காயத்திரி.. நீ போய் விட்ட பிறகு
த.அகிலன்
வாழ்வு, ஆசைப்படுகிற காலத்திலேயே ஆசைகளைத் தீர்த்து வைக்கிறதா என்ன? கனவுகள் நீர்த்துப் போன பிறகு கனவு களை அடையும் வழிகளைக் காட்டுகிறது சில வேளைகளில். துயரத்தின் புன்னகையைத் தவிர வேறெதுவும் தோன்றுவதில்லை அப்பொழுதுகளில். காயத்திரி இதை இவ்வளவு தாமதமாக நான் எழுதியிருக்கக் கூடாது. தாமதம், என் வாழ்வில் பெரும் பாகத்தைத் தின்று விட்ட தாமதம். அணு அணுவாய்ப் பிசைந்து மனசை நெருப்பில் வாட்டி யெடுக்கிற தாமதம். தயக்கங்களும் அச்சங் களும் என்னை அரித்துத் தின்று எனது தைரியத்தை விழுங்கிவிட்டன. உனக்கும் இதுதான் பிரச்சினையாய் இருந்தாத காயத்ரி.
நான் உன்னை நேசித்தேன் என்பதை இந்தக் கடிதம்தான் உனக்குச் சொல்லும் என்பதை நான் நம்பமாட்டேன். எனக்குத் தெரியும், உனக்குள் ஒளிந்திருந்த என் மீதான காதலை. என் மீது வருடிப் படர்ந்து கடந்துபோகும் உன் பார்வை பல தடவைகள் அதை எனக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் கடைசிவரைக்கும் உதடுகள் சொல்லவேயில்லை. உதடுகள் எப்போதும் காதலைச் சொல்லத் திணறுகின்றன. கண்கள் அப்படியல்ல. அவை எந்த ரகசியங்களையும் காப்பாற்றுவதில்லை. ஒளிந்திருக்கும் மனதின் ரகசியங்களை வெளியே கசிய விட்டு விடுகின்றன. பெரும் கூட்டத்துக்குள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும் என்னையும் என்னைத் தேடிக் கொண்டிருக்கும் உன்னையும் கண்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால், உதடுகள் ஒத்துக்கொண்டதில்லை ஒருபோதும். காயத்திரி, நம் உதடுகள் ஒத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை இந்தக் கடிதத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ?
காயத்திரி , உனக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கவிதைப் போட்டியில் பரிசு கிடைத்த நாளை. நான் மாணவர்களால் சூழப்பட்டிருந்தேன். எனது கவிதைத் தாள்களை மாணவிகள் போட்டிபோட்டு பறித்துப் படித்தபடியிருந்தார்கள். நான் எனக்குக் கிடைத்த பாராட்டுகளைச் சொரிய விட்டுக்கொண்டிருந்தேன். வெறுமனே எனது இதயத்தை எந்தப் பாராட்டுகளும் நெருங்க விடாதபடிக்கு இதயத்தைத் துடைத்து சுத்தமாக வைத்திருந்தேன். எனக்குக் கிடைக்கப்போகும் உன்னுடைய பாராட்டுகளை என்றைக்குமாய்ப் பத்திரப்படுத்துவதற்கு. ஆனால் எப்போதும் போல உனது வில்லத்தனமான உதடுகள் அன்றைக்கும் பேசவேயில்லை. நீ எனைச் சுற்றிய கூட்டத்தினின்றும் விலகி ஒரு ஆட்டுக் குட்டியைப்போல தனியே நடந்துகொண்டிருந்தாய், அப்போது ஒரு தரம் உன் தலையைத் திருப்பி புருவங்களை மேலேற்றி ஒரு பார்வை பார்த்தாய். அதை இப்போது வரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். உன் கண்கள் என்னை வாழ்த்தின. நிச்சயமாய் எனது வெற்றிக்கான பெருமிதத்தை நான் உன் கண்களிடம் கண்டேன். மறுநாள் வகுப்பறையில் எனது கவிதைத் தாள்கள் உன் கைகளில் இருப்பதை நான் கண்டேன். நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே நீ படித்துக் கொண்டிருந்தாய். அன்றைக்குத் தான் நான் தீர்மானித்தேன் கவிதைகளாக எழுதித் தீர்க்க வேண்டும் என்று. இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன் படிக்கிறாயா? அன்றைக்கு யாரிடமோ சொல்வதுபோலச் சொன்னாய், நல்லா எழுதிறியள் என்று. தோழிகள் நீ சம்பந்தமில்லாமல் பேசுகிறாய் என்று நினைத்திருப்பார்கள். உன் சொற்களின் உள்ளே ஒளிந்திருந்த சங்கேதங்கள் எனக்கு மட்டுமானவை என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்.
உனக்குத் தெரியுமா எனது நகரத்தை விட்டுவிட்டு உனது கிராமத்துக்கு நாங்கள் இடம்பெயர்ந்து வந்த நாள். எனது நகரத்தாரின் துயரத்தின் குறிப்புகளில் இடம்பெறுகிறது அந்த நாள். எனக்கு மட்டும்தான் அது பிரகாசத்தின் குறியீடு. நான் அந்த நாளைக் கொண்டாடுகிறேன். நிச்சயமாக சொந்த நிலத்தின் பிரிவு துயரமானதுதான். ஆனால் அதே பிரிவுதான் நான் உன்னைக் கண்டடைவதற்கு உதவியது. அந்த நாள் மட்டும் என் வாழ்வில் வராவிட்டால் யுத்தம் தன் கொடும் கரங்களால் எங்களை சொந்த ஊரை விட்டு விரட்டியிருக்காவிட்டால் வாழ்க்கை உன்னை எனக்குக் காட்டியிருக்காது. அது வரைக்கும் நான் கேள்விப்பட்டேயிராத பெயர் உன் கிராமத்தினுடையது. யுத்தம் அதைத்தான் செய்தது. பெயர் தெரியாத ஊர்களுக்கும் திசைகளுக்கும் மனிதர்களை விரட்டியது. நாங்கள் கொண்டல் மரத்தில் கட்டிய ஊஞ்சலைக் கூட அவிழ்க்காமல் அவசர அவசரமாய் ஓடிவந்தோம். ஆட்களற்ற ஊஞ்சல் காற்றில் ஆடியபடியிருந்திருக்கும். குழந்தைகளின் குதூகலத்தை எண்ணி அழுதபடி. “மாமர ஊஞ்சல் இற்று வீழ்ந்தது” என்று ஒரு கவிதையின் வரி நினைவுக்கு வருகிறது. இது கொண்டல் மரத்து ஊஞ்சல். மஞ்சள் பூக்களும் கறுத்த நீளப் பழங்களும் அற்புதமாயிருக்கும் மரம் அது. பூக்கும் காலங்களில் அதைப்போல ஒரு மஞ்சளை நான் எந்தப் பூக்களிலும் கண்டதில்லை. என் கனவுகளை நீ நிறைத்த காலத்திலும் ஊஞ்சல் இருந்தது. நீ சிணுங்கச் சிணுங்க நான் உச்சாணிக் கொப்பை எட்டும்வரை ஊஞ்சலை வேகமாக ஆட்டுவேன் கனவுகளில். அவை ரம்யமான நினைவுகள் காயத்திரி. நீ வாழ்க்கையை இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறாயா எப்போதாவது.
நானும் தம்பியும் தங்கையும் ஒருவருக்கொருவர் பெயர் வைத்துக்கொண்டு வளர்த்த பூஞ்செடிகள் நீரூற்ற ஆளின்றி வாடிப் போயிருக்கும். எனது செவ்வரத்தை வெள்ளை நிறம். சண்முகம் டீச்சரிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்து வளர்த்தேன். அது வெள்ளையாயிருப்பதில் தம்பிக்கும் தங்கச்சிக்கும் பொறாமை. காயத்திரி, நான் இழந்துபோன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக் கண்டேன். உன் கிராமத்தின் கரும்பு வயல்களை விடவும் உனது கூந்தல் குளுமையாயிருந்தது. வயல் வெளிகளில் வீசும் காற்றைவிடவும் உன் பார்வைகள் மென்மை யளித்தன. உன் கிராமத்தின் வாய்க்கால்களைப் போலவே உன் கண்களில் அடுத்தவர் மீதான பிரியம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. தொலைந்துபோன என் ஊரின் தேவதையாய் நீ தெரிந்தாய். எல்லா வற்றையும்விட நாங்கள் ஊரைவிட்டு வரும் வழியில் குண்டுகளின் சத்தத்திற்கு வீரிட்டு ஓடி திசைதப்பித் தொலைந்துபோன என் செல்ல நாய்க்குட்டியின் பெயரே உன் வீட்டு நாய்க்குட்டிக்கும் இருந்தது.
காயத்திரி உன்னை முதல் முதலாக நான் பார்த்தது என்றைக் கென்று நினைக்கிறாய். பன்னிரண்டாம் வகுப்பில் நீ எங்கள் பள்ளியில் என் வகுப்பில் வந்து சேர்ந்தாயே அன்றைக்கன்றோ? ஒருவேளை நீ என்னை அன்றைக்குக் கண்டிருக்கலாம். தேவதை களின் கவனம் திருப்புவது அவ்வளவு எளிதான காரியமா என்ன? ஆனால் நான் உன்னை உன் வீட்டில்தான் பார்த்தேன். ஒரு பெரிய கூட்டத்தோடு. அப்போதெல்லாம் ஊரில் சினிமாப்படங்கள் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. ஏதாவது கொண்டாட்டம் என்றால் அதைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் படம்போடுவது இருந்தது. விடிய விடியப் படம். ஒரே நாளில் நான்கைந்து படம் பார்த்துவிட்டு எந்தப்படத்தில் யார் கதாநாயகன் என்பதே குழம்பியிருக்கும் அடுத்த நாள் காலையில். நான் ஒரு சினிமாப்பைத்தியமாக இருந்தேன். டீ.வியில் எதைப்போட்டாலும் பார்க்கத்தயாரான மனோநிலை. அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் காசைத் திருடிக் கொண்டு போய்ப் படம் பார்த்திருக்கிறேன். மாதாமாதம் வாங்குகிற காமிக்ஸ் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டு எஸ்.ஆர். தியேட்டரில் படம் பார்த்தி ருக்கிறேன். அம்மாவின் அகப்பைக் காம்பிற்கு அஞ்சாமல் நான் செய்த ஒரே துணிச்சலான காரியம் அதுதான். 3.30 மணிக்கு டியூசனுக்குப் போவதாகச்சொல்லிவிட்டு குமார் வாத்திக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியிருக்கிறேன். அவர் நான் டியூசனுக்கு வராதது குறித்து அதிகம் கவலைப்படுகிறவராயிருந்தார். நான் தியேட்டர்கள் லீவான நாட்களிலும் காலைகளிலும் அவருடைய வகுப்புகளிற்குப் போய்க்கொண்டிருந்தேன். காயூ உனக்கு சாமத்தியச் சடங்கு நடந்த அன்றும் படம் போட்டார்கள். ஜெனரேட்டர் சத்தம் ஊரைத் திரட்டிக் கொண்டிருந்தது. நானும் வந்தேன் படம் பார்க்க. அன்றைக்குத்தான் உன்னை நான் முதன்முதலாகப் பார்த்தது. அன்றைக்கு எல்லாரையும்விட பொலிவாகத்தான் நீ இருந்தாய். நீ சாய்ந்து அமர்ந்திருந்த புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்ட கதவுகள் உன் பிரகாசத்தில் மங்கின. தொலைக்காட்சியில் இருந்து பிறந்த ஒளி உனது கண்களை அடைந்து ஆனந்தித்து திக்குமக்காடி நடனித்து என் கண்களில் படிந்தது. அப்போதுதான் நான் உன்னைப் பார்த்தேன் முதல்முதலாக. பிறகு என்னால் படத்தைப் பார்க்க முடியவில்லை. படத்தைவிட அதிகநேரம் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைவிட அதிக நேரம் நான் உன்னைப் பார்ப்பதை யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சியின் நீல ஒளி ஒரு தேவதையாய் உன்னைச் சமைத்தது. நீல நிறத்தேவதை நீ. அன்றைக்கு மனசுக்குள் உட்கார்ந்து கொண்ட உன் பிம்பத்தை அகற்ற விருப்பமற்றவனாய் நான் மாறிப்போனேன் பிறகெப்போதும்.
உங்களது காணியின் தெற்கு மூலையில் ஒரு பழைய தட்டிவானைப் பெயின்ட் அடித்து, ஒரு பெட்டிக்கடையாக உன்னுடைய அப்பா மாற்றியிருந்தாரே அப்போதிலிருந்தே நாங்கள் அந்தக்கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினோம். முன்பெல்லாம் கடைக்குப் போகச் சொன்னாலே புறுபுறுக்கிற நான் இப்போது கடைக்கு ஒரு பேச்சுமில்லாமல் போகிற ரகசியம் அறியாத அம்மா நான் பொறுப்பான பிள்ளையாகிவிட்டதாக அம்மம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். என் பொறுப்பின் ரகசியம் நீ என்றறியாது. எனக்கு எப்போதாவது உன் கடையில் நீ இருக்க மாட்டாயா? அப்பாவும் அம்மாவும் இல்லாத நேரத்தில் கடையைக் கவனித்துக்கொள்ள மாட்டாயா என்றிருந்தது. உன் அப்பாதான் நான் எப்போது போனாலும் கடையில் அமர்ந்திருப்பார். நீ இருக்க வேண்டும் என்கிற என்னுடைய பிரார்த்தனைகள் பலிப்பதே இல்லை. ஒரு புன்னகை ஒரு பார்வை கிடைத்துவிடக் கூடாதா என்கிற என் ஆசைகள் நிறைவேறாமலேயே எனக்குள் இறந்தன. அந்தத் தருணங்கள் எனக்கு வாய்க்கவில்லை.
எப்போதாவது கடையின் தடுப்புக்குப் பின்னாலிருந்து ஒரு பறவையின் குரலைப்போல அம்மா கடைக்கு ஆள் வந்திருக்கு என்று அழைக்கும் உன் குரல் கேட்கும். கடையின் படிகளில் இறங்கிப்போகும் உன் கொலுசின் ஓசை, குதிக்காலின் மென்சிவப்பு, காதோர நெளிமுடி என்று எப்போதாவது கத்தரிக்கப்பட்ட ஒரு அழகியின் ஓவியத் துண்டுகளாய் உன் தரிசனங்கள் கிடைத்தன. அதுவே போதுமென்றாகியது எனக்கு. கவனிப்பாரற்று அழுக்கேறிப் போயிருக்கும் என் பாதங்களை அதற்குப் பிறகு அதிகமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. இப்போது வரைக்கும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. எனது கவிதை முதல்முதலாகப் பிரசுரமாகிய அன்றைக்குக் கடைக்கு வந்த முக்கால்வாசிப் பிரதிகளையும் நானே வாங்கினேன். எதற்கடா இவ்வளவு பேப்பர் என்று உன்னுடைய அப்பா கேட்டார். நான் என்னுடைய கவிதை வந்திருக்கிறது என்று சத்தமாய்ச் சொன்னேன். உனக்குக் கேட்டிருக்கும் என்கிற நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
2
காயத்திரி என் நேசம் உனக்குத் தெரியாது என்று எப்போதும் சொல்ல முடியாது உன்னால். ஏனெனில் எனது மௌனத்தின் மொழி பேசிக்கொண்டேயிருந்தது உன்னிடம். என் கவிதைகள் தூது போய்க் கொண்டிருந்தன உன்னிடம். ஆனாலும் நம் உதடுகளும் சொற்களும் நம் அன்பை ஒளித்து வைத்துக் கொண்டன தமக்குள். எப்போதும் சதா என்னிடம் பேசிக் கடக்கிற உன் பார்வைகளும் புன்னகைகளும் என் கவிதைகளின் சொற்களைத் தந்தன. உன் பேரழகினின்றும் எனது சட்டையில் உதிர்ந்த ஒரு துளி ஈர நினைவுகளினின்றும்தான் நான் கவிதைகள் செய்தேன் என்று உனக்குத் தெரியும். என் கவிதைகளின் குறியீடுகள் பிரியத்தின் சங்கேதங்களாகி உன் புன்னகையைப் பரிசாக என்னிடம் கொண்டு வந்தன.
காலம் என்னைச் சுழற்றி அடித்தது. என்னைவிட இரண்டு வயது சிறியவளான நீயும் நானும் ஒரே வகுப்பில் படிக்கிற வாய்ப்பை எனது வாழ்வின் பெரும் சறுக்கல் எனக்குக் கொடுத்தது. என்னைச் சுற்றியிருந்த எல்லாரும் என் பொருட்டு கவலைப் பட்டார்கள். எனது வகுப்புத்தோழர்கள் என்னைக் கடந்து போயிருந்தார்கள். ஆனால் நான் இதை வரமாகக் கருதினேன் காயத்திரி. எப்போதும் எனக்கான துயரங்கள் தம்மோடு கூட ஒரு மலர்ச்செண்டை எடுத்து வருவதாக நான் உணர்கிறேன். அதுபோலத்தான் இப்போதும். உன்னோடு உனது வகுப்பறையில் அமர்ந்திருந்த முதல் நாள். முதலாம் வாங்கிலிருந்து நீ நான்காம் வாங்கிலிருந்த என்னைத் திரும்பிப் பார்த்தாயே நினைவிருக்கிறதா? எனக்கு உனது அந்த வரவேற்பே என் குற்ற உணர்வு களிலிருந்தெல்லாம் என்னை விடுவித்தது. என்னைவிட வயது குறைந்தவர்களோடு ஒன்றாய் அமர்ந்து படிப்பதற்கான என் தயக்கத்தைத் துடைத்தது.
3
உனது சாமத்திய வீட்டு ஆல்பம் எல்லா வீடுகளிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதை சுமந்து கொண்டு திரியும் பேற்றை உன் தங்கைக்குக் கொடுத்திருந்தார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்கார ஆச்சியிடமும் காட்டுவதற்கு உன்தங்கை கொண்டு வந்திருந்தாள். நான் தேர்ந்த திருடனாய் என்னை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டது அன்றைக்குத்தான். அந்த ஆல்பத்திலிருந்து யாரும் அறியாமல் ஒரு படத்தைத் திருடி ஒளித்துவைத்தேன். பிறகு நிறைய தடவைகள் அந்தப் படம் என்னைத் திருடன் என்று சொல்லி நாக்கைச் சுழித்தபடி எள்ளி நகையாடியிருக்கிறது. ‘உன் பொருட்டு திருடனாயிருக்கவும் சம்மதம்தான் எனக்கு’ என்று அன்றைக்கு எனது நாட்குறிப்பில் எழுதினேன். நான் உன் மீதான பிரியங்களையெல்லாம் என் நாட்குறிப்பிடம் சொல்லி வந்தேன். உதடுகள் இறக்கி வைக்காத என் பிரியத்தின் சொற்களையெல்லாம் அதன் தாள்களில் பேனாவால் கிறுக்கி வைத்தேன். காயத்திரி என் காதலை உன்னிடம் நான் சொல்லும் நாள் வாய்த்த பிறகு உனக்குத் தரப்போகும் மிகப் பெறுமதியான பரிசாய் அது இருக்குமென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் கடைசிவரைக்கும் அந்தத் தருணங்கள் வாய்க்க வில்லை எனக்கு. எனது நகரம் யுத்தத்தில் இருந்து மீண்டது. கண்ணிவெடிகள் துடைக்கப்பட்ட பிறகு எல்லோரும் மிகச் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள். நான் மட்டும்தான் துயரத்தோடு திரும்பினேன். அந்த அழகான கரும்பு வயல்கள் நிறைந்த உன் கிராமத்தை, என் பிரியமான உனது வீட்டை, எனது நாய்க்குட்டியின் பெயரைக்கொண்ட உனது நாய்க்குட்டியை, அதை அழைக்கும் உன் குரலை எல்லாவற்றையும் விட்டுத் துயரத்தோடு வெளியேறினேன். மணியங்குளமும் காட்டம்மன் கோயில் திருவிழாவும் இனி எப்போது என்னும் ஏக்கம் நிறைந்திருந்தது மனசு முழுக்க. எனது சொந்த நிலத்தை விட உன் கிராமத்தின் மீதான பிரியம் அதிகமாய் இருந்தது இப்போது என்னிடம். நான் அப்படித்தான் எனக்குக் கிடைக்கிற சந்தோசங்களில் வாழப் பழகிக் கொள்கிறவனாயிருக்கிறேன். என் துயரங்களை எளிதில் மறந்துவிடுகிறேன். எனது ஊரில் இழந்ததையெல்லாம் என்னால் உனது கிராமத்திலும் உன்னிலும் பிரதியிட்டுக் கொள்ள முடிந்தது. ஆனால் காலம் என்னைப் பயணியாக்குகிறது. அது எந்த இடத்திலும் என்னை நிரந்தரியாய்த் தங்கவிடுவதில்லை. எந்த மகிழ்ச்சியையும் நிரந்தரமாக என்னிடம் தங்கவிடுவதுமில்லை.
4
யுத்தம் எங்களை ஊரைவிட்டுத் துரத்தியது. எமது கிராமங்களின் மீது ஒரு கொடு நிழலெனப் படிந்திருந்தது. காயத்திரி நினைவிருக்கிறதா உங்கள் கிராமத்தின் மீது ஒரு இரவில் திடீரென்று போரின் திசைகளில் இருந்து பீரங்கிகள் வெடித்தன. அடுத்தடுத்து 5 குண்டுகள். ஊரே பீதியில் உறைந்து கிடந்தது. தலைக்குமேல் குண்டுகள் தமது ஆதிக்கத்தைக் காற்றில் அலறியபடி பறந்து பின் வீழ்ந்து வெடித்தன. அந்தக் குண்டுகளில் ஒன்று எங்கள் வீட்டிலிருந்த தென்னை மரத்தின் மீது வீழ்ந்து வெடித்தது. நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை. நீளக்கூந்தல் வீசிக் காற்றைக் கலைத்தபடி கிடந்த தென்னை மரம் கடைசியில் மூழியாய்ப் போனது. காலையில் எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்தார்கள். தலைக்கு மேல் விமானங்கள் குண்டுகள்போடுகையில் பதற்றம், உயிர் குறித்தான இறைஞ்சல், பதுங்கல். விமானங்கள் குண்டுகள் வீசிப்போனபின் அது வேடிக்கை, துயர் பகிர்தல் இதுதானே எங்கள் வாழ்க்கை. இரவு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கையில் அஞ்சிப் பதுங்கிக் கிடந்தவர்கள் காலையில் வீழ்ந்து வெடித்த இடத்தை வேடிக்கை பார்க்க வந்தார்கள். எங்கள் வீட்டில் விழுந்த குண்டு தென்னைமரத்தின் தலையைக் கொண்டு போனதுபோல கிராமத்தின் பல திசைகளிலும் பலபேரின் தலையைக்கொண்டு போயிருந்தது. மரணம் அப்போதெல்லாம் எங்கள் காலைச் சுற்றிய நாய் மாதிரிக் கிடந்தது. மூளித்தென்னை மரத்தை எல்லாரும் பார்க்க வந்தார்கள். நீயும் வேடிக்கை பார்க்கத் தோழிகளோடு வந்திருந்தாய். நான் உனது வருகையைக் கொண்டாடினேன். நீ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாய் என்று எண்ணினேன். அன்றைக்கு என்னை நீ கவனிக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்தேன். நான்தான் தென்னை மரத்தின் காவல்காரன் மாதிரி மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். நீ வந்து நின்ற சில நிமிடங்களுக்குள் வீட்டுக்குள் ஓடிப்போய்த் தலைவாரிக்கொண்டு வந்தேன் மறுபடி மறுபடி. காயத்திரி இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏன் எரிச்சலாகக்கூட இருக்கிறது. என் செயல்களின் அறியாமை என்னைக் கோபப்படுத்துகிறது இப்போது. அன்றைக்கு நீ என்னைக் கவனிக்கவேயில்லை. நான் அந்தத் தென்னைமரமாக இருந்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். நான் ஒரு சைக்கிள் வாங்கினேன். அப்போதெல்லாம் அங்கே சைக்கிள் வாங்குவது ஒரு யானை வாங்குவது மாதிரி. 2500 ரூபாய்ச் சைக்கிளை 12000 கொடுத்து வாங்குவதென்றால் சும்மாவா? புத்தம் புதுச் சைக்கிள் வைத்திருப்பது தேர் வைத்திருப்பதுபோல, புதுசாகச் சைக்கிள் வைத்திருப்பவர்கள் ராஜகுமாரர்கள். நான் ஒரு ராஜகுமாரனானேன். உன்னை மலைகளில் கடத்திச் செல்லப்பட்ட இளவரசியாக்கி எனது தேரில் தேடி அலைந்து திரிந்தேன். அப்போதெல்லாம் புதுசாகச் சைக்கிளை வாங்குவதென்றால் கடத்தல்காரர்களிடம் சொன்னால் தான். கடலால் சைக்கிளைக் கடத்தி வந்துதான் அவர்கள் கொடுப் பார்கள். சைக்கிள் தரைக்கு முன்பாக கடலில் பயணித்திருக்கும். கடல் காற்றுப்பட்டு லேசாகக் கறுத்துக் கூட இருக்கும். நான் லேசாகக் கறள் ஏறியிருந்தாலும் மினுமினுப்பான அந்தச் சைக்கிளில் உங்களது வீட்டடியை நிறைய தடவைகள் சுற்றி வந்தேன். நீ அதைப் பார்த்தாயா என்று தெரியவில்லை. நீ பார்ப்பதற் காகவே அன்றைக்கு சைக்கிள் ஓட்டினேன்.
5
காயத்திரி நான் இத்தனை தாமதமாக இதையெல்லாம் உன்னிடம் சொல்லியிருக்கத் தேவையில்லை. அன்றைக்கே எல்லா வற்றையும் சொல்லியிருக்கலாம். நான் உன்னோடு பேசி யிருக்கலாம். என்னை உன்னிடம் சொரிந்து கொட்டியிருக்கலாம். நான் வளவளவென்று பேசுகிறவன். எப்போதும் அடுத்தவர்களின் செவி ஓய்ந்து போகிறவரை பேசுகிறவன். ஆனால் உன்னிடம் மட்டும் ஏன் முடியவில்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது. நான் ஒரு கொக்கைப் போலக் காத்திருந்தேன், என்னிடம் வரும் மீன்களையெல்லாம் தப்பவிட்டு உறுமீன் வருமென்று. ஆனால் கடைசி வரைக்கும் வரவேயில்லை. நான் நிமிர்ந்து பார்க்கையில் நான் கட்டாந்தரையில் மீனுக்காகக் காத்திருந்தேனா என்று தோன்றியது. நீர்ப்பரப்பையே காணவில்லை. வாழ்க்கை என்னை எல்லாவற்றையும் தொலைத்துவிடச் செய்கிறது தன்னிரக்கம் பொங்கிப் பிரவாகிக்கிறது. வெறும் தன்னிரக்கம் கொண்டு அழுகிற இரவுகள் கொண்டு முடிகின்றன என்னுடைய நாள்கள் இப்போ தெல்லாம். உனது கிராமத்திலிருந்து எனது சொந்த நகரத்தில் இருந்த, நாம் 12ம் வகுப்பு படித்த எனது பாடசாலைக்கு ஒரு மணிநேரம் சைக்கிளில் போக வேண்டியிருந்தது. அதற்கும் அதிகமான நேரம்கூட எடுக்கும். அநேக நாள்களில் நானும் நீயும் மட்டுமே அந்த நீளச் சாலையின் தனித்த பயணிகளாயிருந்தோம். நான் வீட்டிலிருந்து வெள்ளனவே புறப்பட்டு சந்தியில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். உனக்காகக் காத்திருக்கிறேன் என்பதை நீ அறியக்கூடாதெனவும் விரும்பியவனாயிருந்தேன். ஆனாலும் உனக்காகக் காத்திருக்கிறேன் என்பதை நீ அறிந்தவளாயிருந்தாய். எங்காவது நான் மறைவாக நிற்கையில் சந்தியைக் கடந்துபோகும் உன் விழிகள் என்னைத் தேடுவதை நான் பார்த்திருக்கிறேன். காத்திருப்பது ரணமானது. நீ திடீரென்று ஒருநாள் வராதபோது நான் சிந்தனைகளில் அலைந்து கொண்டிருக்கும் என் சொற்களைக் கோக்கத் திராணியற்றவனாகிவிடுவேன். கூடைக்குள் ஒளிந்து கொண்டு எங்கேயோ தப்பியோடுபவனைப் போலாகிவிடுகிறது என் நிலைமை. அப்படியான நாள்களில் நீ கூரான கத்திகொண்டு கூடையைக் குத்திச் சோதிப்பாய். நீ வராமல் போன தினங்கள் வெண்ணெய் வெட்டும் கூரான கத்தியைப்போல எனக்குள் இறங்கின. காயத்திரி, அதேபோல எப்போதாவது பாடசாலையில் இருந்து வீடு திரும்ப இருட்டிவிடுகிற நாள்களில் உனது சைக்கிள் எனக்காகத் தயங்கி நிற்பதையும் நான் கண்டிருக்கிறேன். வீடு திரும்பும் வரை உனது நிழலைப் போல நான் வருவேன். எனக்குப் பாதுகாப்பாக நீயும் உனக்குப் பாதுகாப்பாக நானும். தெரு விளக்குகளே அற்ற இருட்டில் உன்னையும் என்னையும் கண்களால் அன்றி உணர்வுகளால் அறிந்தபடி பயணித்திருக்கிறோம்.
உனக்கு அந்தத் தகரம் தகரம் றீப்பைக் கதைகள் ஞாபகத்தில் இருக்கிறதா? இருக்கும் ஏனென்றால் அதை நீதானே அடுத்த நாள் அதைப் பள்ளிக்கூடத்தில் பரப்பிவிட்டாய். கிளிநொச்சியில் யுத்தம் ஓய்ந்தபிறகு, அங்கேயிருந்து உனது கிராமத்திற்கு, கைவிடப்பட்ட இராணுவ முகாம்களிலிருந்தும் எஞ்சிய வீடுகளிலிருந்தும் தகரக் கூரைகளைக் கழற்றி சைக்கிள் கரியரில் கட்டி எடுத்து வருவார்கள். அது ரோட்டை அடைத்தபடி வரும். அப்போது அந்தச் சைக்கிள் மட்டும்தான் ரோட்டில் போக முடியும். மற்றவர்கள் போனால் அவ்வளவுதான், தகரத்தின் வாய்களில் கொஞ்சம் நமது தோல் பயணப்பட்டு விடும். இரவுகளில் எதிரே வருபவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்திக்கொண்டே வருவார்கள். வேகமான இறக்கங்களில், வளைவுகளில் எதிரே வருபவரைத் தெரியாமலிருக்கும் போதெல்லாம் நான் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்திக்கொண்டே வருவேன். அப்படித்தான் ஒருநாள் ஒரு மிகவும் இறக்கமான ஒரு வளைவில் மிக வேகமாக ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. நான் தகரம் தகரம் றீப்பை றீப்பை என்று கத்த அந்தச் சைக்கிள்காரர் பயந்து நிலை தடுமாறி பக்கத்து வாய்க்காலுக்குள் குதித்துவிட்டார். பிறகுதான் எங்களிடம் தகரமும் கிடையாது றீப்பையும் கிடையாது என்று தெரிந்து டேய் என்று கத்தியபடி எழுந்து விரட்டிக்கொண்டு வந்தார். அவரது சைக்கிளை அவரால் அவ்வளவு சீக்கிரத்தில் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லையாதலால் நாங்கள் மிகவேகமாக ஓடிவந்துவிட்டோம். நீ சிரித்திருப்பாய் என்று எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் வகுப்பே ஒட்டுமொத்தமாகச் சிரித்தது.
அந்த நாள்களில் நமக்கு வாய்த்த ஒரு மணிநேரப் பயண வழியில் நானும் உன்னிடம் பேச எத்தனித்ததில்லை. நீயாவது முயன்றிருக்கலாம். இந்தத் துணிவற்ற பயலின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ம்… இருவரும் பேசாமலே நாம் தனித்த பயணங்களைத் தொலைத்துவிட்டோம். அந்த நாள்களைப் போன்ற தருணங்கள் வேறொரு காதலர்களுக்கு வாய்த்திருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பார்கள். நாம் கொண்டாடத் தெரியாதவர்களாய்த் தயங்கி நின்றோம். நாங்கள் நிரந்தரமாக எங்களது சொந்த நகரத்திற்கு, சொந்த நிலத்திற்குத் திரும்பி விட்டோம். உங்களுடைய கிராமத்தைக் கொஞ்ச நாளில் எல்லாரும் மறந்துபோகலாம். அதற்குப் பிறகு அந்தத் தருணங்கள் வாய்த்ததே யில்லை பயணங்களும். நீயும் பாடசாலைக் காலம் முடியும்வரை யாரோ தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கியிருந்து படித்தாய்.
காயத்திரி, இவ்வளவு சீக்கிரத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதே என்றிருந்தது. பள்ளிக்கூடம் இன்றைக்குத்தான் கடைசி நாள் என்றார்கள். நாங்கள் குரூப் குரூப்பாக நின்று போட்டோ பிடித்துக்கொண்டோம். அந்தப் போட்டோக்களில் நீ அழகா யிருந்தாய். உன் நாக்குச் சுழிப்போடு. உன்னை மாதிரி அழகாக அவ்வளவு லாவகமாக யாரும் நாக்கைச் சுழற்ற முடியாது. உனது அதிக மகிழ்ச்சி, வெட்கம், துயரம் எல்லாவற்றிற்கும் நீ நாக்கைச் சுழற்றினாய். நாக்கைச் சுழித்தபடியான உன் புன்னகை ஒரு தேவதை சிரிப்பதைப் போலிருக்கும். எனக்குள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன் பிம்பங்களில் நீ நாக்கைச் சுழித்தபடிதான் இருந்தாய். நான் உன்னுடைய அந்தத் தருணங்களையெல்லாம் புகைப்படமாக்க விரும்பினேன். ஆனால் என்னிடம் காமிரா இருந்ததில்லை அப்போதெல்லாம். அதனால் மனசுக்குள் படம் பிடித்துக்கொண்டேன். வாத்தியார் கேள்வி கேட்டாலும் சுழிப்பாய், பாராட்டினாலும் சுழிப்பாய். அது உனக்கேயான மொழிவடிவம் என்று தோன்றும் எனக்கு. எனக்குத் தெரியும் நாம் சந்திப்பது அதுதான் கடைசித் தடவை என்று. இனிமேல் என் பிரியத்தை சொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காதென்று. ஆனாலும் அன்றைய நாளையும் கரைத்தன என் தயக்கங்கள். கடைசி வரைக்கும் என்னை வென்றுகொண்டேயிருந்தன அவை உன் விசயத்தில்.
பிறகு நான் வேலை தேடிக் கொண்டேன், போட்டோ பிடிக்கும் வேலை. பத்திரிகைக்காரனாக. உன் நினைவுகள் மனசுக்குள் அலைகளற்ற படகாக இருந்தது. நான் நிறைய படங்கள் எடுத்தேன். வயல்கள் பறவைகள் கல்லறைகள் அதைவிட இன்னும் இன்னும் சுழித்தோடும் ஆறுகள் நீர்வயலாய்க் குளங்கள். ஆனால் என்றைக்குமாய் உன் உதட்டுச் சுழிப்பு மட்டும் பிரதியெடுக்கப்படாத படமாய் எனக்குள் கிடந்தது. உன்னைப் பற்றி நண்பர்களைச் சந்திக்கும் போது பேசிக் கொள்வேன். உனது அப்பா நோயாளி யாகிப் போனார் என்று யாரோ ஒரு தோழி சொன்னாள். உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதை எனக்காக உன்னிடம் சொல்ல முடியுமா என்று அவளிடம் கேட்கையில், வெளிநாட்டில் இருக்கிற மாமா உனக்கு அங்கே மாப்பிள்ளை பார்ப்பதாகவும் நீ அங்கே போனால்தான் நோயாளி அப்பாவையும் மீதிக் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அவள் அபிப்பிராயப்பட்டாள். நான் அன்றைக்குத் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். என்னால் உனக்குவெறும் காதலையும் நம்பிக்கையையும் மட்டுமே கொடுக்க முடியும். வெளிநாடு உனக்கும் குடும்பத்துக்கும் வசதிகள் கொடுக்கும் என்று அவள் சொன்னதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதன்பிறகு உன்னைப் பற்றி அறியும் வாய்ப்புகளை வேண்டு மென்றே தவறவிட்டேன். அவை என் துயரத்தை மறுபடி மறுபடி கிளறுபவையாக இருக்குமென்பதால் அவற்றினின்றும் விடுபட விரும்பினேன்.
காயத்திரி, என்னையும் உன்னையும் பிரித்திருந்த தயக்கத்தின் கடலைத் தாண்ட முடியாத நான் எந்தத் தயக்கங்களும் இன்றி கடல் கடந்தேன். நாடுகளைப் பிரிக்கும் கடல். நான் எழுதிய நாட் குறிப்புகளையும் என்னால் திருடப்பட்ட உனது புகைப்படத்தையும் பத்திரமாக வைத்திருக்கும்படி அண்ணியிடம் கொடுத்தேன். அண்ணி காதலின் வசீகரங்கள் அறிந்தவள். பத்திரமாக வைத்திருப்பாள். இங்கே அவசர நகரத்தில் அலைதலும் என் இருப்பினை நிறுவும் தேவையும் உன் நினைவுகளை ஒரு கடற்படுகையைப்போலாக்கின.
திடீரென்று ஒருநாள். அந்தப்படுகை கடலிலிருந்து சுழன்று எழுந்து என்னைத் தலைகுப்புற அடித்தது. காலையில் எனது தொலைபேசியின் குறுஞ்செய்தி உன்னைக் கொன்றுவிட்டு இரக்கமில்லாமல் என்னை வெறித்துக்கொண்டிருந்தது.
hi pratheep. h r u?
very bad news. gayathri died in manner on 8th.
everything finished on 11th.
what 2 do?
I feel so bad.
what else?
take care. bye.
நான் நம்ப விரும்பவில்லை அந்தக் குறுஞ்செய்தி நீயாக இராது வேறு யாரோ ஒரு காயத்திரி. நீ செத்துப் போயிருக்க மாட்டாய். கூடாது. இது வெறும் வதந்தி அல்லது அது என் காயத்திரி அல்ல.
ஆனால் இன்னொரு குறுஞ்செய்தி வந்தது.
hi machchan
koli gayathri seththup ponalam mannarila
kelvippattaniya?
நீதான் என்பதை தெளிவாகச் சொல்லி உன் பட்டப் பெயரை அப்பட்டமாய்ச் சொல்லி. உன் பட்டப்பெயரை நீ அறிவாயா. அது பையன்களின் சங்கேதம். காயத்திரி நான் இப்போதும் நம்பினேன். தேவதைகளை மரணம் நெருங்குவதில்லை என்று. ஏதோ ஒரு வெளிநாட்டு வீட்டின் வரவேற்பறையில் ஆட்களை உள்ளே புதைக்கும் சோபாக்களின் மேல் குண்டுகுண்டாய் இரண்டு குழந்தைகள். கொஞ்சம் சதையேறிய உனது உடம்போடு இருக்கும் ஒரு புகைப்படம் உனது கிராமத்து வீட்டில் தொங்கவிட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் தேவதையின் மரணத்தை அண்ணி கடிதத்தில் உறுதி செய்தாள். மெலிந்து கறுத்துப்போன உனது சீருடைப் படத்திற்கு உன் கிராமத்து வீட்டில் மாலைபோட்டு ஊதுபத்தி ஏற்றியிருப்பதாக, மரணத்தின் வாசனை அதனின்றும் கமழ்ந்து கொண்டிருப்பதை, தான் போய்ப் பார்த்தேன் என்று அண்ணி எழுதியிருந்தாள். மரணம் நாசமாய்ப் போக. அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை. நீ சீருடைப் படத்திலும் நாக்கைச் சுழித்தபடியேதான் இருந்தாயா என்று மனம் அங்கலாய்த்தது. எனக்குக் குழப்பமாயிருக்கிறது. என் சுவிஸ்காரி திடீரென்று மன்னாரில் செத்துப்போனதெப்படி. உன் நோயாளி அப்பா என்னவானார். அண்ணி எழுதியிருந்தாள் இப்படித்தான், இப்போது நிறைய பேர் செத்துப் போகிறார்கள் என்று. மேலும் எனது நாட்குறிப்பையும் உனது புகைப்படத்தையும் இனி என்ன செய்வது என்றும் கேட்டிருக்கிறாள். என்ன பதில் எழுதுவது. இதோ இந்த இரவில் தூக்கம் பிடிக்காமல் லைட்டைப் போட்டுக்கொண்டு உனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விஜய் அண்ணா எழுந்து கேட்கிறான், என்ன செய்கிறாய். உனக்குக் கடிதம் எழுதுகிறேன் என்று சொன்னேன். செத்துப் போனவளுக்குக் கடிதம் எழுத உனக்கென்ன விசராடா. லைட்டை நிப்பாட்டீட்டுப் படு என்று குரைக்கிறான். உண்மையில் பைத்தியக்காரர்கள் அதிஸ்டசாலிகள் என்று தோன்றுகிறது. நான் லைட்டை அணைத்தேன். திசையெங்கும் இருட்டிக் கிடக்கிறது… வாழ்க்கையும்….
த.அகிலனின் மரணத்தின் வாசனை நூலில் இடம்பெற்ற சிறுகதை. ஓவியம் ட்ராஸ்கி மருது




















Touching… Fantastic one.
பதிவிற்கு நன்றி
Really touching one !!!!
அழுதே விட்டேன் நான்…மனது ரணமாய் வலிக்கிறது…இந்த கதை எனக்காக எழுத பட்டது போல இருக்கின்றது.உறவு முறை வேற என்றாலும் வலி ஒன்று தானே..நானும் இந்த யுத்தத்தில் தான் எனது காதலை காதலித்தவனை பறி கொடுத்தேன்….ஆசை ஆசையாய் காதலித்தவன் முகத்தை கடைசியாய் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்பதை விட கொடுமையான விஷயம் நாம் நேசிச்சவங்க இறந்த செய்திய தொலை தூரதில் இருந்து கொண்டு எஸ்எம்எஸ் ல படிக்கிறதும் போன் ல கேக்குறதும்…நாம் சாகும் வரை ஆறாத வேதனை…!!!:((((((((((((
touching one
awesome, isit true story o real one. No words to praise
அகிலனுக்கும் பிரியத்துக்கும் ஏதோ நிரந்தரமான பிரச்சனை போல.
கதையின் ஆரம்பம் முதல் நடுப்பகுதிவரை கலீல்ஜிப்ரானின் முறிந்த சிறகுகளுக்குள் நின்றதொரு உணர்வைத் தந்தது. ஜிப்ரானின் ‘செல்மாகாரமி’ போல காயத்திரி கதைக்குள் உயிரோடும் உணர்வுகளோடும் உலவுகிறாள்.
முடிவு எத்தனையோ பேரின் கனவுகளைச் சிதைத்துவிட்டுப் போகிறது.
அகிலன் நமது சமகாலத்துக்குக் கிடைத்த இன்னொரு கலீல் ஜிப்ரான். பாராட்டுக்கள் என்று சொல்ல முடியாதபடி கதை உயிரோடு உணர்வோடு வாழ்கிறது.
சாந்தி