமிராலே தானே இந்தநிலையென உங்களிடம் இப்போது பதில்கள் தயாராயிருக்கும். பரவாயில்லை.
இருந்தபோதும் புதிய வரிகளைச் சேர்க்கச் சொன்னார் நண்பர். இப்போது வாசித்துப்பார்த்தால் கண்ணாடிக்கு முன் நின்று நடுவிரலைத் தூக்கிக் காட்டவைக்கின்றன அந்த வரிகள்.
கைவந்து தாங்கும் நீளக் கடல் கடந்து கருணையுள்ளத்தோடு நீளும் உங்கள் குரல் இன்னும் இன்னும் வானளவு விரிந்து – இந்திய அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் உங்களது இராஜதந்திரமும் (அடங்கொப்புரானே…) இணைந்து – இலங்கையில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வலுவுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா – தனது முன்னைய வெளியுறவுக் கொள்கைகளை மீள் பரிசீலனை செய்து – ஈழத் தமிழர் இப்போது எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களான உணவு உறைவிடம் மருந்து அத்தியாவசியப் பொருட்தடை ஆகியவற்றை விரைந்து நீக்கி இயல்பு வாழ்வினைத் தருவதோடு தொடர்ந்தும் கவனம் செலுத்தி சிங்கள மேலாதிக்கத்துடனான தமிழரின் வரலாற்று இனமுரணை சரியான முறையில் எடுத்துரைத்து எப்போதும் தமிழர் பக்கமிருக்கும் அரசியல் நியாயத்தன்மையை விரித்துரைத்து ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசியம் மரபு வழித் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை இந்தியாவும் உலகமும் அங்கீகரிப்பதற்கான சரியான திசையில் இந்திய மத்திய அரசை வழிநடத்தும் வண்ணம் அதற்கான வேண்டுகோளை ஈழத் தமிழ் இனத்தின் சார்பில் முன்வைக்கின்றோம்.
மேலும் சில
தமிழகத் தலைவரே இதுவரை காலமும் நீறு பூத்த நெருப்பாக தமிழக உறவுகளின் மனங்களில் ஆழப்படிந்திருந்த தமிழீழ ஆதரவு அலை இன்று நீங்கள் திறந்து விட்ட வாசல் வழியாக ஆர்ப்பரித்து எழுந்து அலை அலையாக தமிழகமெங்கும் பொங்கிப் பிரவாகிப்பது கண்டு பூரித்துப் போய் நிற்கிறோம். நாம் தனித்தவர்கள் அல்ல என்னும் எண்ணமே எமக்குள் இறுமாப்புற்று எழுச்சியுற வைக்கிறது.
பெரியார் அண்ணா காலம் முதல் எப்போதெல்லாம் ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள கொடுங்கோல் அரசு வன்முறைகளை நிகழ்த்தி அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி ஓட ஓட விரட்டி அவலம் சூழ்ந்த வாழ்வை அவர்களுக்கு திணிக்கின்றதோ அப்போதெல்லாம் உலகமே மெளனித்து கைவிட்ட கையறு நிலைகளில் கடல் கடந்து வரும் உங்கள் நேசமிகு ஆதரவுக்குரல்களே எமக்கான மனோவலிமையையும் தடைகளைத் தாண்டும் வேகத்தையும் அளித்து வருகின்றன.
அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்தும்விட்டன.
எனது ஈரக்குலை நடுங்குவது எதற்கென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எப்போதாவது அதிகாரத்திற்கு வந்தால், இந்தக் கடிதம் எழுதியதற்காக அதிமுக தொண்டர்கள் என்னைப் பிராண்டு பிராண்டென்று பிராண்டுவார்களா என்பதுதான். ஏனெனில் ஜெயும் இலங்கை ஏதிலிகளுக்கு சோறு போட்டிருக்கிறார்.
0 0 0
கலைஞரை மட்டும் அதிகம் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள்தான். ஏன் என ஆராய்பவர்கள் மகிந்த ராஜபச்சேயைவிட கருணாவை அதிகமாக ஏன் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள் என யோசித்தால் விடையேதும் கிடைக்கக்கூடும்.
கலைஞர் மீதான எனது கோபம் அவர் போரை நிறுத்தவில்லையென்பதற்காக அல்ல. தமிழீழத்தை பெற்றுத்தரவில்லையென்றல்ல. அது அவரது பொய்ப்பித்தலாட்டங்கள் தொடர்பானது. ஈழத்தை முன்னிறுத்திய பொய்கள் மட்டுமேயிற்கானது. 2 மணிநேர உண்ணாவிரத முடிவில் இலங்கையில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டதென்றும் அங்கே அமைதி மலர்ந்தென்றும் தமது ஊடகங்களில் பீற்றிய அந்த ஒற்றைப் பொய்க்கு மட்டுமே இப்போது மட்டுமல்ல எப்போதும் திட்டலாம்.
மற்றும்படி இது குறித்து யாரிடமும் முறையிடுவதற்கில்லை. ஏனெனில் கலைஞர் இப்படிச் செய்தாரே என வினவினால் அவர்கள் எல்லோரிடமும் உள்ள பதில்.. ஏன்.. ஜெயலலிதாவும்தானே அப்படிச் செய்தார்..? என்றமாதிரியான டீச்சர் ராமு எனக்கு கிள்ளினான் என்றால் ஏன் சோமுவும்தானே கிள்ளினான் என்பதையொத்த பதில்கள் தான்.




















பறவாயில்லை சயந்தன். ஒரு தந்தையைப்போல கருணாநிதியும் , ஒரு தாயைப்போல ஜெயலலிதா அம்மாவும் உங்களை மன்னித்தருள்வார்கள்.
சுபம் உண்டாகட்டும்.
சாந்தி
இலங்கையில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டத?
//ஏழுமாதங்களாகி விட்டது.//
வயசு போன மனிசருக்கு ஏனப்பா ஐஸ் வைச்சு வருத்தம் வரவழைக்கிற வேலையளை – அதுவும் குளிர்காலத்தில – செய்யுறியள்? அதுதான் அடிக்கடி ஆஸ்பத்திரி போக வேண்டியெல்லாம் கிடக்கு
—–
உம்மைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கடிதமும் ‘காட்சிப்பிழை’யான நேரம் அவருக்கு முன்னால கிடந்த பேப்பர்துண்டுகளில இருந்திருக்கலாம் என்டு ஏன் எனக்குக் கண்டறியாத சந்தேகம் வருது???
ஜெயாவை ஈழத்தாய் என்று சகட்டுமேனிக்கு இளையதளபதி, வைகைப்புயல் ரேஞ்சில் பட்டம் கட்டிய கோமாளித்தனம் ஒருபக்கம் ஓடிக்கொண்டு இருக்க,
இன்னொரு கூட்டம் கலைஞர் ஈழத்தின் வாழ்வியலை அரசியலாக்குவதை கண்டித்தால் கலைஞரைக் கண்டிப்பவன் எல்லாம் ஜெயாவின் அடிப்பொடி என்று கணிக்கும் அரசியல் நோக்கர்கள் ஒருபுறம்,
எல்லாம் ஓய்ந்து விட்டது இப்போது, ஓயாதது ஐடிபி காம்பில் முள்ளு வேலிக்கு அப்பால் இருக்கும் எளிய ஈழ/ஈனப்பிறவிகள் தான்,
அகோரமான போர்ச்சூழலில் மல்டிபரல் தாக்குதலும் இந்திய சீன வல்லுறவு ஆயுதங்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்கட சனத்தை சல்லடை போடும் போது கருணாநிதியை ஈழத்தந்தை, ஜெயாவை ஈழத்தாய், இன்னும் விட்டால் வடிவேலு, வையாபுரி, போண்டா மணி என்று எல்லோரையுமே இறைஞ்சி காலில் விழாத குறையாய் கெஞ்சும் அவல நிலையாதான் அப்போது, காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.
இருந்தும் என்ன………..:(
இலங்கையில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வலுவுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா // இந்த வரிகளை மீளப்படிக்கிறபோது மிஸ்டர் கிருஸ்ணா Mind your own business என்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
1
நெஞ்சம் பொறுக்குதில்லையே….
உலகமே ஈழ தமிழருக்காக கதறி துடித்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்தமிழகத்தில் மட்டும் அமைதி தவழ்கிறதே…என்ன தான் காரணமாக இருக்கும்? ம.தி.மு.க.,பா.ம.க.,போன்ற கட்சிகள் முயற்சித்தும் உரிய பயன் இல்லையே என்ன காரணம்? தமிழகத்தில் தமிழைச்சொல்லியும், தமிழினத்தின் முந்தைய வரலாற்றை பெருமைபடுத்தி பேசியும் தனது கட்சியை வளர்த்து கொண்டது தி.மு.க..மட்டுமே. எனவே அந்த உணர்வுகளால் கவரப்பட்டவர்கள் எல்லோரும் இப்போது தி.மு.க.வில் இருக்கிறார்கள். உலகத்தில் எங்காவது தமிழனுக்கு தீங்கு இழைக்கப்பட்டால் தட்டிக்கேட்கவும் தடுத்து நிறுத்தவும்தான் தி.மு.க. முன் நிற்கும் என்று தமிழர்கள் எல்லோரும் இதுவரையில் நம்பினார்கள். அந்த நம்பிக்கை, ஈழதமிழர் பிரச்சனையில் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் சுயநல போக்கால் தவிடுபொடியாகிவிட்டது. இப்போது உணர்வுள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து விட்டது தி.மு.க.
ஈழத்தில் தமிழினம் வதை முகாமில் அல்லல்படுகிறது. அதைப் பார்த்து உலகமே கண்ணீர் சிந்துகிறது. ஆனால்..தமிழர்களின் வாக்குகளை பெற்று முதல்வர் பதவியில் அட்டை போல ஒட்டி கிடக்கும் கலைஞர் அவர்களோ…. எதுவும் நடக்காதது போல காட்டிக்கொண்டு, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி பட்டாடை உடுத்தி பவிசுகொழிக்கிறார்.
தி.மு.க.விலுள்ள உணர்வாளர்கள் பாவம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். தி.மு.க பத்திரிக்கைகளில் இலங்கையில் தமிழினம் படும் அவலங்களை திட்டமிட்டே இருட்டடிப்பு
2
செய்கிறார்கள். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த விபரம் கூட “தினகரன்” நாழிதளில் வெளிவரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
உலகமே கண்ணீர் விடும்போதும் தமிழ் நாடு மட்டும் அர்த்தமற்ற அமைதியோடு…இருக்க காரணம் இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை கருணாநிதி கொன்றுவிட்டார். ஈழ தமிழர்களை கொன்றான் கொடியவன் ராஜபக்சே. இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை கொன்றார் கலைஞர்.
“ தமிழ் தேசிய தலைவராம் பிரபாகரன் அவர்கள் சகோதர யுத்தம் நடத்தினார். அதனால்தான் நான் தமிழர்கள் பிரச்சனையில் ஒதுங்கிக்கொண்டேன் ” என்று திரு.மு.கருணாநிதி சொல்லலாம். ஜனநாயக கட்சி நடத்தும் தி.மு.க.விலேயே தா.கிருஷ்ணன்கள் கொல்லப்படும் போது ஆயுத போராட்டம் நடத்தும் புலிகளிடம் கேட்க யாருக்கு அறுகதை உண்டு. தா,கிருஷ்ணனை வெட்டி கொலை செய்து இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்ட போது “அரசியலில் இது சகஜம் என்கிறார் “ கலைஞர்.
இலங்கை எம்.பி.க்கள் கலைஞரை சந்தித்து உதவுமாறு கேட்கிறார்கள். “ தமிழக கட்சிகளை சமதானம் செய்த பின்பு உதவுகிறேன் “ என்கிறார். இதை விட எனக்கு முடியாது எனக்கு நிறைய வேலை இருக்குனு சொல்லிற வேண்டியது தானே. எரியும் தீயை அணைக்க நீ முதல்வர் என்பதால் கூப்பிடுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களை சமதானம் செய்துவிட்டு வருகிறேன் என்பதுதான் நியாயமா?
கட்சதீவை தாரை வார்க்க காரணமும் நீங்கதான்.. விடுதலை வீரர்கள் குட்டிமணி, ஜெகனை காட்டி கொடுத்ததும் நீங்கதான்…இப்போ இனம் அழிவதே தங்கள் மேற்பார்வையில்தான் என்ற எண்ணம் உலக தமிழர்களிடம் மேலோங்கிவுள்ளது..
3
உங்களுக்கு தேவைனா தமிழன் எங்கிறீர்கள்.. தமிழ்..எங்க்றீங்க… மாநில சுயாட்சி…ங்க்றீங்க….ஆரிய திராவிட போராட்டம்…ங்கிறீங்க…. பாப் பாடகி மாயா, கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ், சிங்கள தலைமை நீதிபதி, மற்றும் அன்னிய நாடுகளில் நமக்காக போராடும் யாரோ ஒருவனுக்கு இருக்கும் மனிதாபிமான உணர்வு கூட தமிழை பேசி உயர்ந்துள்ள உங்களுக்கு இல்லையே !… சோரம் போன வீரமணிக்கும் இல்லையே !…
கண்ணெதிரே தடை செய்யப்பட்ட ரசாயனகுண்ட போட்டு தமிழர்களை கொல்றான்….கேட்க நாதி இல்லையே… நாளை தமிழ் நாட்டுக்கு ஒரு சோதனை வந்தால்…இங்குள்ள தமிழனையும் காட்டி கொடுத்திட்டு நீங்க ஆந்திராவுக்கு அல்லது அன்னை சோனியாவோடு இத்தாலிக்கு போகமாட்டீங்கன்னு என்ன உத்ரவாதம்…..
தலைவா! நெஞ்சம் பொறுக்குதில்லையே…நெஞ்சம் பொறுக்குதில்லையே….
// பிராந்திய வல்லரசான இந்தியா //
கனவுகளைக் கலைக்காதீர்கள்
//இரண்டுவார காலக்கெடு. பதவி விலகல் கடிதங்கள் என அமர்க்களமோ அமர்க்களம். தனிப்பட எனக்கு கலைஞர் ஏதோ செய்யத்தான் போகிறார் என சபலம் கூட ஏற்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//
உங்களுக்கு சபலம்தான் வந்தது. எனக்கு ஏனோ முழு நம்பிக்கையே இருந்தது. எனக்கு இருந்தது மட்டுமில்லை. அவநம்பிக்கையுடன் பேசியவர்களிடம், ‘இல்லை, இல்லை கலைஞர் நிச்சயம் ஏதோ செய்யத்தான் போகிறார்’ என்று அடித்துச் சொன்னேன். ஆனால், ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம்.
//அக்கடிதங்களை எழுதியவர்கள் மீது கோபம் எதுவும் வரவில்லை. தொடர்ச்சியான ஏமாற்றங்களால் எந்தக் கொப்பிலாவது பற்றிக்கொள்ளலாமா என்றிருந்த மனநிலையது.//
//அகோரமான போர்ச்சூழலில் மல்டிபரல் தாக்குதலும் இந்திய சீன வல்லுறவு ஆயுதங்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்கட சனத்தை சல்லடை போடும் போது கருணாநிதியை ஈழத்தந்தை, ஜெயாவை ஈழத்தாய், இன்னும் விட்டால் வடிவேலு, வையாபுரி, போண்டா மணி என்று எல்லோரையுமே இறைஞ்சி காலில் விழாத குறையாய் கெஞ்சும் அவல நிலையாதான் அப்போது, காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.//
கருணாநிதி எதையுமே செய்யப் போவதில்லை என்பது அல்லது அவரால் வெற்று அறிக்கைகள் விடத்தான் முடியும் என்பது அனைவருக்கும் புரியத் தொடங்கியபோது, எதையாவது செய்து, யார் காலையாவது பிடித்து எம்மக்களை காப்பாற்றி விட மாட்டோமா என்ற எண்ணம் தவிர வேறு நோக்கம் எதுவும், ஜெயலலிதாவை ‘ஈழத் தாய்’ என்று அழைத்தவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்க முடியாதென்றே நம்புகிறேன்.
‘இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று நினைப்பவர்கள், எதற்காக கொல்லப்படும் உயிர்களை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையைத் தந்தது.
யாரிடம் கேட்டு என்ன? இத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்துவிட்டு, இன்னும் முகாம்களிற்குள் இருந்து வாழ்க்கையை த்லைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதையும் செய்ய முடியாத அவலத்தில்தானே நாம் இருக்கிறோம்.
மிகப் பெரிய மனிதாபிமான நடவடிக்கையாக இந்தப் போரை வர்ணித்த இலங்கை அரசு, கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது வெறும் உணவுப் பொருட்கள், உடைகள் என்பதை உற்தி செய்துவிட்டு, ‘ஆனால், இது எதுவும் எங்களுக்கு தேவையில்லை’ என்று திருப்பி அனுப்புகிறது. இதுதான் அவர்களின் மனிதாபிமானம். அதைப் பார்த்துக் கொண்டே உலகமும் அதன்பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது
.
# நண்பன் on June 9th, 2009 at 2:12 pm
// பிராந்திய வல்லரசான இந்தியா //
கனவுகளைக் கலைக்காதீர்கள்
***********************************************
கனவே கலையாதே கலைஞர் கனவை கலையாதே
சாந்தி
வணக்கம் சயந்தன்,
சரியோ, தவறோ “நாய்கள்” போல எல்லோர் பின்னாலும் ஓடி ஓடி உதவி கேட்டோம்….
வழக்கம் போல “எல்லோரும்” ஏதேதோ பேசி ஏமாற்றிவிட்டார்கள்.
வலிகளை நமக்குள்ளே புதைத்து…(மறக்காமல்),
இனியாவது கைவிட்டவர்களை பார்த்து “உறுமாமல்” அவர்கள் நாண நன்றாக எமது சமூகத்தை முன்னேற்ற.. எவ்வழியிலேனும் உழைத்து எமக்கான அங்கீகாரத்தை பெறவேண்டும்.
இப்போதெல்லாம் யார் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும்…விரக்தியான புன்னகையே உதட்டோரம் எள்ளிநகையாடுகிறது….
நல்ல டைம் பாஸ் பதிவு…இந்த காமடிகளை விட்டுட்டு வேலையை பாருங்கப்பா….. தந்தையும் தாயும் பின்னடிக்கு இடைஞ்சல். என்று அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற வரிகளை நம்ம பசங்க மாற்றிச் சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்குது…..வாழ்க தமிழ் வளர்க தமிழர் தாயகம்…நமக்கு அன்னை சோனியாவையும் அண்ணன் ராகுலையும்தான் தெரியுமப்பா. எமது மற்ற உறவுகளான தந்தை கலைஞர் ந்மது மச்சான் மச்சாள் சகோதர சகோதரிகள்..பேரக்குழந்தைகள்.. நம்ம குடுமபம்…மத்தில இப்ப பெரிய குடும்பம் நம்ம குடும்பம்தான்
சொல்லமறந்த விடயம்.. இன்னும் திட்டிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு – விட்டுத்தள்ளுங்க,
நல்ல பதிவு சயந்தன்.
உண்மையில் கலைஞர் குரல் கொடுக்க மனதோரமாக ஒரு சபலம் எட்டிப்பார்த்தது உண்மைதான். அதன் பிறகு கலைஞர், ஜெ மட்டுமல்லாது ராமதாஸ், வைகோ, திருமா என்றெல்லாரும் சேர்ந்தே எம்மை நோகடித்தார்கள்.
இப்போது எமது கவனமெல்லாம் அங்கே முகாங்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது குறித்து குவியவேண்டுமென்று நினக்கின்றேன்.
எனது ஈரக்குலை நடுங்குவது எதற்கென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எப்போதாவது அதிகாரத்திற்கு வந்தால், இந்தக் கடிதம் எழுதியதற்காக அதிமுக தொண்டர்கள் என்னைப் பிராண்டு பிராண்டென்று பிராண்டுவார்களா என்பதுதான். ஏனெனில் ஜெயும் இலங்கை ஏதிலிகளுக்கு சோறு போட்டிருக்கிறார்.//
சோறு போட்டாக்களுக்கு முன்னால ..த்தையும் வாயையும் பொத்திக்கொண்டு நிக்கோணுமெண்டா நாங்களெல்லாரும் முதல்ல பிரேமதாசா சந்திரிகா மகிந்தவுக்கு முன்னாலதான் அப்பிடி நிக்கோணும். அவங்கள்தான் சோறு இலவச கல்வியெண்டு தந்தவங்கள். சிலருக்கு சலுகைக்கும் உரிமைக்கும் வித்தியாசம் தெரியேல்லை.
என்ன பகிடியெண்டா – நான் உனக்குச் சோறு போட்டனான். நீ வாலை சுருட்டிக்கொண்டு என்ரை காலடியில கிட எண்டு சொல்லுறதுக்கு முழு உரித்துடைய மகிந்தவோ சந்திரிகாவோ கூட ஒருபோதும் அப்பிடிச் சொன்னதில்லை.
ஒருவேளை அவங்கள் உங்களுக்கு ஜனாதிபதிகள். அதனால சொல்லிக்காட்டத் தேவையில்லை. நாங்கள் உங்களுக்கு மூன்றாம்மனிதர் அதனால சொல்லிக்காட்டுறம் என்றேதும் விளக்கமிருக்கோ தெரியேல்லை. இல்லாட்டி நீங்கள் சொன்னமாதிரி – ஏன் ஜெயலலிதாவும்தானே சொல்லிக்காட்டுறா என்ட மாதிரியான கேனைத்தனமான விளக்கமேதும் இருக்கோ தெரியேல்ல.
என்ன இழவோ .. நானும் விட்டுத்தள்ளுறன்.
பாய்
சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது!
பார்க்கலாம்.
//கானா பிரபா on June 9th, 2009 at 12:45 pm
காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.//
நீங்களுமா மற்றவர்கள் காதில் பூச் சுற்றுகின்றீர்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிருந்திருந்தால் என்றோ குரல் கொடுத்திருப்பீர்கள். ஆனால் இறுதி நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் புலிகளைக் காப்பாற்றவே குரல் கொடுத்தீர்கள். மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்தபோது கூட, உங்களால் அம்மக்களை விடுவிக்கும்படி புலிகளிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை. காரணம் அம்மக்கள் வெளியேறினால் புலிகளை இராணுவம் போட்டுத் தள்ளிவிடும் என்பதால். ஆக மொத்தம் உங்களைப் போன்றவர்களுக்கு இருந்த மனநிலையே மக்களைப் பலி கொடுத்தாவது புலிகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதே.
பார்த்தியண்ணை.. எங்களிட்டைப் பதில் இல்லையெண்டு தெரிஞ்சு கொண்டே – இதுதான் சான்சு என போட்டுத்தாக்கிறியள். நடத்துங்கோ எண்டதை விட வேற என்னத்தைச் சொல்லுறது.
சயந்தன் பெரியண்ணை
உங்களிடம் பதில் இல்லையென்று கூற வராதீர்கள். அன்றும் சரி, இன்றும் சரி மக்களை உசுப்பேத்தவே தாங்கள் கட்டுரைகளை வரைகின்றீர்கள். அதன் பலனைத் தான் இன்று அனுபவிக்கின்றீர்கள். ஆனாலும் இன்னும் தங்கள் தவறுகளைத் திருத்த தங்களுக்கு மனமில்லையென்பதே உண்மை.
சரி
பார்த்திபன் on June 15th, 2009 at 12:28 am
//கானா பிரபா on June 9th, 2009 at 12:45 pm
காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.//
நீங்களுமா மற்றவர்கள் காதில் பூச் சுற்றுகின்றீர்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிருந்திருந்தால் என்றோ குரல் கொடுத்திருப்பீர்கள். //
நாங்கள் சனத்துக்காக குரல் கொடுக்கேல்ல எண்டு எப்பிடியப்பு உங்களுத் தெரியும்? அது ஒரு பக்கம் இருக்க, இப்ப கைக்குழந்தையில் இருந்து எல்லாம் ஐடிபி காம்பில் தானே, உங்கட ராணுவத்திட்ட சொல்லி அம்மக்களை நீங்களாவது விடுவிக்கலாமே?
// நாங்கள் சனத்துக்காக குரல் கொடுக்கேல்ல எண்டு எப்பிடியப்பு உங்களுத் தெரியும்? அது ஒரு பக்கம் இருக்க, இப்ப கைக்குழந்தையில் இருந்து எல்லாம் ஐடிபி காம்பில் தானே, உங்கட ராணுவத்திட்ட சொல்லி அம்மக்களை நீங்களாவது விடுவிக்கலாமே? – கானா பிரபா //
உலகெங்கும் பரந்துபட்டு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் உட்பட உங்களைப் போன்றோரின் கருத்துகளையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் புலிக்கொடிகளும், பிரபாகரனின் படங்களும் பிடிப்பதில் காட்டப்படும் ஆர்வங்களில், இம்மியளவாவது அகதிமுகாமில் அவதியுறும் மக்களுக்காக குரல் கொடுப்பதில் காட்டுவதில்லை. பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளிடம் முன்பு முதன் முதலில் புலிகளின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பி வந்து அகதி முகாமிலிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் “அவங்கள் தலைவரைக் காப்பாற்ற நிற்காமல் தம்மைக் காப்பாற்ற வந்த துரோகிகள், அவர்கள் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை“ என்பதேயாகும். அப்படிப் பட்டவர்கள் தான், இன்று அந்த மக்கள் முட்கம்பி வேலிச்சிறைக்குள் முடங்கிப் போயிருக்கின்றார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்து அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்களாம். ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் இவர்கள் தவறாது செய்வது புலிக்கொடி, பிரபாகரனின் படம் மற்றும் கறுப்புச்சட்டை, கொத்துரொட்டி விற்பனை மூலம் பணம் திரட்டுவதே. இந்தப் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவா என்றால் அதுவுமில்லை. கண்ணீர்வெள்ளமென்றும், வணங்காமண்ணென்றும் திரட்டிய பல இலட்சம் பெளண்டுகள் என்னானதோ அதே வழியிலேயே மீண்டும் தொடர்கின்றன.
என் போன்றவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் உடனே உங்களைப் போன்றவர்கள் எம்மை ஏதோ அரசு ஆதரவாளர்களாக புரளியைக் கிளப்புகின்றீர்கள். அங்கு அகதி முகாம்களிலுள்ள அம்மக்களை விரைவாக விடுவிக்க வேண்டிய பொறுப்புகள் எல்லோருக்கும் தானுள்ளது. இன்று அகதிமுகாமிலுள்ள 3900 கர்ப்பினிப் பெண்களில் 2700 பேர் 12வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகள். இதைவிடக் கொடுமை இவர்களில் பலர் இரண்டாம் தடவையாக தாய்மை அடைந்தவர்கள். புலிகளிடமிருந்து தமது பெண்பிள்ளைகளைக் காப்பாற்ற இப்படிச் சிறுவயதிலேயே தமது பெண்பிள்ளைகளைப் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் செய்த பெண்களில் கூட கர்ப்பிணிப் பெண்களைத் தான் புலிகள் கடத்துவதில்லையாம். அதனாலத் தான் இந்த நிலைமை. இதில் பல பெண்கள் தமது கணவனைப் போரில் பலி கொடுத்து விட்டார்கள். இவர்களின் எதிர் காலங்கள் என்ன?? இவர்களைப் பற்றி எத்தனைபேர் கவலைப்படுகின்றீர்கள். எல்லோருக்கும் விடுப்புக் காட்ட, போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இப்போ களியாட்டுவிழா போலாகி விட்டன. நடத்துங்கள் உங்கள் ஆசை தீர…..
பார்த்திபன்
புலம்பெயந்த நாடுகளில் நடந்த போராட்டங்களில் எல்லாம் முறையாகச் செய்ப்பட்டவை என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு ஆனால் எல்லாப் போராட்டங்களையும் ஒரே கூடைக்குள் போடாதீங்கோ.
தடுப்பு முகாமில் இருப்போருக்கான உணவு, உடையில் இருந்து அங்கே இருக்கும் சிறார்களை முறையான நலன் காப்பு நிலையங்களில் கொண்டு சேர்ப்பதற்கான பல வழிகளிலும் புலம் பெயர்ந்தோரில் ஒரு தரப்பினர் இப்போதும் ஈடுபடுகின்றார்கள், அவுஸ்திரேலியாவில் இருந்தும் ஒரு தொகுதி அனுப்பப்பட்டு போய்ச் சேர்ந்ததும் அடுத்த தொகுதி தயார் நிலையில் இருப்பதையும் சொல்லி வைக்கிறேன்.
எல்லாரையும் ஒரே குட்டைக்குள் போட்டு குழம்பாதேங்கோ, நாங்கள் என்ன செய்தோம், செய்கிறோம் என்பதை போஸ்டர் அடிக்க சராசரி அரசியல் வாதிகள் அல்லர்.